121 கோடி…..
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 1872 ஆம் ஆண்டு முதல் இதுவரை 14 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக, 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதைய மக்கள் தொகை 103 கோடியாகும்.
2001-_2011 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு 2 கட்டமாக நடைபெற்றது. இதன்படி, இந்திய மக்கள்தொகை தற்போது 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 18 கோடியே 10 லட்சம் அதிகமாகும். நாட்டில் மொத்தம் 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர்.
சென்ற கணக்கெடுப்பின்போது 21-.15 சதவிகிதமாக இருந்தது 10 ஆண்டுகளில் 17.69 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
19 கோடியே 90 லட்சம் மக்கள் தொகையுடன் உத்தரப்பிரதேசமே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக தொடர்ந்து நீடிக்கிறது. உ.பிக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 11 கோடியே 23 லட்சம், பீகாரில் 10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கத்தில் 9 கோடியே 13 லட்சம், ஆந்திராவில் 8 கோடியே 46 லட்சம் என்ற எண்ணிக்கையில் மக்கள் வசிக்கின்றனர். 64,429 பேர்கள் வசிக்கும் லட்சத்தீவு குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 38,958 ஆக உயர்ந்துள்ளது.
அதிக மக்கள் நெருக்கமுள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டமும், குறைந்த மக்கள் நெருக்கமுள்ள பகுதியாக அருணாசலப் பிரதேசத்திலுள்ள திபாங் பள்ளத்தாக்கும் உள்ளன. டில்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 37,346 பேரும், திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவரும் வசிக்கின்றனர்.
கல்வியறிவு 2001 ஆம் ஆண்டில் 64.83 சதவிகிதமாக இருந்த கல்வியறிவு தற்போது 74.04 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2001இல் 53.67 சதவிகிதமாக இருந்த பெண்களின் கல்வியறிவு தற்போது 65.46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 75.26 சதவிகிதமாக இருந்த ஆண்களின் கல்வியறிவு 82.14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கேரளாவே கல்வியறிவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கேரளாவின் கல்வியறிவு சதவிகிதம் 93.91 ஆகும். மாவட்ட அளவில் 98.76 சதவிகிதத்துடன் மிசோரம் மாநிலத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டமும், 98.50 சதவிகிதத்துடன் அய்ஸ்வால் மாவட்டமும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
கேரளாவைத் தொடர்ந்து, லட்சத்தீவு 92.28 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. எப்போதும்போல் பீகார் 63.82 சதவிகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களாகத் திகழும் புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்கள் 85 சதவிகித கல்வியறிவுடன் உள்ளன.
சிறுவர்கள்
6 வயது வரையுள்ள சிறுவர்கள் 2001இல் 16 கோடியே 38 லட்சம் பேர் இருந்தனர். இப்போது 15 கோடியே 88 லட்சம் சிறுவர்கள்தான் உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 2 கோடியே 97 லட்சம் சிறுவர்களும் பீகாரில் 1 கோடியே 86 லட்சம் சிறுவர்களும் உள்ளனர்.
இது இந்தியாவின் 15 ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பாகும். 27 லட்சம் ஊழியர்கள் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கு 2,200 கோடி ரூபாயும் 8,000 டன் தாள்களும் (பேப்பர்) செலவிடப் பட்டுள்ளன.
குறையும் மத நம்பிக்கை
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 9 நாடுகளில் வாழும் மக்களின் மத நம்பிக்கை பற்றிய விவரங்கள் அண்மையில் சேகரிக்கப்பட்டன. பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வருவதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், நெதர்லாந்தில் 40 சதவிகித மக்களும், செசன்ய குடியரசில் 60 சதவிகித மக்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இது ஒரு சாதாரணக் கணக்குத்தான்; அதாவது, நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தை நாம் தொடர்ந்து செய்வோம். இதே கணக்கை மத நம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.