– ம.ஜெயச்சந்திரன்
நண்பா, மிட்டாய் எடுத்துக்கங்க என்று சிரித்த முகத்தோடு சந்திரனிடம் நீட்டினான் கார்த்திக். என்ன கார்த்திக் ஏதேனும் விசேஷமா? மிட்டாயெல்லாம் கொடுக்குறீங்க என்று கேட்டுக்கொண்டே ஒன்றை எடுத்து அதன் தாளைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான் சந்திரன்.
எனக்குப் பையன் பிறக்கப் போறான், அதனால்தான் இந்த சந்தோஷத்தை மிட்டாய் கொடுத்துக் கொண்டாடுறேன் என்றான் கார்த்திக். என்ன சொல்றீங்க, பையன் பிறந்துட்டானா? பிறக்கப் போறானா? கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்க கார்த்தி. ஒரே குழப்பமாக இருக்கு என்றான் சந்திரன்.
குழந்தை இன்னும் பிறக்க வில்லை. அடுத்த வாரம் பிறக்கும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். பிறக்கப் போகும் குழந்தை ஆண்குழந்தை தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? மருத்துவமனையில் ஒளிப்படம் (ஸ்கேன்) எடுக்கும்போது சொல்லக்கூடாங்கறது சட்டம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு எப்படித் தெரியும்? யார் சொன்னது? என்று வியப்புடன் கேட்டான் சந்திரன்.
டாக்டர் யாரும் சொல்லல. நம்ம சாமியாடிதான் சொன்னாரு என்று தொடர்ந்தான் கார்த்திக். ஒங்க தங்கச்சி தனம் பயந்த சுபாவம் கொண்டவள் என்பது உங்களுக்குத் தெரியுமே. தனம் மாலை 6 மணிக்கு ஒத்தப் பனைமரம் பக்கமாக கடைக்குப் போயிருக்கா. அப்போ முனியப்பன் பயம் காட்டிட்டான். மூணுநாளா சாப்பிடவில்லை, உடம்புக்குச் சரியில்லை. நம்ம சாமியாடியை வரச் சொல்லி குறி பார்த்தோம். அவருமேல அந்த முனியப்பனே வந்து இறங்கிட்டான்.
அப்போது சாமியாடி, நான்தான் முனி வந்திருக்கேன், பயப்பட வேண்டாம். நீ எம்மேல நம்பிக்க வச்சிருக்க. முதல் குழந்தையும் உனக்குப் பெண் குழந்தை. அடுத்த குழந்தையாவது ஆண் குழந்தையா பிறக்காதான்னு காத்திருக்க. அதான் நானே இங்க வந்துட்டேன் என்று குறியில் கூறினார்.
அது மட்டுமல்ல, பிறக்கப் போறது ஆண்குழந்தை என்பதால் அதற்கு முனியாண்டி என்று பெயர் வைக்க வேண்டும் என்று சாமியாடியின் மீது இறங்கிய முனியப்பன் கூறினான். இதைக் கேட்டவுடன் உரத்த சத்தத்துடன் சிரித்தான் சந்திரன். இந்தச் சிரிப்பு கார்த்திக்கின் மனதைப் புண்படுத்தவே, உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
நில்லுங்க கார்த்தி, என்ன ஒன்னும் சொல்லாமப் போறீங்க என்று கேட்டு கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் சந்திரன். என்ன சொல்லச் சொல்றீங்க? நான் சொன்னதைக் கிண்டல் பண்ணி, எங்க நம்பிக்கையைப் பொய்னு சொல்றீங்க. எதுக்கு வம்பு, நான் கிளம்புறேன் என்றான் கார்த்திக். கோபப்படாதீங்க, சும்மா விளையாட்டுக்குச் சிரிச்சேன், அதப் போய் தப்பா நினைச்சிட்டீங்களே, சொல்லுங்க கேட்கிறேன் என்றான் சந்திரன்.
சாமியாடி சாமி வந்து சொல்றதுக்கு முந்தின நாள் எங்கப்பா கனவு கண்டார். அந்தக் கனவுல, முனியாண்டி வெள்ளைக் கொடியுடன் வந்து ஆண் குழந்தை பொம்மையைக் கொடுத்துட்டுப் போனார். அதனால, இதையெல்லாம் பார்க்கும்போது பிறக்கும் குழந்தை நிச்சயமா ஆண்பிள்ளைதான்னு முடிவு செய்தோம்.
என்ன கார்த்தி புரியாம பேசுறீங்க. குழந்தை பிறக்குறதும், பிறக்கிற குழந்தை ஆணா, பெண்ணானு முடிவு செய்றதும் ஒங்க முனியன் கையில இல்லை. குழந்தை பிறப்பதில் உங்களுடைய தாம்பத்தியமும், பாலினத்தை முடிவு செய்றதில் உங்களுடைய குரோமோசோமும்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது புரியாம இப்படிச் சொல்றீங்களே என்றான் சந்திரன்.
நான் கிளம்புறேன், நீங்க வேணும்னா கடவுள் நம்பிக்கை இல்லாம இருக்கலாம். அதுக்காக எங்க நம்பிக்கையைக் கெடுக்காதீங்க என்று பேசிக்கொண்டே, குழந்தை பிறந்த பிறகு நான் வந்து பேசுறேன். அப்போ தெரியும் எங்க கடவுள் பெருசா, உங்களுடைய குரோமோசோம் பெருசான்னு…. என்று கோபமாகவும் ஆவேசமாகவும் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
சந்திரனிடம் பேசிக் கொண்டிருந்த இடத்தைவிட்டு நகர்ந்த கார்த்திக்கின் மனம் அவன் பேசிய வார்த்தைகளைவிட்டு நகர மறுத்தது. ஒருவேளை சாமியாடி சொன்னது பொய்யாகி விடுமோ? மீண்டும் பெண் குழந்தையே பிறந்துவிடுமோ என்ற குழப்பத்தில் சந்திரனின் கால்கள் சாமியார் இருக்குமிடம் நோக்கி நடந்தன.
காவி வேட்டியில் கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்திருந்த சாமியாரைப் பார்த்து வணங்கினான். இந்த வெயிலில் இவ்வளவு மன இறுக்கத்துடன் என்னை நாடி வந்துள்ள காரணம் என்னவோ என்றார் சாமியார்.
இதனைக் கேட்ட கார்த்திக்கின் கண்கள் கலங்கின. அழாதே பக்தா, என்னிடம் வந்த பிறகு உனக்கு ஏன் கவலை? உன் பிரச்சினை என்ன என்று சொல். நான் சரி செய்து கொடுக்கிறேன். உன் மனக் கலக்கத்திற்கு யார் காரணம் என்று சொல். அவர்களது கை கால்களைச் செயலிழக்கச் செய்யவா அல்லது அவர்கள் மீது குட்டிச் சாத்தானை ஏவி விடவா, என்ன செய்ய வேண்டும் என்று கர்ஜித்தார் சாமியார்.
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சாமி. என் நண்பன் ஒருவனிடம் எனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று சொல்லி மிட்டாய் கொடுத்தேன். எப்படி ஆண் குழந்தையென உறுதியாகச் சொல்கிறாய் என்றான். தாங்கள் குறியில் சொன்னதைக் கூறியதும், கிண்டல் செய்ததுடன், எனக்கே உபதேசமும் பண்ணிட்டான். மனசு குழப்பமாகிவிட்டது. சாமி, நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஆம்பளப் பிள்ளதான பிறக்கும்….. சொல்லுங்க சாமி என்றான்.
என்மீது முனியப்பன் வந்து இறங்கிச் சொன்ன அருள்வாக்கையே சந்தேகப்படுறயா, நான் சொன்ன குறி என்றும் தவறியதே இல்லை என்று ஆவேசமான சாமியாடி தன் உடலினை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டார்.
சாமியாடியின் ஆவேசத்தைப் பார்த்த கார்த்தி பயத்தில் கைகூப்பி நின்றான். ஆவேசச் சிரிப்புடன், உன் சந்தேகத்தைப் போக்க ஒரு வழி சொல்கிறேன் கேள் என்றதும், நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்த கார்த்திக் சாமியாரின் கால்களைப் பிடித்துக் கொண்டு எனக்கு ஆம்பளப் பிள்ளைதான் பிறக்கணும் சாமி என்றான் கண்ணீர் மல்க.
உடனே சாமியார், இப்போது கருவறையில் உள்ள முனியப்பனிடம் பூக்கட்டிப் போட்டுப் பார்த்து அவன் உத்தரவு என்ன என்று கேட்டுவிடுவோம், எழுந்திரு என்றார்.
கோயில் கருவறையினுள் சென்ற சாமியார் சிறிதாக நறுக்கிய இரு வாழை இலைத் துண்டுகளை எடுத்தார். ஒன்றில் மல்லிகைப் பூவையும் இன்னொன்றில் சிவப்பு அரளியையும் வைத்து மடித்துக் கட்டினார். கட்டிய பூக்களை உள்ளங்கையினுள் வைத்துக் கைகளை உயர்த்தி, முனியப்பா, உன் பிள்ளை கேட்பார் பேச்சைக் கேட்டு மனக் குழப்பத்தில் உன்முன் வந்துள்ளான்.
அவனுக்கு ஆண் பிள்ளை பிறக்கும் என்று வெள்ளைப் பூவை (மல்லிகைப் பூ) உத்தரவாகக் கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பு. ஆண்பிள்ளை பிறந்ததும் உனக்குப் படையல் போட்டு வழிபடுவான் என்றார். அதுவரை அமைதியாக நின்றிருந்த கார்த்தி, ஆம்பளப் பிள்ள மட்டும் பிறக்கட்டும், உனக்குக் கிடா வெட்டிப் பொங்கல் வைத்துப் படையலும் போடுறேன் என்று தனது வேண்டுதலை முன்மொழிந்தான்.
இதனைக் கேட்ட பூசாரி வாய் நிறையப் புன்னகையுடன், கட்டிய பூக்களைக் குலுக்கிப் போட்டு முனியப்பனை வேண்டி எடுத்துப் பிரித்தார். வெள்ளைப் பூவைப் பார்த்த இரு முகங்களும் மகிழ்ச்சியில் திளைத்தன.
வீட்டிற்கு வந்த கார்த்திக் தன் மனைவியின் பிரசவ நாளுக்காகக் காத்திருந்தான். வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சந்திரன் தன் நண்பன் கார்த்திக் பேசிய பேச்சுக்களை நினைவு கூர்ந்தான்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்தக் காலத்துல சாமியாடி சொன்னதையும், கனவு கண்டதையும் வைத்துக்கொண்டு மூடநம்பிக்கையையும், மதநம்பிக்கையையும் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். ஒருவேளை பிறக்கும் குழந்தை ஆண்குழந்தையாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். குழந்தை பிறந்ததற்குக் காரணம் முனியாண்டி என்று கூறுவதோடு, ஊர் ஊராகச் சென்று அதைப் பிரச்சாரம் வேற செய்துவிடுவார்கள்.
ஒரு பொருளை வாங்கும்போது பலரிடம் விசாரித்து, அதோடு அது காலாவதி ஆகும் நாளையும் பார்த்து வாங்குகிறோம். ஆனால், சமயப் பிரச்சாரம் மற்றும் மதப் பிரச்சாரத்தில் யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்கிறோம். இதை அறியாமை என்று சொல்ல முடியாது.
இதுவரை இருக்கிறது என்று சொல்லி வந்ததை, இல்லை என்று சொல்ல மனம் வருவதில்லை. அப்படியே சொல்ல வந்தாலும் மதத்தைப் பரப்பும் மத வியாபாரிகள் அதை விடுவதில்லை என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டு நண்பனுக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தான் சந்திரன்.
நாளும் பொழுதும் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்கப் போவதில்லையே. ஒரு வாரமும் முடிந்தது. கார்த்தியிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வராதா என எதிர்பார்த்தான் சந்திரன். நாள்கள்தான் சென்றனவே தவிர, கார்த்தியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
நாமே தொடர்பு கொண்டு பேசலாமா என நினைத்த சந்திரன், செல்பேசியை எடுத்தான். அப்போது, கார்த்திக்கைப் பார்த்து 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டது. குழந்தை பிறந்து வீட்டிற்கும் கூட்டி வந்திருப்பார்கள். நேரே வீட்டிற்கே சென்று பார்த்து வந்துவிடலாமே என்ற முடிவுடன் கார்த்திக்கின் வீட்டிற்குக் கிளம்பினான்.
செல்லும் வழியில் குழந்தைக்கு ஏதாவது வாங்கிச் செல்ல நினைத்துக் கடைவீதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான். நினைத்த பரிசுப் பொருளை வாங்கிவிட்டுக் கடையைவிட்டு வெளியில் வந்தபோது எதிரில் நான்கு கடைகள் தள்ளி கார்த்திக்கும் அவனது அப்பாவும் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.
விரைந்து சென்று அவர்கள்முன் நின்றான். கார்த்தி, என்ன குழந்தை பிறந்துள்ளது? தாயும் சேயும் நலமா என அன்புடன் விசாரித்தான். தன் அறியாமையை நினைத்துத் தலைகுனிந்து நின்ற கார்த்தியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. திகைத்த சந்திரன், அப்பா நீங்களாவது சொல்லுங்கள் என்றான்.
என்னத்தப்பா சொல்றது, அந்த முனியனும் கைவிட்டுட்டான். என் கனவும் பொய்த்துப் போய்விட்டது. பெண் குழந்தைதான் பிறந்துள் ளது என்றார் வருத்தத்துடன். அப்பா, ஏன் சோகமாகச் சொல்கிறீர்கள். குழந்தைகளில் ஆண் என்ன பெண் என்ன, எதுவாக இருந்தாலும் ஆரோக்கியமாக உள்ளதா? அறிவாற்றலுடன் வளர்கிறதா என்பதை மட்டும் பாருங்கள். பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்று சொல்லியபோது, சந்திரா என்னை மன்னித்து விடு என்றான் கார்த்திக்.