சிறுவயதில் தீண்டாமைக் கொடுமைக்காகக் கோணிப்பையைச் சுருட்டிக் கொண்டு பள்ளிக்குச் சென்ற சிறுவன் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்றானதற்கு இடைப்பட்ட வரலாறு என்பது, இந்தியாவின் பெரும்பான்மை மக்களைக் கொண்ட மதமான ஹிந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களையே தீண்டத்தகாதவர்களாக்கித் தன் கொடுங்கரங்களை ஏவியபோது அதன் உண்மை முகத்தைக் கிழித்துத் தொங்கவிட்டு, தான் இறக்கும் போதும் ஹிந்துவாக இறக்காத அம்பேத்கரின் சுயமரியாதை வரலாறு ஆகும்.
பள்ளிப் பருவத்திலிருந்தே ஜாதி ரீதியான புறக்கணிப்புகள் உளியாக மாறி அவரைக் குத்திக் குத்தி சிற்பமாகச் செதுக்கியது என்றால் மிகையல்ல!
பட்ட அவமானங்களைக் கல்விப் பட்டங்களால் வென்ற சட்ட மேதை அம்பேத்கர்!
“இந்தியாவில் கண்டறியாத சமத்துவத்தை நியூயார்க் நகரில் கண்டேன். ஜாதி மத பேதம் இல்லாமல் அனைத்திலும் சமத்துவமாக மனிதர்கள் பழகலாம் என்பதைக் கண்டேன். மக்கள் அன்பு மழை பொழிந்தார்கள். அடடா! இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலாவது பிறந்திருக்கக் கூடாதா? ‘இந்தியனாக இரு’ என்பது எவ்வளவு மோசடி என்பதை உணர்ந்தேன்! இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று எண்ணிய போது கவலையாகத்தான் இருந்தது!”
என்று 1913ஆம் ஆண்டு ஜூலை மாதம் பரோடா மன்னரின் உதவியால், அரசில் பத்தாண்டு காலம் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் சென்ற போது அவரின் உள்ளக் குமுறல் எத்தகையதாக இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
தான் பிறந்த நாடு என்பது ஒரு மனிதனுக்கு இறப்பு வரை மறக்க முடியாமல் ஒட்டி உறவாடுவதாகும். வேறு எங்காவது பிறந்திருக்கக் கூடாதா என்று அவர் மனம் ஏங்கி வருந்துவதற்குக் காரணம், ஒரு முறை காந்தியிடம் அவர் சொன்னது போல,
“காந்திஜி அவர்களே, எனக்குச் சொந்த நாடு இல்லையே! எலிகளை விட நாய்களை விட மோசமாக நடத்துவதும், குடிக்கக்கூடத் தண்ணீர் கிடைக்காமல் செய்வதுமான இந்த நாட்டை என் சொந்த நாடு என்று எப்படிச் சொல்வது? சுயமரியாதை உள்ள எந்தத் தாழ்த்தப்பட்டவனும் இந்த நாட்டைப் பற்றிப் பெருமை கொள்ள மாட்டான்” என்று துக்கம் தொண்டையை அடைக்க அவர் சொன்னதும் அவர் வாழ்நாள் முழுவதும் அவரைத் துரத்திய ஜாதி வெறியால் தான் என்பது இந்த இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய இழுக்காகும்.
“பண்டைக் கால இந்தியாவின் வாணிகம்” என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையைக் கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்று எம்.ஏ. பட்டமளித்தது. ‘இந்தியாவில் ஜாதிகள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி ஜாதிகள் பெயரால் நடக்கும் கொடுமைகளை அவர் அதில் விளக்கி இருந்தார். 1916 ஆம் ஆண்டு ‘இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையைக் கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்று ‘தத்துவப் பேரறிஞர்’ பட்டத்தைக் கொடுத்தாலும் இந்தியாவில் நான் தீண்டப்படாதவன் தானே என்று மனம் நொந்து கேட்கிறார்.
படித்துப் பட்டம் பெற்றாலும் பணியில் சேர்ந்தாலும் கூட இந்து மதச் ஜாதி தன்னை விரட்டிக்கொண்டே இருந்தது என்கிறார்.
அமெரிக்க அறிஞர்கள் போற்றிய போதும், பரோடா மன்னரிடம் வேலை பார்த்த போது தனக்குக் கீழ் இருக்கும் பணியாளர்கள் கோப்புகளை மேஜை மீது தூக்கி எறிவதும் பாதம் பட்டால் தீட்டாகிவிடும் என்பதால் தரை விரிப்புகளைச் சுருட்டி மறைத்ததும் தங்கி இருந்த விடுதிக்குள் பார்சிகள் சிலர் கைகளில் தடியோடு சிவந்த கண்களுடன் வந்து, தாழ்த்தப்பட்டவன் தானே உடனே விடுதியைக் காலி செய் எனத் துரத்தியதும், அலைந்து அலைந்து பசியால் களைப்பு தாங்க முடியாமல் சோர்ந்து போய் மரத்தடியில் தேம்பித் தேம்பி அவர் அழுததையும் அறியும்போது கும்பமேளா பிரம்மாண்டங்களும் கோயில்களின் தங்கக்கூரைகளும் தாங்கி பெருமை பீற்றிக்கொள்ளும் இந்து மதத்தின் திரை மறைவில் உறைந்திருக்கும் மனித நேயமற்ற தன்மை பளிச்சிடுகிறது.
ஹிந்துவாகப் பிறந்தது என் தவறல்ல; அது பிறப்பின் நிலை, அவ்வளவுதான்.அதைத் தடுக்க என்னால் முடியாது. ஆனால் மனிதாபிமானமற்ற அந்த மதத்தில் வாழ மறுப்பது என் கையில் தான் இருக்கிறது. ஆகவே நான் இந்துவாகச் சாகமாட்டேனென யோலா மாநாட்டில் அறிவித்தார்.
சட்டத்திலாவது ஹிந்து மதத்திற்கு ஆதாரம் உண்டா? என்று ஹிந்து மதத்தைத் தோலுரிக்கிறார்.
“இலண்டனில் வட்ட மேசை மாநாட்டில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் உட்பட பல பண்டிதர்களும் அறிஞர்களும் கலந்து கொண்டார்கள். அவர்களில் அதிகம் படித்து உலகில் உள்ள பட்டங்களைப் பெற்ற நபர் நான் ஒருவன் தான் அம்மாநாட்டில் பேசும் போது அரை வயிற்றுக் கஞ்சிக்கும் இடுப்பில் துணிக்கும் வக்கில்லாத ஊமைகளின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன் என்றே தொடங்கினேன்” என்கிறார்.
பம்பாய் மேனாள் ஆளுநரின் உதவியால் பம்பாய் செடென்காம் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டவன் என்பதால் முதலில் அலட்சியப்படுத்திய மாணவர்கள் அவர் பாடம் நடத்த ஆரம்பித்ததும் மெய்மறந்து கேட்டார்கள். மற்ற கல்லூரி மாணவர்களும் அந்தந்தக் கல்லூரியின் முதல்வரின் அனுமதி பெற்று அவரிடம் பாடம் கேட்டார்கள். மாணவர்கள் உலகில் என் மதிப்பு உயர்ந்தாலும் தீண்டாமை வியாதி மட்டும் ஒழியவில்லை என்று கூறும் அம்பேத்கர் தன் வாழ்க்கை முழுவதும் தன்னைத் தாழ்த்திய ஜாதித் திமிரைத் தான் பெற்ற கல்வியாலேயே துரத்தி அடித்தவராவார்.
பாரிஸ்டர் பட்டம் பெற்றதும் வழக்கறிஞராகப் பதிவு செய்து 1923 ஜூன் மாதம் தொழிலை ஆரம்பித்த நிலையில், அப்போதும் தாழ்த்தப்பட்டவர் என்று வழக்குகள் வருவது முதலில் சுமாராகவே இருந்தாலும் தன் அறிவுத்திறமையாலும் வாதத் திறமையாலும் பெயரும் புகழும் பெற்று தகுதி என்பது பிறப்பால் வருவதல்ல என்பதை மெய்ப்பித்தார்.
தீண்டப்படாதவர் என்பதால் ஏறிய வண்டியில் இருந்து உதைத்துத் தள்ளப்பட்டு, பள்ளியில் ஒதுக்கி உட்கார வைக்கப்பட்டு, ஹாஸ்டல், ஹோட்டல், முடி திருத்தகம், கோவில்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு, சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டு இழிவுபடுத்தப்பட்ட அண்ணல் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக ஆனதோடு அரசமைப்புச் சட்டத்தை அமைக்கும் குழுவுக்கும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர். அம்பேத்கரின் இளமைப் பருவம் வறுமையிலும் அவமானங்களிலும் சூழப்பட்டது. கற்றலில் அவருக்கிருந்த அளவிட முடியாத தாகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் உதவித்தொகை பெறுவதும் அவ்வளவு எளிதாக இல்லை.
என்றாலும், இறுதிவரை படித்துக் கொண்டே இருந்தவர் அம்பேத்கர்! இறுதிவரை போராடிக் கொண்டே இருந்தவர் அம்பேத்கர்!!
தற்போது திராவிட மாடல் அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை’ நடப்பு ஆண்டில் 65 கோடி அயலக உயர்கல்வித் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது என்பதைப் பார்க்கும்போது அம்பேத்கரின் வலி மிகுந்த வாழ்க்கை பல்லாயிரவரின் வளம் மிகுந்த வாழ்க்கைக்கு விதையிட்டு இருக்கிறது என்பதை அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாளில் நன்றியுடன் நினைவு கூர்வோம்!
(‘அம்பேத்கர் பேசுகிறார்’ புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது)
_______