அண்மைக் காலங்களில் கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாகக் கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது. ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.
– பி. சதாசிவம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி
திருநங்கைகளை, பெற்ற பெற்றோரே மதிக்காத சூழல் இருப்பதால் சமுதாயத்திலும் அவர்களை யாரும் மதிப்பதில்லை. காவல்துறையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. எங்களுக்குக் குடும்பம் என்ற ஒன்று இல்லை. எனவே, 24 மணி நேரமும் எங்களால் சேவையாற்ற முடியும்.
– அனுசியா சிறீ, திருநங்கை
மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம். சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.
அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக் கொள்கிறோம்.
– அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்