அருமை அன்னையின்
கருப்பை இருட்டில்
அரிதாய் எனக்கு
அறிமுகமானது;
விழிமலர் திறக்குமுன்
இமைகளுக்குள்ளே
இரண்டறக் கலந்த
அழகிய கருமை.
சூரியத் தாயிடம்
சுகப் பிரசவமான
பூமிச் சேயும்
ஆதியில் கருமை.
கானல் நீராம்
வான வில்லின்
ஏழு வண்ணங்களை
எட்டிப் பிடித்து
அலசிப் பார்த்தால்
அங்கே மிஞ்சுவதும்
வெறுமையாய் கருமை.
எத்தனை நிறங்கள்
எப்படிச் சிரித்தாலும்
கதிரவன் ஒளியில்
கழுவிடும் முன்னர்
மூலக் கூறாய்
முகிழ்த்தது கருமை.
ஒளியினை விலக்கி
உற்றுப் பார்த்தால்
உலகை ஆள்வதே
இருட்டு நிறம்தான்;
கருப்பு நிறம்தான்.
அண்டம் முழுவதும்
ஆய்ந்து பார்த்தும்
உலகைப் புரட்டித் தேடிப் பார்த்தும்
உலகின் முதல்நிறமாய்
வெல்வது கருமையே!
துயரத்தின் அடையாளம்
கிளர்ச்சியின் குறியீடு
எழுச்சியின் வெளிப்பாடு
அனைத்தும் கருமையே.
கருமைக்கான
உரிமைப்போரே
உலகத்தின் வரலாறு.
இருப்பினும்
கருமை மீதான
ஒடுக்கு முறைகள்
ஒவ்வொரு மண்ணில்
ஒவ்வொரு விதமாய்…
எருமையும் பன்றியும்
நடந்த தெருக்களில்
கருப்புச் சூத்திரன்
நடந்தால் தீட்டு;
பாவப் பஞ்சமன்
பார்த்தாலே தீட்டு.
இது இந்திய நாட்டின்
இருண்ட இனவெறி;
வெள்ளைத் தோலின்
விகார முகவரி.
வெண்மணித் தீயில்
தீய்ந்த கருமைகள்
வெள்ளைத் தோல் போர்த்திய
கருத்த உள்ளங்களின்
களவழிக் காவியங்கள்,
நிறவெறி நாட்டியங்கள்.
மனுதர்ம நீதியே
மனு தருமபுரியாய்
மறுபடியும் இன்று.
நிறப்பிரிகை இருக்கலாம்
அறிவியல் பாடத்தில்;
அது தலைகாட்டலாமா
மானுட நேயத்தில்!
நியாயங்கள்
எட்டும் தொலைவில்தான்.
ஆனாலும்
எட்டுவதே இல்லை
கருமைக்கு மட்டும்.
இனிய உலகில்
எழுந்த மானுடமே!
தீய்ந்து போன கருமையை
தீண்டாமைத் தீயால்
மேலும் தீய்த்திடாதே;
கருமைக்கும் தெரியும்
வெடிமருந்தும் கருப்பென்று.
– பொதட்டூர் புவியரசன்