மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷா முறையை தமிழகம் ஒழித்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு தடித்த மனிதர்களை அமரவைத்து தூக்கிச் சுமக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது மதத்தின் பெயரில்- கடவுளின் பெயரில்.
குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலித் தொழிலாளர்களின் படங்களையெல்லாம் அவ்வப்போது போட்டு அவர்களுக்காக அனுதாபப்படும் தினமலர் தான் இந்தப் படத்தையும் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் பங்குனி உற்சவத்தில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளினார்-என்று தனது இணையதளத்தில் பவ்யமாகச் செய்தி சொல்லியிருக்கிறது.
வேணுகோபாலன் மட்டுமா சுமக்கப்படுகிறார்? இரண்டு தடியர்களும் அல்லவா அமர்ந்து கொண்டு உலா வருகிறார்கள்! இந்த மனித உரிமை மீறல்களை இன்னும் அனுமதிக்கலாமா? தமிழக அரசு என்ன செய்கிறது?
இப்பெல்லாம் பார்ப்பனீயம் எங்கெங்க இருக்கு எனக் கேள்வி கேட்கும் அதிமேதாவிகளே, இந்தப் படம் சொல்வதென்ன? வருணதர்மத்தின் அடுக்கில் நான் மேலேதான், நீங்கள் கீழேதான்- எம்மைச் சுமப்பவர்கள் நீங்கள்தான் என்று சொல்கிறார்களே… அதுவும் சங்கர மடம் உள்ள காஞ்சிபுரத்தில்! என்ன செய்யப் போகிறீர்கள்?