தந்தையோ, கணவனோ, காதலனோ, நண்பனோ, அண்ணனோ, தம்பியோ ஓர் ஆணின் முடிவுக்குக் கட்டுப்படும் நிலைமையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். இந்த மனப்பான்மைதான் பெண்கள்மீது ஆசிட் வீச்சு வரையில் நிலைமையைச் சிக்கலாக்கி வைத்திருக்கிறது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களைக் குறை சொல்பவர்களும் இங்கேதானே இருக்கிறார்கள். ஆணோ, பெண்ணோ தனி மனித மனப்பான்மை மாறுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும்.
கவிஞர் கனிமொழி
நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்
கடந்த 55 ஆண்டுகளில் 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கான காரணம் குறித்து அரசோ, அதிகாரிகளோ முழுமையான ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் கம்பெனி விவசாயம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இது வியாபாரிகளின் கையில் விவசாயத்தை அடகு வைக்கும் செயல்.
நம்மாழ்வார், வேளாண் விஞ்ஞானி
முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், பிரதமர், ஜனாதிபதின்னு அனைவருமே பப்ளிக் சர்வண்ட் ஆப் சிவில்தான். அவங்க மக்களுக்காக சேவை செய்ய மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் சாதாரண ஊழியர்கள். அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தில்லை. மக்கள் அவர்களுக்கு அதிக மரியாதை தரவும் அவர்கள் தங்களை ஏதோ தேவதூதர்கள் என்று நினைத்து வானில் பறப்பதும், அட்டூழியங்கள் செய்வதுமாக இருக்கிறார்கள். அந்தத் துணிச்சலில்தான் ஏகப்பட்ட தவறுகள், ஊழல்கள் பண்றாங்க.
நடிகர் கமலஹாசன்
நடிகர் நாகேஷ்
வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணங்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு அய்யர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.
எங்கள் குடும்பத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. காரணம், எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்ததுதான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத் தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.
ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை.
இது நெம்பர் 1.
நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை.
அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.
– சிட்னி ‘தமிழ் முழக்கம்’
வானொலிப் பேட்டியில் நடிகர் நாகேஷ்