– தந்தை பெரியார்
சிலர் கடுதாசி எழுதும்போது கடவுள் துணை என்றுதான் எழுதுவது வழக்கம். கடவுளே துணை என்று ஏன் எழுதுவதில்லை தெரியுமா? கடுதாசி போய்ச் சேருவதற்கு ஸ்டாம்பு துணை, சரியான விலாசம் துணை, தபாற்காரரின் நாணயமும் துணை என்றாலும், கடவுளும் துணையாயிருக்கட்டுமே என்பது அதன் பொருள்! ஆனால் பெரியவர்கள் முதல் பெரியவர்கள் அல்லாதவர்கள் வரையில், இப்போது கடவுளே துணை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
வங்காளத்தில் நான் எவ்வளவு நாள் தங்கியிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. அடுத்தபடியாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுளே எனக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்கிறார் காந்தியார்.
இதுதான் நல்ல பேச்சு! அடுத்தபடி இவர் தப்பாக நடந்து கொண்டாலும், கடவுள் தப்பு வழியில் அழைத்துப் போய்விட்டார் என்று கூறித் தப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை நல்ல காரியமாக ஏதேனும் நடந்து விட்டாலும், கடவுளே காந்தியாருக்கு எப்போதுமே துணையாக நிற்கிறார்; அதனால் தானே மகாத்மா என்ற பட்டம் பெற்றார் என்பார்கள் பாமரமக்கள். அதாவது பத்திரிகை படிப்பவர்கள்!
ஆனால், இவருக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய கடவுள் இந்துக் கடவுளா, முஸ்லிம் கடவுளா என்பதுதான் தெரிய வேண்டும்! ஏனெனில், வங்காளத்தில் கடவுள் ஒருவர் என்பதை நம்புகிறவர்கள் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. கடவுளும் கல்கத்தா காளிக்கு இரத்த அபிஷேகம் செய்து வேடிக்கைப் பார்க்கிறாரே தவிர, பிரிட்டிஷ் இராணுவத்தின் உதவியை நாடாமல், காந்தியாரின் அந்தராத்மா மூலமாக இந்து _ முஸ்லிம் ஒற்றுமையை உண்டாக்குவதாகக் காணோம்!
காந்தியார்தான் இப்படிக் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டார் எனக் கருத வேண்டியதில்லை. மந்திரி ராகவமேனன் திருச்செங்கோட்டில் பேசுகையில், பஞ்சத்தினால் ஒருவரும் உயிர்விடக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
கவலையொழிந்தது மந்திரியாரே! பசி! பசி என்று இனிமேல் யாராவது கதறினால், நீர் சஞ்சலப்பட வேண்டியதே இல்லை. கடவுள் இருக்கிறார்! நீங்கள் சாக மாட்டீர்கள்! என்று ஒரே வார்த்தையில் கூறி விடலாம்! அப்படியே செத்தால்தான் என்ன மோசம்! கடவுளே இவ்வாறு கட்டளையிட்டார் என்று சொல்லி விட்டால் போகிறது!
சரி, கடவுளரே! நீர் இனிமேல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். பெரியவர்கள் மட்டுமல்ல; சந்தேகப்படக் கூடிய ஆசாமிகள்கூட உங்கள் பெயரைத்தான் சொல்கிறார்கள்! கடவுள் சாட்சியாக நான் திருடவில்லை என்கிறான் மூர்மார்க்கெட்டில் முடிச்சவிழ்த்த முனுசாமி! ஆனால், நீர் மட்டும் மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்பு வந்து ஒரு நாளாவது சாட்சிக் கூண்டில் ஏறியிருப்பீரா? என்ன இரக்கமற்ற நெஞ்சு ஸார், உங்களுக்கு!
இப்படி ஆபாசமாகக் கூறுகிறேனே என்று வாசகர்கள் கோபிக்கக் கூடாது.
சரியாகச் சொல்ல வேண்டுமானால், சாணி, மூத்திரம், பால், தயிர், நெய் ஆகிய அய்ந்தையும் சாப்பிடுங்கள் என்றுதான் கூற வேண்டும்! இந்து மத பத்கர்கள் என்மீது ஆத்திரப்படுவதானால், சமஸ்கிருதத்தில் சொல்லி விடுகிறேன். பஞ்சகவ்யம் சாப்பிடுங்கள்! ஆனால் நான் சொன்னால் கோபிப்பவர்கள், அய்யர் சொன்னதும் உடனே டபக் என்று ஊற்றி விழுங்குகிறீர்களே! (பக்தர்களைத்தான் கேட்கிறேன்).
கிழக்கு வங்காளத்தில் பலாத்காரமாக முஸ்லிம்களாக்கப்பட்ட இந்துக்களை மீண்டும் இந்துக்களாக்குவதற்கு மதத் தலைவர்கள் சில முறைகளைக் கூறியிருக்கின்றனர். அவைகளில் பஞ்சகவ்யம் சாப்பிடுவதும் ஒன்று! அதைத் தான் சொன்னேனே தவிர, பாலைக் கறந்து பார்ப்பான் வாயிலும், கல்லின் தலையிலும் ஊற்றிவிட்டு, நீங்கள் பசுஞ்சாணியையும், அதன் சிறுநீரையும் சாப்பிட்டுச் சந்தியில் நில்லுங்கள் என்று சொல்வதற்கு நான் என்ன முட்டாளா? அல்லது அயோக்கியனா?
கங்கா ஜலத்தைப் புரோட்சித்தல் இன்னொரு முறையாகக் கூறப்படுகிறது! இவ்வளவு சுளுவாக இந்துவாக மாறுவது நல்லது தான்! சிவாஜியை க்ஷத்திரியனாக்குவதற்காகக் கேட்டது போல், லட்சக்கணக்கான ரூபாய், பார்ப்பனருக்குத் தட்சணையாகக் கொடுத்தால்தான் இந்துவாகலாம் என்று சொல்லாமல், இவ்வளவு மலிவான முறையையாவது கூறினார்களே, புண்ணியவான்கள்! காலத்திற்குத் தகுந்தபடி முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே! சிம்லாவில் ஸ்டாக்கிங்ஸ், பூட்ஸ் சகிதமாகப் பார்ப்பனப் புரோகிதர் திதி செய்து வைக்கிறார்களே, அதைப்போல!
சரி, மீண்டும் இந்துவான பிறகு, பார்ப்பானுக்கு அடிமையாகத்தானே இருக்க வேண்டும்! அதைச் சொல்லக் காணோமே!
இந்துவாக இருந்து மதம் மாறியவர்கள் எல்லோரையுமே இந்தப் பஞ்சகவ்யம், கங்காஜலம் – இரண்டையும் கொண்டே இந்துக்களாக்கிவிட முடியுமா? என்பது ஒரு கேள்வி. இந்துக்கள் என்றால் எந்த ஜாதியாராக ஆக்க முடியும்? என்பது மற்றொரு கேள்வி. உதாரணமாக, லார்ட் வேவல் இந்துவாக விரும்பினால், அல்லது ஜனாப் ஆசப் அலி இந்துவாக விரும்பினால் (நல்ல மனிதர்கள், பாவம்!) அய்யர்களாக மாற்றப்படுவார்களா? அல்லது அய்யங்கார்களாகவா? அல்லது ஆதி திராவிடர்களாகவா? அய்யராக மாற வேண்டுமானால், ஒரு கைக்குப் பதிலாக, ஒரு செம்பு பஞ்சகவ்யம் சாப்பிட்டால் போதுமா?
தோழர்கள் அம்பேத்கர், சிவ ஷண்முகம், சிவராஜ் இவர்கள் தலையிலும் கங்கைத் தண்ணீரைத் தெளித்து (வேண்டுமானால் கங்கையிலேயே முழுக்கி எடுத்தாலும் சரி) அய்யர் அல்லது அய்யங்காராக்கி, கோவில் சிலையைத் தொடுமாறு செய்ய முடியுமா? பார்ப்பனரோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளுமாறு செய்ய முடியுமா?
சங்கராச்சாரியார், சனாதன தர்மத் தலைவர்கள், பிராமணோத்தமர்கள் _- ஆகியோர் என் கேள்விகளுக்குப் பதில் சொன்ன பிறகு, பஞ்சகவ்யமும், கங்கா ஜலமும் குடம் குடமாகத் தயார் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன்!
(2.11.1946 குடிஅரசுவில் தந்தை பெரியார் அவர்கள் காலி மணிபர்ஸ்
என்ற புனைப் பெயரில் எழுதிய கட்டுரை)