தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், பிடித்து வைக்கப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்திய அரசு இது குறித்து தொடர்ந்து மெத்தனப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. சிங்களக் கடற்படையோடு, சீன ராணுவமும், கூலிப் படைகளும் இத்தகைய அத்துமீறலைச் செய்வதும் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வதைப்பட்டிருக்கின்றனர். ஈழப்பிரச்சினை காரணமாக, விடுதலைப்புலிகள் மீனவர் வேடத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் தான் இலங்கைக் கடற்படை இவ்வாறு செய்வதாக முதலில் வக்காலத்து வாங்கினர். ஆயுதம், பெட்ரோல் கடத்துகிறார்கள் என்றார்கள் பின்னர். கடைசியில் புலிகள்தான் தமிழக மீனவர்களைக் கொலை செய்கிறார்கள் என்று பழியை அவர்கள் மேல் தூக்கிப் போட்டார்கள். ஆனால் போரும் முடிந்து, ஓய்ந்து போன பின்னும் மீனவர் பிரச்சினை நிற்கவில்லை.
தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை 1974-இல் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே (சட்டமன்றம் கண்டனம் தெரிவித்தும்கூட) இலங்கைக்குத் தாரைவார்த்ததும், பின்னர் நெருக்கடி காலத்தில் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலேயே முந்தைய ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டிருந்த சின்னச்சின்ன உரிமைகள் கூட பறிக்கப்பட்டதும் இவற்றுக்கு முக்கியமான காரணங்கள் என்பதனாலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழர்கள் நீண்டநாள்களாக போராடி வருகின்றனர். இதுதான் வாய்ப்பென்று மீனவர் ரத்தத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்க எதிர்க்கட்சிகளும் இதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படித் தொடர்ந்து வரும் பிரச்சினை களுக்கு சிங்களர்களின் வெறுப்புணர்வும், இந்தியாவின் அலட்சியமுமே காரணம் என்றுதான் கருதிக் கொண்டிருந்த நிலையில்தான், இவை திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பது வெளிப்படையாக இப்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. இது பற்றிய அதிர்ச்சித் தகவல்களைத் தருகிறார்கள் மீனவர் நலனில் அக்கறை கொண்டவர்களும், ஆய்வாளர்களும். அவர்கள் சொல்லும் தகவல்கள், ஈழப்பிரச்சினை எப்படி பன்னாட்டுப் புவிசார் அரசியலால் கைமீறிப்போனதோ, அதே போல தமிழகக் கடல் எல்லையும் பொருளாதார நலன்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் போய், மீனவர் பிரச்சினை நமது கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகின்றன.
இந்தியாவின் மிகக்குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதி பாக் நீரிணை. வேதாரண்யம் முதல் தனுஷ்கோடி வரையிலான பகுதி, தமிழகம் இலங்கை இடையிலிருந்த அழிந்த நிலப்பகுதியின் மேல் படர்ந்த கடலாதலால் மீன் வளம் நிறைந்த பகுதியாகும். அதிகபட்சம் 16 மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கும் இப்பகுதிகளில் இயற்கை வளமும் கொட்டிக் கிடக்கிறது. பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதியாக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 இடங்களில் மிக முக்கியமான மூன்றில் ஒன்று என மன்னார் வளைகுடாவை யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது. இந்தப் பகுதியில் அடுத்த 100 ஆண்டுகளுக்கான உலகின் எண்ணெய்த் தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு எண்ணெய் வளம் இருக்கிறது என்ற கணக்கில் களம் இறங்கியிருக்கும் பணமுதலைகள்தான் இப்போதைய மற்றும் முந்தைய பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது புரியத் தொடங்கியிருக்கிறது. இது ஏதோ இன்று நேற்றல்ல.. திட்டமிட்டே நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதும் தொடர்ச்சியான நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது தெரியவருகிறது. அதிலும், எப்போதெல்லாம் எண்ணெய் வளத்திற்கான ஆய்வு கடலில் மேற்கொள்ளப்பட்டதோ அப்போதெல்லாம் மீனவர் படுகொலை, தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்ற தகவலும் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
மீனவர்கள் யாரிடமும் வேலைபார்க்கும் தொழிலாளிகள் அல்லர். அவர்கள் அனைவரும் பங்கு என்னும் அடிப்படையில் வருவாயைப் பகிர்ந்துகொள்பவர்களே! நான்கு பேர் செல்லும் படகில் அவர்கள் பிடிக்கும் மீன்களின் விற்பனைத் தொகை நால்வருக்கும் ஈவுத் தொகையாகிவிடும். இப்படித்தான் ஆதிகாலம் தொட்டே மீனவர்களின் வாழ்க்கை இருக்கிறது. இன்னும் காலப்பெருவெளியைக் கூர்ந்து நோக்கினால், தமிழகத்தில் மருதமும், நெய்தலும் மாறிமாறி வந்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடல் பின்வாங்கும் இடங்களில் விவசாயமும், கடல்கொண்டால் அவர்களே கடல் தொழிலும் செய்திருக்கிறார்கள். எனவே எக்காலத்திலும் தொழிலாளிகளாக அவர்கள் வாழ்ந்ததில்லை.
அப்படி இருப்பவர்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் தருவதன் மூலமும், அதீதக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் கடலை விட்டு விலகியிருக்கும்படிச் செய்வதுதான் கடலைக் கைப்பற்றுவதற்கான முதல்கட்ட நடவடிக்கை. அதில் வெற்றி காண கடந்த ஆண்டுகளில் பல படிகள் கடந்துவிட்டிருக் கிறார்கள் இந்தியக் அரசினர். தமிழ்நாடு கடலோரக் காவல்படை, இந்திய கடலோர காவல்படை, கடலோர போலீஸ், எல்லை பாதுகாப்புப்படை, இந்தியக் கடற்படை என பல அடுக்குகளில் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவை எதுவுமே நடுக்கடலில் மீனவர்கள் பாதிப்புக் குள்ளாகும்போது காப்பாற்றியதோ பிணத்தைப் பெற்றுக் கொண்டதோகூடக் கிடையாது. மீனவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக, அறுந்த வலையும், இழந்த உயிருமாக கரைக்கு வந்து தகவல் சொல்லும் வரை இவர்களுக்குத் தகவல் தெரியாது. பிறகெதற்கு இத்தனை பிரிவுகள், பாதுகாப்பு அடுக்குகள் என்றால், ஆளுக்கொரு நிபந்தனை போட்டு, மீனவர்களுக்குக் கட்டுப் பாடுகளை விதித்து, அந்தத் தொழிலின் மீதிருக்கும் பற்றைப் போக்குவதற்காக மட்டுமே! கடலில் செல்பவர்களுக்கு வழங்கப்பட் டிருக்கும் அடையாள அட்டைகள் செத்துப் போனவர் யாரென அடையாளம் காண் பதற்குத் தவிர வேறெதற்கும் பயன்பட்டிருக் காது.
ஆனால், கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமில்லை. இதற்கிடையில் கடலோர ஒழுங்காற்று ஆணை 2010 என்ற ஒன்றை 2010-ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இயற்றியுள்ளது. மீனவர்களுக்குக் கணக்கற்ற தொல்லைகளைக் கொடுத்திருக்கும் இவ்வாணை, பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பவ்யமாய் கதவு திறந்துவிட்டிருக்கிறது. இப்படி மீனவர்களைக் கட்டுப்படுத்த, அரசின் மொழியில் சொன்னால் ஒழுங்குபடுத்த எண்ணற்ற விதிமுறைகளை வகுக்கும் அரசு, இவற்றில் எது குறித்தும் மீனவர்களிடம் கருத்துக் கேட்டதில்லை. பெரும்பாலும் படிப்பறிவற்ற மீனவர்களுக்கான விதிமுறை களை ஆங்கில ஊடகங்களில் வெளியிடுவதும், மீனுக்கு வலை விரிக்க மட்டுமே தெரிந்த மீனவர்களுக்கான ஆணைகள் குறித்து வலைதளங்களில் கருத்துக் கேட்பதும் என காமெடிகளை அரங்கேற்றுகின்றனர் அதிகாரிகள்.
