த |
மிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், “தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நமக்கென்று ஒரு கொள்கை இருக்கலாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது. மூடநம்பிக்கையைச் சட்டம் போட்டு தடுக்க முடியாது” என்று பதில் அளித்தார்.
இதற்குப் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும், “உறுப்பினர் பொருத்தமில்லாத கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்து விட்டார்” என்று கூறியிருந்தார்.
சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும், தங்கள் கருத்தை திராவிட மாடல் ஆட்சியின் கருத்தாகக்கூறுவது ஏற்புடையது அல்ல. அவர்கள் இன்னும் திராவிட கோட்பாடுகளை, குறிப்பாக இது பற்றிய கலைஞர் அவர்களின் கருத்து என்ன என்பதை நன்கு அறிந்து கூறவேண்டியது கட்டாயம் ஆகும்.
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் அவசியம் குறித்து கலைஞர் எழுதிய ஒரு கட்டுரையை தருகிறோம். ஊன்றிப் படியுங்கள்.
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் பற்றி கலைஞரின் கருத்து என்ன?
“மராட்டிய மாநிலச் சட்டப்பேரவையில் 13 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தச் சட்டம், அவசர அவசரமாக 22.8.2013அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்குக் காரணம் மராட்டிய மாநிலத்தில் புகழ்பெற்ற பகுத்தறிவாளரும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தீரம்மிக்க போராளியுமான நரேந்திர தபோல்கர், புனே நகரவீதிகளில் 20.8.2013 அன்று படுகொலை செய்யப்பட்ட மாபாதகச்சம்பவம்தான். அந்தக் கோரச் சம்பவம் நாடெங்கிலுமுள்ள பகுத்தறிவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நரேந்திர தபோல்கர் காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். அவர் கொல்லப்பட்ட செய்தி மராட்டிய மாநிலம் முழுவதும் தீயெனப் பரவியது.கண்டன ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புப் போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றன.
மருத்துவப் பட்டம் பெற்றவரான தபோல்கர், பன்முக ஆற்றல்களின் பெட்டகமாகத் திகழ்ந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தின்
முன்னணிப் போர் வீரராக இருந்த அவர், சமூகச் சீர்திருத்தங்களில் பேரார்வம் காட்டினார்.
இந்தியச் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு
களுக்கு அடிப்படையாக இருப்பது ஜாதியம்தான் என்று கருதினார். ஜாதிய அமைப்பை அறவே ஒழித்திட அரும்பாடுபட்ட நரேந்திர தபோல்கர், பண்பாட்டுப் புரட்சி நடக்காமல் சமத்துவம் சாத்தியமில்லை என்றார்.
‘‘அறியாமையைப் போக்குவதற்கான போராட்டத்தில் எனக்கு எவ்வித ஆயுதமும் தேவையில்லை’’ என்று தபோல்கர் கூறினார்.
தபோல்கரின் நண்பர் அஜீத் அபயங்கர் என்பவர், ‘‘தபோல்கர், ஆண்டவனுக்கோ,மதத்துக்கோ எதிரானவர் இல்லை; நம்பிக்கையின் பெயரால் சுரண்டல் செய்யப்படுவதற்கு எதிராகவே அவர் போராடி வந்தார்” என்று கூறியிருக்கிறார். அபயங்கரின் இந்தக் கருத்தைப் படித்தபோது, “கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காக” என்ற, நான் எழுதிய “பராசக்தி”யின் வசனம் என் நினைவுக்கு வந்தது.
தனது வாழ்வில் அறிவியல் பிரச்சாரத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போராடியவர் தபோல்கர். சமூகநீதி நிலைத்திருக்கவும், சமத்துவம் மலர்ந்திடவும், ஜாதி மறுப்புத் திருமணங்களை அவர் ஊக்குவித்து, முன்னின்று நடத்தினார். மந்திரவாதிகள் மற்றும் மோசடிச் சாமியார்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் கடுமையாகப் போராடியவர் அவர்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து நடத்தி வந்த போராட்டங்களின் விளைவாக, மராட்டிய மாநிலத்தில் பலமுனைகளிலும் அவருக்கு எதிரிகள் முளைத்தனர். பில்லி சூனியம், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றிட வேண்டுமென்று தபோல்கர் நீண்டகாலமாகக் கோரி வந்தார். அவரது கோரிக்கை அவர் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மராட்டிய மாநில அரசு இயற்றியிருக்கும் சட்டத்தைப் போலவே, தமிழகத்திலும் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணி அவர்களும், பேராசிரியர்கள் – சமூக ஆர்வலர்கள்- அறிவியல் இயக்கத்தினர் பலரும் முன் வைத்திருக்கிறார்கள்.
மூடநம்பிக்கைகளைப் பற்றி விவாதிக்கக்
கூடிய சூழ்நிலையைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உருவாக் கிட வேண்டும் என்ற வேண்டுகோளும் எழுந்துள்ளது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அடிப்படைக் கடமை ஆகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51-A(h) உணர்த்துகிறது. ‘‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform’’ (அறிவியல் மனப்பான்மை, மனிதநேயக் கோட்பாடு, ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்த மனப்பாங்கு ஆகியவற்றை வளர்த்தல்) என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தர்க்க நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு, வேண்டுதல் வேண்டாமை அகற்றி, ஏற்கெனவே மனதில் ஊறிப் போன கருத்துகளை எதிலும் வலிந்து புகுத்திடாமல் பின்பற்றப்படும் நடைமுறையே அறிவியல் மனப்பான்மை என்பதற்கான விளக்கமாகும். தீவிரமாகக் கலந்தாலோசித்தல், விரிவாக விவாதித்தல் மற்றும் ஆழமாக ஆராய்தல் ஆகியவை அறிவியல் மனப்பான்மையின் முக்கியமான அம்சங்கள் ஆகும்.
பில்லி சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் என்பவை மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், அவை ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற கட்டமைப்புக்கு எதிரானவை; இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை.
சிறப்புக் கட்டுரை
மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் பல காரியங்கள் நடைபெற்று வருகின்றன.எவ்வளவோ பிரச்சாரத்திற்குப் பிறகும், எத்தனையோ தெளிவுரைகள் வழங்கியதற்குப் பிறகும், அத்தகைய காரியங்கள் நடைபெறுவது – அதிலும் கல்வி கற்றவர்களே அத்தகைய காரியங்களில் ஈடுபடுவது, கொடுமையானதும் வேதனைக்குரியதும் ஆகும்.
அண்மையிலே நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள் சமுதாயத்தை மூடநம்பிக்கை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை உணர்த்துகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர், ரெட்டேரிப் பகுதியைச் சேர்ந்தவர் திலகராஜ் என்பவர். இரத்தப் பரிசோதனை மய்யம் நடத்தி வந்தார். அவருடைய மனைவி மைனா என்ற லட்சுமி அழகு நிலையத்தில் பயிற்சி பெற்றவர். இவர்களுடைய மகள் சினேகா, அழகுக் கலையில் ஆர்வம் கொண்டவர்.தாய் – மகள் இருவரும் சேர்ந்து, தனியாக அழகு நிலையம் நடத்த முடிவு செய்து, புழலை அடுத்த புத்தகரத்தில் ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் கடையை வாடகைக்கு எடுத்தனர். 1-9-2013 அன்று காலை 5.30 மணி அளவில் ‘லட்சுமி அழகு நிலையம்’எனப் பெயரிடப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
குரோம்பேட்டை நாகப்பா நகரைச் சேர்ந்த புரோகிதர் இராமமூர்த்தி என்பவர் கடையின் உள்ளே ‘ஹோமம்’வளர்த்தார். பின்னர், டிஜிட்டல் போர்டால் ஆன கடையின் பெயர்ப் பலகைக்குச் சந்தனம், குங்குமம் வைத்து மலர் மாலை வைத்து ‘பூஜை’ நடத்தினார். பூஜைகள் முடிந்ததும் ‘நல்லநேரம்’ பார்த்து, கடையின் முன் பகுதியில் பெயர்ப் பலகையை மாட்ட திலகராஜ், அவரது மகள் சினேகா, எலக்ட்ரீஷியன் நவீன்சந்திரன்,புரோகிதர் ராமமூர்த்தி ஆகிய நால்வரும் கடையின் உள்ளே இருந்து பெயர்ப் பலகையை வெளியே தூக்கி வந்தனர். கடையின் முன்பு பால்கனியில் நின்றவாறு நால்வரும் பெயர்ப் பலகையை மாட்ட, உயர்த்தித் தூக்கினார்கள். அந்தப் பலகையை ‘வாஸ்து சாஸ்திர’ப்படி வைக்குமாறு புரோகிதர் ராமமூர்த்தி சொன்னார். அவர் அறிவுரைக்கேற்ப, பெயர்ப் பலகையை அப்படியும் இப்படியுமாக அந்த நால்வரும் மாற்றி மாற்றி வைத்தனர்.
இறுதியாக, புரோகிதர் சொன்னபடி பெயர்ப் பலகையைத் திருப்பி வைத்தபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பெயர்ப் பலகையில் இருந்த இரும்பு உரசி, அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து, அதைப் பிடித்துக்கொண்டிருந்த அந்த நான்கு பேரையும் மின்சாரம் தாக்கி, அதே இடத்தில் அவர்கள் கருகிப் பரிதாபமாகப் பலியாயினர். இந்தச் செய்தி எல்லா நாளேடுகளிலும் வெளிவந்திருந்தன. நெஞ்சைப் பிழிந்திடும் இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் 2-9-2013 அன்று மின்சாரம் தாக்கி இறந்தோர் இல்லத்திற்குச் சென்று, திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
வார ஏடு ஒன்றில் வந்த மற்றொரு செய்தி. பில்லி சூனியம், மந்திரங்களால் பெருமளவுக்குப் பணம் குவித்த திவ்யானந்தா என்ற பூசாரி பழனிச்சாமி என்பவர், தருமபுரியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் 17ஆவது கிலோ மீட்டரில் இருமத்தூர் என்னும் இடத்தில், கொல்லாபுரி அம்மன் கோவிலுக்குப் பக்கத்தில்,அதற்குப் போட்டியாக சிவகாளியம்மன் கோவில் ஒன்றைக் கட்டினார்.அந்தக் கோவிலுக்கு 8-9-2013 அன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்து, அழைப்பிதழும் அச்சடித்து அனைவருக்கும் அனுப்பி இருந்தார். அந்தப் பூசாரியார், ”எதிரிகளின் கை, கால்களை விளங்காமல் செய்கிறேன், சாகடிக்கிறேன்,பில்லி சூனியம், செய்வினைசெய்கிறேன்” என்று லட்சம் லட்சமாய்ப் பணம் பிடுங்குவதாகவும்; அம்மன் கோவில் அருகில் உள்ள இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து,72 அடி உயர சிமெண்ட் சிலையைச் செய்து, நிறுவி இருப்பதாகவும்; தனது பில்லி சூனியத் தொழிலுக்காகவே அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தன்னுடைய சுயலாபத்துக்காக பில்லி சூனியம், செய்வினை என்றெல்லாம் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றியதோடு, பூசாரி பழனிச்சாமி அரசு நிலத்தையும் ஆக்கிரமித்ததால், கும்பாபிஷேகத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறதாம்.
மற்றொரு செய்தி, நரபலியைப் பற்றியது. 15-4-2013 அன்று ‘நாகரிக யுகத்தில் நரபலிக் கொடுமையா?’ என்ற தலைப்பில், ‘முரசொலி’யில் வெளியிடப்பட்ட எனது கடிதத்தில்,சென்னை, வியாசர்பாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி விளக்கியிருந்தேன். குடுகுடுப்பைக்காரன் ஒருவன் ‘செய்வினை’ வைத்திருப்பதாகச் சொன்னதை நம்பி, சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், குடுகுடுப்பைக்காரன் கொடுத்த தாயத்தைக் கட்டிக்கொண்டு, கீதா என்பவரின் குழந்தை இரண்டரை வயது விஷ்ணுவை, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலில் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணுவின் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். மகேஸ்வரி குடுகுடுப்பைக்காரன் பேச்சை நம்பி, ‘தோஷம்’ கழிக்கும் நோக்கத்தில், குழந்தையை நரபலிக் காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தார்கள்.
‘‘நரபலி பற்றிய இந்தச் செய்தியைப் படித்தபோது,நாம் 21ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது.
நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட் டுள்ள சம்பவம் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று உணர்த்தியிருக்கிறது. ‘‘நாம் மீள வேண்டுமானால் – சுயமரியாதை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்று நினைத்தால் – அடிமைப்படுத்தும் மூடநம்பிக்கைகளையும், குருட்டுத்தனமான பழக்க வழக்கங்களையும் முதலில் விட்டுவிட வேண்டும்” என்று தந்தை பெரியார் அவர்கள் 1923ஆம் ஆண்டில் எடுத்துச் சொன்ன அறிவுரை, 90 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகும் இன்னமும் நமது சமூகத்தில் முழுமையாகப் பின்பற்றப் படவில்லை என்பதை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. பகுத்தறிவு – அறிவியல் மனப்பான்மை குறித்த பிரச்சாரம் இன்னும் தீவிரமாகவும் இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி, சட்டநெறிமுறைகள் வகுக்கப்பட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.
மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்; அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம் பள்ளி – கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்; என்பது அவசரத் தேவையாகவும், கால ஓட்டத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டதால்; அந்தக் கோரிக்கையை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு முன்னெடுத்துச் செல்வோம்!” என்கிறார் கலைஞர். (முரசொலி – 10.09.2013)
கலைஞர் கருத்தை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும். மூடநம்பிக்கை தனிமனித நம்பிக்கையல்ல. அது சட்டப்படி களையப்பட வேண்டியது. அப்படி பல நம்பிக்கைகள், நடைமுறைகள் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளன. கணவன் இறந்தபின் மனைவியை தீயில் தள்ளி கணவனோடு கொளுத்தினால் சொர்க்கம் என்பது மக்கள் நம்பிக்கையாய் இருந்தது. அதை அனுமதிக்க முடியுமா? சட்டத்தால் தடுத்தோம் அல்லவா?
பெற்ற பிள்ளையை சாமியாருக்குக் கறிசமைத்தால் புண்ணியம் என்ற மக்கள் நம்பிக்கையைச் சட்டம் இன்றைக்கு ஏற்குமா? நரபலி கொடுத்தால் கேடு நீங்கும் என்பது மக்கள் நம்பிக்கை சட்ட அமைச்சர் அதை அனுமதிப்பாரா? தடுப்பாரா?
சோதிடத்தை நம்பும் பெற்றோர் தன் பிள்ளைக்குப் படிப்பு வராது என்று சோதிடர் சொன்னதால் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் அரசு அதை ஏற்குமா? பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கச் சொல்லுமா? தடுக்க வேண்டியவற்றைச் சட்டப்படி தடுத்துத்தான் ஆகவேண்டும்! அமைச்சர்கள் சமூகப் பொறுப்புடன் பதில் கூறவேண்டும்.
மூடநம்பிக்கை ஒழிப்பு திராவிட ஆரிய போரின் முதன்மைக் களம்
இந்தியாவைப் பொறுத்தவரை பிற அயல்நாட்டவர் இங்கு நுழைவதற்குமுன் எந்த மூடநம்பிக்கையும் இன்றிதான் தமிழர்கள் வாழ்ந்தனர். நன்றியின்பாற்பட்ட செயல்பாடுகளைத் தவிர அவர்களிடம் எந்த மூடநம்பிக்கைகளும் இல்லை. ஆனால், ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் நுழைந்து பரவி நிலையாக வாழத் தொடங்கியபின், தங்கள் வருவாய்க்கும், பிழைப்பிற்கும், சிறுபான்மையினரான தங்கள் பாதுகாப்பிற்கும் பல்வேறு சடங்குகளை, மூடநம்பிக்கைகளை உருவாக்கி, அவற்றிற்கு வலுச்சேர்க்கவும், வளர்க்கவும் புராணங்களையும், கதைகளையும் உருவாக்கினர்.
வீரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் யாகம், வேண்டுதல், படையல், பலியிடல் என்று பலவற்றை உருவாக்கி தமிழர்களை ஏற்கும்படி செய்தனர்.
தங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், வருவாய்க்கும், ஆதிக்கத்திற்கும், உயர்விற்கும், மேன்மைக்கும் மூடநம்பிக்கைகள் பெரிதும் பயன்பட்டதால், உதவியதால், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதையே தங்கள் முதல் வேலையாக, தொழிலாகக் கொண்டனர்.
பல நூற்றாண்டுகளாக மூடநம்பிக்கைகளை முதலீடாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியப் பார்ப்பனர்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வரவர, அவை அனைத்தையும் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, அவற்றை முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளைப் பரப்பப் பெரிதும் பயன்படுத்தி, அறிவியல் வளர்ந்து உச்சம் பெற்றுள்ள காலத்திலும், அதே அறிவியலைக் கொண்டு மூடநம்பிக்கைகளையும் உச்சம் பெறச் செய்து வருகின்றனர்.
ஆரியப் பார்ப்பனர்களும், அவர்கள் பிடியில் உள்ள ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் திட்டமிட்டு சனாதன நடைமுறைகளை நிலைநிறுத்த ஆட்சி அதிகாரத்தோடு முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு, மூடநம்பிக்கைகளை அதிக அளவில் பரப்பினால்தான் சாத்தியப்படும் என்றும் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர். 3 சதவிகிதம் உள்ள ஆரியப் பார்ப்பனர்கள் 97 சதவிகிதம் மக்களை தாழ்த்தி, வீழ்த்தி, அடக்கி, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்ய முற்படுகின்றனர். கல்வி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஊடகங்களின் வளர்ச்சியில்லாத காலத்திலேயே தந்தை பெரியார் தன்னால் இயன்ற அளவிற்கு ஆரிய ஆதிக்கச் சக்திகளை முறியடித்து, மூடநம்பிக்கைகளைத் தகர்க்கப் போராடி அதில் அதிக அளவு வெற்றியும் பெற்று, நம்மை மானமும், அறிவும், கல்வியும், பதவியும் உள்ள மக்களாய் முன்னேற்றிச் சென்றுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் அவரால் கிடைத்த இந்த உயர்வை இழக்காமல், மேலும் நாம் விழிப்புடன் எதிர்வினையாற்றி எதிர்தரப்பாரின் சதிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு நாம் பெரிய அளவில் மூடஒழிப்பு கலாச்சாரப் புரட்சியைச் செய்தாக வேண்டும்.
தற்போது நம்மிடம் நம் கையில் செல்பேசி
யுள்ளது. அதன்வழி கலாச்சாரப் புரட்சி மிகவும் எளிது. ஒவ்வொருவரும் அதைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டாலே நாம் வெற்றி பெற முடியும்.
முதலில் நாம் ஒவ்வொருவரும், பகுத்தறிவுடன்
ஒவ்வொன்றையும் சிந்தித்து உண்மை எது, சரி எ
து என்று தெளிய வேண்டும். மூடநம்பிக்கைகளை எந்த அச்சமும் இன்றி அகற்ற வேண்டும். அதற்கு, பகுத்தறிவுச் சிந்தனைகளை நம்
செல்பேசி வழி ஒவ்வொருவரும் மற்றவர்களுக்
குப் பகிரவேண்டும்; பரப்ப வேண்டும்.
சனாதனிகளின் சூழ்ச்சிகளைச் சன்னமாய் விளக்கி மக்களை விழிப்பும் எழுச்சியும் பெறச் செய்யவேண்டும்.
மூடநம்பிக்கைகளை மக்கள் ஏற்கும்படிச் செய்ய எதிரிகள் பல கவர்ச்சி ஆசை காட்டி ஆசை காட்டி நம்மை ஈர்ப்பார்கள், அதில் ஏமாறாது நாம் எச்சரிக்கையுடன் அறிவார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று மக்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவு வளர்க்கவும், கல்வி, வேலைவாய்ப்பு பெறவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், ஆதிக்கம் ஒழிக்கவும், நல்லிணக்கம் வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும். இது இன்றைய கட்டாயத் தேவையும் கடமையும் ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை மக்கள் மத்தியில் பரப்பி மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
நம்பிக்கை என்பது வேறு;
மூடநம்பிக்கை என்பது வேறு!
இதுகுறித்து ஆசிரியர் அவர்கள் வெளியிட்
டுள்ள அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.
மூடநம்பிக்கை’ என்ற சொல்லிலிருந்தே, (நன்)நம்பிக்கை என்பது வேறு; மூடநம்பிக்கை என்பது வேறு என்று தெளிவான பொருள் பிரதிபலிக்கவில்லையா? அப்படியிருக்க,
‘‘இது அண்ணா, கலைஞர் அரசு என்ற அடிப்படையை’’ அறவே புறக்கணிக்கும் வகையில், சட்ட அமைச்சரின் பதில் அமையலாமா?
அமைச்சரது மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக நரபலி, மாந்திரீகம் என்ற பெயரால், குடும்பப் பெண்களின் நகைகளைப் பறிப்பது, ஏமாற்றுவது, பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடப்பது எந்த நம்பிக்கை அடிப்படையில்?
அவற்றை நியாயப்படுத்த முடியுமா?
இன்றைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சி, கலைஞர் ஆட்சியின் மறுபதிப்பு – தொடர்ச்சி என்ற நிலையில், அமைச்சரின் இந்த விளக்கம் – பதில் பகுத்தறிவாளர்களால் ஏற்கத்தக்கதா?
கொள்கைத் துடிப்புடன் செயல்பட்டு, கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாது, விளைவுகளைச் சந்திக்கத் தயார் என்று முழங்கும், அதன்படியே நடக்கும் இன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களுக்குப் பகுத்தறிவுப் பாசறை, பயிற்சி வகுப்புகள் முதலியன நடத்தி, வெளியீடுகள் வழங்கி பக்குவப்படுத்துவது பற்றியெல்லாம் சில அமைச்சர்களுக்குத் தெரியாதா, புரியாதா? போகிற போக்கில் பதில் கூறுவதா, இந்த முக்கிய கொள்கைப் பிரச்சினையில்?
தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது
எமது கசப்பான கடமை!
எல்லாவற்றையும் தாண்டி, இதே பிரச்சினைபற்றி, கடந்த 2013இல் நமது ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞர் அவர்கள் எழுதிய முக்கிய மடலை, சட்ட அமைச்சருக்கும் மற்றும் சில அமைச்சர்களுக்கும், சட்டப் பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இவ்வாட்சியினைப் பாதுகாக்க என்றென்றும் பணி செய்யும் திராவிடர் கழகத்தின், தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும்!
மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்!
இந்தப் பிரச்சினையில், இக்கருத்தினை நமது முதலமைச்சர் ஏற்காமல், மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்.
தவறுகள் திருத்தப்படவேண்டும்.
‘‘இது தொடரும் கலைஞர் அரசு’’ என்று பிரகடனப்படுத்தும் நிலையில், பாதை மாறலாமா?
தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் சரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ‘‘கடவுள் பெயரால்’’ என்பதைத் தவிர்த்து, ‘‘உளமார’’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள்!
நமது முதலமைச்சர் ஆழ்ந்து சிந்தித்து, இதற்குத் தக்க பதிலும், பரிகாரமும் காண
வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களும், கல்வியாளர்களும் விரும்புகிறார்கள்.
பிரபல கல்வியாளர் வேலூர் வி.அய்.டி.வேந்தர் விசுவநாதன் அவர்கள், இந்த வேண்டுகோளைப் பல மேடைகளில் வற்புறுத்தியுள்ளார் என்பதும் நாம் தரும் கூடுதல் தகவல் ஆகும்!
என்று ஆசிரியர் அவர்கள் தம் அறிக்கையில் கூறியுள்ளார்கள். இதை அரசு கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தல்:
“அமைச்சரின் பதிலும், சபாநாயகரின் கருத்தும் மூடநம்பிக்கையைப் பரப்பி வருபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
“மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கை என்பது வேறு. அறிவியலுக்கும், பகுத்தறிவுக்
கும் பொருந்தாத மூடநம்பிக்கை என்பது வேறு. “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என வள்ளலாரே பாடியுள்ளார்” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பெ. சண்முகம், “மக்களிடம் பரப்படும் மூட நம்பிக்கைகளால் பொருட்செலவு, உயிர்ப்பலி உள்பட பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. கருநாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
“எனவே, சமூக சீர்திருத்தக் கருத்துகள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலர் வலியுறுத்தியுள்ளார்கள். இதையும் அரசு கருத்தில்
கொள்ளவேண்டும்.
மாணவர்மீது திணிக்கப்படும் மூடநம்பிக்கைகள்
மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வி
யானாலும், செய்திகள் ஆனாலும், செயல்முறைகள் ஆனாலும் அவை அறிவுக்கு (அறிவியலுக்கு) ஏற்புடையதாக இருக்க வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எதுவும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது.
அறிவுக்கு உகந்தது எது? சிலர் வினா
எழுப்புகின்றனர். உறுதி செய்யப்படக்
கூடியவை (நிரூபிக்கப்பட்டவை) மட்டுமே அறிவுக்கு உகந்தவை. நமது நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல.
‘காந்தம் இரும்பைக் கவரும்’, ’தீ சுடும்’,
‘மின்சாரம் தாக்கும்’ இதுபோன்ற கருத்துகள் உறுதி செய்யப்பட்டவை. “கடவுள் நம்மைப் படைத்தார்; நம் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை அவரே தீர்மானிக்கிறார்” இக்கருத்துகள் வெறும் நம்பிக்கைகள். இவற்றை உறுதி செய்ய முடியாது. எனவே, இவை அறிவுக்கு உகந்தவையோ அறிவியல் சார்ந்தவையோ அல்ல.
“கையில் கயிறு கட்டினால் நன்மை உண்டாகும், தீங்கு நேராது” என்பது நம்பிக்கை. இதை நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத எந்த நம்பிக்கையும் மூடநம்பிக்கைதான்.
கடவுள், மதம், சாஸ்திரம், மந்திரம், ஜோதிடம் என்பனவெல்லாம் உறுதி செய்யப்படாத நம்பிக்கைகள். எனவே, அவை அறிவியல் சார்ந்தவையல்ல. ஆகவே, அவை மூடநம்பிக்கைகள். மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மத்தியில் கற்பிக்கப்படக்கூடாது. அப்படிக் கற்பிப்பது மாபெரும் குற்றம்.
நமது முதல்வர் அவர்களும் பள்ளி, கல்லூரிகளில் அறிவியலுக்குப் புறம்பான எதுவும் கற்பிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
கடந்த 03.03.2024 ஞாயிறன்று புனே மாவட்ட பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் புதிய நீதிமன்றக் கட்டிடம் ஒன்றின் அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பூஷன் ஆர் கவாய் பூமி பூஜை நடத்தி நிகழ்வைத் துவக்கி வைத்துள்ளார். மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா உட்பட வேறு சில நீதிபதிகளும் மூத்த வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் உரையாற்றிய அபய் ஓகா கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
“இத்தகைய விழாக்களின் போது மதம் சார்ந்த சடங்குகளைச் சட்டம் மற்றும் நீதித்துறை வல்லுநர்கள் இனிமேல் தவிர்க்க வேண்டும். பூஜைகள், அர்ச்சனைகள், விளக்கேற்றுதல் போன்றவை கூடாது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை நகல் ஒன்றை வைத்து, சிரம் தாழ்த்தி அதை வணங்கி விழாவைத் துவக்க வேண்டும்.”
