ஏன் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி என்னையே குத்தம் சொல்றீங்க? அவ பொறந்தததுல உங்க ளுக்கு எந்த பங்கும் இல்லையா? வீட்டுக் குள்ளே இவ்வளவு சத்தம் போடுறீங்களே.. ரோட்டுல நின்னு அவ என் பொண்ணு இல்லைன்னு சொல்லுங்க..
விமலா.. என்ன பேசுற நீ? பொண்ணை கவனிச்சி வளர்க்க வேண்டியவ நீதான். இன்னைக்கு அவ தியேட்டர்ல யாரோ ஒரு பையனோட இருந்தப்ப நம்ம கதிர் பார்த்ததால ஊருலகத்துக்குத் தெரியாம போயிடிச்சி. இல்லைன்னா, என்ன ஆகியிருக்கும்?
இன்னைக்காவது என் தம்பியோட அருமையைத் தெரிஞ்சிக்கிட்டீங்களே.. இனிமே உன் பொண்ணு உன் பொண்ணுன்னு சொல்லாதீங்க. அவ நம்ம பொண்ணு. எந்த தப்பு நடந்தாலும் அது நம்ம ரெண்டு பேருக்கும்தான் அவமானம். சட்புட்டுன்னு கல்யாண வேலையைப் பாருங்க. அடுத்த மாசத்துல ஒரு முகூர்த்த நாளா பார்த்து கதிருக்கும் நித்திலாவுக்கும் கல்யாணத்தைப் பண்ணி வச்சிடலாம்
மோகன் தலையாட்டினான். எப்போது விமலா உரக்கப் பேசினாலும் பதிலுக்கு கொஞ்ச நேரம் மல்லுக்கட்டிவிட்டு கடைசியில் பூம்பூம் மாடு ஆகிவிடுவது மோகனின் வழக்கம். நித்திலா பிறந்தபோதே, அவள் கதிருக்குத்தான் என்று முடிவு செய்து விட்டாள் விமலா. தன் தம்பி மூலமாக இந்த சொந்தம் தொடரவேண்டும் என்பது அக்காவின் விருப்பம். தனக்கு இளையவளான கல்பனாவிடமும் இதைப் பற்றி அடிக்கடி பேசியிருக்கிறாள். விமலாவின் முன்னால் கல்பனாவும் பூம் பூம் மாடுதான்.
கல்பனாவுக்கு தன் அக்கா மகள் நித்திலா மேல் கொள்ளைப் பிரியம். நித்திலா குட்டிப் பெண்ணாக இருந்தபோது கல்பனா அப்படி கவனித்துக் கொள்வாள். காரணம் இல்லாமல் இல்லை. கணவன் போய்ச் சேர்ந்துவிட்டான். குழந்தை இல்லை. தனது எல்லா ஏக்கத்துக்கும் வடிகாலாக நித்திலாவைத்தான் நினைத்தாள். மோகனுக்கு அலுவலகம் விடுமுறை என்றால், நித்திலாவைத் தன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்விடுவாள் கல்பனா.
சித்தி.. அப்பா ஆபீசுக்கு போற நாளெல்லாம் நீ எங்க வீட்டுக்கே வரமாட்டேங்குற.. அப்பாவுக்கு லீவுன்னா என்னை கூட்டிட்டு வந்திடுறே.. அம்மாவும் அப்பாவும் தனியா இருப்பாங்களே..
அவங்களுக்கு போர் அடிக்காதா?
அடிக்காது
ஏன் போர் அடிக்காது?
எதுவும் சொல்லாமல் நித்திலாவின் கன்னத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு, சாக்லேட்டும் பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவாள் கல்பனா. சித்திக்கும் நித்திலா நிறைய முத்த மிட்டாய் கொடுப்பாள்.
அழுது கொண்டிருந்த நித்திலாவை கல்பனா தான் ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாள். இதுதான்டீ நம்ம குடும்ப வழக்கம். சொந்த பந்தம் விட்டுப்போயிடக்கூடாதுன்னு சாதிக்குள் ளேயே அதுவும் நெருங்குன சொந்தத்துக்குள்ளேயே கல்யாணம் பண்ணி வப்பாங்க. உங்கம்மாவுக்கு, எனக்கு எல்லாம் அப்படித்தான் நடந்தது. நீயெல்லாம் இந்தக் காலத்துப் பொண்ணு. ஆசைப்பட்டதை அடையணும்னு நினைக்கிறே.. பெத்தவங்க புரிஞ்சுக்குவாங்களா?
நித்திலா அந்தப் பையனைப் பற்றிய விவரங்களை சித்தியிடம் சொன்னாள். தனக்கும் அவனுக்குமான அறிமுகம், காதல் எல்லாவற்றையும் சொன்னாள். அவன் ரொம்ப நல்ல பையன் சித்தி
இருக்கட்டும்.. அவன் நம்ம சாதியா? கெட்டவனா இருந்தாலும் சொந்த சாதிக்காரனத்தான் கல்யாணம் பண்ணி வப்பாங்க. அதிலும் கதிரு.. உம்மேல உசுரே வச்சிருக்கான். நீ அவனுக்குத்தான்னு சொல்லி சொல்லி வளத்துப்புட்டோம்.
விடுவாளா உன் ஆத்தாக்காரி
சொல்லும்போதே கல்பனாவுக்கு கண் கலங்க ஆரம்பித்துவிட்டது. இந்த சின்னப் பெண்ணின் மனதில் எவ்வளவு ஆசை இருக்கும் என்று அவள் யோசித்தாள். ஆனாலும், விமலாவிடமோ மோகனிடமோ இது பற்றி பேசும் தைரியம் கல்பனாவுக்குக் கிடையாது.
அக்கா தங்கை இரண்டு பேருக்கும் இளையவன் தான் கதிர். அவன் மேல் இரண்டு பேருக்குமே ரொம்பப் பாசம். கொஞ்சம் முரட்டுத்தனமாக சுற்றுவது கதிரின் பழக்கம். அதனாலேயே, என் ராசாவின் மனசிலே ராஜ்கிரணை மீனா பார்க்கிற மாதிரியே கதிரை பார்ப்பாள் நித்திலா. கதிரின் பார்வையோ பவர்ஸ்டார் ரொமான்ஸ் பண்ணுவதுபோலவே மிரள வைக்கும். ஆனாலும், எல்லாருமே ஒரே குடும்பம். கொள்வினை, கொடுப்பினை எல்லாம் அதற்குள்ளேயேதான். அதைத்தாண்டி இன்னொரு வழியை யாருமே யோசிக்கவில்லை. நித்திலா யோசித்துவிட்டாள். அதுதான் இப்போது பிரச்சினையாகி, விறுவிறு கல்யாண வேலைகளில் வந்து நிற்கிறது.
அழைப்பிதழ் அச்சடிப்பதற்காக கதிர் கிளம்பினான். துணி காயப் போட்டுக்கொண்டிருந்தாள் விமலா.
அக்கா.. நித்திலா எங்க?
உள்ளே இருப்பா.. என்னடா?
பத்திரிகையிலே அவளோட டிகிரிபோடணும். அவளதான் நிறைய படிக்க வச்சிப்புட்டியே.. என்னென்ன படிச்சிருக்கான்னு கேட்டு நோட் பண்ணணும்
பெருமை தாங்காமல் தனக்குள் சிரித்த நிர்மலா, நீயே போய் கேட்டுட்டுப் போ என்றாள். கதிர், வீட்டுக்குள் சென்றான். அப்போதுதான் அழுது முடித்திருந்தாள் நித்திலா. கண்கள் காட்டிக் கொடுத்தன.
சின்ன அக்கா எல்லாத்தையும் சொல்லுச்சி -கதிர் சொன்னதைக் கேட்டதும் ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது நித்திலாவுக்கு. மவுனமாக நின்றாள்.
யார் அந்தப் பய? கதிரின் கேள்வி, நித்திலாவை மிரட்டிப்பார்த்தது. அவள் தன் மாமனின் முகம் பார்த்தாள். கண்ணீரை மீறிய தைரியம் அவள் கண்களில் தெரிந்தது. எல்லாத்தையும் சித்திகிட்டே சொல்லிருக்கேன்
நீ சொன்னதெல்லாம் தெரியும்.. சின்ன அக்காவைப் பத்தி, அதான் உன் சித்தியைப் பத்தி உனக்குத் தெரியுமா? -கதிர் கேட்டதன் அர்த்தம் நித்திலாவுக்குப் புரியவில்லை.
கல்பனாவுக்குள் ஒரு மலராத பழைய காதல் உண்டு. மாரியம்மன் கோவில் திருவிழாவில்தான் ரொம்ப நாளைக்கப்புறம் சேகரைப் பார்த்தாள். அவளுடன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவன். நன்றாகப் படிக்கக்கூடியவன். ஆனாலும், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவனுடைய சொந்த கிராமத்தில் கூலி வேலைக்குப் போகவேண்டிய நிலைமை, பெண்பிள்ளை என்பதால் இவள் படிப்பையும் வீட்டில் நிறுத்திவிட்டார்கள். அதன்பிறகு, திருவிழாவில்தான் சேகரை கல்பனா பார்த்தாள். எப்படி இருக்கே என்கிற விசாரிப்பைத் தவிர வேறு ஒன்றும் அதிகமாக இல்லை.
அப்புறம், மார்க்கெட் போகும்போதும் கோவிலுக்குப் போகும்போதும் சின்னச் சின்ன சந்திப்புகள்.
அது காதலாகக்கூட சரியாக மொட்டுவிடவில்லை. அதற்குள் கல்பனா வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. கண்டுபிடித்தவன், முறைப்பையன்தான். அவன் மட்டும்தான் பார்த்தான். வேற்று சாதிப் பையனைப் பார்க்கிறாள் என்று சொந்த சாதிக்குள்ளிருந்து புகைச்சல் கிளம்புவதற்கு முன்னாடி கல்பனாவைக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய பரபரப்பில் இருந்தது அவள் குடும்பம். யாருக்கும் அவளது காதல் விவகாரம் தெரியாது. வேக வேகமாக கல்யாண ஏற்பாடு நடக்க, முறைப் பையன்தான் தாலி கட்டினான். அவனோட எங்கெங்கே சுத்துன? -திருமணத்திற்குப் பிறகு முறைப் பையன் வாயிலிருந்து வெளிவந்த முதல் கேள்வி இதுதான். அவன்கூட பழகிவிட்டு, என்கூட படுக்காதே -இது அவனது முதல் கட்டளை. ஒருவனைக் காதலித்து இன்னொருவனைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் பலர் சந்தித்த வேதனைதான் கல்பனாவுக்கும். இரண்டு வருடங்கள் இப்படியேதான். திருமணத்திற்குப் பிறகு அவள் சுமந்தது குழந்தையை அல்ல. மலடி என்ற பட்டத்தைத்தான். சொந்த சாதி அல்லவா? அதனால் சுற்றம்சூழ துக்கம் விசாரித்தார்கள். எதேச்சையாக ஒரு முறை காய்கறிக் கடையில் கல்பனாவைப் பார்த்தான் சேகர். பழைய தோற்றத்தில் அவள் இல்லை. விசாரித்தான். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல என்றபடி வெண்டைக்காயின் முனையை அவள் ஒடித்ததிலிருந்தே, என்னவோ இருக்கிறது என்பதும், இதுவாகத்தான் இருக்கும் என்பதும் சேகருக்குப் புரிந்துவிட்டது. அவள் போனபிறகு, மெல்ல விசாரித்தான். கத்தரிக்காய் முற்றினால் காய்கறிக்கடைக்கு வந்துதானே ஆகவேண்டும். அவள் நிலைமையைத் தெரிந்துகொண்டான்.
பஸ்ஸைவிட்டு இறங்கி ரோட்டைக் கடக்கையில் லாரியில் அடிபட்டு அதே இடத்தில் செத்தான் அந்த முறைப்பையன். இது நடந்த சில மணி நேரத்தில், தனது கிராமத்தில் இறந்துகிடந்தான் சேகர். லாரி டிரைவரும் சேகர் ஊர்க்காரன்தான். ஆக்ஸிடென்ட் கேஸ் என்ற அடிப்படையில் அவனுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. சேகர் மாரடைப்பால் இறந்தான் என்று ஊரார் சொன்னார்கள். இரண்டு மரணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தைக் கிளப்பக்கூட ஆள் இல்லை. கல்பனா தன் தாலியை அறுத்து, பொட்டு அழித்தாள். அதன்பிறகு அவள் சிந்திய கண்ணீர்த் துளிகளில் வாழ்க்கை கரைந்தபடி இருந்தது. நித்திலா பிறந்து வளர்ந்தபோதுதான், அவளது கண்ணீர் நின்று, வாழ்க்கையில் ஒரு புதிய பிடிப்பு ஏற்பட்டது.
இப்போது நித்திலா அழுது கொண்டிருந்தாள். கதிர்தான் பேசிக்கொண்டிருந்தான். சின்னக்கா யாருக்காக தாலி அறுத்தான்னு எனக்குத் தெரியாது. ஆனா, அவ தினம் தினம் அழுதது அந்த சேகருக்காகத்தான்ங்கிறது எனக்குத் தெரியும். அந்தாளு தற்கொலை பண்ணிக்கிட்டுத்தான் செத்துப் போயிருக்கான். நான் அப்ப சின்னப்பையன். சின்னக்கா வீட்டுலதான் நான் அடிக்கடி சாப்பிடுவேன். வேற யாரும் இல்லாதப்ப அக்கா சன்னமா ஒப்பாரி வச்சிப் பாடுவா. அது சேகருக்காகத்தான்ங்கிறது எனக்குப் புரிஞ்சிடிச்சி. சின்னக்காவுக்கு நடந்த கொடுமை, என் பெரியக்கா மகளுக்கு நடக்க வேணாம். அவங்களோடு அது போகட்டும். நீ.. உனக்குப் புடிச்சவனோடு போ.. .. நான் பார்த்துக்குறேன்
கதிர் சொல்லிக்கொண்டே இருந்தான். நித்திலாவின் கன்னத்தில் உருண்டுகொண்டிருந்த கண்ணீர்த்துளிகளில் மின்னியது ஜன்னல் வழியே ஊடுருவிய சூரிய வெளிச்சம்.
– கோவி.லெனின்