மணவாழ்க்கை இனிக்க….
நூல்: மனம் திருமணம்
ஆசிரியர்: டாக்டர். மா. திருநாவுக்கரசு
வெளியீடு: அம்ருதா பப்ளிகேஷன்ஸ்
No – 12, 3ஆவது மெயின் ரோடு,
2ஆவது குறுக்குத் தெரு,
கோவிந்த் ராயல் நெஸ்ட், சி.அய்.டி. நகர் கிழக்கு, சென்னை – 600 035.
பக்கங்கள்: 248 விலை: ரூ.190/-
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனநல மருத்துவராக பணி (Profession) செய்த அனுபவம், அதன் மூலமாக சந்தித்த நபர்கள், அவர்களுடைய பிரச்சினைகள், அதை மக்கள் அணுகும்விதம் ஆகியவற்றை உணர வாய்ப்புக் கிடைத்தது.
ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. திருமணத்திற்காக மக்கள் படும் சிரமங்கள் மேலும் திருமணத்தினால் அனுபவிக்கும் சிரமங்கள் என்று பலவற்றையும் நான் சந்தித்திருக்கிறேன். இது தவிர, திருமணம் எனும் கருத்தும் அதன் அடிப்படைகளும் படும்பாட்டையும் நான் பார்த்திருக்கிறேன்.
நான் பயிற்சிக்காக, அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்த அமெரிக்கர்கள் -_ எப்படி முன்பின் தெரியாமல் – பார்த்துப் பழகாமல் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதன் பிறகு நான் சந்தித்த பலரையும் எதற்காக திருமணம் செய்து கொள்கிறீர்கள், திருமணத்தின் அவசியம் என்ன, அது தேவைதானா, எதற்காக இன்னமும் இத்திருமணத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்கள் என்று கேட்டதுண்டு.
எந்தப் பிரச்சினையுமின்றி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளிடம் இதைக் கேட்டபோது பெரும்பாலும் தெரியாது நாங்கள் அதைப்பற்றி யோசித்ததேயில்லை என்ற பதில்தான் கிடைத்தது.
அதேசமயம் திருமணம் பிரச்சினைக்-குள்ளான தம்பதிகளை இப்படிக் கேட்டபோது விரிவான, தெளிவான பதில்கள் கிடைத்தன. அதுவும் அப்பதில்கள் பலதரப்-பட்டதாக இருந்தன. எதிர்பார்ப்பு-களும், கனவுகளும் உள்ள நபர்கள்தான் திருமணத்தில் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.
எதார்த்தமாக, இயல்பாக, எவ்வித நோக்கமோ, சிந்தனையோ, கருத்தோ, எதிர்பார்ப்போ இல்லாத நபர்கள் பெரும்பாலும் பிரச்சினையே சந்திப்பதில்லை என்பது என் கணிப்பு. இது எனக்கு ஓர் ஆச்சரியத்தைத் தோற்றுவித்தது. ஒன்றும் தெரியாமல் குடும்பம் நடத்துவது உன்னதமானதாகவும் பட்டது.
திருமணம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் சம்மந்தப்பட்டவர்களால்தான் தீர்க்கப்படுவதாகவும், தானாகவேதான் அவை தீர்ந்துபோவதாகவும் ஓர் உணர்வு இப்போதும் என்னில் உண்டு. அதுவரை தம்பதிகள் தாக்குப்பிடித்தாலே போதுமானது என்பது எனது பணிவான கருத்தாகும்.
உள்ளது உள்ளபடி, உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் தெளிவு தானாகவே பிறக்கும். திருமணத்தில் நமது கடமை என்ன? திருமணத்தைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் முக்கியமாகும். திருமணம் எனக்கு என்ன செய்தது? அது எனக்கு என்ன கொடுத்தது? என்று கேட்டுக் கொண்டிருந்தால், அதற்கு ஒரு முடிவே இருக்காது. திருப்தியென்பது யாரோ கொடுப்பதல்ல.
நாமாக அடைவது என்பது போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டு-மென்று தோன்றியது. அதைத்தான் இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன்.
* * *
பெண்ணின் கட்டாயம்:
நமது கலாச்சாரத்தைப்பற்றி, நமது வாழ்வியல் கருத்துகளைப்பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்குத் தன்னிச்சையாக, தன் விருப்பம்போல் ஒருவரிடம் பாலியல் உறவை வைத்துக்கொள்ள சமூகத்தில் அங்கீகாரம் கிடையாது. செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமானால் அல்லது செக்ஸில் ஈடுபட வேண்டுமென்றால் திருமணம் மூலம்தான் அது சாத்தியமாகும்.
ஒரு பெண் தனது உடலியல் தேவைகளைத் திருமணம் மூலம்தான் அடைய வேண்டும் அல்லது பெற வேண்டும். அதற்கு அப்பாற்பட்டு பெறும் செக்ஸ்க்கு மரியாதை கிடையாது. அது கீழ்த்தரமானதாக நோக்கப்-படும். அப்படி ஏதேனும் முறை தவறிய, விதி மீறிய, அங்கீகரிக்கப்படாத செக்ஸில் ஈடுபட்டால் அது கண்டனத்திற்கு உரியதாகும்.
சில நேரங்களில் அது தண்டனைக்கும் ஏதுவானதாகக் கருதப்படுகிறது. அவமானமாக கருதப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அப்படியே தெரிந்தாலும், கண்டுபிடிக்கப்பட்டாலும் ஏற்க முடியாத, கீழ்த்தரமான உறவை அல்லது செயலைத் திருமணம் புனிதப்படுத்தி விடுகிறது என்றும் நம்பப்படுகிறது. இத்தகைய ஏற்க முடியாத நிகழ்வுகளுக்குப் பரிகாரமாக அல்லது தீர்வாக திருமணமே தண்டனையாக விதிக்கப்படுகிறது. திருமணமான அடுத்த நாளே பாதிக்கப்பட்டவள் புனிதப்பட்டுப் போகிறார்கள்.
நமது பெண்கள் இக்காரணத்திற்காகவே திருமணத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய ஓர் ஆண் தேவை. இவன் சரியில்லையென்றால் அல்லது விலக்கி வைத்தால் வேறொருவன் தேவை. அப்படி மாற்றாக வருபவன் பெரும்பாலும் அவளுக்குத் தக்க உரிமை அல்லது மரியாதையைக் கொடுப்பானா என்பது சந்தேகமே.
எனவே தெரியாத தேவதையைவிட தெரிந்த சைத்தானே தேவலாம் என்ற சித்தாந்தத்தில் சகித்துக் கொள்கிறாள். ஓர் ஆண் தனக்குத் துணையாக இருக்கிறான் என்பதைப் பாதுகாப்பாகக் கருதுகிறாள். இன்னொரு ஆண் பாதுகாப்புத் தருவானா என்பது சந்தேகமானது. இழிவுபடுத்தத்தான் வாய்ப்புகள் அதிகம் என்று நம்புகிறாள். எனவே, அத்தகைய இழிவுகளைத் தவிர்ப்பதற்காகவாவது அவனுடனே தொடர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்றும் முடிவு செய்கிறாள்.
பெண்ணுக்குச் சம உரிமை கொடுக்கப்பட்டதாகக் கூறினாலும் சமத்துவம் கிடைத்துவிட்டதாகப் பீற்றிக்கொண்டாலும், சமத்துவம் கிடைத்ததா என்றால், இல்லை. பெண் சுய சிந்தனையுடன் செயல்படுகிறாள் என்று சொல்லிக்கொள்கிறோம். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டதாகப் பேசிப் பேசி மாய்கிறோம். உண்மையா? அது சந்தேகத்துக்-குரியது.
பெண்ணின் உடலமைப்பு, உள அமைப்புப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் ஆளப்பட வேண்டிய அமைப்புடை-யவள். அவளை ஆளுவதற்கு உடலியல் ரீதியாக ஓர் ஆள் தேவை. எனவே, துணை அவசி-யமாகிறது. அத்துணை தனது தேவைகளை, தனது உணர்வுகளைப் புரிந்தவனாக இருக்க வேண்டுமென்று அவள் நினைக்கிறாள்.
அப்படிப் புரிந்தவனாக இருந்தால் தனக்கு இசைவாக இருக்கும் என்று நம்புகிறாள். உறவில் ஈடுபடும்போது தன்னை மீட்டுபவனாக, தன்னை ஆளுபவனாக, தன்னை வீழ்த்துபவனாக இருக்க வேண்டும். இதற்கு, தன்னை அறிந்தவன்தான் பொருத்தம். அறியாதவனிடம் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து, கற்பிப்பது என்பது ஆயாசம் தரும் ஒன்றாகும்.
எனவே அறிந்தவன், தெரிந்தவன், புரிந்தவனிடம் தன்னை ஒப்படைப்பது இலகுவானது மற்றும் ஆயாசமற்றது என்று நினைக்கிறாள் மற்றும் நம்புகிறாள். இத்தகைய காரியங்கள் ரகசியமாகவும், தனிமையாகவும், பகிரங்கப்-படுத்தப்படாமலும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாள். எனவே தெரிந்தவன், அறிந்தவன் பேயாக இருந்தாலும், ஒருவனாக இருக்கும்-போது ரகசியம் காப்பாற்றப்படுகிறது. பெண் செக்ஸ் வேண்டுமென்று கேட்பதை அவமான-மாகக் கருதுகிறாள்.
எனவே, புதிதாக வரும் நபரிடம் தன்னைப் புரிய வைத்து தன்னைப் படைப்பது சலிப்பாகப் போய்-விடுகிறது. அதனால்தான் தெரிந்த சனியனே பரவாயில்லை என்று நினைக்கிறாள்.
இப்படி இருக்கையில், அவள் எதைக் கொண்டு ஓர் ஆடவனைத் தேர்ந்தெடுக்க முடியும்? பொருளாதாரரீதியாக, ஒழுக்கரீதியாக, உடல்வாகு மற்றும் வசீகரரீதியாக என்று எதைக் கணிக்க முடியும்? என்ன உத்திரவாதம் இருக்கிறது? என்ன அளவுகோல் இருக்கிறது? என்ன குறியீடு இருக்கிறது? எதை வைத்து முடிவு செய்வாள்? என்ன அனுபவம் இருக்கிறது? ஆனால் முடிவு செய்ய இப்போது அதிகாரம் இருக்கிறது, அங்கீகாரம் இருக்கிறது.
வாய்ப்பு இருக்கிறது-. பெண் தேர்வு செய்வது என்பது கடல் ஆழம் பார்ப்பது போன்றாகும். கண்ணுக்குத் தெரியாமல் கருத்துக்குத் தெரியாமல் உள்ள ஒன்றை வைத்துத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாள். எனவே பரவலாகப் பேசப்படுவது, சொல்லப்படுவது, கூறப்படுவதை வைத்து முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறாள். வெற்றி வாய்ப்பு அதிர்ஷ்டக் குலுக்கல் போலத்தான். விரும்பியது கிடைப்பதைவிட கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
* * *
தம்பதிகளே….. கீழே சொல்லப்படுபவை-களைப் பலமுறை படித்துப் புரிந்து கொள்ளவும். துணை நல்லவர்களாக இருக்கும்போது திருப்தியடையக் கற்றுக் கொள்ளுங்கள். நல்லவராக இருப்பதுதான் இன்றியமை-யாததாகும். இனிமையாக இல்லையென்று வெகுண்டெழாதீர்கள். உதாசீனப்படுத்தாதீர்கள். இனிமையைக் கொண்டு வருவது எளிதாகும்.
இனிமை இல்லாததையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எப்போது ஒன்றை ரசிக்க ஆரம்பிக்கிறோமோ, ரசிக்க முடிகிறதோ அது அப்போது இனிதாகத் தோன்ற ஆரம்பிக்கும். எது ஒன்று இனிதாகத் தோன்ற ஆரம்பிக்-கிறதோ அது இனிதாக மாறிவிடும். நல்லதுதான் நிலையானது. கிடைத்தற்கு அரியது. இனியது எங்கும் கிடைக்கும். ஆனால் நிலையானதல்ல. அது, ஆரோக்கியமானதென்று உறுதியளிக்க முடியாது.
அதேசமயம், நல்லவர்களே இனிமையாக இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். பழகிக் கொள்ளுங்கள். நன்றாக இருப்பது வாழ்க்கை-யைக் கொடுக்கும். இனிமையாக இருப்பது ருசியையும், அர்த்தத்தையும் கொடுக்கும். இனிமை என்பது தேவையான ஒன்று, விருப்பமான ஒன்று. வாழ்வது மட்டும் முக்கியமல்ல.
தரமாகவும் வாழத் தெரிய வேண்டும். வாழ்க்கை கொடுப்பது மட்டும் முக்கியமல்ல. தரமான வாழ்க்கையையும் சேர்த்துக் கொடுக்கத் தெரிய வேண்டும். எனவே, இனிமையாக இருப்பதும் தேவைதான் எனப் புரிந்து கொள்ளுங்கள்.
விருப்பமானதைக் கொடுக்க வேண்டியது கடமைதான் என்று புரிந்து கொள்ளுங்கள். நல்லவனாக இருப்பது இன்றியமையாதது. இனிமையானவனாக இருக்க வேண்டியது தேவையானது. நல்லவனாகவும், இனிமையானவனாகவும் இருக்கும்பட்சத்தில் தாம்பத்தியம் எவ்வளவு ருசிகரமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
இதற்குப் பெயர்தான் விட்டுக் கொடுப்-பதாகும். விட்டுக்கொடுப்பதென்பது யாருக்கோ அல்லது யாரிடமோ விட்டுக் கொடுப்பதில்லை. நம்மிடமே நம்மை விட்டுக் கொடுப்பதாகும். நமது கொள்கைகள், கோட்பாடுகள், கௌரவங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் என்று இறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை விட்டுக் கொடுக்க வேண்டும்.
விட்டுக் கொடுத்துப் பாருங்கள். இழப்பு ஒன்றுமில்லை என்பது தெரிய வரும். ஆதாயம் எவ்வளவு என்று புரிய வரும். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை. கெட்டுப் போனவன் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை.