பேரிடர்மிகுத் துயர் வாழ்வு குன்றி பூர்வீகம்
சீர்கெட நிலத்தில் மனுநீதி பிதிர்லோகம் அபேட்சகர்
காரியதரிசி எனவஞ்சக காரிருள் சூழ்ந்த நாளில்
யாரிடம் செல்வேன் துணை யாரெனகேட்ட மக்கள்
பெரியாரிடம் சேர்ந்தார் சமதர்ம வாழ்வு பொருட்டே
சீர்மிகு தாயிடம் நோக்கி சேய்கள் வருதல்போல
திராவிடம் நோக்கி வந்தார் மாந்தர் ஜாதிஒழிப்பு
கடவுள் மறுப்பு பெண்ணுரிமை துணை கொண்டார்
தந்தை பெரியார் அடித்துப் பார்த்தார் அம்பேத்கர்
மருத்துவராய் கிழித்துப் பார்த்தார் என்றாலும்
சிந்தைபுகும் ஜாதியெண்ணம் வண்ணம் மாறி
வாழ்கிறதிங்கு அன்பை உடைத்து அறனெறிஅழித்து
சந்தைப் பொருளாய் மலிந்துக்கிடக்கிறதே என்செய்க
சீர்திருத்தவாதிகளே இன்னமும் உயிர்வாழும் பூமிப்
பந்தை போர்புறநோய் கொண்டாடுதல்போல அகநோய்
பிடித்தாட்டுகிறதே ஜாதிநோயகழும் நாள் என்நாளோ?
அண்டிருந்த மக்களும் கைவிட்டார் அனுதினமும்
தொழுது வணங்கிய கடவுளும் கைவிட்டார்புதராய்
மண்டியிருந்த ஜாதிப்பேய்கள் ஆல மரமாய்
விழுதுகள் பெருக்கி வீதிகளில் அனுமதிமறுத்தார்
கண்டிக்க யாருமின்றி இதுவிதியென் றிருந்தபோது
கொடுமையிலும் கொடுமையென பெருங்காற்றாய் சீறி
தண்டிக்க புறப்பட்டார் ஈரோட்டுச்சிங்கம்
ஜாதித் தண்டியாத்திரை வைக்கம் சென்றார் – வெற்றிகண்டார்
புண்ணாகி புரையாகி வெட்கை நோய்வந்த உடம்பாகி
கண்ணாக வளர்த்தஊன் இரையாகி மெலிந்த நூலாகி
உண்ணும் வலிவின்றி உயிர்வீணாகி அன்னை வளர்த்தகரு
மண்ணாகி போயிடினும் இழிவில்லை தமிழாஜாதிப்
புண்ணாக வெண்மணி பரமக்குடி தருமபுரி உருவாக்கிஜாதி
உண்டியலாய் தமிழ் நாட்டை உருமாற்றும் தலைவன்கீழ்
பிண்டமாய் அவனடி தொழுதுநின்று மானுடம் மறந்து
தொண்டனாய் இருப்பதே இழிவினும் இழிவெனக் கொள்
முற்றிய கதிர்வீடு திரும்பும் முழுநிலவாய் சுற்றிய
ஒளி மீண்டும் இருட்டடையும்
பெற்ற வெற்றி சரித்திரம்புகும் பெருவாழ்வில்
உற்ற நட்புஉடல் எரியும் வரைதொடரும்
மற்றஎதையும் சொல்ல முடியும் முடியாதே
கற்றொருவன் ஜாதியம் பூசி ஆயுதம்தறித்து
சுற்றம் போலவாழ்ந்த மக்களை அச்சுறுத்துவானென்று
ஏற்றம் தரும்கனவில் தீவைத்து மகிழ்வானென்று
எத்தனைக் காலம்தான் இத்திரை மீதினில்
இன்னுயிர் வலித்து பெருதுயர் உழல்வதோ
முத்தமிழ்ச் சங்கம் வளர்ந்தெடுத்த நாட்டில்
தனி ஜாதிச்சங்கம் வளர்த்தல் முறையோ
புத்தன்மூட்டிய எதிர்ப்பில் சாகாமல் தமிழ்ச்
சித்தர்கள் அடித்தும் உடல்வேகாமல் பேதப்
பித்தமேறி பிதற்றும் ஜாதி தமிழர்உடலில்
வாழ்தல் தகுமோ வளர்தெடுத்தல் முறையோ?
மொழியாய் முறையாய் தருமேல் வளராய்
முடமாய் உயிர்மேல் இடையாய் நுழைந்து
இழிவாய் நிலைத்து உயர்மானுடம் பிரித்து
விடமாய் குருதியில் தனியாய் நிலைத்து
கழிவாய் நெளியும் ஜாதிச்சருக் கொழித்து
அறம் உயர்ந்தோங்கும் தனித்தமிழ் நாடு
விழியாய் ஒளியாய் மணம்தரும் மலராய்
வாழிய வாழியென்று வாழ்த்தும்நாள் எந்தநாளோ?