முற்றம்

முற்றம் ஜூலை 01-15

இணையதளம்

புத்தகங்களைத் தேடி நூலகங் களுக்குச் செல்லாமல் நாம் இருந்த இடத்திலிருந்தே  படிக்கவும், விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் துணைபுரிகிறது கன்னிமாரா நூலக இணையதளம்.

பொது அட்டவணை(General Catalogue),  அரிய புத்தகங்கள் (Rare books), தமிழ்ப் புத்தக அட்டவணை (Tamil Catalogue) என மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. பொது அட்டவணையைச் சொடுக்கினால் வரும் அடிப்படைத் தேடல் என்ற பிரிவில், தலைப்பு, ஆசிரியர், பாடப்பிரிவு போன்ற குறிப்புகள் உள்ளன. வலப்புறத்தில் உறுப்பினர் அடையாளப் பிரிவு (Member Login) உள்ளது. அதில், அட்டை எண்(Card No)மற்றும் கடவுச்சொல் (Password) குறிப்பிட்டு உள்ளே சென்று பார்வையிடலாம்.

நூலக அடைவில் 72,433 புத்தகங்களும், குறுந்தகடுகளும் (சி.டி.), மின் புத்தகங்கள் பலவும் உள்ளன. இடப்புறத்தில் உள்ள இணைய சேவைப் பிரிவில், பயனாளர் விண்ணப்பப் படிவம் (Membership Form), அறிக்கைகள் (Reports), புத்தகங்களை முன்பதிவு செய்தல், மீண்டும் புதுப்பித்தல், அஞ்சல் பெட்டிப் பிரிவு ஆகியன இடம் பெற்றுள்ளன.

 


 

நூல்

நூல்: ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது
ஆசிரியர்: ஞா.சிவகாமி
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,
தபால்பெட்டி எண்: 1447, 7 (ப.எண்:4) தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை _17. தொலைப்பேசி: 044-_2434 2926.

அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை -_ நாட்டு நடப்புகளை நறுக்குத் தெறித்தாற்போல எளிய நடையில் கவிதை வடிவில் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

மக்கள் தொகை என்னும் தலைப்பில், மூச்சுப் பிடிக்க/உழைக்கிறோம்/முதலிடம் பிடிக்க!/ஆச்சு! இப்போ/இரண்டாம் இடமாம்./வளர்ந்து விட்ட/நாடுகளில் – இனி/இந்தியாவும் ஒன்று/மக்கள் தொகை/உற்பத்தியில்! -_ மனதைக் கட்டுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

தமிழ்நூல் படி! நூல் விடாதே என்னும் தலைப்பில் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆங்கிலத்தை அறிந்து கொண்டு தமிழ்மொழியை வளர்க்கும் விதம் கூறப்பட்டுள்ளது. மேலும், காவிரிநீர், தாசி, தண்ணீர், கூடங்குளம் போன்ற பல தலைப்புகளில் நடைமுறையை விளக்கிச் சிந்திக்க வைத்திருப்பது அருமை!


 

குறும்படம்

கீ கீ

அன்பை வெளிப்படுத்து வதிலும், குடும்பச் சூழலை_தாயின் மனதைப் புரிந்து கொண்டு நடந்துகொள்ளும் விதத்திலும், தைரியத்திலும் பெண் குழந்தைகளுக்கே உரிய தனித்தன்மையைப் பேசுகிறது படம்.

தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதால், வறுமை காரணமாக வீட்டுவேலைக்கு வெளியூர் அனுப்ப இருக்கும் தாயிடம், வேலைக்குப் போகலைம்மா, படிக்க வைத்தால் ராக்கெட் வேலைக்குப் போய் காப்பாற்றுவேன் என்று கெஞ்சுகிறாள் இளம் பிஞ்சு. உடன் விளையாடும் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் கூறிய அறிவுரைகளை அன்னையார் ஏற்றுக் கொண்டாரா என்பதைக் குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *