– மதுமதி
இராமசாமி
வியாபாரத்தில்
கொடி கட்டிப் பறந்தார்:
சிறுவன் எனும்
பட்டத்தைத் துறந்தார்:
மைனர் இராமசாமி
ஆனார்;
சக மைனர்களுக்கு
நண்பன் ஆகிப்போனார்;
மைனர் இராமசாமியோடு
எப்போதும் நண்பர்கள்
கூட்டமாக இருப்பர்;
இதை இராமசாமியின்
குடும்பத்தார் வெறுப்பர்;
வியாபாரம் இல்லாதபோது
அவர்களோடு சேர்க்கை;
அதுவே இராமசாமியின்
மைனர் வாழ்க்கை;
அனைவரும்
செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள்;
அவர்களால்
அவர்தம் வீட்டாருக்கு
கொடுப்பர்
பல தொல்லைகள்;
நண்பர்களுக்குண்டு
மது அருந்தும்
பழக்கம்;
இராமசாமிக்குள்
எப்போதும் இல்லை
மதுவின் புழக்கம்;
நண்பர்கள்
மதுவைக் குடிப்பர்;
இராமசாமி
தன் செலவில்
வாங்கிக் கொடுப்பார்;
வியாபார வட்டத்தைப் பெருக்கிய இராமசாமியை
நாயக்கருக்குப் பிடித்தது..
நண்பர் வட்டத்தைப் பெருக்கிய
இராமசாமியைப் பிடிக்கவில்லை..
இளமை
அப்படித்தான்
துள்ளிவிளையாடும் என
தள்ளியிருந்தார் நாயக்கர்..
மது போதை
அவர்களை
மாது போதைக்கு
உள்ளாக்க
தாசி வீட்டுக்கதவை
தட்டினர்;
செல்வத்தை அங்கே
கொட்டினர்.
மதுவை விரும்பாத
இராமசாமியின் இளமை
மாதுவை விரும்பியது..
இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை;
செல்வந்தர்
வீட்டுப்பிள்ளைகள்
மாதுவை விரும்பாமல்
இருப்பது இன்றுமில்லை;
இராமசாமியின்
இந்தப் போக்கு
நாயக்கருக்கு
வருத்தத்தை
உண்டாக்கியது;
மனதை ரெண்டாக்கியது;
இராமசாமியின் இளமையே
அங்கே அழைத்துச் செல்கிறது;
உணர்வை
உணர்ச்சி வெல்கிறது;
இராமசாமியைப் பார்க்கும்போதெல்லாம்
நாயக்கர்
நினைத்துக் கொள்வார்;
சின்னத்தாயம்மையிடம்
வருந்திச் சொல்வார்;
கால்கட்டுப் போடாமல்
இராமசாமியை
கட்டுக்குள்
கொண்டுவர இயலாது
என நாயக்கர்
நினைத்தார்;
இராமசாமியைப்
பணித்தார்;
திருமணத்திற்கு
எதிர்ப்புத் தெரிவிப்பான்
இராமசாமி.. நாயக்கரின்
எதிர்பார்ப்பு தோல்வியைத் தழுவியது..
மணமுடிக்க இராமசாமி
சம்மதம் சொல்ல
மகிழ்ந்தார் நாயக்கர்..
“மணமுடித்துக்கொள்கிறேன்
நீங்கள் காட்டும்
பெண்ணையல்ல
நான் காட்டும் பெண்ணை”
இராமசாமி சொன்னதைக்கேட்டு
குடும்பத்தார் திகைத்தனர்;
சில மணி நேரங்கள்
இராமனைப் பகைத்தனர்;
– ( ஈரோட்டுச் சூரியன் உதிக்கும்…