அய்யாவின் அடிச்சுவட்டில் … -109

ஜனவரி 01-15

எங்கள் பயணம் என்றும் நிற்காது

மத்திய நிர்வாகக் கமிட்டி நடப்பதற்கு முன்பாக, அம்மா அவர்களை அடக்கம் செய்துவிட்டு வந்த துயரம் சூழ்ந்த மனநிலையில் நான் ஆற்றிய முதல் உரை இதோ:

அய்யாவின் லட்சியங்களை நிறைவேற்றுவோம்! அம்மா அவர்கள் பாடுபட்டதை மனதில் கொள்வோம்!

மிகுந்த வேதனையான மன நிலையில் இங்கு நாம் கூடியிருக்கிறோம். 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் தந்தை பெரியார் அவர்களை இழந்தோம். அய்யா அவர்கள் நூறாண்டு வாழ்வார் _ அவருக்கு நூற்றாண்டு விழா காண்போம் என்று உறுதியாக நம்பிக்கை வைத்திருந்தோம். சமுதாய இனஇழிவு ஒழிப்பைப் பூர்த்தி செய்து நம்மை எல்லாம் முழு மனிதர்களாக ஆக்கியதற்குப் பின்புதான் மறைவார்கள் என்று நினைத்தோம். ஆனாலும் ஏமாந்தோம். சமுதாய நோய் தீர்க்கும் மருத்துவரானாலும் அவரைப் பற்றிப் பின்தொடர்ந்த நோயிலிருந்து வெற்றிபெற இயலவில்லை.

பகுத்தறிவுப் பகலவனாம் அய்யா அவர்களை இழந்து தவித்த நேரத்தில் நமக்கெல்லாம் பெரிய ஆறுதலாக இருந்தது அய்யா அவர்களால் நமக்கு அடையாளங் காட்டப்பட்ட அம்மா அவர்கள் நம்முடன் இருந்ததாகும்.

அய்யா அவர்களின் உடல் நலனைக் காத்தது மட்டுமல்ல _ அய்யா அவர்களது மறைவுக்குப் பிறகு அவர்களது கொள்கையையும் காத்துவந்தார்கள். அம்மா அவர்கள் தலைமையேற்று, நம்மை எல்லாம் நீண்டகாலம் கழகத்தை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். தமிழ்நாடு இப்பொழுது உள்ள சூழ்நிலையில் தமிழினத்திற்கு எவ்வளவோ இடர்பாடுகள், இத்தகையதொரு முக்கியமான காலகட்டத்தில் நமது அருமைத் தலைவரைப் பறிகொடுத்திருக்கிறோம். நம்மீது பேரிடி ஏற்பட்டுவிட்டது.

அய்யா அவர்களுக்குப் பிறகு மின் விளக்காக அம்மா அவர்கள் இருந்தார்கள். அவர்களையும் மண்ணுக்குள் புதைத்துப் பரிதவித்து நிற்கிறோம். அம்மா அவர்கள் நம்மை வழிநடத்திச் செல்கிறார்கள் என்று தைரியமாய் இருந்தோம். அந்தத் தைரியத்திற்குச் சோதனைக் காலம் பிறந்திருக்கிறது.

அந்தச் சோதனைகளிலிருந்து கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றிட வேண்டும்.

அம்மா அவர்களைப்பற்றி நம் எதிரிகள் போட்ட கணக்குகள் எல்லாம் தப்புக்கணக்காயின. எதிர்நோக்கி நின்ற எல்லாச் சவால்களையும் சமாளித்து அம்மா அவர்கள் இயக்கத்தை அழைத்துச் சென்றார்கள். அய்யா அவர்களது மறைவுக்குப் பிறகு அம்மா அவர்கள் நடத்திக்காட்டிய இராவண லீலா நிகழ்ச்சி, இயக்க வரலாற்றில் மட்டுமல்ல இன வரலாற்றிலேயே என்றென்றும் நிலைத்து நிற்கும் நிகழ்ச்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தையே குலுங்கச் செய்த அந்த நிகழ்ச்சியானது தந்தை பெரியாருக்குச் சரியான வாரிசு  அம்மா அவர்களே என்பதை உலகுக்கு உணர்த்தியது.

அய்யா அவர்களின் நூற்றாண்டு விழாவைக் காணும்பொழுது அய்யா அவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி மகிழ்ந்திருந்தோம் – ஏமாந்தோம். அய்யாதான் இல்லை, அவர்களால் அடையாளங் காட்டப்பட்ட அம்மா அவர்களாவது இருப்பார்கள் _ அவர்களைக் கொண்டு விழா எடுத்து மகிழலாம் என்றிருந்த நம்மிடமிருந்து அம்மா அவர்கள் பறிக்கப்பட்டுவிட்டார்கள்.

அய்யாவும் இல்லை, அய்யாவால் அடையாளம் காட்டப்பட்ட அம்மாவும் இல்லை. எவ்வளவு பெரிய சோதனை நமக்கு? நம்முடைய எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது.

தந்தை பெரியார் கொள்கை ஆயிரங்காலத்துப் பயிர். அதை யாராலும் மாற்றி விடவோ அழித்து விடவோ முடியாது என்று காட்டக் கூடிய பொறுப்பு ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது என்று யாரும் நினைக்கக்கூடாது. அது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று காட்ட வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களின் கொள்கை காப்போம்_காப்போம் என்று நாம் ஒவ்வொருவரும் இன்று வீரசபதம் எடுத்துக் கொள்வோம்.

தந்தை பெரியார் அவர்களது மறைவுக்குப் பின் நாம் எந்த உறுதிமொழி எடுத்தோமோஅந்த உறுதிமொழியை மீண்டும் இன்று நாம் புதுப்பித்துக்கொண்டு மேலும் மேலும் நம் இலட்சியங்களில் உறுதியும் செயல்பாட்டில் தீவிரமும் கொண்டு அவர்கள் எண்ணத்திலிருந்து நூலிழை பிறழாமல் இலட்சியப் பயணத்தைத் தொடருவோம்!

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அவர்கள் போட்டுத்தந்த பாதையில் அம்மா அவர்களது தலைமையில் எந்தவிதச் சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்ற சூளுரையை இன்று மீண்டும் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்வோம்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவர்களது இலட்சியப் பிரச்சாரம் சந்து பொந்துகளில் எல்லாம்கூட சுழன்றுசுழன்று வீசிக்கொண்டிருக்க வேண்டும். ஏசுவுக்குப் பின்னாலே அவரது சீடர்கள் எப்படி ஏசுவின் கொள்கைகளை உலகெங்கும் பரப்பினார்களோ அதுபோலவே தந்தை பெரியார் அவர்களது மறைவுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களாகிய கருஞ்சட்டை வீரர்கள் நாட்டின் நாலாதிக்குகளிலும் அய்யா அவர்கள் இருந்தபோது எப்படிப் பரப்பப்பட்டதோ அதுபோலவே அவர்களது மறைவுக்குப் பின்னும் தந்தையின் இலட்சியங்களைப் பரப்புகிறார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

கருஞ்சட்டைக் குடும்பம் என்றால் கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனவர்கள் -சபலங்களுக்கு ஆளாகாதவர்கள் என்ற இலக்கணத்தை முன் எப்பொழுதும்விட, இப்பொழுதுதான் _ இனிமேல்தான் முற்றிலும் நாம் நிரூபிக்க வேண்டும். இதற்கு முன்பு நமது அருமைத் தந்தை அவர்களும், அம்மா அவர்களும் நம்மை வழி நடத்த இருந்தார்கள். அவர்கள் இன்று நம்மிடை இல்லை என்பதை நினைக்கும்பொழுது, நமது கட்டுப்பாட்டுத் தன்மை மேலும் உறுதியாக வேண்டும்.

எனவே, இதுபற்றி ஆழமாகச் சிந்தித்து தெளிவான முடிவு எடுத்து இன்றைய தினம் நடக்கவேண்டிய பணிகள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிச்சயமாக கொள்கையைப் பொறுத்தவரையிலே _ லட்சியப் பயணத்தைப் பொறுத்தவரையிலே எள்ளளவும் தடைபடாது என்று கருஞ்சட்டைத் தோழர்கள் சார்பாக நாம் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்வதைத் தவிர நம்முடைய அய்யா அவர்களுக்கும், அம்மா அவர்களுக்கும் நாம் செலுத்தக்கூடிய மரியாதை வேறு கிடையாது.

நம்முடைய குடும்பம் மேலும் கட்டுப்பாடான குடும்பமாக ஆகவேண்டும். நமது இயக்கக் குடும்பம் பல்வேறு கஷ்ட நஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் எதிர்முகம் கொடுக்கக்கூடிய குடும்பமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சபலங்களுக்கும் ஆளாகக்கூடிய குடும்பமாக இருக்கக் கூடாது என்று நம்பித்தான் நிச்சயமாக நமது அய்யா அவர்களும் அம்மா அவர்களும் நம்மை அந்தவிதமாக தயாரித்து இருக்கின்றார்கள். அதை நாம் செயலில் காட்ட வேண்டும். புதிய உறுதி ஒன்றும் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

ஏற்கெனவே நாம் எடுத்துக் கொண்ட உறுதி இருக்கின்றதே அதுவே போதும். அந்த உறுதி வெறும் வாசகங்கள் அல்ல, அந்த உறுதி நமது நெஞ்சிலே குருதியிலே உறைந்த உறுதி என்பதை நாட்டுக்கு நாம் காட்டவேண்டிய சந்தர்ப்பத்தை நாடு எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றது.

திராவிடர் கழகமா? இனிமேல் அது என்ன? என்று யாரும் எள்ளி நகையாட முடியாத அளவுக்கு, தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையா இனிமேல் அது முற்றுப்பெற்றுவிட்டது என்று எவரும் எண்ணிவிட முடியாத அளவுக்கு, தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு ஊருக்கு ஊர் மாவட்டத்திற்கு மாவட்டம் கருஞ்சட்டையினர் ஆயிரக்கணக்கில் அல்ல, பல்லாயிரக்கணக்கில். நடமாடும் நிலையை ஒவ்வொருவரும் தொடங்கிட வேண்டும். சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் சூறாவளிப் பிரச்சாரமாக ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய திட்டங்கள், எண்ணங்கள் என்ன என்பதை நம் அத்துணை பேர்களும் ஆராய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு நாம் இங்கு குழுமி இருக்கின்றோம்.

மத்திய திராவிடர் கழக கமிட்டி உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், ஏனைய வட்ட கிளைக்கழகத் தலைவர்கள், தோழர்கள் எல்லாம் இங்கு இருக்கின்றோம்.

அவர்களை வைத்து தனியே ஒரு நிர்வாகக் கமிட்டி நடைபெற இருக்கின்றது. பிறகு அந்த முடிவுகள் உங்களுக்கெல்லாம் தெளிவாக அறிவிக்கப்படும். நீங்கள் எல்லாம் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து நமது தலைவர் அம்மா அவர்களுக்கு மரியாதை செலுத்துவது மூலமாக நமது அய்யா அவர்களுக்கு மரியாதை செலுத்தி அதன் மூலமாக நமது இயக்கத்திற்கு மரியாதையினை உயர்த்தி உள்ளீர்கள். நமது கொள்கைகள் உறுதியானவை. அவை மனித சமுதாயத்திற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டுத் தேவைப்படுகின்ற ஒன்று என்ற உணர்வோடு நீங்கள் இங்கே லட்சக்கணக்கிலே பல்வேறு சிரமங்களையும் பொருட்படுத்தாது வந்து கூடியுள்ள உங்களைக் கண்டு நாங்கள் ஆறுதல் பெறுகின்றோம்.

எங்களுக்கு நீங்கள் ஆறுதல் சொல்ல வந்து இருக்கிறீர்கள். நாம் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் பெறுகின்றோம்.

அய்யா அவர்கள் எந்தக் கொள்கைகளை, எந்த அறிவுரைகளைச் சொல்லிவிட்டுப் போய் இருக்கின்றார்களோ அந்த அறிவுரைகளை கொஞ்சம்கூட சபலத்துக்கு ஆளாகாமல் நூலிழை பிறழாமல் சுயநலத்துக்கு ஆளாகாமல், சுய விளம்பரத்திற்கு ஆளாகாமல் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும் நம்மை நாம் அடிமைப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து தந்தை பெரியார் தந்த அறிவுச் சுடர் இருக்கின்றதே அந்த அறிவுச் சுடரை அணையாது உயர்த்திப் பிடிப்போம். அந்தச் சுடர் ஏந்திய கை மண்ணுக்கு மேல்தான் தெரிகின்றது. அது மண்ணுக்கு உள்ளே போகாது என்று காட்ட வேண்டிய பொறுப்பு யாரோ சிலருக்கு இருக்கின்றது என்று தயவுசெய்து எண்ணாதீர்கள். இந்த மாமன்றத்திலும் இந்த பெரியார் திடலிலும் கூடி இருக்கின்ற லட்சோபலட்சம் மக்கள் அத்துணைப் பேருக்கும் உண்டு.

நாம் இருப்பது நமக்காக அல்ல _ நமது கொள்கைகளுக்காக _ நமது அறிவு ஆசான் அய்யா அவர்கள் விட்டுச் சென்ற கொள்கைகளுக்காக _ அம்மா அவர்கள் இறுதி மூச்சு உள்ளவரை _ கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதற்காகவே பாடுபட்டார்கள் _ அதை நாம் நமது மனதில் கொள்வோம். நாமும் அதற்காகவே இருக்கிறோம் _ அதற்காகவே பாடுபடுவோம் _ அதற்காகவே அர்ப்பணித்துக் கொள்வோம் _ அம்மா அவர்களை மண்ணுக்குள் தந்துவிட்டு இருக்கிற நாம் இன்று எடுத்துக்கொள்ள வேண்டிய வீரசபதம் _ சூளுரை _ உறுதிமொழி இதுவே! என்று உரையாற்றினேன். இக்குழுக் கூட்டத்தில் நமது இயக்கத் தோழர்கள், தோழியர்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

அம்மா அவர்களால் எழுதப்பட்ட கடிதம்!

சென்னை பெரியார் திடலில் 18_3_78 அன்று மாலை ஆறரை மணியளவில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாகக் குழு உறுப்பினர்களும் (டிரஸ்டிகளும்) மாவட்டக் கழக முக்கியஸ்தர்களும் கொண்ட கூட்டம் நடைபெற்றது.

கடந்த 2_1_78 அன்று, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன ஆயுள் செயலாளர் அன்னை மணியம்மையார் அவர்களால் எழுதப்பட்டு, இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் டெபாசிட் செய்யப்பட்டு, தனது மறைவுக்குப் பிறகு தஞ்சாவூர் திரு. கா.மா.குப்புசாமி அவர்களிடம் ஒப்படைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சீலிட்ட கவர் _ இந்தியன் ஓவர்சீஸ் பேங்கிலிருந்து தஞ்சாவூர் திரு.கா.மா.குப்புசாமி அவர்களால் பெறப்பட்டு, அவ்வுரையில்  இருந்த அம்மா அவர்களால் எழுதப்பட்ட நியமனக் கடிதம் படிக்கப்பட்டது. அம்மா அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தை அப்படியே தருகின்றேன். எங்கள் பயணம் என்றும் நிற்காது!
இதன் பிறகு 19.03.1978 அன்று, எங்கள் பயணம் என்றும் நிற்காது! என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று எழுதினேன். வற்றாத கண்ணீர், தாளமுடியாத துயரம், வார்த்தைகளால் வடித்திட முடியாத வேதனை _ இவைகளோடு தமிழ்ப் பெருமக்களுக்கு மிகுந்த பணிவன்புடன் எழுதுகிறேன். நமது அறிவு ஆசான் அய்யா அவர்களை அய்ந்து ஆண்டுகளுக்குமுன் இழந்தோம். எளிதில் ஆறுதல் பெறமுடியாத _ அந்த ஈடு செய்ய முடியாத இழப்புக்குப் பிறகும் ஒரே ஒரு ஆறுதல் வணக்கத்திற்குரிய அய்யா அவர்களை 95ஆம் ஆண்டுவரை காத்த மரியாதைக்குரிய நம் அருமை அம்மா அவர்களை அய்யா அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதுதான்.

அய்யா மறைவுக்குப்பின் அம்மா அவர்கள் தனது கடும் நோயின் உபாதைக்கிடையிலும் கலங்காமல் தனது லட்சியப் பயணத்தைச் சிங்கமெனத் தொடர்ந்தார்கள். லட்சோபலட்சம் கருஞ்சட்டைச் சிங்கக் குட்டிகளை, பகுத்தறிவுத் தங்கக்கட்டிகளை உருவாக்குவதிலும் அய்யாவின் கொள்கைகளை அவனியெங்கும் பரப்பவும் அவர்கள் ஆற்றிய பணி வரலாறு ஆகியிருக்கிறது!

அவரது திடீர் மறைவு காரணமாக தமிழினம் மிகுந்த ஏமாற்றத்துடன் துயரக் கடலின் நடுவே இன்று தத்தளித்துக் கொண்டுள்ளது. அய்யா அவர்களைத்தான் நூற்றாண்டு விழாவில் நாம் நம்மோடு வைத்து விழா கொண்டாடி மகிழ இயலவில்லை என்றாலும் அம்மா அவர்களையாவது கலந்து கொள்ள வைத்து விழாவினை முடிப்போம் என்று நல்ல நம்பிக்கையுடன் இருந்த நமக்கு இயற்கையின் சதி மிகப்பெரிய தோல்வியைத் தந்திருக்கிறது.

தலைவர் அம்மா அவர்களின் இறுதிப் பயணத்தின்போது தமிழகப் பெருமக்கள் அனைவரும் கட்சி வேறுபாடு, கருத்து வேறுபாடு இன்றி, மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களது இடையறாத பணிக்கு கைமாறு கருதாத தன்னலமறுப்புத் தொண்டுக்கு, காட்டிய வீர வணக்கம் எவராலும் எளிதில் மறக்க இயலாத ஒன்றாகும்.

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு கட்சிகளின் தலைவர் பெருமக்கள், நாடாளுமன்ற _ சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், பெரும் அதிகாரிகள் முதற்கொண்டு என்.ஜி.ஜி.ஓ. தோழர்கள், பாட்டாளித் தோழர்கள், விவசாயத் தோழர்கள், உழைப்பாளப் பெருமக்கள் பல்லாயிரக்கணக்கான பெருமக்கள் தாய்மார்கள் அலை அலையாய் அணிதிரண்டு வந்து அம்மா அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி நம் இயக்கத்தவருக்கு ஆறுதல் சொன்னதற்கு நமது இயக்கத்தின் லட்சோபலட்சம் கருஞ்சட்டை மாவீரர்களின் சார்பில், இயக்கத்தின் சார்பில் நெஞ்சு நிறைந்த நன்றியையும் வணக்கத்தையும் மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பகுத்தறிவுப் பகலவன் மறைந்த நிலையில், இருளில் தவிக்காது நம் பணி தொடர அம்மா என்ற சக்தி வாய்ந்த மின்விளக்கு வெளிச்சம் நமக்கு இருந்தது; அதுவும் அணைந்திட்ட நிலையில் சோக இருள்தான் எங்கும்! அம்மா என்ற மின் விளக்கும் இல்லாத நிலையில் ஒரு அகல் விளக்கையாவது கையில் எடுத்துக் கொண்டு இலட்சியக் கடும் பயணம் தொடர தோழர்கள் புறப்பட முடிவெடுத்துவிட்ட நிலையில், அந்த அகல் விளக்கினை இன உணர்வுள்ள தமிழ் மக்களும் பகுத்தறிவாளர்களும்தான் அணையாது காக்கும் கரங்களாக இருந்து பாதுகாத்து வரவேண்டும். அந்த நம்பிக்கையோடு கருஞ்சட்டைக் கடமை வீரர்களான நாம் _ இராணுவக் கட்டுப்பாடு காக்கும் லட்சிய வீரர்களாம் நாம் நமது பயணத்தில் எத்தகைய சோதனைகளும், சூறாவளிகளும் ஏற்படினும் தொய்வின்றி துணிவுடன் தொடருவோம்!

அய்யா _ அம்மா நம் இயக்கக் குடும்பத்தினர். நம்மைப் பொறுத்தவரை அவர்கள் மறைந்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள். நெஞ்சில் நிறைந்தவர்களாக, இரத்தத்தில் உறைந்தவர்களாகவே ஆகி விட்டவர்கள். எமை, நத்துவாய் என எதிரிகள் விட்டழைத்தாலும் தொடோம், தாயின்மேல் ஆணை தந்தைமேல் ஆணை என்ற புரட்சிக்கவிஞரின் வீர காவியத்தின் அங்கங்களாக நாம் இனி பணி தொடருவோம்.

வழியும் கண்ணீருடன் எங்கள் விழிகள் அய்யா _ அம்மா காட்டிய வழியையே நோக்குகின்றன! எங்கள் கால்கள் அந்த வழி தவறாது நடைபோடத் தொடங்கி விட்டன. எங்கள் உள்ளங்களோ சபலத்திற்கு இடம் கொடுக்காத உறுதிமிக்க லட்சியக் கதவுகளால் காக்கப்பட்டு லட்சியப் பயணத்தை, ஆயிரமாயிரம் சோதனைகள் வந்தாலும் அய்யா _ அம்மாவினை எண்ணி புதுத் தெம்புடன் தொடருகிறோம்,

தமிழ்ப்பெருமக்கள் எங்களை அனாதைகளாக்கி விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு!

ஆம், அந்த நம்பிக்கை வீண் போகாது! காரணம், நாங்கள் அவர்களுக்குத் தேவை; அவர்களும் எங்களுக்குத் தேவை. எனவே எங்கள் பயணம் என்றும் எதற்கும் நிற்காது! என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

அன்னையார் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிடும்போது, அன்னை என்று புகழாமல், நாம் வேறு என்ன புகழவல்லோம். பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார், ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாக பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகக் குவிப்பார்கள். அதேநேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்கும் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது, முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன் மூலம் ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். (10.04.1960 குயில் இதழில்). அது எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது  என்பதை அறியலாம்.

– நினைவுகள் நீளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *