சாரயக் கிடங்குச் சாமியாரின் அறிவியல் சாதனைகள்

மே 16-31

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

என்னமோ நடக்குது ஒன்னுமே புரியலே:

ஒரு கிறித்துவ மதகுரு சாமியார், அவர் சாராயம் காய்ச்சும் கிடங்குக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தார்.

வேறு இடமே அவருக்குக் கிடைக்கவில்லையா–?

ஜோசப் பிரிஸ்ட்லி சிலை

அன்றைக்கு எவருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

அந்தச் சாராயம் கிடங்குக் கட்டடமும் சுற்றுச்சூழலும் கெட்ட நாற்றமும் வீசியபடியே இருக்கும். இங்கேதான்  ஏசுபிரானின் தூயநெறிகளைப் பரப்புரை செய்யும் சாமியார் வாழ்ந்து வந்தார்.

ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு:

லீட்ஸ் என்னும் நகரில் இருந்த மாதா கோவிலிலே அவர் செலவிட்டது ஒரு பகுதி  நேரமே! மதகுரு பணிக்குச் செல்வது கொஞ்ச நேரமே! மற்ற நேரங்களில், கையில் சாராயக் குடுவை! தீ நாற்றம்!

இவற்றோடுதான் தம் பொழுதைக் கழித்து வந்தார் நல்ல சாமியார்!

குருசாமியா? குடிசாமியா?

இப்படிப்பட்ட இந்தச் சாமியாரை மக்கள் அருவெறுத்தனர்; அவரை வெறுத்தனர்; கண்டித்தனர்; வெகுண்டெழுந்தனர். பொதுவாக சாராயக்கடைக்கு யார் போவார்கள்? மதகுரு அங்கே போகிறார்; தங்குகிறார் என்றால் என்ன பொருள்?

சாராயக் கலவைத் தொட்டி

என்றெல்லாம், வினாக்கள் பல கணைகள் போல எழுந்தன. அவர் அங்கு போவதும், தங்குவதும், வருவதும் சிலருக்கு விந்தையாகவும், நிந்தையாகவும் இருந்தன. ஆனால், சாமியாரோ சாராயக் கிடங்கு முதலாளி யோடு நட்பு மட்டுமே கொண்டிருந்தார். வேறு எந்தக் குடிப்பழக்கமும் அவருக்குக் கிடையாது.

சிந்தனைச் சிக்கல்:

ஒருநாள், சாராயக் கிடங்கின் முதலாளியின் அனுமதி பெற்று, சாராயக் கலவைகளிலே இருந்துவரும் காற்றை ஒரு பாத்திரத்தில் ஏந்திப் பிடித்தார். அந்தக் காற்றைப் பல நாள்களாக, பல ஆய்வுகளாகச் செய்து பார்த்தார்; ஆய்வுகள் செய்து கொண்டே வந்தார். சாராயப் பொருளில் இருந்து வெளியாகும் காற்று அவருக்குச் சிந்தனைச் சிக்கலை உண்டாக்கியது.

என்ன அப்படிப்பட்ட சிந்தனைச் சிக்கல்? அதில் உள்ள மர்மம் என்ன?

இதற்காக அவர் பகல் இரவு பாராது தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருந்தார். ஆய்வு! ஆய்வு!! ஒரே ஆய்வுதான்!!!

அவிந்து போயிற்றே! – நெருப்பு அவிந்து போயிற்றே!

ஒருநாள், எரியும் மரச்சுள்ளி ஒன்றைக் கையிலே எடுத்தார். அந்தச் சாராயக் காற்றிலே தூக்கிப் பிடித்தார்.

என்ன வியப்பு? உடனே, அந்த எரியும் சுள்ளி அவிந்து போயிற்று! ஏன் அவ்வண்ணம் அவிந்து போயிற்று? காரணம் என்ன? மறுபடியும், மறுபடியும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்! ஆய்ந்த சிந்தனையில் தோய்ந்தார் மதகுரு.

கூடாதய்யா, கூடாது!

ஜோசப் பிரிஸ்ட்லி

இதற்குள், மாதாகோவில் மதகுரு சாராயக் கிடங்கே கதி – எனக் கிடக்கி றார் என்ற செய்தி காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது. குடிகார மதகுருவை, கோவிலில் நுழைய விடவே கூடாது என்று அப்பகுதியின் பெரும்பாலான மக்கள் குரல் எழுப்பினர்; கூக்குரலிட்டனர்; ஆர்ப்பாட்டம் செய்தனர்; ஆவேசப்பட்டனர்.

நம்ப முடியவில்லை, இல்லை!

தான் சாராயம் பருகுவதில்லை; சாராயத்தை வைத்து ஆராய்ச்சி செய்வதாக மட்டுமே அந்த மதகுரு தன் உளம் திறந்து கூறினார்.

இதனைக் கேட்ட குறை கூறும் மக்கள் கொல் எனச் சிரித்தனர்; கலகல என நகைத் தனர்; எள்ளிப் பேசினர்; ஏகடியம் செய்தனர்.

கொஞ்சமும் கூச்ச நாச்சம் இன்றி, வெட்கமில்லாமல் இந்தக் குருசாமியார் கூறுவதை மக்கள் கேட்க வேண்டுமாம்! நம்ப வேண்டுமாம்! நல்ல நகைச்சுவை! இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று ஏளனம் செய்ததோடு அவர்கள் நிற்கவில்லை!

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்!

அதாவது, மதகுரு வேலையினின்றும் நீக்கிவிட்டனர். என் செய்ய? எங்கே போய்ச் சொல்வது? பகுதி நேர வருமானமும் போய்விட்டது! ஆனால், இதற்காக எல்லாம் சாமியார் மனம் குலையவில்லை; உள்ளம் உடைந்து போகவில்லை!

மீண்டும் அதே சாராயக் குடுவை கையிலே! முழுநேரமும் அதே சிந்தனையிலே!

குருசாமி சென்ற அறிவியல் கூட்டங்கள்!

அறிவியலாளர்கள், எந்த இடத்தில் பேசினாலும், கருத்துரை வழங்கினாலும், ஆய்வுரைகள் நிகழ்த்தினாலும் தவறாது அங்கே எல்லாம் மதகுரு செல்வார். அவர்களின் கருத்துரைகளைச் செவிமடுப்பார்; சிந்தனையில் ஈடுபடுவார்! சிந்தனையில் பல புதிய சிக்கல் கள் தோன்றும்.

தோன்றினால் என்ன?

அறிவியலாளர்கள் நண்பர்கள் ஆயினரே!

ஆய்வுக் கூடம்

இவ்வண்ணம், அடிக்கடி அறிவியல் கூட்டங்களுக்கு, இவர் சென்று வருவதால் நல்ல அறிவியலாளர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. தொடர்பு உண்டாயிற்று.

அந்த நட்பை, அரிய தொடர்பை, தன் சிந்தனைக்கேற்ப, பயன்படுத்திக் கொண்டார் சாமியார். வெறும் சாமியாரா இவர்? இல்லை! அறிவியல் சாமியார்!!

கடுமையான கலகங்கள்!

இந்தக் காலகட்டத்தில் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது.

பிரெஞ்சுக் கலகக்காரர்களால் நாடெங்கும் வன்முறைச் செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் பயங்கர மோதல்கள்!

இல்லத்தில் இருந்த எல்லாம் போயின!

ஒருநாள், அந்தக் கலகக்காரர் கூட்டம், திடீரென அந்த மதகுருவின் இல்லத்தை முற்றுகையிட்டது.

சாராயச் சாமியார் ஒழிக! மதுகுடிக்கும்  மதகுரு ஒழிக!! ஒழிக!! என்ற எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன!

எதிர்ப்புக்குரல் மட்டுமா-? மதகுருவின் வீட்டை நெருப்பிட்டுக் கொளுத்தினர் கலகக்காரர்கள்.

சரிந்து போன சாராய சாம்ராஜ்யம்!

எரிந்தது இல்லம்! சாம்பலாகிப் போயின இல்லத்தில் இருந்த எல்லாப் பொருட்களும்!!

சாராயப் புட்டிகள் உடைத்து எறியப்பட்டன.

அவரது, நூலகத்தில் இருந்த அனைத்து நூல்களையும் தீயிட்டுக் கொளுத்தியது அந்தக் கலகக் கும்பல்!

ஆய்வகத்தில் கருவிகள் குறிப்பேடுகள், ஆய்வுக்கலங்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை, அழித்தனர்.

தப்பித்துச் சென்றாரம்மா!

அவரது கையேட்டுக் குறிப்புகளின் ஏடுகளை  எல்லாம் சுக்கு நூறாகக் கிழித்து, வழி நெடுக அவற்றை வீசி எறிந்தபடியே அவர்கள் போனார்கள்.

புரட்சியின் போது அடிக்கடி இவ்வண்ணம் நடக்கத்தான் செய்யும் என்று முன்கூட்டியே அறிந்த சாமியார் குடும்பத்தோடு தப்பித்து வேறோர் இடத்திற்குச் சென்றுவிட்டார்.

போனால் போகட்டும் போடா!

தன் ஆய்வகமும், ஆய்வுக் கருவிகளும், குறிப்பேடுகளும் அழிந்து போய்விட்டதை அறிந்த அந்த அறிவியல்  வித்தகர், கண்ணீர் விட்டுக் கதறினார்; அழுதார்; புலம்பினார்.

ஆனாலும் மனத்திட்பம் இழந்தாரில்லை!

கடுமையான – கொடுமையான இழப்புக்குப் பிறகும்கூட அந்தச் சாமியார், போனால் போகட்டும் போடா! என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! என்று உறுதி கொண்டார். உள்ளம் அசரவில்லை; சும்மா இருப்பதே சுகம் என்று சோர்ந்து விடவில்லை; மூலையில் அமர்ந்து முடங்கிக் கிடக்கவில்லை. போச்சு! எல்லாம் போச்சு! இனி என்ன செய்வேன்? எனத் தளர்ந்து போய்விடவில்லை!

அயராத ஆய்வு:

ஒருநாள், புதிய தன் ஆய்வுக்களத்தில் அமர்ந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?

ஏற்கெனவே, சாராயக் கலவைத் தொட்டியின் காற்றிலே எரியும் மரச்சுள்ளியைப் பிடித்தபோது, அது அவிந்து போயிற்று அல்லவா?

இப்போது, அந்தக் காற்றை விடாமல் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருந்தார்.

அந்தத் தொடர்ஆய்விலேதான் அந்தச் சாமியார் அறிவியல் சாதனை நிகழ்த்தினார். நிகழ்த்தியது கி.பி. 1770இல்.

கண்டுபிடித்தேன்! நான் கண்டுபிடித்தேன்!

அந்தக் காற்றுதான் இன்று நாம் அறிவியல் உலகிலே பெயரிட்டு அழைக்கும், பயன்படுத்தும் கரிம -_ அமில இருமை வளி – கார்பன்-டை-ஆக்சைடு (Carbon di Oxide) .

அது மட்டுமா? அந்தக் காற்று நீரில் கரையுமா? ஆய்வு செய்தார் அவர்.

நீரில் அந்தக் காற்றைக் கரைத்தார்; அது கரைந்தது. இதுவும் ஒரு கண்டுபிடிப்பு.

கார்பன்-டை-ஆக்சைடு கரைந்த நீரைத்தான் சோடாநீர் (Soda water) எனப் பெயரிட்டார்.

நீர் விடாய் எடுத்தால் மூடியை விடுவித்து, குடித்து, யேவ் என ஏப்பம் இடுகிறோம் நாம் எளிதாக! அதைக் கண்டுபிடிக்க என்ன பாடுபட்டார் சாமியார்!

கொக்கோகோலா, ஜிஞ்சர், ஏல் போன்ற நீர்மங்களைத் தாராளமாக நாம் பயன்படுத்துவதைச் சற்று நினைவுபடுத்திக் கொள்வோம்.

தங்கப்பதக்கம் தரப்பட்டது!

இந்த அறிவியல் விந்தையைச் சாராயக் கலவையிலே கண்டுபிடித்ததற்காக – அந்தச் சோடா நீரைப் பருகிய லண்டன் அரசுக் கழகம் (Royal Society) சாமியாருக்கு, தங்கப்பதக்கம் அளித்துப் பாராட்டி, மதிப்புச் செய்தது!

இன்று, அறிவியல் உலகம் அவரைச் சாராயச் சாமியாராகப் பார்க்காமல் அறிவியலாளராக அண்ணாந்து நோக்குகிறது.

வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்!

கார்பன்-டை-ஆக்சைடு என்னும்  வளியை மட்டுமா இந்தச் சாமியார் கண்டுபிடித்தார்?

சாராயக் குடுவையிலிருந்து வீசிய கெட்ட வாசனையை ஊற்றி, ஆழ்ந்து நோக்கி ஆய்ந்து கண்டுபிடித்து கி.பி. 1775இல் மீண்டும் ஒரு வகை புதிய காற்றினைக் கண்டுபிடித்தார் சாமியார்.

ஜிஸ்டான் என்ற உயிர்க்காற்றுதான் அது!

அதுதான் இன்று உயிரியவளி – ஆக்சிஜன் (Oxygen) என, நாம் அழைப்பது!

கண்ணீரைச் சிந்த வைத்த காட்சி!

கி.பி. 1804இல் இவர் இயற்கை எய்தினார். சரியான சாதனைச் சாமியார் ஆகிய அறிவியலாளர். இறுதிச்சடங்கில், பெஞ்சமின் பிராங்ளின் என்னும் மாபெரும் அறிவியல் மேதை கலந்து கொண்டார்.

தாமஸ் ஜெஸ்பர்சன் என்னும் அறிஞர், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் முதலானவர்களும் கலந்து கொண்டனர். தங்களின் இறுதிக் கண்ணீர் மரியாதை செய்தனர்.

சாராயச் சாமியாரின் அறிவியல் சாதனைகள் வாழ்க!

சாராயச் சாமியாரின் அறிவியல் சாதனைகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை! அறிவியல் உலகம் அவர்தம் கண்டுபிடிப்புகளைக் கண்டு வியக்கிறது. அவர்தம் பெயரை நயக்கிறது! நமக்கெல்லாம் எழுச்சியையும், இன்பத்தையும் பயக்கிறது!

யாரோ? அவர் யாரோ? என்ன பேரோ?

அவர்தாம் ஜோசப் பிரிஸ்ட்லி என்னும் மாமேதை; பேரறிஞர்; அறிவியல் துறவி; இங்கிலாந்தில் லீட்ஸ் என்னும் நகரத்தவர். வாழ்க! ஜோசப் பிரிஸ்ட்லி!

வளர்க! அவர்தம் மறையாப் புகழ்!!

(தகவல்கள் நூல்: விஞ்ஞானச் சிக்கல்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *