ஆத்தா பசிக்குது சோறு போடு வீட்டிற்குள் நுழைந்த கையோடு சட்டை, முழுக்கால் சட்டைகளைக் களைந்து ஆணியில் மாட்டிக் கொண்டே சொன்னான் முத்தழகு.
கறவை மாட்டுக்குப் பருத்திக் கொட்டை ஆட்டிக் கொண்டிருந்த சின்னத்தாயி மகனின் குரல் கேட்டதும் அப்படியே போட்டுவிட்டு அரக்கப் பரக்க அங்கே வந்தாள்.
கொஞ்சம் பொறு ராசா. உலையில சோறு வெந்துட்டிருக்கு. நீ மூஞ்சி கை காலு கழுவிட்டு வர்றதுக்குள்ள வடிச்சு ஆறப் போட்டுருவேன் என்றாள் பரிவுடன்.
வேகுறது வேகட்டும். பழசு இருந்தா போடுத்தா. அது போதும்.
ரேசன் அரிசிச் சோறு நாங்க சாப்பிடுறது பருவட்டா இருக்கும். உனக்குன்னு பொன்னி அரிசி போட்டிருக்கேன்
ஏத்தா இப்படியெல்லாம் பண்றீங்க? நீ பெத்த பிள்ளை நானு. நான் மட்டும் ஒசத்தியா? கம்மங்கஞ்சி, கேப்பக்கூழுன்னு சாப்புட்டு வளர்ந்த உடம்புதானே இது. இப்ப மட்டும் ஏன் பிரிச்சுப் பேசுறே?
அதுக்கில்லேப்பா. இஞ்சுநீரு படிச்ச பிள்ளை நீ. படிப்பு வாசனை இல்லாத இந்தப் பாவி மனசு கேக்க மாட்டேங்குது என்று கரிசனையோடு தாய் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனான். வாசலில் காலடியோசை கேட்டது. அப்பா வந்தாச்சு. பேசிக்கிட்டிரு என்றவள் அடுப்படிப் பக்கம் போய் எரிந்து கொண்டிருந்த விறகின் வீரியத்தைக் குறைத்தாள்.
முகத்தில் வழிந்த வியர்வையைத் தலையிலிருந்த துண்டால் துவட்டியபடி கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தார் வீரய்யா. அரைகுறையாய் காதில் விழுந்ததைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்த போது முத்தழகு முந்திக் கொண்டான்.
இங்கே நடக்குறது எதுவுமே எனக்குப் பிடிக்கலே. பண்ணையாரு தன்னோட ரெண்டு பசங்களை டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிவச்சதைப் பார்த்துட்டு, உள்ளது பொல்லதை வித்து, சாப்பிட்டும் சாப்பிடாமக் கிடந்து என்னையும் இன்ஜினியராக்கிட்டு சித்தாளு வேலைக்குப் போய்க்கிட்டிருக்கீங்க. ஆத்தா பால் மாட்டுக்குப் புல் புடுங்கவும், கூலிக்குக் களையெடுக்கவும் போய்க்கிட்டிருக்கு. பரம்பரை வீட்டை வித்துட்டு ஓட்டு வீட்டுக்கு வந்தாச்சு. இதுக்கு மேல என்ன நடக்கணும்… மனதில்பட்டதைக் கொட்டித்தீர்த்தான்.
மூன்றரை ஏக்கர் நிலமும், காரை வீடும் அய்ந்து ஆண்டுகளுக்கு முன் அவர்களது சொத்தாக இருந்தது. கிணற்றிலிருந்து கிடைத்த கொஞ்ச நீரைக்கொண்டு கீரை, காய்கறி, நெல், பருத்தி என்று எதையாவது பயிரிட்டு, இரவு பகலென்று பாராது பாடுபட்டு ஜீவித்திருந்தது வீரய்யாவின் குடும்பம். முத்தழகு ஒரே பிள்ளை. பெரிய படிப்பு படிக்க வைத்துப் பார்க்க ஆசைப்பட்டு வீட்டையும், நிலத்தையும் பண்ணையாருக்கே விற்றுவிட்டார்கள். கொஞ்ச நஞ்ச சொத்தும் கைவிட்டுப் போனதில் கடுகளவும் யாருக்கும் வருத்தமில்லை. கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு முடித்துப் பட்டம் பெற்றான். சக மாணவ நண்பர்களுடன் பேசி எடுத்த முடிவுப்படி ஏதாவதொரு வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் ஆவலுடன் இணைய தளங்களில், நாளிதழ்களில் வரும் விளம்பரங்களைத் தேடிப் பிடித்து மனுப் போட்டுக் காத்திருந்தான்.
தனது மகனின் உள்மனதைப் புரிந்து கொண்ட வீரய்யா நீ சொல்றதை ஒத்துக்கிறேன். ஒண்ணு மட்டும் சொல்றேன். விவசாயியோட பிள்ளை விவசாயியா இருக்கணும்னா படிக்க வேண்டாம். கலப்பையும் மாட்டையும் பத்திக்கிட்டு வயக்காட்டுல பாடுபடுறதுக்கு எதுக்குப் படிப்பு? கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிஞ்சுட்டாலே ஏர் பிடிக்கக் கூச்சப்படுதுங்க. பெரிய படிப்புப் படிச்சோமா, மடிப்புக் களையாத சட்டை போட்டுக்கிட்டு ஆபீசுக்குப் போனோமா, கைநிறையச் சம்பளம் வாங்கிட்டு நிம்மதியா வீடு வந்து சேர்ந்தோமான்னு ஆகிப்போச்சு. நம்ம ஊரு பண்ணை வீட்டுப் பிள்ளைங்க ரெண்டு பேருமே வெளிநாட்டுக்குப் போயி செல்வாக்கா இருக்காங்க. என்னோட ஒரே புள்ள உன்னைப் படிக்க வச்சுப் பார்க்கணும்னு ஆசைப்பட்டது தப்பா? ஊரும் உலகமும் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்த காலத்துல பிள்ளைகளைப் படிக்கவைக்க, உத்தியோகத்துக்கு அனுப்ப யாருக்கும் தோணல. எல்லாக் குடும்பங்களும் விவசாயத்தை மட்டும் நம்பியிருந்த காலம் மலைஏறிப் போயிருச்சு இன்னிக்கி… சொல்லி முடிக்கும் முன்னே முத்தழகு குறுக்கிட்டு படிக்கவச்சு ஆபிசர் ஆக்கிப் பார்க்கணும்னு எல்லோருமே நினைச்சுட்டாங்க. வயக்காட்டுப் பக்கம் தலைவச்சுக்கூடப் படுக்குறதில்லே. படிப்பு, ஆபீசுக்குப் போறது, வெளிநாடு போறதை கௌரவமா நினைக்குறாங்க. என்னப்பா? என்ற முத்தழகு உடைந்த பார்வையால் தந்தையை ஏறிட்டான்.
உயர் படிப்புத் தந்து தன்னை ஆளாக்க பெற்றோர்கள் பட்ட ஆற்றொணாத் துயரத்தையும், அரும்பாடுபட்டதையும் அறிந்திருந்ததால் முழு ஈடுபாட்டுடன் கல்வியில் கவனம் வைக்க அதுவே உந்துதலாக இருந்தது. பொறியியற் கல்லூரியின் முதன்மை மாணாக்கனாய் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்ததும் பெற்றவர்களின் காலில் விழுந்து வணங்கினான். அவனை வாரி எடுத்து அரவணைத்தபோது வழிந்த ஆனந்தக் கண்ணீர் அவன் மீது சிந்திச் சிதறியது. யாருக்காகவும், எதற்காகவும் இனி கை பிசைந்து நிற்க வேண்டியதில்லை என்பதை அன்பால் அவர்களுக்கு உணர்த்தினான்.
பண்ணையார் வீட்டுப் பணியாள் பக்கத்து வீட்டு மாயாண்டி தற்செயலாக அங்கே வந்தபோது, அய்யாவுக்கு உடல் நலமில்லை. படுத்த படுக்கை ஆகிவிட்டார் என்ற தகவலைச் சொல்லிவிட்டுப் போனான்.
பெருஞ்சீர் செனத்தியோடு மிகப் பெரிய இடத்தில் பெண் பேசி முடித்துவிட்டு அமெரிக்காவில் இருக்கும் மூத்த மகனுக்குத் தகவல் சொன்ன போது இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்ற பதில் வந்தது. கனடாவில் இருக்கும் இளைய மகனிடம் தொடர்பு கொண்ட போது அதற்குள் என்ன அவசரம்? ரெண்டு மூணு வருசம் போகட்டும் என்றானாம். தன் விருப்பத்தை அலட்சியப்படுத்தியதால் அவமானம் தாங்க முடியாமல் கவலையில் படுத்தவர்தான். மருத்துவம் பயனளிக்காமல் கோமா நிலைக்குப் போய் இறந்தே போனார்.
வெளிநாடுகளில் இருக்கும் மக்களுக்கு இழவுச் செய்தி தெரிவிக்கப்பட்டது. வந்து சேரும் வரை பொறுத்திருக்கவும் என்ற பதில் வந்தது. அதுவரை உடல் கெடாமல் இருக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய கண்ணாடிப் பேழை ஒன்று வரவழைக்கப்பட்டது.
உறவுகள் சூழ, சுற்றுப்பட்டி மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஒருவர்பின் ஒருவராக பிள்ளைகள் இருவரும் வந்து சேர மூன்று தினங்கள் கடந்தன. சிறுவயது முதல் பண்ணையாரைப் பலமுறைப் பார்த்துப் பழகியவன் முத்தழகு. அவரிட்ட கட்டளை சிலவற்றைச் செவ்வனே செய்து முடித்து கெட்டிக்காரப் பய என்ற பெயரை அவரிடம் தட்டிச் சென்றவன். அன்பளிப்புகளும் பெற்றதுண்டு. அதனால் உடல் அடக்கம் முடியும்வரை அவன் அங்கேதான் இருந்தான். வீட்டுக்குத் திரும்பும் போது அவன் இதயம் கனத்திருந்தது. அவனுக்குள் ஒருவகைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருப்பதை யார்தான் அறிய முடியும்?
பெரிய வீட்டின் துயரச் சம்பவத்திற்குப் பின் சலசலப்புகள் குறைந்து இயல்பான நிலைக்கு ஊர் திரும்பியிருந்தது. முத்தழகின் முகவரிக்குக் கடிதம் ஒன்று வந்தது. அதனை வாங்கி அவசரம் அவசரமாகப் பிரித்தான். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வீரய்யாவும் சின்னத்தாயும் அங்கே விரைந்து வந்தார்கள். கண்களைப் பெரிதாக்கும் சமாச்சாரம் ஒன்று காத்திருக்கிறது என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. அவன் சொன்ன செய்தி அவர்களின் காதுகளில் விழுந்து முதுகுத் தண்டைச் சில்லிட வைத்தது. நல்ல வேலை. பெரிய சம்பளம். உடனே புறப்படவும் என்று தென் அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு அது.
ஒளிமயமான எதிர்காலம் வந்துவிட்டது என்னும் நம்பிக்கை பொய்க்கும் வகையில் காட்சிகள் மாறப்போகின்றன என்பதை அவர்கள் அறிவார்களா? கண் இமைக்கும் நேரத்தில் அந்த அழைப்பைப் பெற்றோர்கள் எதிரில் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தான். அவர்களோ செய்வதறியாது திகைத்து நின்றார்கள். சில நொடிகள் கடந்தன. சுய நினைவுக்கு வந்த வீரய்யா நாக்குக் குழற, கண்களில் ஈரம் கட்டிக்கொள்ள என்னப்பா இப்படிப் பண்ணிட்டே என்றார்.
படக்கென்று பதில் வந்தது. அள்ளிட்டு வர்றதுக்கு வெளிநாடு போகணுங்கிற வெறியிலதான் நானும் இருந்தேன். உங்க ரெண்டு பேரையும் அய்ஸ் பெட்டியிலே வச்சுருக்கிறதப் பார்க்க அங்கேயிருந்து நான் பறந்து வரணுமா? அது என்னால முடியாதுப்பா, நான் உங்களோடதான் இருக்க விரும்புறேன். நான் உங்களையும், நீங்க என்னையும் நினைச்ச நேரத்துல பார்க்க முடியணும்! அங்கேபோய்ச் சம்பாதிக்கிறதை இங்கேயே, நம்ம நாட்டுலேயே சம்பாதிக்க என்னால முடியும். கடைசிவரை உங்களைக் காப்பாத்தவும் முடியும். கவலைய விடுங்க என்று சொன்னபோது அவனது உறுதி கொண்ட நெஞ்சும், ஒளி படைத்த கண்ணும் விசாலமாய் வெளிப்பட்டன!