“பாபா சாகேப் அரசமைப்புச் சட்டத்தை நமக்கு வழங்கி, வரும் நவம்பர் 26ஆம் நாளன்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. என்னைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டம் தான் நீதித்துறையின் அடிப்படை மய்யம்!”
“அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இரண்டு சொற்கள் முக்கியமானவை. ஒன்று “மதச்சார்பின்மை”. மற்றொன்று “ஜனநாயகம்”. – மதச்சார்பின்மைக்கு சிலர் “தர்ம நிர்பேகஷா” அல்லது “சர்வ் தர்ம் சம்பவ்” என்றெல்லாம் பொருள் விளக்கம் அளிப்பதுண்டு. “என்னைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையே வழிபாட்டிற்குரியது. நீதிமன்ற வளாகங்களில் மதம் சார்ந்த சடங்குகள் நடக்கக்கூடாது. அதுவே அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பையும் சிறப்பையும் நாம் போற்றுவதற்கான அடையாளமாகும். கர்நாடக மாநிலத்தில் நான் பணியாற்றிய காலத்தில் மதச் சடங்குகளை அடியோடு நிறுத்த நான் பல முயற்சிகள் செய்தேன்.
அதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. இருப்பினும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினேன் என்று கூறலாம்.
நீதிமன்ற வளாகங்களில் மதம் சார்ந்த வழிபாடுகளும் சடங்குகளும் இனிமேல் எங்கும் நடைபெறக் கூடாது.” – என்றார் அபய் ஓகா.
இவருடைய கூற்றை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பூஷன் கவாய் அதற்கு ஆதரவாக இவ்வாறு கூறியுள்ளார்:
“அபய் ஓகா அவர்கள் நல்ல யோசனை தெரிவித்துள்ளார். அது இனிமேல் பின்பற்றப்பட வேண்டும். எங்கள் சக வழக்குரைஞர் அனில் கிஷோர் அவர்கள் இன்னொரு நல்ல யோசனை வழங்கியுள்ளார். “நீதிமன்றக் கட்டிடங்
களின் அடிக்கல் நாட்டு விழாக்களின் போது மரங்கள் நடுவது பயனுள்ளதாக இருக்கும்.
செடிகளுக்கு நீரூற்றியபின் நிகழ்ச்சி
யைத் துவக்கலாம். பூஜைகளையும் மதம்
சார்ந்த சடங்குகளையும் தவிர்க்கலாம்” என்று நல்ல யோசனை அளித்துள்ளார்.
அதன்படி இனி நாம் செயல்பட்டால் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தில் ஏற்பட அது வழிவகுக்கும். நீதித்துறை மற்றும் சட்டத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மதம் சார்ந்த சடங்குகளை இனி தவிர்ப்போம். பூஜைகள், அர்ச்சனைகள், வழிபாடுகள், விளக்கேற்றுதல் போன்றவை இனி வேண்டாம்” — என்று அபய் ஓகாவுக்கு ஆதரவாக பூஷன் கவாய் கூறியுள்ளார்.
நன்றி : ‘தி இகனாமிக் டைம்ஸ்’
வலைத்தளம் 4.3.2024
உச்சநீதிமன்ற நீதிபதிகளே மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை ஓங்கி ஒலித்துள்ளனர் என்பதை அமைச்சர்கள், பேரவைத் தலைவர் போன்றோர் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் சிந்தனைகளை அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் படித்தறிய வேண்டும்; அதன்படி நடக்கவும் வேண்டும்.தங்கள் சொந்த நம்பிக்கைகளை வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும். அது அரசின் செயல்பாடுகளில் கலக்கக்கூடாது. எனவே, தமிழக அரசு கலைஞரின் விருப்பப்படி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை இயற்றி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவேண்டும். அது அரசின் தலையாய கடமையாகும். w