இனம் : திராவிடம்

ஜனவரி 16-31

திராவிடம் என்னுஞ் சொன்மூலம்

பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம் ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின.

கா: ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் _ த்ரமிள(ம்) _ த்ரமிட(ம்) _ த்ரவிட(ம்) _த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.

தமிழம் என்பது தமிள _ தவிள _ தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.1  எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை.

கால்டுவெல் ஐயர் இதுபற்றித் தலைகீழாகக் கூறினார். அவர் தவற்றைக் கிரையர்சனுங் குறித்துள்ளார்.

திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும், தமிழம் என்னும் பெயரே பொதுப்பெயராக முதலாவது வழங்கி வந்தது. த்ராவிடம் என்னும் வடிவும், தமிழம் என்னும் பொருளிலேயே, முதன் முதல் வழங்கியதாகும். தெலுங்கு தமிழினின்றும் பிரிந்துபோன பின்பு, முன்பு ஒன்றாயெண்ணப்பட்ட திராவிட மொழி இரண்டாய்க் கருதப்பட்டு, ஆந்திர திராவிட பாஷா என்னும் இணைப்பெயராற் குறிக்கப்பட்டது. அதன்பின், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்து திராவிடம் பல்கியபின், தமிழம் என்னும் பெயரின் மறுவடிவமான தமிழ் திராவிடம் என்னும் சொற்களுள், முன்னது தமிழ்மொழிக்கும் பின்னது திராவிட மொழிகள் எல்லாவற்றுக்குமாக வரையறுக்கப்பட்டன.

இதுகாறும் கூறியவற்றால், தமிழே திராவிட மொழிகட்குள் மிகத் தொன்மையானதும் மிகத் திருந்தியதும், மிக வளமுள்ளதும், அதனால் மிகச்சிறந்த திராவிட எச்சமானதும் என்றறிந்து கொள்க.2

(1 Linguistic Survey of India, Vol. IV, p. 298)
(2 Caldwell’s Comparative Grammer, pp. 1, 4, 9, 80, 370)
(நூல்: ஒப்பியன் மொழி நூல்-_2)

திராவிடம் பிரிந்தது எப்படி?

ஆதியில் நாவலந்தேசம் முழுதும் திரவிடரே பரவியிருந்தனர். மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற நகரங்களில் வாழ்ந்த மக்கள், ஆரியப் பேரையுமறியாத திரவிடரே. மேலை யாசியாவிலுள்ள பாபிலோனுக்குச் சென்று அங்கு நாகரிகத்தைப் பரப்பிய சுமேரியரும் திரவிடரே. நாவலந்தேசம் முழுதும் சேர சோழ பாண்டியரென்னும் முத்தமிழ் வேந்தரடிப் பட்டிருந்தது. தெற்கே பஃறுளியாறு வரையில் பரந்திருந்த நாடு பாண்டிநாட்டின் பெரும் பகுதியாகும். சோழ நாடு பனிமலைவரை எட்டியிருந்தது. மேல்கரை நாடுமுழுதும் சேரநாடாகும்.

சேர, சோழ, பாண்டியரே, முறையே, நெருப்பு (அக்கினி), கதிரவன் (சூரியன்), திங்கள் (சந்திரன்) என மூன்று குலமாகக் கூறப்பட்டனர். வடநாட்டில் திங்கள் குலத்தாரென்றும், கதிரவன் குலத்தாரென்றும் கூறப்படுபவர், முறையே பாண்டிய சோழ மரபினரே. மிகப் பெரிய நிலப்பரப்பினாலும், மிக நீண்டகாலக் கடப்பினாலும், தென்னாட்டு வேந்தர் காவல் செய்ய முடியாமலும், வடக்கே போகப்போக மொழிதிரிந்தும், வடநாவலத் திரவிடநாடுகள் பிரிந்துபோய், அங்குள்ள திரவிடமக்களும் வெவ்வேறு குலத்தாராக மாறிவிட்டனர்.

முதலாவது விந்தியமலைக்கு வடக்கிலுள்ளவரும், பின்பு வேங்கட மலைக்கு வடக்கிலுள்ளவரும், அதன்பின் குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு வடக்கிலும் மேற்கிலுமுள்ளவரும் திரிந்து போயினர்.

மொழி திரியத்திரியத் குலமும் திரிந்தது. விந்தியமலைக்கு வடக்கில் மொழி திரிந்த காலம் சுமார் கி.மு. 3500. வேங்கட மலைக்கு வடக்கில் மொழி திரிந்த காலம் (தெலுங்கு) சுமார் கி.மு. 2500. தமிழ்நாட்டின் வடமேற்குப் பாகத்தில் மொழிதிரிந்த காலம் (கன்னடம்) சுமார் கி.மு. 1000. மேற்குப் பாகத்தில் மொழி திரிந்த காலம் (மலையாளம்) கி.பி.14ஆம் நூற்றாண்டு.

தமிழம் என்னும் பெயரே ஆரியரால் திரமிளம்>திரமிடம்>எனத் திரிக்கப்பட்டது. தெலுங்கு கொடுந்தமிழா யிருந்தவரை திரவிடம் என்பது தமிழையே குறித்தது. தெலுங்கு தனி மொழியாய்த் திரிந்தபின், தெலுங்கும் தமிழும் ஆந்திர திரவிட மெனப்பட்டது. பின்பு கன்னடம் மலையாளம் முதலிய மொழிகள் பிரிந்தபின், தமிழ் ஒன்றே தமிழ் என்றும், தமிழும் அதனின்று திரிந்த பிறமொழிகளும் பொதுவாய்த் திரவிடமென்றும் அழைக்கப்பட்டன.

தமிழர் தெற்கிருந்து வடக்கே சென்றதால், வடக்கே செல்லச் செல்லத் தமிழ் திரிந்தது. திரிந்த தமிழ் கொடுந்தமிழ் என்றும் திரியாத தமிழ் செந்தமிழ் என்றுங் கூறப்பட்டது. பண்டைக் கொடுந்தமிழ்களெல்லாம் திரிவுமிகுதியாலும் ஆரியர் கலப்பாலும் பிறமொழிகளாய்ப் பிரிந்துவிட்டன. தமிழ்நாட்டிற்குள்ளேயே இன்று வடக்கில் கொடுந்தமிழும் தெற்கில் சிறிது நல்ல தமிழும் வழங்குகின்றன.

(நூல்: தமிழர் சரித்திரச் சுருக்கம்.)
இந்திய மக்கள் நாகரிகப் பகுப்பு

ஆதியில் இந்தியா முழுதும் திரவிடரே பரவியிருந்தனர். பின்பு, மேனாடுகளிலிருந்து ஆரியர் (கி.மு. 3000), உணர் (ஹுணர்) முதலியோரும் கீழ்நாடுகளிலிருந்து மங்கோலியர் நாகர் முதலியோரும் வந்து, வடஇந்தியாவிற் குடியேறி அங்கிருந்த திரவிட மக்களுடன், இரண்டறக் கலந்துபோயினர். ஆயினும், தொன்றுதொட்டுப் பிறருடன் மணவுறவில்லாது வாழும் பிராமண ரையும், பெலுச்சித்தானத்திலும், பனிமலை யடிவாரத்திலுமுள்ள சில மலைவாணரையும் வடஇந்தியாவிலும் பிரித்துக் கூறலாம்.

இடையிந்தியாவில், தெலுங்கர் கருநடர் (பன்னடியர்) முதலிய திரவிட வகுப்பார், மொழியிலும் நாகரிகத்திலும் ஆரியத்தோடு கலந்துபோனாலும், குலத்தில் கலக்கவில்லை. ஆகையால், குலவகையில் இடையிந்தியத் திரவிடரை ஆரியரினின்றும் பிரிக்கலாம்.

பிராமணரொழிந்த மற்றச் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற மூவகுப்பாரியரும் வடஇந்தியாவுக்குத் தெற்கில் வரவில்லை. இடையிந்தியாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் வந்த ஆரியர் பிராமணரே. இவர்கள் மிகச் சிறுபான்மையராயும் வலிமையற்றவராயு மிருந்ததனாலும்பல முறையாகக் குடும்பங் குடும்பமாய் வந்ததினாலும், போர்செய்து திரவிடநாடுகளை வெல்லவில்லை. அடுத்துக் கலந்து பல வலக்கார (தந்திர) முறைகளைக் கையாண்டே அவரிடத்தும் கொள்கைகளைப் பரப்பிவிட்டனர்.

தென்னிந்தியாவிற்கு வந்த பிராமணர் தொன்றுதொட்டுத் தமித்து வாழ்வதாலும், திராவிட நாகரிகம் தலைசிறந்தும் இன்றும் அழியாதுமுள்ளது. தமிழ்நாடேயாதலாலும், வடமொழிக் கலப்பின்றியும் தனித்தியங்கக்கூடியது தமிழாதலாலும், தமிழ்நாட்டில் மட்டும் எல்லாவகையிலும் ஆரியதிரவிடத்தை நீரும் நெய்யும் போலப் பகுக்கலாம்.

தலைக்கழகக் காலத் திறுதியில்தான், முதன்முதலாய் விச்சிரவசு, காசிபன் முதலிய தனிப்பட்ட ஆரியர் தென்னாடுவந்து திரவிடப் பெண்களை மணந்தனர்; ஆனால் அவர்களோடு கூடிவாழவில்லை. பின்பு அகத்தியர், திரணதூமாக்கினியார் முதலிய சில ஆரியர் குடும்பங் குடும்பமாய் வந்து குடியேறினர். இதன் பின்புதான் ஆரியர் தொடர்ந்து வரத் தொடங்கினர். ஆயினும், கூட்டங்கூட்டமாய் வந்தது கடைக்கழகக் காலத்திலிருந்துதான். பல்லவர்காலத்திலும், சுந்தரபாண்டியன் காலத்திலும் நூற்றுக்கணக்கான பிராமணக் குடும்பங்கள் தமிழ்நாட்டிற் குடியேற்றப்பட்டன. இதற்குக் காரணம் பிராமணர் மதத்தலைமை பூண்டமையே.

பிராமணர் வருமுன், தமிழ்நாட்டில் முனிவர் அந்தணரென்றும், நூற்றொழிலுள்ள இல்லறத்தார் பார்ப்பாரென்றும் அழைக்கப்பட்டனர். பிராமணர் வந்தபின் முதலாவது பார்ப்பார் பெயரும் பின்பு அந்தணப் பெயரும் அவர்க்கு வழங்கலாயின.

முதலாவது பார்ப்பாராயிருந்த தமிழர் (ஆதிசைவர்?) ஆரியப் பிராமணர் வந்தபின் அவரோடு கலந்திருக்கலாம். 12ஆம் நூற்றாண்டில் இராமாநுசாச்சாரியாரும் சில திரவிடரைப் பார்ப்பனராக்கியதாகத் தெரிகின்றது. இங்ஙனம் சில கலப்புகள் நேர்ந்தாலும் அவை சிறுபான்மையாயும் பிரிக்கமுடியாதவையாயு மிருப்பதால், இற்றைத் தமிழ்நாட்டுப் பார்ப்பனரெல்லாரையும் ஆரியரென்றே கொள்ள முடியும்.

பிராமணர் தென்னாடு வந்தபோது அரைநாகரி கராயும் இரப்பவராயுமே வந்தனர். ஆகையால், அவர்களால் தமிழர்க்கு யாதொரு நன்மையுமில்லை. பிராமணர் தாம் எல்லாவகையிலும் தமிழரிடம் நாகரிகமும் நன்மையும் பெற்றுக்கொண்டு, இன்று தலைமாறாகக் காட்டுகின்றனர்.

(நூல்: தமிழர் சரித்திரச் சுருக்கம்)

திராவிட மொழிநூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *