நீதிமன்றத்திற்கு அரசன் வர இயலாதபோது அரசனது இருக்கையில் பிராமணன் அமர்ந்து நீதி வழங்கலாம். அந்தப் பிராமணன் வேத விதிமுறைகளைக் கல்லாதவனாயினும் சரியே. மிகமிக இழிந்த பிராமணனாயினும் சரியே! அவன் எப்படிப்பட்டவனாயினும் அதுபற்றிக் கவலையில்லை! அவன் பிராமணனாயிருக்க வேண்டும். அவ்வளவுதான்! ஆனால் நான்காம் வருணத்தவன் (சூத்திரன்) அரசனது இருக்கையில் அமர்ந்து நீதி சொல்லக் கூடாது; அவன் அறிஞனே என்றாலும் சூத்திரன் ஆகையால் அரசன் சார்பாக நீதியுரைக்கக் கூடாது.
“The judicial officer of a king must be a Brahmin, even if he be a mere Brahmana by birth (and bereft of the virtues of his order) or a mere professional adjudicator of issues, and not a sudra under any circumstances what so ever”. என்கிறது மனுதருமம்.
மன்னன் இயற்ற வேண்டிய விசாரணைகள் எந்த நாட்டில் சூத்திரனால் நடைபெறு கின்றதோ அந்த நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போல் கண்முன்னே துன்பமுறுவதாகின்றது என்று மனுதருமம் தொழிலாளர்கள் (நான்காம் வருணத்தவர்) சான்றோர்களாயினும் நீதி விசாரணையில் ஈடுபடக்கூடாது என்று வற்புறுத்துகின்றது.
“The realm of a king where in a sudra Official administers Justice, is destroyed under his very eyes, like a cow merged in the mud”
இதனால் நீதிமன்றம் என்பது பார்ப்பனர் மன்றமே என்பதும் நீதிபதிகளாவோர் பார்ப்பனர்களே என்பதும் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் நீதிமன்றத்தில் அமரமுடியவில்லை என்பதும் மன்னர்களும் பார்ப்பனர் சொற்படியே நீதி வழங்கினர் என்பதும் மனு தருமத்தால் தெளிவாக்கப்படும் உண்மைகளாகின்றன.
புதையல் கிடைத்தால்:
மக்களின் பொருள்களைக் கண்டெடுக்கும் அரசு அலுவலர்கள் அதை மன்னரிடம் சேர்ப்பிக்க வேண்டும். அரசன் அவற்றைத் தன் காவலில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். காவல் புரிவோர் எவரேனும் அப்பொருளை எடுத்துக்கொண்டால் அவர்களை யானையின் காலால் இடறச் செய்ய வேண்டும். கற்றறிந்த ஒரு பிராமணனுக்குப் புதையல் கிடைத்தால் அதனை அவனே முழுமையும் எடுத்துக் கொள்ளலாம்! ஏனெனில் அவன் மேலானவனன்றோ! ஆனால் மன்னனுக்குப் புதையல் கிடைத்தால், அதில் பாதியைப் பிராமணர்க்கு வழங்கிவிட்டு மீதியை அரசன் தன் கருவூலத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறது மனுதருமம்.
பார்ப்பனர் புதையல் எடுத்தாலும் அரசன் புதையல் எடுத்தாலும் அது சேருமிடம் பார்ப்பனர் வீடுதானே!
பழந்தமிழ் மக்களின் பண்பாட்டுப் பெருமையை விளக்குவதற்காகப் பள்ளிப் பருவத்தில் எங்கள் தமிழாசிரியர் சொன்ன ஒரு நிகழ்ச்சியை இவ்விடத்தில் குறிப்பிடுதல் நலம் பயக்கும்.
கரிகாற்சோழன் காலத்தில் நடந்தது இது! ஓர் உழவன் தனது நிலத்தை இன்னோர் உழவனுக்கு விற்று விட்டான். நிலத்தை வாங்கியவன் அதனை ஆழ உழுதபோது நிலத்திற்கடியில் பொற்காசுகள் நிறைந்த ஒரு புதையல் கிடைத்தது. புதையலைக் கண்டெடுத்த அந்த உழவன், புதையல் நமக்குரியதன்று; யார் நமக்கு நிலத்தை விற்றார்களோ அவர்களுக்குரியது என்று உணர்ந்தவனாய் அதனைத் தூக்கிக் கொண்டு நிலத்தை விற்றவன் வீட்டிற்குப் போனான்.நிலத்தை விற்றவனோ, நான் நிலத்தை உங்களுக்கு விற்று விட்டேன். ஆதலால் அதில் உள்ள எதுவும் எனக்கு உரிமையுடைய தாகாது. எனவே புதையல் உங்களுக்குரியதுதான்! என்றான்.
வாங்கியவனோ விடாப்பிடியாக, நான் நிலத்தின் மேற்பகுதியில் உள்ளவற்றை மட்டுமே வாங்கினேன். உள்ளே கிடந்த புதையலுக்கு நான் விலை பேசவில்லையே! ஆதலால் பூமிக்கடியில் கிடந்த இந்தப் புதையல் உங்களுக்குத்தான் உரியது. நீங்கள் இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றான். நிலத்தை விற்றவனோ புதையலை வாங்க மறுத்துவிட்டான். வழக்கு அரசனிடம் சென்றது. கரிகாற் சோழன் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தான். வழக்கைக் கேட்டு மன்னன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். சிறிது நேரம் அமைதி நிலவியது.
கரிகாலன் சொன்னான் என் அன்புக்குரிய குடிமக்களே! இந்தப் புதையலை நான்கு கூறுகளாகப் பிரித்து, இரண்டு கூறுகளை நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள், ஒன்று அரசின் கருவூலக் கணக்கில் சேர்க்கப்படும். எஞ்சியுள்ள பகுதியை வைத்து உங்கள் ஊரில் ஓர் ஊருணி அமைத்திடுங்கள்.
கல்லணை கட்டியவனாயிற்றே! ஊருணி யமைக்கச் சொன்னதும், உழவர் இருவரும் ஒரே நேரத்தில் மன்னிக்க வேண்டும் அரசே! எங்கள் பங்கினை எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் அமைக்கப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்றார்கள்.
மன்னனைத் திருத்திய மக்களே நீங்கள் நீடு வாழ்வீர்களாக என்று வாழ்த்தினான் கரிகாலன். தமிழ் மக்கள் எவ்வளவு பண்பட்ட மக்களாக இருந்தார்கள் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டாகும்.
நீதிமன்றத்தில் அமர்ந்து தீர்ப்புரைக்கும் அரசன் நெறிமுறை தவறாது, இன்னார் இனியார் என்று பாராது, கடுகளவு கூடக் கணக்குத் தவறாமல் நடுநிலையில் நின்று நீதி வழங்க வேண்டும் என்று திருக்குறள் பேசுகின்றது. ஆனால் மனுநீதியோ மக்கள் நீதிக்கு மாறுபட்ட நீதியாக விளங்குகிறது.
பார்ப்பனர் கூறும் குலதருமம், குலஒழுக்கம், குலவழக்கம், ஜாதிமுறை ஆகியவற்றிற்கு மாறுபடாமல் நீதிமன்றம் தீர்ப்புரைக்க வேண்டும் என்று மனுதருமம் கூறுகின்றது. ஜாதிக்கு ஒரு நீதி என்பதுதான் மனுநீதி என்பது எவ்வளவு வெளிப்படையாகக் கூறப்படுகிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
(நூல்: மனுநீதி _ ஒரு மறுபார்வை)
மனுதர்ம நீதியும் – கரிகாலன் நீதியும்