Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்- தொகுப்பு ஒரு பார்வை புலவர் பா.வீரமணி

ந்தியத் துணைக்கண்டத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களில், தலைவர்களில் தந்தை பெரியார் தலையாயவர். மக்களுடன் கலந்து மக்களுக்காகவே தொண்டாற்றிய இப்பெரியாரைப் போல வேறொருவர் இல்லை என்றே கூறலாம். தொண்ணூறு ஆண்டைக் கடந்தும், பெரும் வலியையும், நோயையும், மூத்திரப் பையையும் சுமந்துகொண்டு மக்களுக்காகப் போராடிய ஈடிணையற்ற போராளி. “என்கடன் பணி செய்து கிடப்பதே” எனும் மொழிக்கு இவரே அடையாளம்; இவரே இலக்கணம். பொதுவாழ்வில் இவருக்கு நிகராக எதிர் நீச்சல் போட்டவரும், அதில் வென்றவரும் இவரையன்றி ஒருவரைக் காண்பது அரிது. கொள்கைப் போராட்டத்தில் இவர் அடைந்த இன்னல்கள் எத்தனை? இடையூறுகள் எத்தனை? கஷ்டங்கள் எத்தனை? நஷ்டங்கள் எத்தனை? அடக்குமுறைகள் எத்தனை? அவமானங்கள் எத்தனை? நெருக்கடிகள் எத்தனை? நொதுமல்கள் எத்தனை? கண்ட களங்கள் எத்தனை? போர்கள் எத்தனை? அப்பப்பா! இவற்றில் ஒப்பாரும் மிக்காரும் இன்றிப் புகழ் பூத்து வரலாற்றைப் படைத்தவர் இவரே ஆவர். வரலாறாக வாழ்ந்து வரலாற்றைப் படைத்த இவரை, வள்ளுவர் மொழியில் ‘தனக்குவமை இல்லாதான்’ என்றே கூறலாம். அதனாற்றான், இவர் எல்லோர்க்கும் தந்தை பெரியார் என்று ஆனார் போலும்! ஆம், இவர் பெரியாருக்கும் பெரியார்.

தம் வாழ்நாளில் மக்கள் நடுவில் பல்லாயிரக்
கணக்கான கூட்டங்களில், அதுவும் தொண்ணூறு வயதைக் கடந்தும் பேசியவர் உலகில் வேறு எவரும் இலர்! பேச்சைப் போலவே இவர் எழுதுவதையும் தொடர்ந்து கொண்டிருந்தார். உலகிலுள்ள பெரும் சிந்தனையாளர்களைப் போன்று, இவர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்
அல்லர். பட்டம் பெற்றவர் அல்லர். ஆனால்,
மக்களைப் பயின்று பெரும் சுய சிந்தனையாள
ராக மாறியவர். இது, இவரது தனித்திறம்; தனிப் பெருமை. சுயசிந்தனையிலும் ஒப்பாரின்றித் திகழ்பவர். இவரொரு அறிவுச் சுரங்கம்; கருத்துக் கடல்; சிந்தனைச் சிகரம். இவர்தாம் நம் தந்தை பெரியார். இவர் பேசியவை ஏராளம்; எழுதியவை ஏராளம்; அவற்றில் பற்பல, பற்பல தலைப்புகளில் பலப்பல நூல்களாக வெளிவந்துள்ளன. இப்போது வேறொரு தலைப்பில் உங்கள் முன் வெளிவருகிறது. ஏற்கெனவே ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணியம் குறித்துத் தனித்தனி நூல்கள் வெளிவந்துள்ளன.

இப்போது, “தந்தை பெரியாரின் பொதுவுடை
மைச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு வெளிவருகிறது. இத்தொகுப்பு, தந்தை பெரியாரின் பன்முகப் பரிமாணத்தை, அறிவுத் தெளிவை, அனுபவ முதிர்ச்சியை, உலகளாவிய சிந்தனையைக் கூடுதலாகப் புலப்படுத்துவதாகும். இத்தொகுப்பை, பொதுவுடைமைச் சிந்தனைகள் என்பதைக் காட்டிலும், பொதுவுடைமை சார்ந்த சிந்தனைகள்
என்பதே பெரிதும் சரியாக இருக்கும். இத்தொகுப்பில் பொதுவுடைமைத் தத்துவத்தின் விதிகளுக்கேற்ற கொள்கை விளக்கங்களைப் பெரிதும் காணமுடியாது. ஆனால், அதன் அடிப்படை விதிகளை எளிமையாக விளக்குகின்ற பாங்கையும், அத்தத்துவத்தைச் சார்ந்த பல கூறுகளைப் பல இடங்களில் தெளிவாக எடுத்துரைப்பதையும் காணலாம். எவை எப்படியிருப்பினும் தந்தை பெரியாரின்

இச்சிந்தனைகள், பொதுவுடைமையைப் பல கோணங்களில் விளக்கும் அருமையுடையன. இவையாவும் புத்தம்புதுச் சிந்தனைகள் ஆகும். இவை பொதுவுடைமைத் தெளிவுக்கும், பரப்புரைக்கும் கூடுதல் பலம் சேர்ப்பதாகும். இத்தொகுப்பிலுள்ள சிந்தனைகள், தந்தை பெரியாரின் சுயசிந்தனையின் நீட்சியை எடுத்துக்காட்டுவதாகும். பொதுவுடைமைச் சிந்தனைகள் எங்கெல்லாம், எப்படியெல்லாம் செல்லவேண்டும் என்பதற்கு இச்சிந்தனைகள் நமக்கு வழிகாட்டுவனவாக உள்ளன. இந்த வழி, புது வழியாக, மண்ணுக்கேற்ற முறையில் வழிகாட்டுவதாகவும் உள்ளது. இதுதான் இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.

ஜாதி மற்றும் மதம் போன்ற தலைப்பு
களில் ஏற்கெனவே பல நூல்கள் வெளிவந்தி
ருப்பதாலும், பொதுவுடைமை எனுந் தலைப்பில் இதுவரை தனிநூல் வெளிவராததாலும், அத்தலைப்பில் நூல் வெளிவருவது இன்றியமையாதது என்று கருதினேன். மேலும், காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை (Communist Manifesto) தமிழகத்தில் முதன்முதலாக 04.10.1931 அன்று ‘குடிஅரசி’ல் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். அது தொடர் கட்டுரைகளாக அடுத்தடுத்து வெளியாயின. மற்றும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் மற்றும் பிற சிந்தனையாளர்களும் பொதுவுடைமை குறித்தும், சோவியத்து ஒன்றியம் குறித்தும், எழுதிய பற்பல கட்டுரைகளைக் ‘குடிஅரசி’ல் வெளியிட்டவர் தந்தை பெரியார். ஆதலின், அவர் அத்தத்துவம் குறித்து எழுதியதையும், பேசியதையும் உடனடியாக நூலாக வெளியிடவேண்டியது தவிர்க்கக்கூடாத மிக முக்கிய பணி என்பதை நன்கு உணர்ந்தேன். அதனால், உடனே தமிழர் தலைவர், மானமிகு ஆசிரியரைச் சந்தித்து என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர், அதனை மகிழ்ந்து ஏற்று, அப்பணியை உடனே செய்யுங்கள் என்றார். அவர் அளித்த இசைவினால் வெளிவந்ததே இத்தொகுப்பாகும்.

இத்தொகுப்பில் ‘இந்தியத் தொழிலாளர்’ எனுந் தலைப்பு முதலாகக் ‘கம்யூனிஸ்டுகளுக்குத் தடை’ ஈறாக 129 தலைப்புகளில் பேச்சுகளும் கட்டுரைகளும் உள்ளன. இத்தலைப்புகளை நோக்கினால், தந்தை பெரியார் எத்துணையளவு ஆழ்ந்தகன்று சிந்தித்துள்ளார் என்பதை நன்கு உணரலாம். இத்தொகுப்பில் தொழிலாளரைக் குறித்தும், தொழிற்சங்கம் குறித்தும் ஏறக்குறைய 33 கட்டுரைகள் உள்ளன. பெண்ணியம் குறித்து 14 கட்டுரைகள் உள்ளன. சமதர்மம் குறித்து 21 கட்டுரைகள் உள்ளன. நாத்திகம் குறித்து 3 கட்டுரைகளும், மே தினம் குறித்து 5 கட்டுரைகளும் உள்ளன. ஏனைய கட்டுரைகள் பற்பல தலைப்புகளில் பொது
வுடைமையை அலசு
கின்றன. இவை அனைத்தும் சிந்தனைக்கு
விருந்தாவன; ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துபவை. சிந்திக்க வழிகாட்டுபவை. பொதுவுடைமையின் முக்கியத்துவத்தையும், அதனூடாகத் தந்தை பெரியாரின் சிந்தனைத் திறத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுபவை. இத்தொகுப்பில் ‘அந்தணர்ப்பேட்டை’, ‘உண்மையான தீபாவளி’, ‘சம்பளக் கொள்ளை’ போன்ற தலைப்புகள் உள்ளன. இவற்றிற்கும் பொதுவுடைமைக்கும் என்ன தொடர்பு என்று சிலர் வினவலாம். ஆம், தொடர்பு உள்ளது.

குறிப்பாக, முதலில் அந்தணர்ப்பேட்டை உரையை நோக்குவோம். அவ்வூரில் கதர் நெசவு ஆலையை, அவ்வூர் மக்களில் சிலர் தாங்களே பங்குகளாக முதலைப் போட்டு, கதர்த் துணியை உற்பத்தி செய்து வருகிறார்கள். அத்துணியில் ஒரு பகுதியைத் தங்களுக்காக எடுத்துக்கொண்டு மீதியை விற்பனை செய்துவிடுகிறார்கள். விற்பனையில் கிடைக்கிற இலாபத்தைப் பிரித்துக் கொள்வதோடு, போட்ட முதலுக்கு 6ரூ வட்டியையும் எடுத்துக் கொள்கிறார்கள். இதனை அறிந்த தந்தை பெரியார், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், இவ்வூரைப் போல எல்லா ஊரினரும் இப்படிக் கூட்டுறவு முறையில் கதர் ஆலையை நடத்தினால் நன்றாக இருக்குமென்றும், அவர்கள் ஆண்டுதோறும்
வாங்கும் துணிகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு குடும்பமும் சிறிய தொகையை முதலீடு செய்து ஆலையை நடத்தினால் தங்கள் தேவை
களை ஓரளவு பூர்த்தி செய்து கொள்ளலா
மென்றும், அதனால் கதர் உற்பத்தியும், மக்கள் கூட்டுறவும் உயரும் என்றும் யோசனை கூறியுள்
ளார். மற்றும், நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஊர்களில், இதுபோலக் கூட்டுறவு தொழில்களைச் செய்தாலும், அவர்கள் ஈட்டும் இலாபத்தை ஆடம்பரத்திற்குப் பயன்படுத்துகிறார்களே அல்லாமல், அதனால் ஏழைகளுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை என்பதையும் நினைவுபடுத்தி உள்ளார்.

அந்தணர்ப் பேட்டை நெசவு ஆலையில் கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு ஊர் சுகாதாரத்திற்குச் செலவு செய்வதைப் பாராட்டி, இதுதான் குடியாட்சிமுறை என்று அக்குடிகளைப் பாராட்டி உள்ளார். இச்செய்தி பலர்க்குச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், இது அசாதாரணமான அர்த்தத்தை உள்ளடக்கியது. இப்பேச்சு ‘குடிஅரசி’ல் 09.08.1925இல் வெளிவந்துள்ளது. தந்தை பெரியார் சோவியத்து ஒன்றியத்திற்குச் செல்வதற்கு ஆறாண்டுகளுக்கு முன் அவர் இதனைப் பேசியுள்ளார். அந்நாட்டில் கூட்டுப் பண்ணைகள் அரசு உதவியால், அரசு விதிகளின்படி நடந்துள்ளன. நம்மூரில் மக்களே முதலீடு செய்து, தம் முடிவுகளுக்கு ஏற்ப நடத்துகிறார்கள். நடத்தும் முறையில் வேறுபாடு இருந்தாலும், பயன் ஒன்றுதான். குறிப்பாக இரண்டிலும் சுரண்டல் (நுஒயீடடிவையவiடிn) இல்லை. தனியொருவர் பெரும் இலாபம் அடைவதில்லை. கூட்டுறவு முறை என்பது தனியொருவரின் இலாபக் கொள்ளையைத் தடுப்பதோடு, மக்களுக்கு இடையே இணக்கத்தையும், கூட்டுறவையும் ஏற்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, மக்களுக்காக மக்கள் எனும் உறவை உறுதிப்படுத்துகிறது. இந்த அருமையைத் தந்தை பெரியார் உணர்ந்ததால்தான், அதனைப் பொறுப்புடன் அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். பொதுவுடைமை ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன், மக்களை இவ்வாறு ஆயத்தப்படுத்துவது, அத்தத்துவத்தை நடைமுறை கொண்டு புரிந்துகொள்வதற்கும், அதனால், அவ்வாட்சி முறையை விரைவில் கொண்டு வருவதற்கும் அது பயன்படும். அந்தணர்ப்பேட்டை என்னும் கட்டுரையை இத்தொகுதியில் இணைத்திராவிட்டால், அக்கட்டுரையைப் பெரும்பாலும் பலர் பார்க்க முடியாத நிலை ஏற்படலாம் என்பதோடு, அதன் பயனும் சரியாக உணராமல் போயிருக்க முடியும்.

‘உண்மையான தீபாவளி’ என்னும் கட்டுரையும் வித்தியாசமானது. தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் வரும்போது ஏழைகள் படும்பாட்டை தந்தை பெரியார் இக்கட்டுரையில் விவரிக்கிறார். தீபாவளி பண்டிகையின்போது செல்வர்கள் தத்தம் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பட்டுப்பீதாம்பர ஆடைகளை அணிந்து அலங்காரம் காட்டும்போது, ஏதுமில்லா ஏழைமக்களும் அதுபோல அணிய வேண்டுமென்ற ஆசைக்கும், ஏக்கத்திற்கும் உள்ளாகுகிறார்கள் என்கிறார். இதனால் தம் சொற்ப ஊதியத்தை அதற்குப் பயன் படுத்தித் துன்பத்திற்கு ஆளாகுகிறார்கள் என்கிறார். செல்வர்கள் பெரும்பாலோர் உயர் ரக ஆடைகளை அணிவதால், நம் நாட்டுப் பணம் பெருமளவு வெளிநாடுகளுக்குச் செல்வதையும் கூறி எச்சரிக்கிறார்.

மரண தண்டனைக்கு ஆளான ஒருவன், அத்தண்டனையை எண்ணி வருந்துவது போல், ஏழை மக்கள் பண்டிகைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்கிறார். மக்கள் வெளிநாட்டுத் துணிகளைப் பெரிதும் வாங்குவதால், உள்நாட்டு நெசவுத் தொழிலும், கைத்தறித் தொழிலும் அழிந்து, அவர்கள் எல்லாம் பலர் வெளிநாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றுள்ள இழிவும் ஏற்பட்டுள்ளது என்கிறார். பண்டிகைகள் ஏழை மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது மட்டுமின்றி உள்நாட்டுத் தொழிலையும் அழித்து, அவர்களை ஏதுமற்றவர்களாக மாற்றி, அந்நிய நாடுகளுக்கு அடிமைகளாக வெளியேற்றிவிடுகிற பேராபத்தையும் சுட்டிக்காட்டுகிறார். “பண்டிகைகள் ஏழை மக்களை வேட்டையாடும் வேட்டை நாய்கள்” என்று காரல் மார்க்ஸ் கூறியது இங்கு ஒப்பிடத்தக்கது. மேலும். மக்களுக்கு நாட்டுப் பற்றும், உதவும் மனப்பான்மையும் மிக வேண்டுமென்றும், பெரும்பாலோர், பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றை அடையும்போது, ஏழைகளிடத்தில் அன்பு காட்ட மறந்து விடுகிறார்கள் என்றும் நைந்து கூறுகிறார். “முழுமையான மாந்த நேயமே பொதுவுடைமையாகும்.”Communism is Completed Humanism)என்றார் மார்க்ஸ். அதனைத்தான் இங்குத் தந்தை பெரியாரிடத்தில் காண்கிறோம்.

பொதுவுடைமைத் திட்டமென்பது, உள்நாட்டுத்
தொழிலை வளர்த்து அதன்வழி மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்க வழிவகுப்பது; அதன் மூலம், வெளிநாட்டுச் சுரண்டலைத் தடுத்து சுய ஆட்சி
நிலை நிறுத்துவது. தீபாவளி போன்ற பண்டிகை
கள், இவற்றிற்கு எதிராக உள்ளன. தீபாவளி பண்டிகையை அவர் ஏன் மறுக்கிறார் என்பதை,
இதன்மூலம் உணரலாம். தீபாவளி பண்டிகையில் இத்தனை இழப்புகள் உள்ளன. w