பாபு பீ.கே.
பகவத்கீதை என்பதே நம் புழக்கத் தில் இருப்பதால் அப்படியே குறிப் பிடுகிறேன். ஏனெனில், இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால்.
1. முதலில் இதன் காலம் வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது?
மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. அதாவது திரேதாயுகத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாக.
யுகங்கள் ஒரு வரிசைப் பார்வை
சத்ய யுகம் 1,728,000
திரேத யுகம் 1,296,000
துவாபர யுகம் 864,000
கலியுகம் 432,000
நாம் கலியுகத்தின் முதல் வருடத்தில் இருக்கின்றோம் என்று கொண்டால்கூட 21,60,000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வு புவிமாறுதல்களுக்கு உட்படாமல் இன்றைக்கு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்றிருந்த நிலப்பரப்பின் தொடர்புகள் எப்படி இருந்தன?
2. இரண்டாவது, நிகழ்விடம்.
ஒரு அக்குரோணி படை என்பது 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 காலாட்படை வீரர்கள் கொண்டதாம். அப்படி மொத்தம் 18 அக்குரோணிப் படைகள் குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்றதாம்.
தேர்ப்படை 21,870 x 18 = 3,93,660
யானைப்படை 21,870 x 18 = 3,93,660
குதிரைப்படை 65,610 x 18 = 11,80,980
காலாட்படை 1,09,350 x 18 = 19,68,300
அக்காலத்தில் இருந்த மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அத்தனை பேருக்கான உணவு உற்பத்தி இருந்திருக்குமா? அப்படி 18 அக்குரோணிப் படைகளும் நிற்குமளவிற்கு குருசேத்திரம் அத்தனை பெரிய இடமா? அத்தனை பெரிய மைதானமா?
3. மூன்றாவது, கிருஷ்ணன் யார்? அத்தனைப் பெரிய போர்ப்படைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் 18 அத்தியாயங்கள் வரக்கூடிய இந்த பகவத்கீதையை உபதேசிப்பது… உபதேசனை கூட இல்லை… ஒரு கேள்வி _- பதில் விவாதம் சாத்தியமா? அதுவரையில் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேலும், இந்தக் கிருஷ்ணரைப் பற்றியும் வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.)
4. இனி பகவத்கீதைக்குள் செல்வோம். சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம் (அத் 4 -_ சுலோ 13)
நான்கு வர்ணங்களைப் படைத்து ஏன் செயலற்றவராகிறார்?
5. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ (அத் 10 -_ சுலோ 21)
சந்திரன் நட்சத்திரமா?
6. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:| ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: (அத் 18- _ சுலோ 70)
எழுதி வைத்துப் படிக்கப்போகின்றார்கள் என்று எப்படி முன்னரே தெரிந்தது? அர்ஜுனனுக்கு இது அத்தனையும் மனப்பாடமாகி விட்டதா? அர்ஜுனன்தான் இதனை எழுதினாரா அல்லது எழுதச் சொன்னாரா? இல்லை ஞானதிருஷ்டியில் ஒட்டுக்கேட்ட சஞ்சயன்தான் காரணமா?
7. யேப்யந்யதே வதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: |
தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் (அத் 9 – சுலோ 23)
அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: (அத் 9- _ சுலோ 30)
23ஆம் சுலோகத்தில், அந்நிய தேவதைகளைத் தொழுபவர்கள் (அப்படியென்றால் அப்பொழுது பல கடவுள்கள் இருந்திருக்கின்றனர்.) அறியாமையில்கூட என்னையே தொழுகின்றனர் என்ற உண்மையைக் கூறிய கிருஷ்ணன் பின்,
30ஆம் சுலோகத்தில், மற்ற தெய்வங்களை வணங்காது என்னை வணங்குபவனையே நல்லவன் என்று கொள் என்று ஏன் முரண்பட்டுச் சொல்கிறார்? யாரை வணங்கினாலும், இவரைத்தானே வந்தடைகின்றது, பின் எப்படி அவர்கள் கெட்டவர்களாவார்கள்?
8. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்ட வாநாம் தநஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: (அத் 10-சுலோ 37)
பாண்டவர்களில் இவர் அர்ஜுனன் என்றால்… எதிரில் இருக்கும் அர்ஜுனன் யார்? முனிவர்களின் வியாசர் என்றால், பல ஆயிரம் வருடங்கள் கழித்து மகாபாரதத்தைத் தொகுக்கப் போகும் முனிவரைப் பற்றி முன்னரே தீர்க்கதரிசனம் கூறியுள்ளாரோ?
இன்னும் நிறைய இருக்கின்றது. நினைவில் இருப்பனவற்றைக் கேட்டிருக்கிறேன். வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்தால், மற்றவைகள் நினைவுக்கு வருவதோடு இன்னும் புதிய கேள்விகளும் கிடைக்கலாம்.
இன்னொரு பொதுவான கேள்வி. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றங்களில் ஏன் பகவத்கீதையைக் கொண்டு சத்தியம் வாங்குகின்றார்கள்? அப்படிச் சத்தியம் செய்தவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?