ஒழுங்குபடுத்துவதற்கு என்ற பெயரில் அரசுகள் மேற்கொள்ளும் எந்தவொரு திட்டமாயினும், குழுவாயினும் அவற்றின் பலனை அல்லது நட்டங்களை அனுபவிக்கப்போகும் மக்களின் பிரதிநிதிகள் அவற்றில் இடம்பெறுவதில்லை. நியுசிலாந்து போன்ற நாடுகளில் இதற்கெனத் தனி வழிமுறை வைத்திருக்கிறார்கள். கடல், மீன்வளம், கடலோரப் பாதுகாப்பு என கடல் தொடர்பான எந்த விசயத்திலும், அந்நாட்டின் ஆதிக் குடிகளான மீனவர்களின் ஒப்புதல் இன்றி முடிவெடுக்க முடியாது. ஆனால், இந்தியாவில் நிலைமை என்றுமே தலைகீழ். ஏர் பிடிக்கத் தெரியாதவர்தான் இந்தியாவின் வேளாண் விஞ்ஞானி என்று முன்னிறுத்தப்படுவார். அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் வலை விரிக்கத் தெரிந்த எம்.எஸ்.சுவாமிநாதன் என்ற இந்த மனிதர் ஏர் பிடிக்காத வேளான் விஞ்ஞானியாக மட்டுமல்லாமல், மீன் பிடிக்கத் தெரியாத மீனவ நண்பனாகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த அவதாரம் தந்திருக்கும் வரம் தான் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்னும் பெயரில் இந்திய அரசு மற்றும் உலக நிதியத்தின் பேராதரவோடு மீனவர்களைக் கடலைவிட்டு விரட்டக் கொண்டுவரப்பட்டிருக்கும் திட்டமாகும். சுனாமி வருவதற்கு முன்பிலிருந்தே கடற்கரைகளில் வசிக்கும் மீனவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்வதாகக் கூறி வேறு இடங்களுக்கு அனுப்பிவிட்டு, கடற்கரைகளைக் கைப்பற்றித் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டமாகும். இதற்கு வாய்ப்பாக சுனாமி வந்துவிட, உங்களுக்கு நிலம் தருகிறோம், வீடு கட்டித் தருகிறோம் என்று கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் வீடு கட்டும் திட்டத்தினைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். இதன் மூலம் கடறச்்கரையில் வசிக்கும் உரிமையை மீனவர்களிடமிருந்து பறித்து, அவற்றை வெகு எளிதில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் களியாட்ட விடுதிகளுக்குத் தாரை வார்த்து விட்டார்கள். (எ.கா: கிழக்குக் கடற்கரைச் சாலைகள். இப்படித் தாரைவார்க்கப்படும் தனியார் இடங்கள் 500 மீட்டர் என்ற அளவுக்கு உட்பட்டவை அல்ல. கடற்கரையை ஒட்டிய நிலமும், கடற்கரையும், அதை யொட்டிய குறிப்பிட்ட அளவு கடலும்கூட அவர்களுக்கே சொந்தம் என கிரயம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள்.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மீனவர்களுக்கும் கடலுக்குமான தொடர்பைத் துண்டித்து, அவர்களை வெறுப்படையச் செய்து, மீன்பிடிக்கும் தொழிலிலிருந்து அவர்களை விரட்டி, கடல் பரப்பை மொத்த மாகக் குத்தகைக்கு விட்டுவிடும் பணியைத் தான் இப்போது மும்முரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றெல்லாம் இவர்கள் பசப்பும் வாதங்களைக் கேட்கும் சின்னப் பிள்ளைக்கும் தெரியும், உன்னை நான் லட்சாதிபதியாக்குகிறேன் என்று கோடீஸ்வரனுக்கு ஆசை காட்டுவது போல்தான் இதுவென்று. இந்தியாவிலேயே அதிக கடல்பரப்பு கொண்டது தமிழ்நாடுதான். அதிலும் மீன்வளம் கொழிக்கும், இயற்கை எழில் சார்ந்த மன்னார் வளைகுடாவிற்கும், காவிரி கடலில் சேரும் இடத்திற்குமிடையிலான பகுதியை எண்ணெய் வளமான பகுதி என அடையாளம் கண்டுகொண்டதன் பலனைத்தான் இப்போது தமிழக மீனவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க யாக்ஷயர் நிறுவனத்தின் கூட்டுடன் களம் இறங்கியிருப்பது கேர்ன் இந்தியா, கேர்ன் லங்கா நிறுவனங்கள். இலங்கையில் இருந்தபடி சீனாவின் பாதுகாப்போடு, இந்தியாவின் ஒப்புதலோடு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி, கொட்டும் வளத்தைக் கொள்ளையிடுவதற்கு வசதியாகத்தான் மீனவர்களை விரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதிதான் தமிழக மீனவர் படுகொலைகளும்! இது இன்றைக்கு முளைவிட்டதல்ல.. கச்சத்தீவு ஒப்பந்தத்தையொட்டியே இதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதற்குச் சிக்கலாகிவிடக் கூடாது என்பதால் தான் சேதுசமுத்திரத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் பாதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே இல்லாத ராமர் பாலத்தைக் காட்டி திட்டப்பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். சேதுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த தொடக்க காலம் முதலே சிங்கள அரசுகள் பெரும் பிரயத்தனம் செய்துவந்ததை நாம் அறிவோம். கொழும்பின் நலன் பாதுகாக்கப்பட, தமிழக நலனைப் புறந்தள்ளியது இந்திய ஆளும் வர்க்கம். மேலும் மேலும் சிக்கல்களையும், குழப்பத்தையும் உருவாக்கும் வண்ணம், ஒன்றுக்குக் கீழ் ஒன்று, அதற்குக் கட்டுப்படாத ஆனால் இதன் கட்டுப்பாடுள்ள பகுதிகளின் தனிக் கட்டுப்பாடு கொண்ட இன்னொன்று என எண்ணற்ற அமைப்புகளைத் தோற்றுவித்து, இவற்றையெல்லாம் யாரும் எளிதில் கேள்வி கேட்டுவிடாதபடி உருவாக்கி வைத்துவிட்டார்கள். கடலடி மண்ணும் இப்போது காஸ்மெடிக் பொருள்களாகிப் பன்னாட்டுச் சந்தையில் விற்பனையாகிறது. இதனால் நாட்டுக்கு லாபந்தானே என அம்மாஞ்சியைப் போல நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், இத்தனை வளங்களும் சுரண்டப்பட்டபின் இதன் விளைவுகளைச் சந்திக்கப்போவது தமிழகம் தான் என்பதை எப்போது புரிந்துகொள்வது?
மீனவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் வரப்போகிறது என்றுதான் முதலில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்து வந்தனர். பின்னர் இதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டு, பல்லுயிரிப் பாதுகாப்புக்கு எந்தச் சிக்கலும் இல்லாதவாறு சேதுசமுத்திரத் திட்டம் வரும் என்று விளக்கமும் அளிக்கப்பட்டது. அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னும், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய் தோண்டப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது வரிந்துக் கட்டி கிளம்பிய எதிர்ப்புக்காரர்கள், இப்போது எண்ணெய்க் கிணறுகளால் கடலே கொத்திப் போடப்படும் நிலை வந்திருக்கும் போது எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ராமர் பாதம், ராமர் பாலம் என ரூமர் விட்டுக்கொண்டிருந்த பூணூல் திருமேனிகள் ஆன்லைன் அப்ளிகேசன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர் பணியிலிருப்பார்கள்.
இந்தியாவிலேயே எல்லைத் தொல்லை இல்லாதது தெற்குதான் என அப்பாவியாக நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு வைக்க வந்துவிட்டன எண்ணெய் நிறுவனங்கள். அமெரிக்கா கண் வைத்திருந்த இடத்தில் இன்று சீனா. யார் வந்தாலும் ஆளுக்கொரு பங்கு கொடுக்கத் தயாராய் சிறீலங்கா. சாகப்போவது தமிழர்கள்தானே, நமக்குப் பங்கு வந்தால் சரியென்று தலையாட்டுவதற்கு இந்திய அரசு. இப்படி நம் கண்ணுக்குத் தெரிந்தே நமது நெய்தல், பாலையாகத் தொடங்கியிருக்கிறது. ஈழத்தில் நடந்த நிலை நாளை தமிழகத்துக்கும் வரும். புவிசார் அரசியல் நலன்களுக்காகவும், எண்ணெய் வளத்துக்காகவும் இன்று தன் வரலாற்றைத் தொலைத்து ஒழிந்துபோயிருக்கும் முந்தைய மெசபடோமியாவான இன்றைய ஈராக்கைப் போல் வெகுவிரைவில் குமரிக் கண்டத்தின் எச்சமான தமிழ் நிலமும் மாறும்.
இப்படி படிப்படியான நகர்வுகளின் முடிவில், இப்பகுதி எங்கள் சொத்து என்று ரியல் எஸ்டேட்காரர்கள் மேப் போட்டுக் காட்டுவது போல எங்கள் சொத்து வரைபடம் என்று தங்கள் இணையத்தில் மன்னார் வளைகுடாவைப் படம்பிடித்துப் போட்டிருக்கிறது கேர்ன் லங்கா நிறுவனம். நடந்திருப்பதன் தீவிரத்தை அறிய இந்த ஒரு படம் போதும். ஆம் தோழர்களே! எல்லாம் முடிந்து போய்விட்டது. இயற்கை வளங்களைக் கூறு போட்டு விற்றுக் கொண்டிருந்தவர்கள் இயற்கையையே விற்கத் தொடங்கிய நியமகிரி கதையைப் போல்தான், பாக் ஜலசந்தியும் இப்போது பன்னாட்டுப் பண முதலைகளின் சொத்தாகிவிட்டது. கடலோரம் இனி காற்று வாங்குவதாயிருந்தாலும் முன்னனுமதி பெற்றுப் பணம் செலுத்தித்தான் வாங்க முடியும். இனி சிப்பி பொறுக்குவதாவது… கடற்கரை மணலைக்கூட உங்கள் கைகளால் தொட முடியாது. அப்புறம் திரை கடல் ஓடி திரவியம் தேடவா?
விவசாயிகள் சகதியில் பாடுபடுவதைக் காணச் சகிக்காமல், அவர்களுக்குச் சாந்துச் சட்டி தூக்கும் வேலையைக் கொடுத்ததுபோல, கடலில் சென்று உயிரை விடாமல் இருக்க கருணைப் பார்வையோடு வழங்குவதற்கு இந்தியாவில் கூலி வேலைகள் இல்லையா என்ன?
– சமா.இளவரசன்