நூல்: புதையல் பாகம் _ 9
ஆசிரியர்: சின்னகுத்தூசி
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை -_ 14.
தொலைப்பேசி: 044 _ 43993029
பக்கங்கள்: 168
விலை: ரூ. 100/
அய்ந்து ஆண்டுக்கால (1989_93) முக்கிய அரசியல் நிகழ்வுகளை _ போராட்டங்களை வரலாற்று ஆதாரங்களுடன் சட்டத்தின் பார்வையோடு ஆராய்ந்துள்ளார் மறைந்த சின்னகுத்தூசி. பொதுமக்களின் மனஓட்டத்தை _ எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டி, பிரச்சினைகளுக்கான தீர்வினை எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான கருத்துகளுடன் எடுத்துவைக்கிறார். தமிழக சமூக, அரசியல் களப்பணியில் ஈடுபட்டுள்ளோரும், ஆய்வு மாணவர்களும், அரசியல் ஆர்வமுள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
இணையதளம்
வைரம் பாய்ந்த எழுத்துகளைத் தன்னகத்தே கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளான கவிதைகள், நாவல்கள், பாடல்கள், நூல்கள், கட்டுரைகள், பயண இலக்கியம், வரலாறு ஆகியவற்றைத் தாங்கி நிற்கிறது அவரது இந்த இணையதளம். கவிப்பேரரசு பெற்ற விருதுகள், கொடுத்த பேட்டிகள், எழுதிய திரையிசைப் பாடல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். பல்வேறு பரிமாணங்களில் சுடர்விடும் கவிஞரின் புகைப்படத் தொகுப்பு, மேடைப் பேச்சு, வீடியோ தொகுப்பு, ஊடகச் செய்திகள் ஆகியவற்றுடன் வாசகர் பேரவையாக ஆர்குட்(Orkut),, முகநூல் (Facebook), பயனாளர்கள் பிரிவும் இடம் பெற்றுள்ளது. தமிழ் இணையதளங்கள், தமிழில் செய்திகள், தமிழ் வானொலிகள், தமிழ்த் தொலைக்காட்சி, இணைய இதழ்கள், தமிழ்ச் சங்கங்கள், அரசுசார் தமிழ் அமைப்புகள், மேலைநாட்டுத் தமிழ்ப் பள்ளிகள் ஆகிய விவரங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
ஆவணத் திரைப்படம்
வெறி
கு.கா.பாவலன்
கணினி யுகத்தில் _ 21ஆம் நூற்றாண்டிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அய்யத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திய தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கொடுமை ஆவணப் படமாக்கப்பட்டுள்ளது. ஜாதி ம-றுப்புத் திருமணத்தைக் காரணம் காட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியும், தீயிட்டுக் கொளுத்தியும், பெண்களைத் தகாத வார்த்தைகளால் இழிவுபடுத்தியும் பணம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த நிகழ்வுக்கு, காலனி என்பதை முதலில் நிறுத்த வேண்டும். நல்ல வீடுகளைக் கட்டிக் கொடுத்தும் தனியாக ஒதுக்கி வைத்தால் அர்த்தம் என்னாகும்? தந்தை பெரியார் அவர்கள் 80, 90 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி காந்தியிடம் பேசியுள்ளார்கள். தனித்தனியாக குளம், கிணறு, வீடு என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கக்கூடாது. எல்லா இடங்களிலும் அவர்கள் புழங்க வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். மேலும், தொல்.திருமாவளவன், வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, பேரா.சுப.வீரபாண்டியன், பேரா.தீரன் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. மருத்துவர் ராமதாசு, காடுவெட்டி குரு பேச்சுகளும் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஜாதி ஒழிப்புப் போர்க்களத்தில் முக்கியப் பதிவாக இப்படம் இருக்கும்.