சென்னையில் “சுயமரியாதைத் திருமண நிலையம்” உருவாக்கம் (Self Respect Marriage Bureau)
– கி.வீரமணி
சீர்திருத்தத் திருமணங்களில் இரண்டுவித சீர்திருத்தம் என்பது ஏற்பட்டிருக்கிறது. அவற்றுள் ஒன்று தமிழர் திருமணம், மற்றொன்று சுயமரியாதை அல்லது பகுத்தறிவுத் திருமணம் என்பதாகும். தமிழர் திருமணம் என்பது வகுப்பு உணர்சி காரணமாய் ஏற்பட்டது. சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.
தற்காலத்துக்கும் பகுத்தறிவிற்கும் ஏற்ற விதமாகவும் நமது இழிவு நீங்கி முன்னேற்றம் அடையத்தக்க விதமாகவும் நமது சமுதாய விழாவை மாற்றிக் கொள்ள வேண்டியது நம் நடமை என்றும் குறிப்பிடுவார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், பெரியார் அவர்கள், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும், ஜாதி வேற்றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாராகிய பெண்கள் ஒரு பக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலை கொள்வதாகக் காணோம் என்றும் சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் திருமண முறை ஒழிய வேண்டும் என்றும், திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது என்றும், இந்த நிலை மாறியாக வேண்டும். ஒவ்வொருவனும் தனது மனைவியை முன்னிறுத்திப் பார்க்கிறானே தவிர தமது தாயார், தங்கை, மகன் முதலியவர்களை மனதில் கொண்டு சுதந்திர உரிமை வழங்க முற்படுவதில்லை என்றும் எடுத்துரைத்தார்கள். இதனை மனதில் கொண்ட தந்தை பெரியார் மேலைநாடுகளைப் போல் திருமணம் என்று இங்கே _ நமது நாட்டில் குறிப்பாக இந்துமதம் என்ற கட்டுக்குள் அடங்குகிறவர்களிடையே, அவரவர் விருப்பத்திற்கே தேர்ந்தெடுத்து நடந்து கொள்ளுவதல்ல. இதனை மாற்றும்விதமாக சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தை பல மண விழாக்களில் அய்யா தெளிவாக விளக்கினார்கள்.
28.5.1928 அன்று அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தத்தில் தந்தை பெரியார் தலைமையில் தமிழகத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. இதனை முறையாக நடைமுறைப்படுத்த _இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் 24.7.1974 அன்று, முதல் சுயமரியாதைத் திருமண நிலையம் (ஷிமீறீயீ ஸிமீஜீமீநீ விணீக்ஷீக்ஷீவீணீரீமீ ஙிக்ஷீமீணீ) என்ற அமைப்பு அய்யாவிற்குப் பிறகு அம்மாவின் தலைமையில் உருவாக்கப்பட்டு பெரியார் திடலில் செயல்படத் தொடங்கியது. அதுவே இன்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்று குறிப்பிடப்படுகிறது.
24.7.1974இல் திருமண நிலையம் குறித்த விளம்பரம், விடுதலையின் முதல் பக்கத்தில் வெளியானது. சுமார் 39 ஆண்டுகளாக அன்னை மணியம்மையார் காலம் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வரும் இந்தத் திருமண நிலையம், தந்தை பெரியாரின் கருத்துகளை உள்வாங்கியவர்களை மட்டுமல்லாது, ஜாதிகளை மறுத்து காதல் திருமணம் செய்பவர்களையும் ஊக்குவித்து வருகிறது.
அண்மைக்காலங்களில் ஜாதிக்கு முட்டுக்கொடுத்துச் செயல்படுபவர்களுக்கு எதிராக, ஜாதிகளை அடியோடு களையும் வண்ணம் மன்றல் நிகழ்ச்சிகளை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் மன்றல் நிகழ்ச்சிகளை நடத்தியபோது பொதுமக்களிடம் இருந்து மகத்தான ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து இந்த மன்றல் நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செய்து வருகிறது. தளபதி மு.க.ஸ்டாலின் – துர்காவதி வாழ்க்கை ஒப்பந்த விழா!
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களது மூன்றாவது மகன் திரு.மு.க.ஸ்டாலினுக்கும், திருவெண்காடு தலைமை ஆசிரியர் திரு.ஜெயராமன் அவர்களின் மகள் செல்வி துர்காவதிக்கும் வாழ்க்கை ஒப்பந்தம் மிகவும் சீரும் சிறப்புமாக 20.08.1974 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை உம்மிடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது! அந்த விழாவில் கழகத் தலைவர் அம்மா அவர்களும், நானும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.
தமிழகத்தில் இப்படி சீர்திருத்த முறையில் நடைபெறும் திருமணம் பெருகி வருவது மிகுந்த பாராட்டுக்கு உரியதாகும் என்று மத்திய விவசாய அமைச்சர் ஜெகஜீவன்ராம் கலந்து கொண்டு பேசினார். மேலும், மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் உங்கள் தலைவர்கள் பெற்ற வெற்றியின் சின்னமாக இத்திருமணம் சீர்திருத்த முறையில் மற்றவர்களுக்கு முன்னோடியாக உள்ளது. இதில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரது சீரிய உழைப்பை நினைவு கூறும் தன்மையில் குறிப்பிட்டார். மணவிழாவில், ஏராளமான இயக்கத் தோழர்களும், பிரமுகர்களும், பல்வேறு கட்சியைச் சார்ந்த தலைவர்களும் அதிகாரிகளும், அறிஞர்களும், அமைச்சர்களும், தாய்மார்களும் குழுமியிருந்தனர்.
மண மேடையிலும் முகப்பிலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் உருவப் படங்கள் மலர்மாலைகளுடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
மண விழாவிற்கு வந்திருந்த பிரமுகர்களையும், தோழர்களையும், தாய்மார்களையும் முதல்வர் கலைஞர் வரவேற்றுப் பேசி, கல்வி அமைச்சர் நாவலர் அவர்களைத் தலைமை தாங்கி மணவிழாவை நடத்திவைக்கக் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் நாவலர் அவர்கள் மணவிழாவினை நடத்தி வைத்து மணமக்களுக்கு அறிவுரை கூறினார்.
மணமக்களைப் பாராட்டியும் வாழ்த்தியும், முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, ஆளுநர் கே.கே.ஷா, புதுவை மாநில ஆளுநர் சேத்திலால், தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.வீராசாமி, சஞ்ஜீவரெட்டி, மைசூர் முன்னாள் முதல்வர் வீரேந்திர பட்டீல், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராசர், கழகத் தலைவர் அம்மா, பக்தவத்சலம், ம.பொ.சி., சிவாஜி கணேசன், மூக்கையா தேவர், மகம்மது கோயா எம்.பி., சபாநாயகர் புலவர் கோவிந்தன் ஆகியோர் பேசினார்கள்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் க.அன்பழகன் அனைவருக்கும் நன்றி கூறினார். மதுரை பொன்னுசாமி _ சேதுராமன் குழுவினர் நாதஸ்வரத்துடன் துவங்கிய நிகழ்ச்சி சீர்காழி கோவிந்தராசன் அவர்களது வாழ்த்துப் பாடலுடன் காலை 10_45க்கு முடிவுற்றது. விழாவில் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் உள்பட தி.மு.க. தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. கப்பல் விழா
20-.12.1974 அன்று தந்தை பெரியார் அவர்களின் பெயரிடப்பட்ட தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா கப்பல், தமிழக அரசின் சார்பாக வாங்கப்பட்டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்ட்ட விழா சீரும் சிறப்பும் உற்சாகமும் உணர்ச்சியுமிக்க விழாவாக நடைபெற்றது. விழாவானது வண்ணத் தோரணைகள் கண்ணைக் கவரும் வளைவுகள், சென்னைத் துறைமுகமே சிறப்பு மிளிரும் வகையில் விழாக்கோலம் பூண்டிருந்தது.
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் சிலை கம்பீரமாக நிற்கும் துறைமுக பிரதான வாயிலைக் கடந்து முதல்வர் கலைஞர் சென்றபோது, திரண்டிருந்த தொழிலாளர்கள் கப்பலோட்டும் தமிழன் கலைஞர் வாழ்க என முழக்கமிட்டனர். விழா மேடையை அவர் அடைந்த போதும் அந்த முழக்கம் எழுந்தது.
விழா நடைபெற்ற அரங்கத்திற்கு அருகிலேயே தமிழ்ப்பெரியார் ஈ.வெ.ரா. கப்பல் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. என்று கொட்டை எழுத்திலும் அதற்கு மேலே ஆங்கிலத்தில் ஜிணீனீவீறீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ணி.க்ஷி.ஸி. என்று சற்று சிறிய எழுத்திலும் கப்பல் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
பொலிவுமிக்க பூம்புகார் துறைமுகத்திற்குப் புறப்படத் தயாராகி, கடாரத்திற்கும் கடல்சூழ் நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள காத்து நின்ற தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. கப்பலின் காட்சி, நம் உள்ளத்தில்தான் எத்தனை பெருமித உணர்ச்சிகளை ஏற்படுத்தியது.
விழா மேடையில் முதல்வர் கலைஞரும், நாவலரும், பேராசிரியர் மற்ற பெருமக்களும், அமைச்சர்களும், பூம்புகார் கப்பல் நிர்வாகிகளும் அமர்ந்திருந்தனர். எதிரே சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், துறைமுகத் தொழிலாளர்கள் திரண்டிருந்தனர்.
முதல் வரிசையிலே கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களும் நானும் அமர்ந்திருந்தோம். கே.கே. பிர்லா, கப்பல் கம்பெனியின் உரிமைப்பத்திரத்தை கலைஞரிடம் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு அவர் ஒரு பொத்தானை அழுத்த அருகில் இருந்த கப்பலின் மாதிரி படத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. என்ற மின் எழுத்து ஒளி வீசியது.
உடனே அந்த மாதிரிக் கப்பல் அமைப்பின் மேலே இருந்த அந்தக் கப்பலின் பழைய நட்சத்திரக் கொடி கீழே இறங்கி, வில், கயல், புலி, சின்னம் பொறித்த தமிழ்க்கொடி மேலே ஏறியது. அதையடுத்து கப்பலில் இருந்த பழைய கொடி இறக்கப்பட்டு தமிழ்க்கொடி ஏற்றப்பட்டது. நாதஸ்வர இசை கடற்காற்றோடு கலந்துறவாடி, தவழ்ந்து செல்ல தமிழ்ப் பெரியார் ஈ.வெ.ரா. கப்பல் ஒலி எழுப்பி கர்ஜனை புரிந்தது.
முதல்வர் கலைஞர் தனது உரையின் இறுதியில் தந்தை பெரியாரின் தன்னிகரில்லாத சேவையைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு பெரியார் வாழ்க, வாழ்க என்று கூறி தமிழ்ப் பெரியார் கப்பலை ஏற்றுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டபோது இடி முழக்கமென கரவொலி எழுந்தது.
தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கப்பல் வாணிக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, வடஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்களை இணைத்து, தனிப் போக்குவரத்துக் கழகம் ஒன்று துவங்கப்பட இருக்கிறது என்றும், அதற்கு தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் என்று பெயரிடப்படும் என்றும் முதல்வர் கலைஞர் அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
– (நினைவுகள் நீளும்)