மரண தண்டணை நீக்கப்பட வேண்டும்!

ஜனவரி 01-15

ஆசிரியர் பதில்கள்


கேள்வி : பொதுவாழ்க்கையில் பொன்விழாவைக் கடந்த தாங்கள் இந்த இனத்திற்காக சாதித்தது என்று எதைக் கருதுகிறீர்கள்?

– க.ல.கன்னியப்பன், பொற்பந்தல்

பதில் : (1.) மண்டல் கமிஷன் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு, பிற்படுத்தப் பட்டோருக்கு மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றது.

இதற்கு முன்பு மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (மக்கள் தொகையில் 75 விழுக்காடு உள்ளவர்கள்) கல்வி, வேலைகளில் இடஒதுக்கீடு இல்லை.

(2.) தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தனிச்சட்டம் -_ அரசியல் சட்ட 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன்.

(3.) எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டுக்கான வருமான வரம்பு (ரூ.9000 வருமான வரம்பு) ஆணையைக் கிளர்ச்சி செய்து ஒழித்தது!

(4.) 80 லட்சம் ரூபாய் வரி பாக்கிக்காக பெரியார் அறக்கட்டளையை, அதன்  சொத்துக்களை முடக்கியதை விலக்கி, அவ்வழக்கில் வெற்றிபெற்று, அதை அறக்கட்டளையாக அங்கீகரிக்கச் செய்து வருமானவரித்துறை தணிக்கை பெற்றமை.

(5.) பெரியாரை உலகமயமாக்கி, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்லூரி முதல் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வரை கண்டவை. (இவை அனைத்தும் கூட்டு முயற்சிதான்; கழகக் குடும்பங்கள், ஆர்வலர்கள், கல்விக் குடும்பங்களின் ஒத்துழைப்புடன்)

கேள்வி : பழையகோட்டை அர்ச்சுனன், தஞ்சை கா.மா. குப்புசாமி, கல்லை கோ.சாமிதுரை ஆகிய முப்பெரும் பொருளாளர்களுடன் தாங்கள் ஆற்றிய இயக்கப் பணியில் எதிர்கொண்ட சுவையான நிகழ்ச்சி ஏதாவது? – மன்னை சித்து, மன்னார்குடி

பதில் : பழையகோட்டை பட்டக்காரர் காலம் நான் அருகில் அறியாதது. அவரது உதவியாளர் ஈரோடு தோழர் என்.இ.பாலகுரு மூலம் அறிந்தவைகளே. மற்ற இருவர் தந்த ஒத்துழைப்பால்தான் கழகமும் நிறுவனமும் வளர்ந்தோங்கியது! நான் கேட்டுக்கொண்ட எதையும் அவ்விருவரும் மறுத்ததே இல்லை!

கேள்வி : இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்யலாமா?
– கே.வேல்முருகன்

பதில் : கை குலுக்கலே சாலச் சிறந்தது; ஆனால், வணக்கம் – செலுத்துதல் இப்போது தேவைப்படுகிறதே!

கேள்வி : கையில் காப்பு அணிவது மதத்தைக் குறிக்குமா? குறிக்காதா?
– கே.டி. திலகர், பெரம்பலூர்

பதில் : காப்பு அணிவது மதத்தைக் குறிக்காது; நகை மோகத்தையும் மைனர்த்தனத்தையும் குறிக்கும்!

கேள்வி : தம்முடைய மறைவிற்கு 3 மாதங்களுக்கு முன்னால் தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டும் என்ற தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். இது பற்றிய தங்களின் கருத்து என்ன? – ஏ. தமிழொளி, குடியேற்றம்

பதில் : சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் அவர் கடைசியாக நடத்தியது, பேசியது. அதற்காக விடுத்த அறிக்கையில் நானே பிரிவினை கேட்கவில்லையே என்ற அறிக்கையை விடுத்தார்; அது விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ளது. விடுதலைக்கான தேவை அவசியம் வேறு _ கழகம் விடுதலை கேட்டது என்ற நிலை வேறு.

கேள்வி : மரண தண்டனை பற்றி தி.க.வின் நிலைப்பாடு என்ன? கடும் குற்றங்களுக்கு (கொலை, பாலியல் வன்முறை) மரண தண்டனை கொடுப்பது சரிதானே? – கரு. சோணைமுத்து, ராஜகம்பீரம்

பதில் : மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதே! குற்றவாளிகளைத் திருத்துவதே தண்டனைச் சட்டத் தத்துவம்.

கேள்வி : 2004இல் இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் செய்து தோல்வியைச் சந்தித்ததுபோல் இந்த முறை இருக்காது என்றும், தாம் வெற்றிபெற்று விடுவோம் என்றும் கருதும் பா.ஜ.க. பற்றி-? – கோ. ரமேஷ், செஞ்சி

பதில் : தேர்தலில் நிற்கும் எவரும் ஸ்ரீமான் வீரப்ப ஆச்சாரி உட்பட தோற்று விடுவதாகக் கூறுவதில்லை; நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றுதானே கூறுகிறார்கள்!

கேள்வி : அமெரிக்க வெள்ளை மாளிகையின் வீட்டோ அதிகாரத்தில் தனிநாடு பிரிந்து செல்லும் உரிமம் உண்டா? இல்லையா?
– திங்கள் நகர் நூர்தீன், நெய்யூர்

பதில் : கேள்வியே குழப்பமாக உள்ளது. அதென்ன வெள்ளை மாளிகை வீட்டோ?

கேள்வி : ஓட்டுக்குப் பணம் வாங்கும் நமது நாட்டு மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை எதிர்பார்க்கும் உரிமை இருக்கிறதா?
– ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : தார்மீக உரிமை இல்லை; எனவேதான் முன்பு கடற்கரைப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தந்தை பெரியார்; லஞ்சம் ஊழல் பற்றிப் பேசும் நீங்கள் (மக்கள்) ஓட்டுக்கு வாங்கிய பணத்தை, ஒரு பெரும் உண்டியல் வைக்கிறோம். அதில் போட்டுவிட்டு பிறகு அதைப்பற்றிப் பேசினால் அது யோக்கியப் பொறுப்பு என்று கூறினார்கள்!

கேள்வி : முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பாலியல் குற்றங்கள் அதிக அளவில் வெளிச்சத்திற்கு வரக் காரணம் என்ன?
– எஸ்.கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் :  க்பெண்களுக்கு இப்போதுதான் துணிவு வந்திருக்கிறது; ஆண் ஆதிக்கம் _ எஜமானத்துவம் கொஞ்சம் கலகலத்து வருகிறது. எனவே, வெட்கப்படாமல் சொல்ல முன்வருகின்றனர் நம் பெண்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *