பிரிட்டன் நாட்டில் வசிக்கும் 4 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டப் பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் ஜாதி அடிப்படையில் வேற்றுமை காட்டுவது சட்டப்படிக் குற்றம் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு ராணியின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
2010ஆம் ஆண்டின் சமத்துவச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஜாதியையும் ஒரு பிரிவாக்கி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஜாதி வேறுபாட்டுக்கு எதிராக தெற்கு ஆசியாவிற்கு வெளியே இதுபோன்ற சட்டங்கள் இயற்றுவதில் பிரிட்டன் முதல் நாடாகும் என்ற பெருமையையும் பெறுகிறது.
வருங்காலத்தில் ஜாதியானது இனத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும் பிரிட்டனில் உள்ள ஆசிரியர்களின் வாழ்க்கை இந்த ஜாதி வெறுப்பு உணர்ச்சிகளால் மங்கிப்போய் இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் இனி புது நம்பிக்கை ஏற்படும் என்று தேசிய ஜாதி மதமற்ற அமைப்பின் ஆணையர் கெய்த் போர்டியஸ்வுட் கூறியுள்ளார்.
பன்னாட்டுத் தலித்களின் ஒன்றிணைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ரிக்கி நோர்லிண்ட், இந்த முடிவானது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஜாதி வேறுபாடு ஓர் உலகளாவிய பிரச்சினை. உலகத்தின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஃபுல்லர், இது ஒரு நேரடிப் பிரச்சினை. வேலை செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவது தவறு. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு உண்டு. முடிவும் முதலுமாக இது இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.