முற்றம்

அக்டோபர் 01-15 முற்றம்

இணையதளம்  http://www.tnregint.net

சொந்தமாக வீடு, காலி இடம், தோட்டம், காடு வாங்க நினைப்பவர்கள் தாங்கள் வாங்கப் போகும் இடம் தற்போது யாருக்குச் சொந்தமாக உள்ளது? இதற்கு முன்பு அதனை அனுபவித்தவர் யார்? அந்த இடத்தின் பேரில் ஏதேனும் வங்கிக்கடன் வாங்கப்பட்டுள்ளதா? வங்கிக் கடன் வாங்கப்பட்டிருப்பின் அதனைச் சரியான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ளனரா? வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு உதவிபுரிகிறது.

இணையதள முகவரியில் பெயர், முகவரி, தொலைப்பேசி எண், மாவட்டம், என்று கேட்கப்பட்ட விவரங்களைத் தட்டச்சு செய்து சமர்ப்பித்தால் வில்லங்கச் சான்றிதழினைப் பெற்றுக் கொள்ளலாம்.


நூல்:

நூல்: அஜயன் பாலா சிறுகதைகள்
ஆசிரியர்: அஜயன் பாலா
வெளியீடு: நாதன் பதிப்பகம்,
72/43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை_24
தொலைப்பேசி: 044_-45542637

பக்கங்கள்: 168 விலை: ரூ. 120/_ கவிஞன், எழுத்தாளன், செய்தியாளன், காதலன், மனவிரக்தி உடையவன் என்று பல தோற்றங்களில் காணப்படும் மனிதனின் குணாதிசயங்கள் _ எண்ண ஓட்டங்கள் _ மன உணர்வுகள் சிறுகதைகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் காணப்படும் மூட நம்பிக்கைகள் எதார்த்த முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது. எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடிய கதைக் கருக்களை மய்யமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பெருமைக்குரியனவாகத் திகழ்கின்றன.


 

குறும்படம்

அஞ்ஜன வித்தை (மறைபொருள்) ‍‍

– துளசிதாசன் செல்பேசி : 9944522574

விபத்து, கொலை, தற்கொலை போன்ற பல்வேறு காரணங்களினால் மனித உயிர் பிரிந்த பின், மரணத்திற்கான உண்மையான காரணத்தை வெளிக்கொண்டு வரச் செய்யப்படுவதே பிரேதப் பரிசோதனை.

புதிதாக வேலைக்குச் செல்லும் நபர் முதலில் இறந்த உடலைப் பார்த்து முகம் சுளிக்கிறார். இந்த வேலையே தனக்கு வேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டுச் செல்பவர் திடீரென்று மனம் மாறி வேலையில் மனம் ஒன்றி ஈடுபாட்டுடன் செய்யத் தொடங்குகிறார்.

எப்படிப்பட்ட வேலை என்றாலும் மன ஈடுபாட்டுடன் உணர்வுப் பூர்வமாகச் செய்தால் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ள அந்த நபரின் மனமாற்றத்திற்கான காரணத்தைக் குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *