லோகாயதமும் புத்தமும்

ஜனவரி 16-31

சத் தரிசன சமுச்சயம் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதிய மணிபத்ர என்பவர், சுவர்க்கம் போவது, நன்மை தீமை பற்றிப் பகுத்தறிவது ஆகியவைபற்றி வேதமோதிகளான ஏமாற்றுக்காரர்கள் மக்களை பொய்த்தோற்றம் காட்டி ஏமாற்றுகின்றனர். இத்தகைய புரட்டுகளைத் தோலுரிப்பதற்காகத்தான் உலகாயவாதிகள் புலன் அறிவை (இந்திரிய அறிவை) வலியுறுத்துகின்றனர் என்கிறார். அய்ம்புலன்களான கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறிதல் ஆகிய அய்ந்தினாலும் அறிவை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என்போர் லோகாயதவாதிகள்.

 

வேதமோதிகள் கலாச்சாரத்தின்படி, கடவுள், சொர்க்கம், மறுபிறப்பு, முக்தி போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. வேதமோதுவதன் மூலமும் யாகம் செய்வதன் மூலமும் அவற்றை அடையலாம் என்றும் ஆசைகாட்டினர். லோகாயதவாதிகள் இந்தப் புரட்டுகளை எதிர்த்ததோடு மக்களின் நலன்களுக்கான வழிமுறைகளைத் தேடித் தந்தனர். உயிர் உள்ளவரை மனிதன் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். கடன் வாங்கியாவது நல்ல உணவு உண்ணட்டும் என்கிற பாடல் லோகாயதவாதி களின் தத்துவத்தைக் கூறும்.

யாகத்தில் விலங்குகளையும் சில நேரங்களில் மனிதர்களையும்கூட (நரபலி) பலிகொடுக்கும் செயல் வேதங்களின்படி செய்யப்படுகிறது. இதனை லோகாயதவாதிகள் எதிர்த்தனர். எதிர்ப்புக்குப் பதில் கூறுவதுபோல, வேதமோதிகள் பலியாகும் விலங்கோ மனிதனோ சுவர்க்கம் போகின்றனர் என்றொரு ஆசை வார்த்தையைக் கூறினர். தர்க்கவாதத்தில் தேர்ந்த லோகாயதவாதிகள் உடனே, அப்படியா னால் சுவர்க்கம் போக ஆசைப்படும் வேதமோதி களின் வயதான தந்தையர்களைத் தூக்கிப் போட்டுப் பலி கொடுத்து யாகம் செய்யலாமே என்று கேட்டனர். வேதம் ஓதிகள் பதிலே கூறக்காணோம் இன்றும்கூட.

செத்தபிறகும் மூதாதையர்க்குச் சிரார்த்தம் தரவேண்டும் என்று வேதமோதிகள் மற்றவர்களைப் பிய்த்துப் பிடுங்குவது ஏன் என்று லோகாயதம் கேட்டது, மேல் உலகத்தில் இருக்கும் பிதுர்களுக்கு உணவு போவதற்கான வழி இங்கேயுள்ள வேதியர்களுக்கு அளிப்பதுதான் என்று கூறினார். லோகாயதர்களின் தர்க்கவாதம் அறிவார்ந்த வினாவை எழுப்பியது; அப்படியானால், தூர தேசத்திற்குப் பயணம் போகும்போது கட்டுச் சோறு கட்டிக் கொண்டு ஏன் போகிறீர்கள்? வீட்டில் சமைத்து வைத்தாலே, பயணம் போனவர்களின் பசி ஆறிவிடாதா எனக் கேட்டார்கள்.

ஓர் ஊரில் இருந்த தீயவர்கள் சிலர் கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களைச் செய்து வந்தனர். நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தனர். அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் அவர்களிடம் லோகாய தர்கள் பேசியதாகப் பின்வரும் கதை கூறப்படுகிறது. நண்பர்களே, நீங்கள் இறந்து நரகத்திற்குப் போகப் போகிறீர்கள். அவ்வளவு பாவம் செய்திருக்கிறீர்கள். அங்கே போனவுடன் எங்களுக்குக் தகவல் அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டனர். தீயவர்கள் இறந்து பல நாள்களாகியும் நரகத்திலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. நல்ல நண்பர்கள் அவர்கள். தகவல் ஏதும் வராததிலிருந்து மறுபிறப்போ, நரகமோ, சுவர்க்கமோ எதுவுமே கிடையாது என்பது புலப்படுகிறது என்று கதை கிண்டலாக முடியும். அறிவைத் தூண்டும் கிண்டல் கதை. வேதமோதிகளின் மோசடியைத் துலக்கும் அறிவுக்கிண்டல் கதை.

புத்தம்

வேதமார்க்கத்தை எதிர்த்து பவுத்தம் நடத்திய போரும் அது பெற்ற வெற்றியும் குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகள் பவுத்தம் மிகுந்த செல்வாக்குடன் இந்திய மண்ணில் விளங்கியது. மகத அரசும் கோசல அரசும் பவுத்தத்தை ஆதரித்துக் காத்து வந்ததனால் அரச மதம் எனும் அந்தஸ்தைப் பெற்றது. என்றாலும் அதேநேரத்தில் சாமான்ய மக்களிடமும் செல்வாக்கு பெற்ற தத்துவமாகவும் விளங்கியது.

சமண (ஜைன) மதத்தவரான மகாவீரரைப் போல புத்தரும் கடவுளை நம்பவில்லை. கடவுள் இருக்கிறது என்கிற புரட்டுப் பிரச்சாரத்திற்கு எதிராக கடவுள் மறுப்பு வாதங்களை அவர் முன்வைத்தார். பவுத்தத்தில் முழுமுதல் கடவுள் என்றோ சர்வசக்தி உள்ள கடவுள் என்றோ அனைத்தையும் ஆட்டுவிக்கும் சக்தி படைத்த கடவுள் என்றோ எதற்கும் இடம் இல்லை. மனிதன் வாழ்நாளில் செய்யும் பாவபுண்ணியச் செயல்களுக்கு ஏற்ப இறப்புக்குப் பின் இறுதித் தீர்ப்பு நாளில் தீர்ப்பு வழங்கி சுவர்க்கம் அல்லது நரகத்திற்கு அனுப்பும் கற்பனைக்குப் பவுத்தத்தில் இடம் இல்லை. (இந்த வகை நம்பிக்கை கிறித்துவம், இசுலாம் போன்ற மதங்களில் கூறப்பட்டுள்ளது.)

புத்தசரிதம் எனும் நூலில் புத்தரது கொள்கைகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் எல்லா நல்லது கெட்டதுகளும் அவரிடமிருந்து தான் வரவேண்டும். எல்லாச் செயல்களும் அவரது படைப்பு என்றால் நன்மையோ தீமையோ ஒன்றுபோல் இருக்க வேண்டும். கடவுள்தான் படைப்பாளி என்றால் அவர் ஒரு நோக்கத்துடன் செயல்படுகிறார் என்றால் அவரை முழுமையானவர் எனக் கூறமுடியாது.

ஏனென்றால் நோக்கம் என்பது ஒரு தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமே. நோக்கமற்றுச் செயல்படுகிறார் என்றால் அவர் பைத்தியமாகவோ அல்லது பால்குடிக்கும் குழந்தையாகவோ இருக்க வேண்டும். கடவுள்தான் படைப்பாளி என்றால் ஏன் மக்கள் அனைவரும் அதற்குக் கீழ்ப்படியக்கூடாது? கஷ்டம் வந்தால்தானே கடவுளுக்குப் பூசையும் புனஸ்காரமும் செய்யும் நிலை உள்ளது? மக்கள் ஏன் பல கடவுள்களை வணங்குகிறார்கள்? நாட்டுக்கு நாடு கடவுள்கள் மாறுபடுவது ஏன்? ஆகவே, பகுத்தறிவுள்ள தர்க்கவாதங்கள் மூலம் கடவுள் என்ற கற்பனாவாதம் உடைபடுகிறது. கடவுள் மறுப்பு வலுப்பெறுகிறது. அதனை வெளிப்படுத்த வேண்டும் என்று அந்த நூலில் கண்டுள்ளது.

கடவுள் என்பது சர்வவியாபி என்னும் கருத்து உண்மையானால் அது படைப்பதற்கு ஏதும் இல்லை. (எல்லாப் பொருளிலுமே அதுவே நிறைந்திருக்கிறதே) உலகில் எல்லாப் பொருள்களும் மாறுகின்றன. கடவுள் மட்டும் எப்படி மாறாமல் இருக்க முடியும்? எல்லாப் பொருளுக்கும் காரணம் கடவுள் என்றால் _ கடவுள்தான் நமக்குள்ளேயே இருக்கின்றனதே – ஏன் முக்தியை நாடவேண்டும்? நமக்கு ஏற்படும் துன்பங்களை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் அத்துன்பங்களுக்கும் கடவுள்தானே காரணம்! இதுதான் புத்தரது வாதம்.

வைதீகப் பார்ப்பனியக் கொள்கைகளைப் புத்தர் எதிர்த்துக் கடும் கருத்துப்போர் தொடுத்தார். அம்பத்தசுத்தா என்பதில் ஜாதி அமைப்புக்கு எதிரான கண்டனங்களைக் காணலாம். சுதந்தசுத்தா என்பதில் யாகங்களில் நெருப்பில் இட்டுக் கொல்லப்படும் உயிர்ப்பலிகளை எதிர்த்த நிலை தெரியவருகிறது. தெவ்விஜ்ஜ சுத்தாவில் வேதங்களைச் சாடி அவற்றின் பொய்மையை அம்பலப்படுத்துகிறார். இவற்றின் வாயிலாக வேதமோதிகளை எதிர்த்த புத்தரின் செயல்பாடுகள் முழுமையாகத் தெரியவரும்.

மனிதர்களை ஜாதியின் பெயரால் பிரிவினைப்படுத்தி மேல், கீழ் எனும் வேதங்களைக் கற்பித்து மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பார்ப்பனச் சக்திகளை எதிர்த்தவர் புத்தர். எதிர்ப்பைத் தம் செயல்கள் மூலமே எண்பித்த நேர்மையாளர். முடிதிருத்துபவரான உபாலன், தாழ்த்தப்பட்ட கீழ் ஜாதியினரான சுனிதன், இடையர் குலத்தைச் சேர்ந்த நந்தா, அடிமைப் பெண்ணான புன்னை போன்றோர் பலரும் அவருடைய சீடர்கள். வேடர் குலத்தவன் என்பதால் வித்வித்தை கற்றிடும் சீடனாக ஏகலவ்யனை ஏற்க மறுத்த துரோணனை மகாபாரதம் காட்டுகிறதே, அதனை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

விளையாட்டுப் பயிற்சியாளர்களில் சிறந்தோர்க்கு வழங்கப்படும் இந்திய விருது இந்தத் (துரோக) துரோணன் பெயரில்தான் வழங்கப்படுகிறது. அதுபோலவே, விளையாட்டு வீரர்களில் சிறந்தோர்க்கு அர்ஜுன் விருதுதான் வழங்கப் படுகிறதே தவிர, ஏகலவ்யன் விருது தரப்படுவ தில்லை! எல்லாமே ஜாதியின் அளவுகோல்! இன்றைய இந்தியாவிலும் அன்றைய நிலைதான்.

யாரும் எப்படிப்பட்ட தவறையும் (பாவம்) செய்யலாம்; பாவ விமோசனத்திற்காக யாகம் செய்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்பது வேத, உபநிடதக் கருத்துகள். அவையே வேதமோதிகளால் பரப்பப்பட்டு, யாகத்திற்கான டிமாண்டு அதிகரித்து பார்ப்பனர்கள் செல்வத்தில் கொழிக்க ஆரம்பித்தனர். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்பமுறை தோன்றாத, நிலைபெறாத, அக்காலத்தில் மந்திரங்களை உச்சாடனம் செய்து எந்தப் பெண்ணையும் வசியம் செய்யலாம், எவர் மனைவியையும் கவர்ந்து செல்லலாம் என்கிற கருத்து வேதமோதிகளால் உருவாக்கப்பட்டது. அந்தவகையில் வசியம் செய்து உடல் உறவு கொள்வது வேத, சாத்திர சம்மதமானது என்கிற கருத்தும் பரப்பப்பட்டதால், மந்திரம், தந்திரம், வசியம் என்பவற்றின் பெயரால் சமுதாயப் பொது ஒழுக்கம் கெட்டுப்போன நிலை. சூதாடுவது ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவர்க்கு சுதர்மம் எனப்பட்டது. அதாவது அந்த ஜாதியின் தர்மம் சூதாடுவது என்று கூறப்பட்டது. அதன்படி பாரதக் கதையில் யுதிஷ்டிரன் (தர்மன்) சூதாட்டத்தில் ஈடுபட்டு நாட்டையும் வீட்டையும் ஏன் பெண்டாட்டியையும் சூதில் தோற்றதும் ஸ்வதர்மம் என்றாகிப் போனது. காரணம் சத்திரியர்க்குச் சூதாடுவது கடமை. போர் புரிந்து நாட்டைக் காத்திடும் கடமையைப் போலவே சூதாடுவதும் சத்திரிய தர்மம் எனப்பட்டது.

கூடுதலாக அனைத்தையும் தூண்டி கிளர்ந்து எழச் செய்வதற்கான உற்சாக பானம் (தினமலரின் உபயம்) சோமபானம் என்ற பெயரில் தயாரித்து ஊற்றப்பட்டது. நேரம் காலம் என்கிற கணக்கில் லாமல் வேதமோதிகள் சோம், சோம் என்றே கூவிக்கொண்டு, குடித்துக் கிடந்த நிலை. இதனால்தான் ஓர் ஆய்வாளன், இவர்கள் போட்ட சோம் எனும் கூச்சல்தான் மெல்ல மெல்ல ஓம் என்றாகிவிட்டது என்றே எழுதிவிட்டார். ஓம் என்பது யோனியைக் குறிக்கும் என்கின்றனர். பங்கப்பட்டுப் போன இன்றைய வேதமோதிகள், ஓம் என்றால் பிரணவ மந்திரம், அதனை அப்பனுக்கு மகன் கற்பித்தான் சாமி மலையில் என்றாக்கி விட்டனர். எப்படியோ அசிங்கத்தை அவர்களே உணர்ந்துவிட்டனர் மாற்றுப் பொருள் கூறுகின்றனர்.

வேதங்களைக் காப்பதற்காக எழுதப்பட்ட உபநி டதங்கள், சமூக ஒழுக்கக் கேட்டிற்குத் தடைவிதித்து ஒழுக்கத்தைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில் வேதமோதிகளான பார்ப்பனர்களைத் தவிர்த்து சத்திரிய, வைசிய வருணத்தினர் சமூக ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்று பேசத் தொடங்கினர். சத்திரிய வருணத்தி லிருந்து மகாவீர வர்த்தமானரும் புத்தரும் தத்துவங் களைப் போதித்து ஒழுக்கத்தை வலியுறுத்தினர். ஒழுக்கத்தை வலியுறுத்தும்போது, ஒழுக்கக் கேடுகளுக்குக் கதவைத் திறந்து வைத்துள்ள வேத, பிராமண, உபநிடதங்களை மறுக்க வேண்டியது அவசியமாகவும் இயற்கையாகவும் அமைந்து விட்டது.

பிரம்மம், வேதம், கடவுள் என்கிற எவற்றையும் ஏற்காத மகாவீரர் மோட்சம் என்பதை ஏற்றார். இதுவும்கூட வேதங்கள் கூறும் மோட்சம் அல்ல என்றும் சூரியனுக்கு மேலே உள்ள இடம் என்கிற மாதிரியில் விளக்கம் கூறப்படுகிறது. சமணர்களின் கற்பக மரமோ, காமதேனுப் பசுவோ ரம்பை, ஊர்வசி முதலிய ஆடலழகிகளோ கிடையாது என்கிறார் கள். யார் பார்த்தது? இருதரப்புமே அளப்புதான்!

பவுத்தமோ, பிரம்மம், கடவுள், வேதம், உபநிடதம், சொர்க்கம் என்கின்ற எவற்றையும் ஏற்கவில்லை.
உலகின் பழமையான மதங்கள் எனப்படும் யூதம், பாரசீகம், இந்து போன்றவை அந்தந்தப் பகுதி மக்களின் இனம் சார்ந்த மதமாகவே அந்தந்தப் பகுதிகளில் உருவாக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் மட்டுமே பரப்பப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால் உலகம் முழுக்கவும் பொருந்தும்படியான மார்க்கமாக உருவானது பவுத்தம் மட்டுமே என்பது விவேகாநந்தர் எனப்படும் நரேந்திரன், அமெரிக்க கலிபோர்னியாவில் ஷேக்ஸ்பியர் அரங்கில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் பேசியபோது, குறிப்பிட்டவை.

உலக மார்க்கம் (மதம் அல்ல) எனும்படிக்கான சிறப்பினைப் பெற்ற புத்த மார்க்கம் எட்டு மார்க்கங்களைக் கூறியது.

1.    சரியான பார்வை (நன்மை, தீமை எனப் பகுத்துப் பார்ப்பது)

2.    சரியான சங்கல்பம் (கொலை, கொள்ளை, பகைமை, பாரபட்சம் இல்லாதிருப்பது)

3.    சரியான சொல் (பொய்பேசல், புறங்கூறல், கடும் சொல் கூறல் ஆகியன தவிர்ப்பது)

4.    சரியான செயல் (திருட்டு, கொலை, விபசாரம் செய்யாமல் இருப்பது)

5.    சரியான வாழ்வு முறை (மது, போதை தரும் நச்சுப் பொருள் முதலியவை விலக்கல்)

6.    சரியான யோக நிலை (புலன் கட்டுப்பாடு, தீய உணர்வு விலக்கல்)

7.    சரியான முயற்சி (தீயசெயல் விலக்கல், பற்றற்ற தொண்டு செய்தல்)

8.    சரியான நினைவு (நினைவாற்றலோடு நல்லவற்றைச் செய்தல்)

அஷ்டாங்க மார்க்கம் எனப்படும் எட்டுவகைச் செயல்களைக் கடைப்பிடித்து கடமை வழுவாத நிறைவாழ்வு வாழ்தலே பவுத்தம் கூறும் குறிக்கோள். பகுஜன் ஹிதய: பகுஜன்கய என்பது அதன் குறிக்கோள். அதாவது பெரும்பாலானவர்களுக்கு எது சுகம் அளிக்கிறதோ அதுவே நல்லது. மற்றது தீயது. நல்லதைச் செய்வோம் தீயதை விலக்குவோம் என்றது பவுத்தம்.

வேதமோதிகள் பிரத்தியட்சம், யூகம், அனுமானம், ஆப்த வாக்கியம் (வேதம் கூறுபவை) ஆகிய நான்கை முதன்மைப்படுத்தினர். ஆனால் பவுத்தம் பிரத்தியட்சம் (கண்ணால் காண்பவை) அனுமானம் (ஒன்றினால் ஒன்றை அறிவது) ஆகிய இரண்டை மட்டுமே ஏற்றது. யூகத்தையும் ஆப்தவாக்கியத்தையும் ஏற்கவில்லை. ஆகவே கடவுளை ஏற்கவில்லை.

ஒரு பிறப்பில் செய்த கர்மங்களை மறு பிறவியில் அனுபவிக்க வேண்டும் என்கிற வேத உபநிடதக் கருத்தைப் பவுத்தம் மறுத்தது. புறத்தே பொருளும் அகத்தே ஆன்மாவும் உள்ளன என்றது வேதமும் உபநிடதமும். இதனை மறுத்தது பவுத்தம். பவுத்தத்தின் இந்தத் தத்துவம் அனாத்மவாதம் என்று பெயர்.

நத்தியட்சம் எனப்படும் தத்துவம் (கண்ணால் காண்பதை மட்டுமே ஏற்பது) உலகாயதத்தின் கொள்கை. பவுத்தமோ இத்துடன் அனுமானம் என்பதைக் கொள்கையாகக் கொண்டது.

நிர்வாணம் எனப்படும் பூரண நிலை சமணம், பவுத்தம் இரண்டுமே ஏற்கின்றன.

ஆனால் இந்நிலையை இல்லறம் எனும் நல்லறம் நடத்துவோர் பெறமுடியாது என்பது சமணம். இதனைப் பற்றற்ற ஞான நிலை எனக்கூறும் சமணம், இது ஆண்களுக்கு மட்டுமே உரியது எனக்கூறி பெண்களுக்கு இதனை மறுக்கிறது. நிர்வாணம் என்பதை ஒழுக்கநிலை எனக்கூறும் பவுத்தம் வேதத்தை ஏற்கவில்லை. வேதமோ வருணாசிரமப் பிரிவுகளைக் கொள்கையாகக் கொண்டது. சமணமும் பவுத்தமும் மனிதர்கள் அனைவரும் சமமே என்றன.

கடவுளைவிடவும் மேலானது ஒழுக்கம் என்பது பவுத்தம். ஒழுக்கம்தான் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும் அடிப்படை. ஒழுக்கமாக வாழ்ந்தால், பூசை, பிரார்த்தனை, சடங்குகள் போன்ற போலிச் செயல்களுக்குத் தேவையே இல்லை என்பது பவுத்தம்.

– ஆய்வோம்

– சு.அறிவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *