தலைவாழை இலை போட்டு அதில் கொஞ்சம் . . .

ஏப்ரல் 16-30

பாலாவின் பரதேசி படம் பார்த்தேன். செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு அருமையான விருந்து படைத்திருந்தார் பாலா!. விருந்தைச் சுவைக்க முற்பட்டபோதுதான் இலையின் ஓரத்தில் மலம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பாலாவிற்கு என்னவாயிற்று?

கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெருமளவு கல்வி வழங்கியது கிறித்துவ மிஷன்கள்தான் என்றால் மிகையாகாது. பிளேக் நோய் பரவியபோது மக்களைக் காப்பாற்ற பெருமளவு கிறித்துவ பாதிரியார்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அந்தத் தொண்டில் பலர் மதம் மாறியிருக்கலாம். மாற்றப்பட்டும் இருக்கலாம். ஆனால், இந்துத்துவாவின் ஊதுகுழலாய் மாறி பாலா இப்படி ஒரு காட்சியை வலிய திணித்திருப் பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு எனும் பார்ப்பனப் பரதேசிகளின் கேரக்டரை கிறித்துவ டாக்டர் மீது திணித்து அவர் ரொட்டியை மக்கள்மீது வீசுவதாக அமைத்திருக்கிறார்.

பி.எச்.டேனியல் எழுதிய உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட அத்தியாயத்தைப்பற்றிப் பேசும் எரியும் பனிக்காடு (ஸிணிஞி ஜிணிகி) கதைதான் பாலாவால் பரதேசியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மூலக்கதையான எரியும் பனிக்காட்டில் வரும் கிறித்துவ மருத்துவர் ஆபிரஹாம் சிறந்த மனிதநேயராகவும் தொண்டுள்ளம் பெற்றவராகவும் சித்தரிக்கப்பட்டிருந்தார். எஸ்டேட் மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டும் கூலிகளின் நிலையைக் கண்டும் ஆபிரஹாம் வெகுண்டெழுந்தார். நாலணா கூலிக்காக இந்தப் பாவப்பட்ட ஜனங்கள் அரைப் பட்டினியிலும், நோய்க் கொடுமையிலும் நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஆப்ரஹாம் பாத்திரம். ஆனால் பரதேசியிலோ, கிறித்துவ மருத்துவர் பாத்திரம் ஒரு காமெடிப் பாத்திரமாக கூலிகளைக் கிறித்துவத்திற்கு மாற்றுவதையே முழு நோக்கமாகக் கொண்ட பாத்திரமாக மாற்றிவிட்டார் பாலா.

வெறும் பஞ்சம் மட்டும் பிழைக்க அந்தச் சமுதாயம் டீ எஸ்டேட் நோக்கிப் போகவில்லை. ஆதிக்க சமுதாயத்தின் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுபடவே அவர்கள் சென்றார்கள் என்பது கங்கானியின் உரையாடலிலேயே தெரியும். நாய்க்கருகிட்டயும், தேவமாருகிட்டயும் நெலம் இருக்கு. அவங்க நம்மள என்ன பாடுபடுத்துறானுவோ? அவங்க வீட்டுப்பக்கம் கூட நம்மள விடமாட்டானுவோ. தண்ணீர் தாகத்துல நாக்கு வறண்டு செத்தாலும் அவுக கெணத்துல இருந்து சொட்டுத் தண்ணி எடுக்கவிட மாட்டானுவோ என்று வேலைக்கு ஆள் பிடிக்கும் கங்கானி கூலிகளைப் பார்த்துச் சொல்வதாக மூலக்கதையில் உள்ளது.

ஆனால், பரதேசியில் பாலாவோ அவர்களை வெறும் பஞ்சம் பிழைக்கப் போனவர்களாகவே காட்டியுள்ளார். படத்தை ரசிக்கவோ பாராட்டவோ முனையும் போதெல்லாம் கிறித்துவ மருத்துவர் வந்துபோகும் காட்சியே கண்முன் வருகிறது.

என்னதான் முக்கி முக்கி படம் எடுத்தாலும் 48 மதிப்பெண்ணுக்கு மேல் போடாத ஆனந்த விகடன் மார்க் அள்ளிப் போட்டிருந்ததைப் பார்த்ததுமே இதில் ஏதோ உள்குத்து இருப்பதை உணர முடிந்தது.

– கி.தளபதிராஜ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *