பேருந்து நிலைய கழிப்பறைகளில் நாப்கின் டஸ்பின்கள் அவசியம் !
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையின் அனைத்து அறைகளிலும் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் போட குப்பைத்தொட்டிகள் (DUSTBINS) வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருமுறையும் நாகர்கோவில் செல்லும்போது இதைக் காண்கிறேன்.
பல வேலைகளுக்காக வெளியூர் செல்லும் பெண்கள் மாதவிடாய்க் காலங்களிலும் பயணம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்நேரங்களில் நாப்கின்கள் போடுவதற்கும் மாற்றுவதற்கும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளையே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான கழிப்பறைகளில் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் நாப்கின்களை ஆங்காங்கே போட்டுவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால் பேருந்து நிலையங்களில் உள்ள பெண்கள் கழிப்பறையின் அறைகள் நாப்கின்களால் இரத்த ரத்தமாக காட்சியளித்து முகச் சுளிப்பையும், சுத்தம் செய்வோருக்கு எரிச்சலையும் உண்டாக்குகிறது. இது பெண்களின் மீதான தவறு அல்ல. முழுக்க முழுக்க கட்டணக் கழிப்பறைகளைக் குத்தகைக்கு எடுக்கும் நபர்களின் மீதுதான் தவறு.
கழிப்பறைக்குச் செல்ல 3 முதல் 4 ரூபாய் வரை வசூலிக்கும் இவர்கள், பெண்களுக்காக நாப்கின்கள் போட குப்பைத்தொட்டிகளை வாங்கி வைப்பதில்லை. தமிழகத்தில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தைத் தவிர, பெரும்பாலான மாவட்டங்களின் பேருந்து நிலைய கழிப்பறைகளில்கூட, நாப்கின்களைப் போடுவதற்கு வசதி செய்து தரப்படவில்லை. பணம் வசூலிப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. குத்தகை விடும் நகராட்சிகள்கூட, குத்தகைக்குவிட்ட பிறகு எதையுமே கண்டுகொள்வதில்லை.
– வினி சர்ப்பணா