தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?

ஜனவரி 01-15

தி     இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை  உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர். அவரிடம் அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து ஜோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள்.

ஜோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஜோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது அறிவியல் அன்று, மூடநம்பிக்கை. .அரசு, அறிவியல்பூர்வமான கருத்துகளை மட்டுமே மக்களிடம் கற்பிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கின்றது. ஜோதிடம் மதம் சார்ந்தது; மதச் சார்பற்ற அரசு பல்கலைக்கழகம் ஜோதிடத்தைப் பாடமாக _ பட்டயப் படிப்பாக கற்பிப்பது சட்டத்திற்கு முரணானது .

எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஜோதிடக் கல்வியை  ரத்து செய்ய வேண்டும். பித்தலாட்ட ஜோதிடம், கல்வி அன்று. ஜோதிடம் அறிவியல் அன்று.

ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர். பிறந்த நேரமே யாருக்கும் சரியாகத் தெரியாதபோது, ஜோதிடம் எப்படி உண்மையாகும்? பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து செவிலியர் சொல்லும் நேரத்தை பிறந்த நேரம் என்று குறிக்கின்றனர்; பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர்.

ஜாதகத்தை  வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். எல்லாப்  பொருத்தங்களும் உள்ளது என்று சொல்லித் திருமணம் செய்கின்றனர். சில நாட்களில்  சண்டை வந்து மணவிலக்குக் கேட்கின்றனர். சிலர் எந்தப் பொருத்தமும், ஜோதிடமும்  பார்க்காமல் திருமணம் செய்கின்றனர். பல்லாண்டுகள்  சண்டை இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

ஒருவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்களிடம் கொடுத்து ஜாதக பலன்களைத் தனித்தனியாக எழுதச் சொல்லிப் பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. மூன்றும் மூன்று மாதிரியாகவே  இருக்கும்.

நாளிதழ்களில் வரும் ராசி பலனைப் படித்துப் பாருங்கள். ஒரே ராசிக்கு ஒரே மாதிரிதானே வர வேண்டும் ஒவ்வொரு நாளிதழிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்றால் இப்படி வேறுபாடு ஒரே ராசிக்கு ஒரே நாளில் வருமா ? சிந்திக்க வேண்டாமா?

சுனாமி வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே! ஜோதிடர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்வார்கள்.

கண்ணன் என்ற ஜோதிடர் 5 கொலைகள் செய்து இப்போது சிறை சென்றுள்ளார். அவர் ஜாதகத்தை அவர் கணித்து இருக்கலாமே. இப்படித்தான் பல சாமியார்கள் ஜோதிடம் சொல்லி பித்தலாட்டம் செய்து வருகின்றனர். ஜோதிடர்கள் தொல்லை சாமியார்கள் தொல்லை தினசரி செய்தியாக வருகின்றது.

ஜோதிட பட்டயப் படிப்பு வேறு  படித்துவிட்டால் நாட்டில் பித்தலாட்ட ஜோதிடர்கள் பெருகி விடுவார்கள். நாட்டில் தொல்லை இன்னும் அதிகமாகி விடும்  பணத்தாசை காரணமாக.

பல்கலைக்கழகத்தினர் பித்தலாட்ட ஜோதிடத்தைப் பாடமாக கற்பிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று கேட்டுப் பாருங்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்னது:

எனக்குக் கடவுள் நம்பிக்கை  உண்டு. ஆனால் ஆயிரம் ஆயிரம்  மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் மனித  வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.

– இரா.இரவி, மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *