பொய்யுரைக்கு மறுப்பாக ஒரு மெய்யுரை

முற்றம் ஜனவரி 01-15

தமிழ்மொழி பெரியாரின் பார்வை என்ன?

– கி.தளபதிராஜ்

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தந்தை பெரியார் படம் வைக்கப்படாதது பற்றி எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பெ.மணியரசன்  தனது தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைக்கப்பட்டிருப்பவை தமிழகத் தலைவர்களின் படங்கள் அல்ல. அவை மறைந்த தமிழறிஞர்களின் படங்கள். பெரியார் தமிழறிஞர் அல்லர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் தமிழறிஞரா? இல்லையா என்கிற வாதம் இருக்கட்டும். ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையா? மொழி அழிப்பா? முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதன் நினைவாக நிறுவப்பட்டது? முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட முற்றமானால் தமிழினத்திற்காகப் போராடிய தலைவர்கள் படங்கள் இடம்பெறுவதுதானே சரியாக இருக்க முடியும்?

பெரியார் படத்தை வைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஒரு வரையறையை வகுத்துக் கொண்டார்களோ!

ஆங்கில எழுத்துகளையே தமிழ் எழுத்துக்குப் பதிலாக நெடுங்கணக்காக, அகர வரிசையில் எடுத்துக் கொள்ளலாம் என்று தந்தை பெரியார் அவர்கள் 1939இல் கூறியதைச் சுட்டிக்காட்டி பெரியார் தமிழ்மொழி அழிப்பு வேலைத்திட்டத்தை வகுத்தவர், அவர் படத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எப்படி வைக்க முடியும் என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார் மணியரசன்.

மேற்படி அதே கருத்தை தமிழ் இந்து நாளிதழில் தனது கட்டுரையில் வெளியிட்ட ஜெயமோகனைக் கண்டித்தவர்கள், பெரியாரின் கருத்தும் பிழையானது. அதை நாங்கள் ஏற்கவில்லை என்று கூறிவிட்டுச் செயலாற்றியிருக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார்.

மேலும் இக்கருத்தில் பெரியாரின் நோக்கம் வேறு. பார்ப்பனர்களின் நோக்கம் வேறு என்று தப்பித்துக்கொள்ள முடியாது என இவர் எழுதும்போதே இவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. மணியரசன் சொல்வது போன்று, பெரியாரின் நோக்கமும் ஜெயமோகனின் நோக்கமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

தமிழனுக்கென்று ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் இல்லை. அதாவது  ஆரியர் வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிக்க அருமையாகத்தானிருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்திற்கு முந்தியதாக இருக்கலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவு என்ன பலனைக் கொடுத்திருக்கிறது? விஞ்ஞானத்திற்குச் சிறிதும் பயன்படத்தக்கதாகவும் இல்லை. அறிவுக்குத் தக்கபடி பலனளிக்க முடியவில்லை. தமிழ் மொழி ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அதைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் இன்னும் இந்த விஞ்ஞான பரவல் காலத்திலும் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மூட நம்பிக்கை உள்ளவனாகவும், மான உணர்ச்சி என்பது 100 க்கு 75 பாகம் இல்லாதவனாகவும் இருந்து வருகிறான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் மொழியானது மொழியிலாகட்டும், பொருளிலாகட்டும் வேறு முறையிலாகட்டும் எவ்வித முன்னேற்றமும், மாறுதலும் அடையவில்லை.

உலகத்திலேயே நீதி சிறந்த இலக்கியம் குறள் தமிழில் உள்ளது. அது துருப்பிடித்துவிட்டது. என் அனுபவத்துக்கு எட்டிய வகையில் உலகத்தில் சிறந்த துறைஅறிவு, தமிழிலுள்ள கணக்கு முறை அதாவது இளஞ்சுவடி என்றும் எண் கணக்கு என்றும் சொல்லக்கூடிய இலக்க முறை குப்பைக்கே போய்விட்டது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் இருந்து தமிழன் தெரிந்துகொள்ளத்தக்கதோ, தமிழனுக்குப் பயன்படக்கூடியதோ எதுவும் தென்படவில்லை. தமிழும், தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன.

தமிழனின் பேச்சுமொழி, தாய்மொழி தமிழ் என்பதைத்தவிர தமிழுக்கு வேறு உலக முக்கியத்துவம் எதுவும் எனக்குத் தென்படவில்லை. மற்றபடி தமிழ்நாட்டிற்கு தமிழருக்கு வேறு எந்தமொழி தேவையானது _-நல்லது? அரசியல், விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது _-பயன்படக் கூடியது? என்று என்னைக் கேட்டால் எனக்கு ஆங்கில மொழிதான் சிறந்தது எனத் தோன்றுகிறது.
– தந்தை பெரியார் (நூல்: மொழியும் அறிவும்)

தமிழ்நாட்டில் நம் தன்மையையும் பார்ப்பானின் தன்மையையும் பார்த்தோமானால் இருவர் வாழ்வின் பேத அளவு விளங்குவதோடு, அந்தப் பேதத்துக்குப் பெருங்காரணம் வேறு எதுஎதுவோ இருந்தாலும் பெரிதும் அது ஆங்கிலம் படிக்காதது என்பது விளங்கும்.

இன்றைய தினம் ஆட்சி நம்முடையது என்று சொல்லப்பட்டாலும், இதில் இங்கிலீஷ் படித்தாலொழிய அந்த இங்கிலீஷிலும் திறமையான படிப்பாளி என்கிற தகுதி இருந்தால் ஒழிய ஆட்சியில் பங்குபெற முடியாது என்கிற நிலை இருந்துவருவதை யாராவது மறுக்க முடியுமா?

மற்றும் இன்றைய உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் இங்கிலீஷைத்தவிர வேறு எந்த மொழியிலாவது நாடோ மனிதனோ முன்னேறுவதற்கு ஏற்ப வசதியோ வாய்ப்போ இருக்கிறதா என்று கேட்கிறேன்.

சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வறட்டுக்கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பானாவது இங்கிலீஷ் வேண்டாம் என்று தள்ளுகின்றனரா? சொல்கின்றனரா? அப்படிச் சொல்கின்றபடி சங்கராச்சாரிகள், மகான்கள் கூட்டத்திலாவது யாராவது ஒருவர் இருக்கின்றார்களா?

இப்போது நாம் உலக அந்தஸ்தில் மிகமிகத் தாழ்வான நிலையில் இருக்கிறோம். மனிதன் இன்றைய ஆசாபாசங்களுக்கு, அனுபவங்களுக்கு இன்றியமையாத தேவைகளுக்கு மற்ற நாட்டானோடு தலைநிமிர்ந்து நடப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது?

மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளின் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு நமக்குத் தக்க அறிவும், அனுபவமும் செய்முறையும் வேண்டுமானால் நமது தமிழ்மொழியில் என்ன இருக்கிறது?

– தந்தை பெரியார் – தாய்ப்பால் பைத்தியம்

என்று கேட்ட பெரியார்தான் ஆங்கில எழுத்துகளையே தமிழ் எழுத்துக்குப் பதிலாக நெடுங்கணக்காக, அகர வரிசையில் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

ஜெயமோகன், சோ வகையறாக்கள் நோக்கம் அதுவா? ஜெயமோகன், சோ ஆகியோரின் தமிழ் எதிர்ப்பு – ஆங்கில ஆதரவுக் கருத்துகளும் பெரியாரின் தமிழ் எதிர்ப்பு – ஆங்கிலத் திணிப்புக் கருத்துகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பது ஏன்? எனக் கேட்கும் மணியரசன் அவர்களே, அப்படி இருவரது கருத்தும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பதாக உங்களுக்குத் தெரியுமானால் அது பார்வைக் கோளாறு!

ஜெயமோகனைச் சுட்டுகையில் ஆங்கில ஆதரவு என்று மென்மைப்படுத்தியும் பெரியாரைப்பற்றிக் குறிப்பிடுகையில் ஆங்கிலத் திணிப்பு என்று கடுமைப்படுத்தியும் எழுதும் உங்கள் எழுதுகோல் முனையே உங்கள் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறது.

தமிழை ஆங்கில வடிவில் எழுதலாம் என்று கருத்துத் தெரிவித்த பெரியார்தான் எந்தத் தமிழ்த் தேசிய திலகங்களும் செய்யாத தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை தனது குடிஅரசு பத்திரிகையில் 1934ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்தார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான பெரியாரின் உரையைச் சற்று உற்றுநோக்கினாலே பெரியாரைக் கொச்சைப்படுத்த முயலும் பெமக்களின் பித்தலாட்டம் தோலுரிந்து போகும்.

சமஸ்கிருதத்தைப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வருகிறேன் என்றார் பிரதமர் ராஜாஜி. அன்று 1938இல் தலைமை தாங்கி இந்தியை விரட்டியது யார்? ஸ்ரீ திரு ஆனது எப்படி? அக்ராசனாதிபதி தலைவர் ஆனதும், நமஸ்காரம் வணக்கம் ஆனதும் 1938 இந்தி எதிர்ப்பின் விளைவு அல்லவா? _ தொடர்வண்டி நிலையங்களில் ஊர்ப் பெயர் வரிசையில் தமிழ் முதலிடத்தை இன்று பெற்றதற்குப் போராடியது யார்? வரலாறு தெரியாமல் உளற வேண்டாம். தமிழ்ப் பெயர்கள் தமிழர் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சூட்டப்பட அடி எடுத்துக் கொடுத்தவர் யார்?

தமிழ்மொழி தாய்மொழியாக உள்ள இந்த நாட்டில் இந்தியைப் புகுத்தக்கூடாது என்று கிளர்ச்சி செய்தேன் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்தியநாட்டுப் பிற எம்மொழியையும்விட தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல், மற்ற வேற்றுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையே உள்ள இழிவு நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழி அமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. நம்நாட்டுச் சீதோஷ்ண நிலைமையைப் பொருத்தும், கருத்துகளின் செழுமையைப் பொருத்தும் நமக்கு தமிழ்தான் உயர்ந்த மொழியாகும்.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க முயற்சிகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்பட வேண்டிய சில சீர்திருத்தங்கள் குறித்து எனது கருத்துகளைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகுவாக்கப்பட வேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். மொழி என்பது உலகப்போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.

– தந்தை பெரியார் (நூல்: மொழி-எழுத்து) தமிழர் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க நினைப்பது தமிழின் மீது ஏற்பட்ட வெறுப்பாலோ அல்லது ஆங்கிலத்தின் மீதான பற்றாலோ அல்ல. தன் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்கிற ஒரே வேட்கையே அன்றி அதற்கு வேறு காரணம் இருக்க இயலுமா? பெரியாரின் மேற்கண்ட பேச்சைக் காண்போருக்கு ஒரு பெற்றோர் தன் குழந்தை மீது காட்டும் பரிவும், அக்கறையும் எப்படிப்பட்டதோ அப்படியே தமிழினத்தை முன்னேற்ற வேண்டிய அக்கறையில் அமைந்தவைதான் பெரியாரின் செயல்பாடுகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அதைத் தமிழின அழிப்பு வேலை என்று ஒருவர் விமர்சிப்பாரேயானால் அவர் புத்தியிலே கோளாறு இருப்பதாகத்தான் பொருள்கொள்ள வேண்டும். அல்லது உண்மை அறிந்தே கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட விஷமப் பிரச்சாரமாகவே அது இருக்க முடியும்.

நீதிக்கட்சியின் தலைமையை ஏற்க பெரியார் தேர்ந்தெடுத்த போலிச் சொற்கட்டு திராவிடம் என்கிறார் மணியரசன்.   1927 லேயே நீதிக்கட்சியின் மாநிலத் தலைமைக் காப்பாளர் பொறுப்பை பெரியாருக்கு வழங்க அக்கட்சியின் செயற்குழு முன்வந்தபோது அதை ஒப்பாமல் தட்டிக்கழித்தவர் பெரியார். நீதிக்கட்சியால் நடத்தப்பட்ட திராவிடன் ஏட்டை நடத்தும் பொறுப்பு தன்னிடம் வந்தபோது கூட குடிஅரசு கொள்கைப்படித்தான் திராவிடனையும் நடத்த முடியும் என்கிற நிபந்தனையோடு ஏற்றுக்கொண்டவர் பெரியார்.

1938ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் அக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவர் இருந்ததோ சிறைக் கொட்டடியில்! மாநாட்டுத் தலைவராக வீற்றிருந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தன் தோளுக்கு இடப்பட்ட மாலையை, மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்தின் காலில் வைத்து மரியாதை செய்தார் என்பதுதான் வரலாறு. யாருக்காகவும், எதற்காகவும் தான் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காத, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் பெரியார். அவரைக் கொச்சைப்படுத்த முயல்வோர் காலஓட்டத்தில் கரைந்து போவது உறுதி!

இந்து சனாதன தர்மத்தைக் காப்பாற்ற ஆஷ்துரையைக் கொலை செய்த பார்ப்பனன் வாஞ்சிநாதன் படம் வைத்தவர்களிடம், பெரியார் படம் வைப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

(இந்திய விடுதலை  மட்டுமல்லாது சனாதன தர்மத்தை நிலைநிறுத்துவதும் அவரது குறிக்கோளாக இருந்தது  என முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றிருக்கும் வாஞ்சி அய்யர் பற்றிய செய்திக் குறிப்பே கூறுகிறது.)

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழறிஞர்கள் படம் மட்டும் வைக்கப்படவில்லை.
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழ் இசைவாணர்கள், நாடக சினிமாக் கலைஞர்கள், ஈழப் போராட்ட  தியாகிகள், எல்லைப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் என மறைந்த தமிழர்களின் படங்கள் பல பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

எந்தப் பிரிவிலும் அவர்களால் கண்டுகொள்ள முடியாத தலைவராக பெரியார் இருக்கிறார்.

மொழிப்போர் தியாகிகள் வரிசையில் கூட அந்த மொழிப்போரையே முன்னின்று நடத்திய பெரியாரின் படத்தை வைக்க அவர்களுக்கு மனமில்லை. திட்டமிட்டே  தவிர்க்கப்பட்டிருக்கிறார் பெரியார்!

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்!

மறைமலைஅடிகள்:

ஜாதி, சமயப் பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனை எதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.

பின்னர் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வராயினர்.

தேவநேயப் பாவாணர்:

எல்லா துறைகளிலும், பிராமணியத்தை வெளிப்படை யாகவும் உண்மையாகவும் எதிர்த்து, தமிழரைத் தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல் ஏனைய எவரும் செயற்கரிய செயலாதலின் பெரியார் உண்மையில் பெரியாரே!

இலக்குவனார்:

பெரியார் தலைமையில் நமது நாடு, திராவிட நல்திருநாடு விடுதலை பெற்று உலக அரங்கில் உயர் பெருமை அடைவது உறுதி.

நாவலர் சோமசுந்தர பாரதியார்:

பெரியார் ராமசாமி அவர்கள் திராவிடருக்குப் பொதுவாகவும், தமிழருக்குச் சிறப்பாகவும் உரிமையும் பெருமையும் உண்டுபண்ண உழைக்கும் பெருந்தலைவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் போலிப் பெரியார் வரிசையில் சேராதவர். தமிழர் உரிமைக்கும், தமிழக நன்மைக்கும் ஓயாது உழைத்து, மாற்றார் யாரோடும் அஞ்சாமல் ஆற்றும் போராட்டத்தைப் பாராட்டாத தமிழரிரார் என்பதே என் கருத்து.

வ. ரா:

செய்யவேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப்போல தமிழ்நாட்டில் வேறு யாரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை! தூதுவன்!

கல்கி:

உலக அனுபவம் எனும் கலாசாலையை முற்றும் உணர்ந்த பேராசிரியர்!

டாக்டர் மா.இராசமாணிக்கனார்:

தமிழுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முன்னடியராக நின்று அவ்வின்னலை நீக்குதல் பெரியாரது இயல்பு. 1936 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் தமிழ் வாழ்க! என்ற முழக்கம் தமிழ்நாடு முழுதும் முழங்கச்செய்த பெருமை பெரியாருக்கே உரியது.

கா.அப்பாதுரையார்:

தமிழர் உண்மையிலேயே தமிழராய், தனித்தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமைகொள்ளத் துணிவர். தன்னாட்சி புரிவர்.  அறிவாட்சியில், அன்புக் கலையாட்சியில் முனைவர் என்பதற்கு அவர் வாழ்க்கையின் வெற்றி ஓர் அரிய வழிகாட்டியும், நற்குறியுமாகும்.

கி.ஆ.பெ.விசுவநாதன்:

தமிழர் இயக்கத்தின் தந்தையும், பகுத்தறிவு இயக்கத்தின் தலைவருமாகிய ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் வள்ளுவர் வாக்கைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நடந்து காட்டும் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே என்பது இனிது புலனாகும். பெரியார் அவர்கள் குறளைப் படித்தவர்கள் என்று கூறுவது மட்டுமல்ல, நன்கு ஆராய்ச்சி செய்தவர்கள் என்றும் என்னால் கூற இயலும்.

புலவர் குழந்தை:

பெரியார் பிறவாதிருப்பரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ் நாகரிகம் என்னும் உணர்ச்சி யெல்லாம் தமிழ் மக்களுக்குத் தோன்றியிரா. தமிழ் வாழ்க எனும் நெஞ்சத் துணிவு ஒருகாலும் உருவாகியிருக்காது. தமிழ் முதன்மொழி ஆனதற்கு மாறாக தன் பெயரை இழந்திருக்கும். தமிழ்ப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்.

திருக்குறள் வீ.முனுசாமி:

பெரியாரின் நுண்ணிய வாழ்க்கையினைத் துருவிக் காணுவோருக்கு வள்ளுவர் கூறும் வழியினிற் செல்வோர் இவர் ஒருவரே என்பது வெள்ளிடை மலையென வெளிப்படும்.

* * *

தமிழை சனியன் என்று சாடுகிறார் பெரியார்! தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதிதாசன் பாடலை இந்த இடத்தில் மறந்து விடுங்கள் என்று அடைப்புக்குறியிட்டதன் மூலம் நமக்கு பாரதிதாசனையும் நினைவுபடுத்தியிருக்கிறார் மணியரசன். தமிழை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாவேந்தர்தான், பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றதோடு தன் வாழ்நாள் முழுதும் பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்தார் என்பதையும் அறிவோம்.

பெரியாரைக் கொச்சைப்படுத்தும் பார்ப்பனக் கைத்தடிகள் அவ்வப்போது தோன்றுவதும்  முறியடிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. ம.பொ.சி.களின் ஆரம்ப காலச் சவடால்களும் பின்னர் திராவிட இயக்கத்தை நத்தியதையும் மக்கள் மறந்து விடவில்லை. பார்ப்பன பாரதியைத் தூக்கி நிறுத்த வேண்டி, புரட்சிக்கவிஞரின்

மங்கை யொருத்தி தரும் சுகமும்

மாந்தமிழுக்கு ஈடாகுமோ தோழி?

எனும் பாடலை நக்கலடித்து மயிலாடுதுறையில் ம.பொ.சி நடத்திய தமிழரசுக் கழக மாநாட்டில் புரட்சிக்கவிஞரை அசிங்கப்படுத்த முயன்ற அனந்தநாயகி மற்றும் சின்னஅண்ணாமலை வகையறாக்கள் ஓடஓட அடித்து விரட்டப்பட்ட கதை தெரியுமா?

மொழியை வைத்தும் பத்திரிகையை வைத்தும் தாராளமாகப் பிழைப்பு நடத்துங்கள்.

பெரியார் பெரு நெருப்பு! தீண்டினால் பொசுங்கிப் போவீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *