Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி?

இரண்டாம் எலிசபெத்

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது அய்.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கை.

இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்பற்றி, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது – இரண்டாம் முறையாக.

முன்பு, முதற்கூட்டத்தில் – நடுநிலை வகித்த இந்தத் தீர்மானம் குறித்து 47 நாடுகளில், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே – அதன் வன்மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளன.

இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது.

காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளாகும்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது; ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத்தினர்.

டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.

வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மவுனியாகவே – இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப்போல் இருந்தது!

எப்படியோ காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திடவேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துவிட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!

உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த இராஜபக்சே அரசு ஏதோ பெரிய சாதனையாளர்களைப்போல காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.

என்றாலும், இதை உணர்ந்துதான்போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார்; அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்குச் சற்று ஆறுதல் தருகிறது!

1973 ஆம் ஆண்டுக்குப்பின், பிரிட்டிஷ் இராணியார் (அவர்தான் அதன் தலைவர்) கலந்துகொள்ளாமல் – பங்கேற்காமல் நடைபெறு வதே முதல் முறையாகும்!

ராஜரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கி.வீரமணி,
ஆசிரியர்