சென்ற இதழ் தொடர்ச்சி..
மேலும், ஆளும் வர்க்கம் அவற்றின் நிலைத்தன்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது 1937இல் நடந்த தேர்தலைக் கணக்கில் கொண்டு அம்பேத்கர் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் என்னதான் செய்தாலும் இந்த நாட்டில் பிராமண வகுப்பினர்தான் ஆள்கிற வகுப்பாக இருக்கிறார்கள். அது இன்று கண்கூடானது. வேறொன்றும் நடந்துவிடவில்லை. ஏதாவது ஒன்றை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்று சொன்னால், இந்த நாட்டின் பிரதானப் பகுதியாக ஒரு வகுப்பினர் மட்டுமே ஆளும் வர்க்கமாக இருக்கிறார்கள்” என்கின்ற உண்மையை உரைக்கிறார்.
ஆம் தோழர்களே, அம்பேத்கர் குறிப்பிடும் காலத்திற்கும் முன்பிருந்தே இன்றுவரையிலும் இந்த நாட்டின் அரசுத் தலைமைப் பதவிகளில் ஒரு வகுப்பினர் மட்டுமே அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீடு கோரும் அவர்கள், ஆண்டாண்டு காலமாகத் தங்களின் விகிதாசாரத்தைத் தாண்டிய பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தகுதி திறமை இருந்தும் பார்ப்பனர்களைத் தவிர பிறர் செல்லக்கூடாத, செல்ல முடியாத தலைமை இடங்களாகவே அவை உள்ளன. 100க்கு 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள், நூற்றுக்கு நூறு பதவிகளையும் தாங்களே அனுபவித்துத் தீர வேண்டும் என்கின்ற எண்ணமும், பார்ப்பனரல்லாத மக்களுக்கு எப்போதும் எட்டிவிடக் கூடாது என்கின்ற நோக்கமுமே அவர்களை ஆதிக்கப் போதையில் ஆழ்த்துகிறது.
இதோ 2023லும் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கான சான்று,
குடியரசுத் தலைவர் செயலகத்தின் மொத்தப் பதவிகள் – 49;
பார்ப்பனர்கள் – 39, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 4; பிற்படுத்தப்பட்டோர் – 6.
குடியரசு துணைத் தலைவர் செயலகத்தின் பதவிகள்- 7:
பார்ப்பனர்கள்- 7, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 0; பிற்படுத்தப்பட்டோர் -0,
கேபினட் செயலாளர் பதவிகள் – 20.
பார்ப்பனர்கள் – 17; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 1 பிற்படுத்தப்பட்டோர் – 2.
பிரதமர் அலுவலகத்தில் மொத்தப் பதவிகள் – 35
பார்ப்பனர்கள் – 31 ; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 2 ; பிற்படுத்தப்பட்டோர் 2.
விவசாய அமைச்சரகத்தில் மொத்தப் பதவிகள் – 274
பார்ப்பனர்கள்-25; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 45; பிற்படுத்தப்பட்டோர் – 10.
பாதுகாப்பு அமைச்சகம் – மொத்தப் பதவிகள் – 1379
பார்ப்பனர்கள்- 1300; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் –48; பிற்படுத்தப்பட்டோர் – 31.
சமூக நலன் மற்றும் சுகாதார அமைச்சகம்-மொத்தப் பதவிகள் – 209
பார்ப்பனர்கள் – 132 ; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 17; பிற்படுத்தப்பட்டோர் – 60.
நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள் – 1008:
பார்ப்பனர்கள் – 942 ;
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 20; பிற்படுத்தப்பட்டோர் – 46,
பொருளாதாரம் மற்றும் வணிகவியல் அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள் – 409;
பார்ப்பனர்கள் – 327: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 19.
பிற்படுத்தப்பட்டோர் – 63,
தொழில் அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள் – 74:
பார்ப்பனர்கள் – 59; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 4; பிற்படுத்தப்பட்டோர் – 9.
கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் – 121
பார்ப்பனர்கள் – 91; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 9 பிற்படுத்தப்பட்டோர் – 21.
ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் ஒட்டு மொத்தம்-27;
பார்ப்பனர்கள் – 25: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 0;
பிற்படுத்தப்பட்டோர் – 2.
தூதர்கள் (வெளி நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்) – 140:
பார்ப்பனர்கள் – 140; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 0;
பிற்படுத்தப்பட்டோர் – 0.
மத்திய அரசு பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் – 116:
பார்ப்பனர்கள் – 108; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 3; பிற்படுத்தப்பட்டோர் – 5.
ஒன்றிய பொதுச் செயலாளர் பதவிகள் – 26
பார்ப்பனர்கள் – 18, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 1
பிற்படுத்தப்பட்டோர் -7,
உயர்நீதிமன்ற நீதிபதிகள் – 330;
பார்ப்பனர்கள் – 306, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 4; பிற்படுத்தப்பட்டோர் – 20.
உச்சநீதிமன்ற நீதிபதி – 26:
பார்ப்பனர்கள் – 23; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 1 ; பிற்படுத்தப்பட்டோர் 2.
அய்.ஏ. எஸ் அதிகாரிகள் 3600;
பார்ப்பனர்கள் – 2750, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் – 300, பிற்படுத்தப்பட்டோர் 350,
டில்லியை அடிப்படையாகக் கொண்ட “யங் இந்தியா” எனப்படும் நிறுவனத்தினர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள்தான் இவை. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் இட ஒதுக்கீடு உரிமை இருக்கும்போதே பார்ப்பனரல்லாத மக்களுக்கு (BC, MBC, SC, ST) இழைக்கப்படும் அநீதி இவ்வளவு என்றால் இன்னும் இட ஒதுக்கீடு என்னும் உரிமையை ஒழித்து விட வேண்டும் என்கின்ற பி.ஜே.பி.அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டால், பார்ப்பனர் அல்லாத மக்களின் நிலைமையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆளும் வர்க்கம் ஆட்சிக்கு வருவதனால் அந்த ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டம் என்ன? அதன் தத்துவம் என்ன? அது எதை நம்புகிறது? என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஆளும் வர்க்கம் மனிதர்களைப் பல மட்டங்களாகப் பிரித்து, ஒன்றின் மீது மற்றொன்றை வைத்துச் சமத்துவத்தில் நம்பிக்கையின்றி எல்லா மனிதர்களும் மனிதர்கள் அல்ல, சிலரை தொடக் கூடாது, சில வகுப்பார் மட்டுமே கல்வி பெறத் தகுதி உள்ளவர்கள். மற்ற வகுப்பாருக்கு அத்தகுதி இல்லை. தகுதியற்ற இவர்கள் அடிமையாகப் பிறந்தவர்கள், அடிமையாகவே சாக வேண்டும் என நம்பினால் நான் கேட்கும் கேள்வி இதுதான். ” ஒரு தேசிய அரசு அமைத்து அந்த அரசு அத்தகைய ஆளும் வர்க்கத்தின் கைக்குள் போனால் தற்போது பதவியில் உள்ள அரசைவிடத் தேசிய அரசு சிறப்பாகச் செயல்படுமா?” என்கிற கேள்வியை முன் வைக்கிறார். மேலும் “அரசியல் அதிகாரம் ஆளும் வர்க்கத்தைப் பலப்படுத்த மட்டும் பயன்படும் என்றால் மற்ற வகுப்பாரின் உரிமைகள் நசுக்கப்படும். இதில் எங்கு இருக்கிறது இந்தியாவின் ஜனநாயகம்” என்கின்ற கேள்வியையும் முன் வைக்கிறார். ஆளும் வர்க்கம் ஆட்சிக்கு வருவது என்பதும் ஆள வேண்டும் என்கின்ற நோக்கம் கொண்டவர்கள் ஆட்சிக்கு வருவது என்பதும் ஒரே நிலைப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும், இவ்விருவருக்கும் அதிகாரம் செலுத்துவதும், ஆதிக்க மனப்பான்மையும் தான் இருக்கிறதே தவிர புதியதாக மாற்றம் எதுவும் நிகழப்
போவதில்லை. இந்நிலைமையால்தான் பழமை மிகச் சிறந்ததாகவே இருந்து கொண்டிருக்கிறது இந்நாட்டில் என்று விளக்குகிறார். எவ்வித மாற்றமும் இல்லாமல் அடிமை சமூகமாக மாற்றி அமைக்கப்பட்ட மக்கள்மீது அதிகார ஆளும் வர்க்கம் அதிகாரமற்ற மக்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை என்கிறார் அம்பேத்கர்.
நமது நோக்கம் என்ன?
ஆளும் அதிகார வர்க்கம் இப்படி இருக்கையில் நாம் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்கின்ற பாதையைத் தீர்மானித்துக் காட்டுகிறார் புரட்சியாளர் அம்பேத்கர்.
அதிகார வர்க்கத்தின் மாறுபாட்டை நாம் எதிர்பார்த்தாலோ அல்லது வலியுறுத்துவதாலோ அதன் இறுதி முடிவு மாற்றம் இல்லாமல் அந்த அதிகாரத் தன்மையை நிலைபெறச் செய்வது தான் அவர்களின் இறுதி முடிவு என்பது நமக்குப் புரியும். அதிகார வர்க்கத்தின் ஆதிக்க வேரைப் பிடுங்கி எறிய வேண்டுமென நினைப்போருக்கும், பேதமில்லாத சமூக, பொருளாதாரச் சுரண்டல் இல்லாமல் அனைவரும் சமத்துவமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என எண்ணுவோருக்கும், அம்பேத்கர் சொல்வது என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே!
இந்தியாவில் ஹிந்துக்களின் நலன் என்பது ஒட்டுமொத்த மக்களின் நலன் என எண்ணுவது முட்டாள்தனங்களில் முதலாவது முட்டாள்தனம். ஹிந்துக்களின் நலன் என்பது பார்ப்பனர்களின் நலன் என்பதே உண்மை. ஒரு திட்டத்தை ஆதரிப்பதிலும், எதிர்ப்பதிலும் எப்போதும் பார்ப்பனரல்லாத ஹிந்துக்களின் பக்கம் நின்ற வரலாறு பார்ப்பன ஹிந்துக்களுக்குக் கிடையாது. மாறாக 3% இருக்கக்கூடிய பார்ப்பனர்களின் தேவைக்காக, நன்மைக்காகத்தான் 97% ஹிந்துக்களின் உணர்வுகளை, உரிமைகளை எதிர்த்துச் சாதித்துக் கொள்ளும் பார்ப்பன ஹிந்துவாகவே அவர்கள் இருப்பார்கள். பார்ப்பனர்கள் வேதமத ஹிந்து கருத்துருவாக்கத்தைப் பரப்புவதிலும் பாதுகாப்பதிலும் மிகத் தெளிவுடன் இருப்பர். இவ்வகைச் சுரண்டல், பிளவு, பிறவி ஜாதி இழிவு, பாலினப் பாகுபாடு, சுயமரியாதையற்ற தன்மை, மூடநம்பிக்கை, புராணம், இதிகாசம், பகுத்தறிவற்ற தன்மையை நிலைபெறச்செய்யவே கடவுள், மதம், ஜாதி, சாம்பிரதாயங்கள் உருவாக்கப்பட்டன. சமத்துவமற்ற இந்தப் பித்தலாட்டங்களை ஏற்றுக் கொண்ட மக்கள்தான் ஹிந்துக்கள் என்பது மிகத்தெளிவாகத் தெரியும். இவ்வேலைகளை மிகச் சரியாகச் செய்யும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒருவருக்கொருவர் பிரிந்திருந்து, சண்டையிட்டு, ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம். இதையே பார்ப்பன மதமும் விரும்புகிறது. பார்ப்பனரல்லாத மக்களாகிய நம் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே மதம், ஜாதி, கடவுள், சாஸ்திர புராணங்கள் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டன என்பதை மக்கள் உணர வேண்டும். இந்தக் குப்பைகளிலிருந்து வெளியேற்றமே நல்ல பண்பாடு பகுத்தறிவு நெறிமுறைக்கு நம்மை இட்டுச் செல்லும். பகுத்தறிவு சமதர்ம நெறிமுறையே பிரிந்து கிடக்கும் மக்களை இணைக்கும், ஜாதி பேதங்களை ஒழிக்கும். அடிப்படை சமூக பண்பாடு மாறாமல், வெறும் அரசியல் மாற்றம் மட்டும் போதும் என்பது எவ்வகையிலும் மக்களுக்கு நன்மை பயக்காது என்பதில் மிகத் தெளிவாக நிற்கிறார் அம்பேத்கர். அடிப்படை சமூக பண்பாட்டு மாற்றம் தான் நல்ல அரசியலை, நல்ல அரசைத் தேர்ந்தெடுக்கும் செயல் என நம்புகிறார்.
குப்பையில் தூக்கி எறிய வேண்டிய இந்து மதத்தில் ஜாதியெனும் அழுக்கில் நாமெல்லாம் ஒட்டிக்கொண்டு, பெருமை பேசிக்கொண்டு, பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி,
வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமை என்று ஒவ்வொன்றையும் பார்ப்பனியம் என்ற அதிகாரக் குவியலிடம் நாம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறப் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லும் வழி “பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து அரசியல் களம் கண்டால் தான் நமக்கான விடுதலையை வென்றெடுக்க முடியும்” என்கிறார். 1944 செப்டம்பர் 23 மாலை சென்னை எழும்பூர் ரயில்வே ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் ஷெட்யூல்டு வகுப்பு அல்லாத பிறஜாதித் தொழிலாளர்கள் இணைந்து பாபாசாகிப் அம்பேத்கருக்கு வரவேற்பு அளித்த நிகழ்வில் இப்படி பேசுகிறார்.
“ஷெட்யூல்டு வகுப்பு தொழிலாளர்களும் பிற ஜாதிகளைச் சார்ந்த தொழிலாளர்களும் சென்னையில் முதன்முதலாக ஒன்றாக இணைந்து இருப்பதைக் காண்பது மகிழ்ச்சி
அடைகிறேன். நீங்கள் ஒன்றாக இணைந்து நின்று போராடி உங்கள் வறுமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தொழிற்சங்கங்கள் அமைப்பதை விட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மிகவும் முதன்மையானது” எனப் பேசுகிறார். அரசியல் அதிகாரம் தான் ஒட்டுமொத்த மாற்றத்தையும் மாற்ற இயலும் என்றும் அதற்குத் தடையாய் இருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஜாதி, மதம், கட்சி அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு, பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்றிணைந்து, நமது உரிமைக்காக அதிகாரத்தைக் கைப்பற்றுங்கள். அந்த அரசியல் அதிகாரம் தான் ஆதிக்கவாதிகளின் திமிரை உடைக்கும் என்கிறார்.
மேலும் 1944 செப்டம்பர் 23 இல் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த நிகழ்வில் இப்படியாகப் பேசுகிறார், “பிராமணரல்லாதவருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே, தாமதமின்றிப் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்” என்று முடிக்கிறார் அம்பேத்கர். இக்கருத்தை தான் நாம் மிகத் தெளிவாகச் செயல்படுத்திட வேண்டும். ஒன்றிணைதல் என்கிற ஆயுதம் தான் எதிரிகளை வீழ்த்தும் வழி. அவ்வழியே சுதந்திரத்துக்கான, சமத்துவத்துக்கான வழி. இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கவே அரசியல் கட்சிகளுக்குக் கடவுளும் ஜாதியும் தேவைப்படுகிறது. பார்ப்பனரல்லாத மக்களிடம் இந்த ஒற்றுமை ஏற்படவில்லை என்றால் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் பார்ப்பனியத்தின் அதிகாரத்துக்கும், சூழச்சிக்கும் அடிமையாகவே இருந்துவிட வேண்டியதுதான் என்பதை நினைவில் கொண்டு நம் சுயமரியாதைக்காக நாம் போரிட வேண்டும். ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மனித மாண்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் அதிகாரம் என்று இக்காலகட்டத்திற்கும் அம்பேத்கரின் பேச்சு சரியாகவே பொருந்துகிறது. அன்று தொட்டு இன்றுவரை நடப்பதெல்லாம் ஆரியர் – திராவிடர் போர் தான் என்பதை உணர்தல் வேண்டும். நம் ஒவ்வொரு நகர்வும் சமத்துவமற்ற ஹிந்து மதக் கோட்பாட்டைத் தகர்க்கும் அடியாக இருக்க வேண்டும். உரிமைகளற்ற மக்களின் உரிமைக் குரலாய் அரசியல் அதிகாரம் கைப்பற்ற முனைப்போடு நிமிர்வோம். ஜனநாயகத் தன்மையின் அடிச்சுவட்டை அம்பேத்கரின் துணையோடு வென்றெடுப்போம்.