இந்தியாவில் இன்று நிகழும் பத்திரிகாதர்மம் கேள்விக்குரியது மட்டுமல்ல; கேலிக்குரியதும் ஆகும். இதில் வடக்கு தெற்கு என்ற பேதமில்லை. முப்புரியெல்லாம் ஓரினம். இவர்கள் பேனா மை போட்டு எழுதாது. பொறாமை, மீறினால் கயமை ஊற்றி எழுதுவர். உதவி ஆசிரியர்களாக இருக்கலாம், அல்லது ஆசிரியர் பெருமகனாக இருக்கலாம், அல்லது பண முதலீடு செய்த முதலாளியாகவும் இருக்கலாம். அனைவருக்கும் குறிக்கோள் ஒன்றே. சனாதனம் வளரவேண்டும்; வருணாசிரமம் கொடிகட்டிப் பறக்க வேண்டும். இவர்களிடம் நாம் அகப்பட்டால் மோசம்போவது உறுதி. தப்பித் தவறி தெற்கே ஒரு டி.எஸ். சொக்கலிங்கம் வாழ்ந்து காட்டினார். வடக்கே ஒரு குஷ்வந்த்சிங் வாழ்கிறார். இம்மாதிரியான பேனா மன்னர்கள் நீண்டநாள்கள் நீடிக்க முடியாது.
தன் ஆன்மீக குருவான தயானந்த சரஸ்வதியை (திருவாரூர் மஞ்சக்குடி நடராஜர் அய்யர்தான் இவர்) கோயம்புத்தூர் அருகே இருக்கும் ஆனக்கட்டி ஆசிரமத்தில் தரிசிக்கச் சென்ற போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்கள் வழுக்கி விழுந்து அதனால் படுத்த படுக்கையில் மரணம் சம்பவித்தது. அவர் உயிரோடிருக்கும் போது, காஞ்சி தவசிரேஷ்டர் பெண்களிடம் ஏதோ சில்மிஷம் செய்யப்போய், ஜெயலலிதா அரசால் கைதான போது, மனம் பதைத்துப்போய் இதில் தலையிட்டு விடுதலை செய்ய முயன்றதாக வதந்தி. வதந்தி வதந்தியாகவே உலவியதே தவிர செய்தியாக, சுனாமியாக உருவெடுக்கவில்லை. அமுக்கப்பட்டது. நம் பத்திரிகா சிகாமணிகள் என்ன அவ்வளவு இன உணர்வு அற்ற ஜென்மங்களா? சம்பந்தப்பட்டவர் சொல்லாமலே மூடி மறைத்தனர் நம் பத்திரிகா சிரோன்மணிகள்.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஆர். வெங்கட்ராமன் விலகும்போது, அவர் சென்னையில் நிரந்தரமாகத் தங்க விரும்பினார். இதில் என்ன வேடிக்கையெனில் இவருக்குச் சொந்தமாகவே ஒரு வீடு சென்னையில் இருந்தது. இருந்தாலும், அரசு ஒதுக்கீட்டை அவர் விரும்புவதாக பத்திரிகைச் செய்தி. அது மட்டுமல்ல, அவரது துணைவியாரிடம் குவிந்து கிடக்கும் காஞ்சிப் பட்டுப் புடவைகளை அடுக்கவே அவரது சொந்த வீடு போதாது என பத்திரிகைகள் பூசி மெழுகின. சம்பந்தப்பட்ட வருக்குக்கூட அந்த நினைப்பு வராத நேரத்தில் பத்திரிகைகள் அவ்வளவு கரிசனையாய் வரிந்து வரிந்து எழுதின. என்னே இனப்பற்று!
பின்னால் வந்த குடியரசுத் தலைவரான ராமேசுவரம் அப்துல் கலாம் மரக்காயருக்கு அந்தவிதமான துலாக்கோல் இல்லை.
ஒருமுறை அவரது நெருக்கமான உறவினர் 52 பேர்கள், கலாமின் 92 வயதான அண்ணன் தலைமையில் புறப்பட்டு, டில்லி வந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தினராகத் தங்கினர். அவர்கள் அருந்திய ஒவ்வொரு கோப்பை தேநீருக்கும் பணம். தங்கிய அறைகளுக்கு வாடகை. ஊர் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திகளுக்கும் விடாமல் வசூலித்த வாடகை. அத்தனையும் 3.52 லட்சம் ஆனது. கலாமின் தனிச் செயலாளராக இருந்த பி.எம்.நாயர் அய்.ஏ.எஸ் விருந்தினர்கள் பணம் செலுத்த அவசியமில்லை என வலியுறுத்தி சட்டக்குறிப்பைச் சுட்டிக்காட்டியும், கலாம் சம்மதிக்கவே இல்லை. தன் சம்பளச் சேமிப்பிலிருந்து 3.52 லட்சத்தையும் அரசுக்குச் செலுத்தினார்.
அதே போல இப்தார் விருந்து. பெரும் செல்வந்தர்கள், தொழில் பிரமுகர்கள், அரசியல் விற்பன்னர்களை அழைத்து ஆடம்பர விருந்து தருவது வழக்கம். கலாம் அதை நிறுத்தினார். தன் கைப்பணத்தில் 2 லட்சம் தந்து, டில்லியைச் சுற்றியிருந்த ஆதரவற்ற இல்லங்கள், அனாதைச் சிறுவர் விடுதியில் இருந்தோருக்குப் பசி போக்கினார்.
இதுபோல இன்னும் எத்தனை தயவான நிகழ்வுகள். இதைப்பற்றி அன்றைய பத்திரிகைகள் மூச்சே விடவில்லை. இந்த மனித நேயச் செயல்பாடுகள் இப்போதுதான் வெளி உலகுக்குத் தெரியவருகிறது. அதுவும் அவரது தனிச்செயலர் பி.எம்.நாயர் அய்.ஏ.எஸ், (Kalam Effect) கலாமின் காலங்கள் என்று நாட்குறிப்பு போன்று கட்டுரைகளை எழுதிப் புத்தகமாக எழுதியதால், நமக்குத் தெரியவருகிறது.
தான் போகும் இடமெல்லாம், பேசிய சொற்பொழிவுகளில் தவறாமல் தான் இன்று ஒரு விஞ்ஞானியாக – குடியரசுத் தலைவராக உயர்ந்ததற்கு உந்துசக்தி, தான் பள்ளியில் படித்தபோது விஞ்ஞான அறிவு ஊட்டிய வகுப்பு ஆசிரியர் வெங்கட்ராமய்யரையே சாரும் எனப் போற்றிப் புகழ்ந்த கலாமிற்கே இந்தக் கதி எனில், நாம் எம்மாத்திரம்? அன்றுதான் அப்படி! இன்னுமா? நீடிக்கவிடலாமா?
– சந்தனத்தேவன்