அன்னையாரின் தலைமைத்துவம் – கி.வீரமணி

ஜனவரி 16-31

நாடெங்கும் உறுதிமொழிக் கூட்டங்களில், உடல் தளர்ந்த நிலையிலும், உள்ளம் உறுதி குன்றாத நிலையில் தனது சுற்றுப்பயணத்தை நடத்தி, கழகக் குடும்பங்களையும், தமிழ்ப் பெருமக்களையும் லட்சக்கணக்கில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் சந்தித்ததின்மூலம் கழகத்தின் தலைவர் அன்னையார் அவர்கள்,

தந்தை பெரியாரின் சுற்றுப்பயணம் முடியவில்லை என்று நிரூபித்து, தொடர்கிறது _ தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை நிலைநாட்டிவிட்டார்!

அதுமட்டுமா? அவருக்குள் புதைந்திருந்த தலைமைத்துவமும் ஒளிவீசி, ஓங்கி முழக்கிடும் வண்ணம் இயக்கத்தை வழிநடத்திச் செல்கிறார் என்று இன எதிரிகளும் அஞ்சும்வண்ணம் பல நிகழ்வுகள் _ இயக்கப் பணிகள் தலைமை ஆணைக்கேற்ப நடந்தேறின.

தேர்தலில் நிற்காத இயக்கம் திராவிடர் கழகம் என்றாலும்கூட, தேர்தல்களில் மக்கள் யாரை ஆதரித்தால் இனத்திற்குப் பாதுகாப்பு, நாட்டு வளர்ச்சிக்கு உத்திரவாதம் என்பதையெல்லாம் துல்லியமாய் எடைபோட்டுக் கூறுவது அறிவு ஆசான் அய்யா காலத்தி லிருந்தே நடைபெற்று வந்த நடைமுறைகள்.

அதற்கேற்ப, அன்னையார் தலைமையேற்ற பிறகு, புதுவை மாநிலத்திலும், கோவை நாடாளுமன்றத்திற்கும், மேற்குத் தொகுதி சட்டப் பேரவைக்கும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களையே ஆதரிக்க மக்களுக்கு வேண்டுகோள்விடுப்பதென்ற – பெரியார் சிந்தனை வழியே _ அன்னையார் ஒரு அறிக்கையை, பொதுச்செயலாளர் என்ற முறையில் என்னை விடுக்குமாறு பணித்தார்கள்.

அன்னையாரின் ஆணைப்படியும் ஒப்புதல்பெற்றும் கீழ்க்காணும் அறிக்கையை 1974 பிப்ரவரி 16ந் தேதி விடுதலை நாளேட்டில் விடுத்தேன்.

கழகத் தோழர்கட்கு முக்கிய வேண்டுகோள்

புதுவை மாநிலத்திலும், கோவை நாடாளுமன்றத் திற்கும் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கும் நடைபெறவிருக்கும் தேர்தலில், நமது கழகத் தலைவர் அவர்களது அன்பு ஆணைப்படி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து, அவர்தம் வெற்றிக்கு முழுமூச்சுடன் பாடுபட வேண்டியது ஒவ்வொரு திராவிடர் கழகத் தோழரின் கடமையாகும்.

கோவை, புதுவை, காரைக்கால் பகுதிகளில் உறவினர்கள், உற்ற நண்பர்கள் கொண்ட நமது இயக்க முக்கியஸ்தர்கள், தோழர்கள் தென்னாற் காடு, தஞ்சை மற்றும் பல மாவட்டங்களில் இருப்பார்களேயானால் அவர்கள் அனைவரும் அங்கு சென்று, தமிழர் நலம் பேணும் சூத்திர மக்களுக்காகவே சூத்திர மக்களால் ஆளப்படும் சூத்திர ஆட்சியை, தந்தை பெரியார் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தி.மு.க. ஆட்சியை பலப்படுத்தும் வண்ணம் அவர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டளிக்கும் வண்ணம் ஆக்கரீதியான பணிகளில் நம்மால் முடிந்த அளவில், நாம் பிறர் எவரையும் எதிர்பாராமல் தொண்டாற்றி திரும்ப வேண்டியது அவசியம்.

அருள்கூர்ந்து வாய்ப் பும் வசதியும் கொண்ட நமது கருஞ்சட்டை வீரர் கள் அங்கு சென்று நமக் குரிய பணியை, பங்கை செலுத்த வேண்டுகிறோம்.

கி.வீரமணி,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

புதுவையில் கழகக் கூட்டத்திற்குச் செல்லும் போது (உறுதிநாள் நிகழ்ச்சிப் பொதுக்கூட்டத்தில்) புதுவை மாநிலத்தில் தி.மு.க.வை மக்கள் ஆதரித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும் கழகத் தலைவர் அன்னையார் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கத் தவறவில்லை என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

கட்டுப்பாட்டிற்கு மறுபெயர்தான் திராவிடர் கழகம் என்பது நாடறிந்த உண்மை. அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், இயக்கத் தோழர்களின், பொறுப்பாளர்களின் எந்த திறமைக் குறைவைக்கூட மன்னிப்பார்கள். ஆனால் கட்டுப்பாட்டைக் குலைக்கும் _ அல்லது மீறிய நடவடிக்கைகளில் எவராவது ஈடுபட்டால் அதனைச் சகித்துக் கொள்ளவே மாட்டார்கள்.

தந்தை பெரியார் விட்டுச்சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில்  எவ்வித சபலங்களுக்கும் இடந்தராது செய்து முடிப்போம் என்று உறுதியேற்ற கழகத்தின் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் கழகத்தின் கட்டுப்பாட்டிற்கும், நிலைப்பாட்டிற்கும் (ஷிணீஸீபீ) மாறாக நடந்துகொண்ட சேலம் குமாரபாளையம் திராவிடர் கழகப் பொறுப்பாளர் கள், தலைவரால் நேரில் விளக்கம் கேட்கப்பட்டும், பிறகு ஊர் சென்றதும் பொறுப்பின்றி நடந்து, கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்குவதாக இருந்ததால் சேலம் மாவட்ட _ குமாரபாளையம் திராவிடர் கழக கிளை கலைக்கப்படுகிறது என்ற துணிச்சலான முடிவை எடுத்து ஒரு அறிக்கை எழுதி, தனது தலைமையின் ஆற்றல் என்னவென் பதை எதிரிகளும் துரோகிகளும்கூட உணரும்படிச் செய்து, பெரியாரின் கணிப்பு எப்படிச் சரியானது என்பதை உலகம் அறியச் செய்தார்கள். சென்னை 21_2_1974 (வெளியூர் 22_2_1974) விடுதலையில் வெளிவந்த அன்னையாரின் கையொப்பத்துடன் வெளிவந்த அறிக்கை. இதோ:

சேலம் மாவட்ட குமாரபாளையம் தி.க. கலைப்பு சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு பெண்மணி மரணமடைந்தது குறித்து செய்யப்பட்டுவரும் கலவரங்களில் மேற்படி நகரத்திலுள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் பி.எஸ். ராஜனும், செயலாளர் கரிகாலனும் கழகக் கொள்கைகளுக்கு விரோதமாக கலந்துகொண்டு குழப்பம் விளைவித்து வருகிறார்கள் என்று சென்ற மாதம் 22_ந்தேதி சேலம் சென்றிருந்தபோது கழகத் தோழர்கள் மூலம் தகவல் அறிந்தேன்.

உடனே அன்றைக்கு நடைபெற்ற மாவட்டக் கமிட்டிக் கூட்டத்திற்கு ஆக வந்திருந்த கரிகாலனிடம் கழகப் பொதுச்செயலாளர், சேலம் மாவட்ட கழகத் தலைவர், செயலாளர் ஆகியோர் மூலம் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கு இடமேற்படும் வகையினதாக இருந்தால் அதைப்பற்றி சர்க்கார் நிச்சயம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளும். போலீசாரும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதற்கு ஆக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது தேவையில்லாதது.

இன்றைக்கு ஒரு பெண்மணியின் மரணத்தைக் காரணமாகக் காட்டி நடத்தப்படுகிற கலவரங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு ஒரு கெட்ட பெயர் ஏற்படுத்தி, அதைச் சாக்காக வைத்துக்கொண்டு நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று சில பேர் திட்டமிட்டு செய்கிற சூழ்ச்சியான காரியம் என்பதாகத்தான் தெரிகிறது.

அந்த மாதிரியான கெட்ட பெயர் எதுவும் தி.-மு.க. ஆட்சிக்கு ஏற்படாமல் பாதுகாப்பதும், குழப்பவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பதும்தான் நமது கடமை என்பதாக இருக்க, நாமும் எதிரிகளின் சூழ்ச்சிக்கும், பித்தலாட்டத்திற்கும் பலியாகி இந்த ஆட்சிக்குத் தொல்லையும், தொந்தரவும் கொடுக்கிற மாதிரியான காரியத்தில் இறங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டு, அவரும் இனி நாங்கள் இந்த மாதிரி காரியத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று உறுதி கூறிச்சென்றார்.

ஆனால் நம்மிடம் உறுதிகூறிச் சென்றவர்கள் அந்தப்படி நடந்துகொள்ளாமல் தங்கள் விருப்பம்போல் நடந்துகொண்டு குழப்பம் விளைவிப்பவர்களுக்கு அனுசரணையாக திராவிடர் கழகத்தின் பேரால் நடந்துகொண்டு வருவதாகவும், உண்ணாவிரதம் என்பது ஒரு சண்டித்தனமான, பித்தலாட்டமான செயல், மக்களை ஏமாற்றுகிற செயல் என்கிற நமது கழகத்தின் அடிப்படைக் கொள்கைக்கே மாறானமுறையில் உண்ணாவிரதம் போன்ற ஈனத்தனமான காரியங்களிலும் ஈடுபடுவதாகவும் அறிகிறேன்.

ஒரு சிலரின் பெருமைக்கு ஒரு சிலரின் சொந்த ஆசாபாசங்களுக்கு ஆக இயக்கத்தைப் பயன்படுத்துகிற இந்தப்படியான போக்கு வளருமேயானால், இயக்கத்திற்கு இன்றைக்கு இருக்கிற பெருமையும், மரியாதையும் குலைந்துவிடும். நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பெரிய காரியங்களுக்கும் குந்தகம் ஏற்பட்டுவிடும்.

நம் கழகத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாட் டினை நாம் அனைவரும் ஒருமுகமாக செயல்படுத்தி வரவேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் இலட்சியமாக இருந்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்கள் ஏற்பட நமது அருமை தந்தை பெரியார் அவர்கள் ஒருநா-ளும் அனுமதிக்கமாட்டார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் அந்த இலட்சியத் திற்கு ஊறு நேரிடாத வகையில் நடந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை யாகும். கழகத்தில் இருந்து வருகிற கட்டுப்பாட் டினை, எந்தவிதமான நட்டம் ஏற்பட்டாலுங்கூட தாங்கிக்கொண்டு காப்பாற்றியாக வேண்டும்.

ஆதலால் கழக கட்டுப்பாட்டுக்கு மாறாகச் செயல்பட்டு வரும் சேலம் மாவட்டம் குமார பாளையம் நகர திராவிடர் கழகம் கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த ஊரில் ஒரு பெண்மணியின் மரணம் குறித்து நடைபெற்றுவரும் கலவரங்களில் திராவிடர் கழகத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. திராவிடர் கழகத்தினர் என்று சொல்லிக் கொண்டு யாராவது வருவார்களேயானால் அவர்களை திராவிடர் கழகத்தார் என்று பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்படிப் பட்டவர்கள் கழகத்துக்காரர்கள் அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படி ஒரு அறிவிப்பைத் தெரியப்படுத்த என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது என்றாலும், நம் கழகத்தின் எதிர்கால நலன் குறித்து இந்தப்படியான காரியத்தை, முடிவை செய்தே தீரவேண்டியதாகிறது.

ஈ.வெ.ரா. மணியம்மை,
தலைவர், திராவிடர் கழகம்

இதிலிருந்து அன்னையார் அன்பு காட்ட வேண்டிய நேரத்தில் அன்பும் கண்டிப்புடன் நடக்க வேண்டிய கட்டத்தில் தயவுதாட்சண்யமின்றி கண்டிப்பு காட்டும் தலைவர் என்பது உலகுக்குப் புரிந்துவிட்டது!

தலைமை என்பது எவ்வளவு துணிவும் தெளிவும் உள்ளது.

அதேநேரத்தில் கட்டுப் பாட்டைக் காப்பதில் எவருடனும் சமரசம் செய்து கொள்ளாத எஃகு உள்ளம் கொண்ட தலைமை என்பதையும் காட்டும்வண்ணம் அது அமைந்தது. பின்னால் முளைக்கவிருந்த துரோகத்தின் களையும் அதன்மூலம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்படும் முன்னோட்டம் என்றால் அது மிகையல்ல.

– நினைவுகள் நீளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *