மதத்தைச் சும்மா விட்டுவிட முடியுமா?

டிசம்பர் 16-31- 2013

கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக உங்கள் நேரத்தை ஏன் செலவிடுகிறீர்கள்?

மக்கள் எதை நம்புவதற்கு விரும்புகிறார்களோ அதை நம்புவதற்கு ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடாது?

மத விஷயங்களில் தலையிடாமல் மதத்தை ஏன் தனியாக இருக்கும்படி விட்டுவிடக்கூடாது?

இது போன்ற கேள்விகள் நாள்தோறும் மத நம்பிக்கையாளர்களிடமிருந்து வருகின்றன.

கடவுள்  நம்பிக்கையாளர்களை தங்களின்  நம்பிக்கையினைக்  கைவிடச் செய்வது ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான காரணத்தை யாராலும் எனக்கு விளக்கிக் கூற முடியாது என்று யூ- டியூப் இணையத்தில் அண்மையில் ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கான விடை மிகவும் எளிதானது. மதம் என்ற ஒன்று இருப்பதால்தான், மதம் பற்றிய எதிர்க் கருத்துகளும் இருக்கின்றன

நமது கலாச்சாரத்தில் ஊடுருவி,  நமது வீட்டு வாயில்கள் வரை  வேதம், புராணம், சாத்திரம் ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதுடன், நரகத்தில் முடிவில்லாத தண்டனை கிடைக்கும் என்று நம்மை அச்சுறுத்தி,  நமது அறிவியல் நூல்களில் தனது மூக்கை நுழைத்து, ஜோதிடம், வாஸ்து என்பது போன்ற போலி அறிவியல் பேசிக் கொண்டு, தொற்றுநோய் போன்று நமது அரசியல் நடைமுறையையும் தொற்றிக் கொண்டு,  நமது குழந்தைகளுக்கு மதக் கோட்பாடுகளைக் கற்றுக் கொடுத்து, அந்தக் கோட்பாடுகளை அவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள் உடல், ஆன்மா அளவில் அழிவைத் தேடிக் கொள்வர் என்றும் மதம்  அச்சுறுத்துகிறது.

நம்மை அன்றாடம் அச்சுறுத்தும் பேரிடர் போன்ற மதச் செய்திகளுக்கு கடவுள் நம்பிக்கையற்றவர்கள்  பதில் அளிக்கிறார்கள்; அவ்வளவுதான்.

நமது இல்லக் கதவுகளைத் தட்டி உள்ளே நுழைந்து, நமது இல்லங்களிலும், நமது பணியிடங்களிலும், நமது தனிப்பட்ட வாழ்விலும், நாம் செய்யும் தொழிலிலும்  நம்மை மிரட்டி, நம் மீது குற்றம் சுமத்தி தான் விரும்பும் அளவுக்கு உரத்த குரலில் பேசுவதற்கான முழு சுதந்திரத்தையும் மதம் பெற்றுள்ளது. உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு மனித உயிருக்கும் வேதாகமத்தைப் பற்றி சமயச் சொற்பொழிவாற்றுக என்று உரத்த குரலில் கூவும் கடவுள் நம்பிக்கையாளர்கள், மதபோதனை செய்வது, வேதம் கற்பிப்பது, சீடர்களை உருவாக்குவது ஆகியவற்றையே தங்களின் வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர். மதம் என்பது அங்கிங்கெனாதபடி பரவி எங்கும் நிலை பெற்றுள்ளது.

ஆனால் பின்வரும் கேள்விகளுக்கு மதவாதிகளிடம் பதில் உண்டா?

மனித நேயம் பற்றிய நல்ல செய்தியுடன் கடவுள் மறுப்பாளர் கடைசியாக உங்கள் வீட்டுக் கதவை எப்போது தட்டினார்? நீங்கள் தங்கும் விடுதிகளின் மேசையில் பெரியார், ரிச்சர்ட் டாகின்ஸ் அல்லது வேறொரு பகுத்தறிவாளரின் புத்தகங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் குடியிருப்புப் பகுதியில் கடவுள் மறுப்புக் கட்டடம் எப்போது கடைசியாகக் கட்டப்பட்டது? அல்லது ஏதேனும் கடவுளுக்குக் கோவில் கட்டுவதற்கு என்றோ, திருவிழாவிற்குப் பங்கு தர வேண்டும் என்றோ அதில் விருப்பமில்லாதவரிடம்கூட கட்டாய வசூல் நடத்தப்படுவது போல, நாத்திகத் திருவிழாவுக்கென்று உங்கள் பகுதியில் எப்போதாவது கட்டாய வசூல் செய்யப்பட்டுள்ளதா? கடவுள் மறுப்பாளர் கூட்டங்கள் எதற்கேனும் நீங்கள் சென்றதுண்டா? உங்கள் குடும்ப வருவாயில் 10 விழுக்காட்டினை நன்கொடையாக அளிக்கும்படி நாத்திகம் எப்போதாவது உங்களைக் கேட்டதுண்டா? உங்கள் தொலைக்காட்சி அலைவரிசையில் நாத்திகக் கருத்துகளைக் கொண்ட எத்தனை நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? குழந்தைகளாக நீங்கள் இருந்தபோது எத்தனை நாத்திகப் பாடல்களை மனப்பாடம் செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறீர்கள்? உணவு உண்ணும் மேசையில், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிக்கோ அல்லது அந்த உணவைச் சமைத்த சமையற்காரருக்கோ நீங்கள் எப்போதாவது நன்றி தெரிவித்ததுண்டா?

கடவுள் நம்பிக்கையாளரின் தலையைக் கடைசியாக வெட்டிய நாத்திகரின் பெயர் என்ன என்று உங்களால் கூறமுடியுமா? அல்லது மதவாதிகள் கடவுள் மறுப்பாளரை அல்லது மற்ற மதத்துக்காரரைச் செய்வது போல் செய்த நாத்திகர் ஒருவரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? ஆணாதிக்க மனப்பான்மை மிகுந்த கணவனது _ மனம் மகிழாதபடி நடந்து கொண்ட மனைவி கடைசியாக நாத்திகத்தால் தண்டிக்கப்பட்டது எப்போது என்று உங்களால் கூறமுடியுமா? அல்லது ஒரு பொது இடத்தில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொல்வதற்காக ஒரு நாத்திகர் வெடிகுண்டைத் தனது உடலில் கட்டிக் கொண்டிருந்ததாகக் கூறமுடியுமா? அல்லது  ஓரினப் புணர்ச்சியாளர் எவராவது எல்லோரும் காணும்படி நாத்திகர்களால் தூக்கிலிடப்பட்டுள்ளாரா?

************

மதம் என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிலை பெற்றுள்ளது. மிகமிக நீண்ட காலத்திற்கு பெரும்பாலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாத நிலையில் தனது முரசைக் கொட்டிக் கொண்டிருந்ததுதான் மதம். நம்பிக்கையாளர்களின்  மனங்களிலும், இல்லங்களிலும் அமைதியாக இடம் பெற்றிருப்பதுடன் மதம் மனநிறைவடைந்துவிடுவதில்லை. கடவுளிடம் நம்பிக்கை கொள்ளவும், மதபோதனை செய்யவும், மதப் பிரச்சாரம் செய்யவும், மதத்தைப் பரப்பவும், மதமாற்றம் செய்யவும், மதம் பற்றிய விவாதத்தில் வெற்றி பெறவும் நம்பிக்கையாளரை வற்புறுத்துவதே மதத்தின் இயல்பான தன்மையாகும்.

மதம் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகள், செயல்பாடுகள் பற்றி எவர் ஒருவராவது எதிர்த்துக் குரல் எழுப்பிவிட்டால் போதும், அதுவே பெரும் பிரச்சினையாக ஆக்கப்பட்டுவிடும் என்பதை நமது வரலாறு முழுமையிலும் நாம் காணலாம். நியாயமான கேள்விகளையும், கவலையையும்கூடப் புறந்தள்ளியும், அவற்றைத் தெரிவித்தவர் தவறாக வழிநடத்திச் செல்லப்படுபவர் என்றும், ஒழுக்கமற்றவர் என்றும், திக்குத் திசை தெரியாதவர் என்றும், வெஞ்சினம் கொண்டவர் என்றும், பரிதாபத்திற்குரியவர் என்றும், வழிதவறிப்போய் தன்னந்தனியாகச் சுற்றிக் கொண்டிருப்பவர் என்றும் கூறி வெற்றி கொள்ளவுமான முயற்சிகளை மதம் மேற்கொண்டுள்ளது.

பைபிள், குரான், கீதை மற்றும் இதர மதப் புனித நூல்களில் காணப்படும், நடந்திருக்கவே இயலாத, நம்பமுடியாத கட்டுக் கதைகளுக்கு பகுத்தறிவு சவால் விடும்போது, நீங்கள் ஏன் எங்களைச் சும்மா இருக்க விடமாட்டேன் என்கிறீர்கள்? என்று புலம்புகிறார்கள் மத நம்பிக்கையாளர்கள்.

கடவுளே பிரபஞ்சத்தையும், உயிர்களையும் படைத்தார் என்று கூறி, உண்மைகளை அறிந்து கொள்ள மக்களுக்கு ஏற்படும் பேராவலையும், கற்றறிந்து கொள்வதையும்  தடை செய்து, மனித குல முன்னேற்றத்தையும் மதம் தடுத்து நிறுத்துகிறது. பகுத்தறிவுச் சிந்தனையை மதம் தடுக்கிறது. நம்பமுடியாதவற்றை நம்பும்படி நம்மை அது வற்புறுத்துகிறது. நாளைய தலைமுறையினரைப் பயிற்றுவிக்க நாம் பயன்படுத்தும் அடிப்படைக் கோட்பாடுகளை மதம் நச்சு மயமாக்குகிறது.

மதம் பற்றிய இத்தகைய வினாக்களுக்கு நாங்கள் அளிக்கும் இந்த விடை, எதிர்வாதம் எதற்கென்று கேட்டால், மூடநம்பிக்கையின் பெருங்கூச்சலுக்கு சவாலே இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.  உங்களது நம்பிக்கை அந்த அளவுக்கு மறுக்கமுடியாததாக, உண்மை மிகுந்ததாக, மெய்ப்பிக்க இயன்றதாக, நடைமுறை சாத்தியமானதாக இருக்கும்போது,  இங்கேயோ அல்லது வேறு எந்த இடத்திலிருந்தோ தெரிவிக்கப்படும் எதிர்மறையான கருத்துகளை நிச்சயமாக உங்களால் தாங்கிக் கொள்ளவும், எதிர்கொள்ளவும் இயலும். எத்தகைய கடினமான சோதனைகளையும் நிச்சயமாக அதனால் சந்திக்க இயலும்.
இதனை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாதத்தைத் தொடங்கியதே மதம்தான். உலகின் முன்னே அது தனது குரலை உயர்த்தி, மதத்தினை மறுத்தால், நிராகரித்தால் அதற்குத் தக்க  தண்டனை கிடைக்கும் என்று மனித குலத்தையே அச்சுறுத்தி வந்திருக்கிறது.

நாங்கள் நாத்திகர்கள்; ஒழுக்கமானவர்கள்; நியாயமானவர்கள்.  நாங்கள் மிகுந்த சிந்தனையும், பகுத்தறிவும், கருணை மனமும் கொண்டவர்கள்; மகிழ்வான நிறைவு பெற்ற- நன்கு தெளிவு பெற்ற வாழ்வினை வாழ்பவர்கள்.

மதத்தில் நம்பிக்கையற்றவர்கள், எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று மதம் வலியுறுத்தும் காலம் வரை, பிரச்சினை நாங்களல்ல மதம்தான் என்று நாங்கள் பதில் கூறிக் கொண்டேதான் இருப்போம்.

-_ -thethinkingatheist.com இணையதளத்தில் சேத் எழுதிய கட்டுரையைத் தழுவியது.

தமிழாக்கம் : த.க.பாலகிருட்டிணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *