“சடசட”வென்ற ஓசை கேட்டு வெளியே பார்த்தார் பரமசிவம். இருண்ட வானத்திலிருந்து கோடை மழை கொட்டிக் கொண்டிருந்தது. கூடவே இடியும் மின்னலும்.
பரமசிவம் மழையைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இந்த ஆண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. இதுபோன்று இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்தால் பூமி குளிரும். நீர் மட்டம் உயரும். மின் மோட்டார் இருப்பதால் வயலுக்கு நீர் பாய்ச்சி விவசாயம் செய்யலாம் என முடிவு செய்தார்.
கோடை மழை கொட்டித் தீர்த்து ஓய்ந்தது. பரமசிவம் வீட்டை விட்டு வெளியே வந்தார். கருமேகங்கள் கலைந்து சூரிய ஒளி கிராமத்தில் பாய்ந்திருந்தது. தெருக்களில் மழை நீர் ஓடியது.
கிராமத்தில் பலரும் மகிழ்ச்சியுடன் வெளியே வந்து மழை கொட்டியதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
“கொடுக்கா மூலை மின்னுச்சி! எனக்கு அப்பவே தெரியும். மழை வரும்னு”, என்று ஒருவர் தன் திறமையை வெளிப்படுத்தும் விதமாகப் பேசினார்.
“எனக்கு மட்டும் தெரியாதா என்ன?” கொடுக்காமூலை மின்னுதடா. கொள்ளுச் செத்தையை எடுத்து வையடா மாட்டுக்கு”ன்னு பெரியவங்க சொல்லி வைச்சிருங்காங்களே,” என்று சொல்லி ஒருவர் அவருக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக தனக்கும் தெரியும் என்பதைக் காட்டிக்கொண்டார்.
இப்போது நன்றாக வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டாலும் சிறுசிறு தூரல்கள் விழுந்து கொண்டிருந்தன.
சிறுவர்களும், சிறுமிகளும் வீட்டிற்கு வெளியே ஓடிவந்து “வெயிலும் அடிக்குது மழையும் பெய்யுது. காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்”, என பாட்டுப் பாடி வெயில், மழை இரண்டையும் இணைத்துப் பேசிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஓடும் நீரில் மிதக்கும் பூச்சிகளை பறவைகள் கொத்திச் சென்றன. சிறுவர்கள் காகிதக் கப்பல் செய்து மிதக்கவிட்டனர்.
“கோடை மழையில நனையாதீங்கடா”, என்று பெரியவர்கள் அவர்களை வீட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில் முத்துசாமி வீட்டைவிட்டு சாவகாசமாக வெளியே வந்தார். பரமசிவம் வீட்டிலிருந்து பத்து வீடு தள்ளி இருந்தது அவர் வீடு. இருவரும் விவசாயப் பணிகள் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
“எப்படியும் வாய்க்காலில் தண்ணீர் வரப்பேறது இல்லை. மோட்டார் பம்ப் செட்டைத்தான் நம்பி விவசாயம் பண்ணனும். இந்த மழையால தண்ணீ மட்டம் கூடும். இன்னும் இதுபோல ரெண்டு மழை பெய்ஞ்சா பிரச்சனையே இருக்காது.” என்றார் முத்துசாமி.
“நம் கையில் என்ன இருக்கு. எல்லாம் ஆண்டவன் செயல். எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்”, என்று கூறியபடியே நெற்றியில் இடப்பட்டிருந்த நாமம் மழைத் துளிபட்டு நனைந்து கண்களுக்கு அருகில் ஒழுகியதைத் துடைத்துக்கொண்டார் பரமசிவம்.
“ரெண்டு வருஷமா மழை பெய்யாம கொல்லைக் காடெல்லாம் வறண்டு போய்க் கெடந்துச்சே, அப்போ எல்லாம் அந்த ஆண்டவன் என்ன பண்ணிகிட்டு இருந்தான்? பேசாம நடக்க வேண்டியதைப் பார்ப்போம்”, என்றார் முத்துசாமி.
“போன வருஷம் வெளச்சல் சரியில்லாமப் போயிடுச்சு. வைச்ச நகை நட்டு, பண்டம் பாத்திரம் எதையுமே இன்னும் மூக்கல. இந்த வருஷமாவது வெளைஞ்சாத்தான் உசிரு பொழைக்கலாம். என்ன விதையை வெதைக்கலாமுன்னு ஜோசியர்கிட்ட கேட்கணும்”, என்றார் பரமசிவம்.
அவர் பேச்சை இரசிக்கவில்லை முத்துசாமி.
“குறுவைப் பட்டத்துக்கு நம்ம மண்ணுக்கு ஒத்த விதையை வெதைக்க வேண்டியதுதானே? இதுல ஜோசியருக்கு என்ன வேலை பரமசிவம்?”
“இயற்கை விவசாயம்னு சொல்றாங்களே. அதையும் செய்ஞ்சு பார்க்கலாமா முத்துசாமி?”
“செய்யலாம். ஆனா லாபம் எதிர்பார்க்க முடியாதே. பூச்சி மருந்து, இரசாயன உரம் பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அது நல்ல விஷயம்தான். ஆனாலும் வருமானத்
தையும் பார்க்க வேண்டியிருக்கல்லவா?” இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது மகிழ் அதிரன் அங்கு வந்தான். அவன் இந்த ஆண்டுதான் தாவரவியல் பாடத்தில் பட்டப்படிப்பை முடிக்க இருக்கிறான். அவனைப் பார்த்த பரமசிவம்,
“இதோ படிச்ச தம்பியே வருது… அதுகிட்டேயே கேட்போம். “தம்பி. ஆறு மாசம் ஒரு வருஷம்னு நெல்லு நீண்டகால பயிரா இருந்தப்போ மனுஷங்களும் நல்லா கல்லுபோல திடகாத்திரமா இருந்தாங்க. இப்போ குறுகிய காலப் பயிர் வந்தப்புறம் மனுஷன் சீக்கிரம் சீக்கிரம் செத்துப் போயிடுறான். மொதல்ல இந்தக் குறுகிய காலப் பயிரை ஒழிச்சிக் கட்டணும்.”
மகிழ்அதிரன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்,
“நீங்க நினைப்பது போல எதுவும் இல்லை அய்யா. நாடு சுதந்திரம் அடைந்தபோது மனிதர்களின் சராசரி வயது நம் நாட்டில் 31தான். ஆனால், தற்போது ஆயுட்காலம் சுமார் 70 ஆண்டுகளாக உயர்ந்துட்டுது. இது இன்னமும் அதிகரிக்கும். எல்லாம் அறிவியல் முன்னேற்றம்தான். ஒரு காலத்தில் அரிசிப் பஞ்சம் நிறையவே இருந்தது. சோறு இல்லாட்டி எலிக்கறி, ரொட்டி சாப்பிடச் சொன்னாங்க அப்போ இருந்த அரசியல்வாதிங்க. அதுக்கப்புறமா அய்.ஆர்.8 போன்ற குறுகிய காலப் பயிர்கள் எல்லாம் வந்தப்புறம் அரிசிப் பஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது. இப்போ நிறைய நெல் ரகங்கள் வந்துடுச்சி. அய்.ஆர்.20, டி.கே.எம்.9, ஆடுதுறை-36 போன்ற நிறைய நெல் ரகங்கள் மூலம் விளைச்சல் பெருகிடுச்சி.”
“நீண்டகாலப் பயிரைச் சாப்பிட்டா நீண்ட ஆயுளும், குறுகிய காலப் பயிரைச் சாப்பிட்டா குறைஞ்ச ஆயுளும் இருப்பதா நெனைச்சேன். அது தப்பா?” என்று கேட்டார் பரமசிவம்.
“அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. குறுகிய காலப் பயிரால்தான் நாட்டில் அரிசிப் பஞ்சம் தீர்ந்திடுச்சி,” என்று பதில் சொன்னான் மகிழ் அதிரன்.
மேலும் கேட்டார் பரமசிவம்.
“குறுகிய காலப் பயிரில் பூச்சி அதிகம் விழுதே, பூச்சி மருந்தை அடிச்சி அடிச்சி நாமெல்லாம் விஷத்தைத்தானே சாப்பிடுறோம். பஞ்ச கவ்யம் தெளிச்சா என்ன?”
“வேளாண்மை அலுவலகங்கள் நிறையவே இருக்கு. அந்த அலுவலர்கள் சொல்றதைக் கேட்டு விவசாயம் செய்ய வேண்டும். அப்படி செய்ஞ்சா நிறையவே மகசூல் எடுக்கலாம். அறிவியல் அடிப்படையில் விவசாயம் செய்யணும்,” என்று பதில் சொன்னான் மகிழ் அதிரன்.
“நல்ல சன்ன ரகமா, வெள்ள வெளேர்ன்னு சோறு இருக்கணும். அது போல நெல்லைத்தான் பயிரு வைக்கணும்” என்று மேலும் சொன்னார் பரமசிவம்.
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. கருப்புக் கவுனி, சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, பாசுமதி போன்ற அரிசி வகைகள் உடம்புக்கு நல்லதுதான். ஆனால் மோட்டா ரக நெல்லும் அதிக மகசூலைக் கொடுக்கும். டி.கே.எம்.9, பொன்மணி என்கிற சி.ஆர்.1009 என்ற மோட்டா ரக நெல் அதிக மகசூலைக் கொட்டும். முக்கியமாக மழையைத் தாங்கும்; பலத்த காற்று வீசினாலும் தாங்கி நிற்கும். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும். அதுதானே முக்கியம்,” என்று விளக்கினான் மகிழ் அதிரன்.
“ரேஷனில் கொடுக்கிற அரிசியைச் சாப்பிடலாமா?” என்று கேட்டு வைத்தார் முத்துசாமி.
“என்ன இப்படி கேட்டுட்டீங்க. நமது அரசால் கொடுக்கப்படும் ரேஷன் அரிசி நவீன அரிசி ஆலையில் தரமாக அவித்து அரைக்கப்படுகிறது. தாராளமாகச் சாப்பிடலாம். சன்னரக அரிசியும் ரேஷனில் கிடைக்கிறது. அதை வீணாக்காமல் சமைச்சி சாப்பிடணும்,” என்று பதில் சொன்னான் மகிழ்அதிரன்.
சில நாட்கள் கடந்தன. நடுநடுவே கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியது. காவிரியில் தண்ணீர் வராததால் பல ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு நிலத்தடி நீரையே பாசனத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இலவச மின்சாரம் தமிழ்நாட்டு அரசு தருவதால் மோட்டார் பம்ப் செட் வைத்திருப்பவர்கள் குறித்த காலத்தில் நாற்றங்கால் தயார் செய்து, நெல் விதைகளைத் தூவி, வளர்ந்தபின் நாற்றடித்து நடவு செய்வார்கள்.
விவசாயப் பணிகள் தொடங்கும் காலமும் வந்தது. ஆயினும் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. இதுபற்றி மக்கள் பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். பரமசிவம் மிகவும் ஆத்திரப்பட்டார்.
“எல்லாம் இந்த நூறு நாள் திட்டத்தால் வந்த வினை. எல்லோரும் அங்கே போயிடுறாங்க. தண்ணி பாய்ச்ச, அண்டை வெட்ட, நாத்து அடிக்க, நடவுநட எதுக்குமே ஆளுங்க கெடைக்கல. மொதல்ல நூறு நாள் வேலையை ஒழிச்சிக் கட்டணும்”, எனக் கடுமையாகப் பேசினார்.
அவருக்குப் பதில் சொன்னார் முத்துசாமி.
“பரமசிவம், நூறுநாள் திட்டத்தைக் குறை சொல்லாதே. விவசாய வேலை வருஷம் பூராவுமா இருக்கு? மக்கள் பலரும் ஏதோ ஒரு வேலை செய்ஞ்சி சம்பாதிக்கிறாங்க. எத்தனையோ பேரு அடுத்தவன் காசில் சாப்பிட்டுகிட்டு பிச்சை எடுத்துச் சாப்பிடறதா வாய்கூசாம பொய் சொல்லிக்கிட்டும் திரிஞ்சிகிட்டும் கிடக்கிற இந்தக் காலத்தில உழைச்சி நாலு காசு சம்பாதிக்கிறவங்களைக் குறை சொல்லக்கூடாது. விவசாய வேலைக்கு எவ்வளவோ மெஷின்கள் வந்துடுச்சி. கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதுமட்டுமல்லாமல் வடநாட்டிலேயிருந்து அங்க பொழைக்க வழியில்லாம நம்ம தமிழ்நாட்டுக்கு வேலை தேடி சாரை சாரையா வந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களும் வேலை செய்வாங்க. கவலைப்படவேணாம். இதைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்த மகிழ்அதிரன் அவரது கருத்தை ஆமோதித்தான்.
“தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் படித்து முன்னேறி எல்லாத்துறைகளிலும் வேலைக்குப் போறாங்க. வெளிநாடுகளுக்கும் போறாங்க. படிக்காத பிள்ளைகளைத் தேடித் தேடி அழைச்சிகிட்டு வந்து பள்ளியில் நாம்தான் சேர்க்கிறோம். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு, உதவித் தொகை எல்லாமே தமிழ்நாட்டில்தான் தரப்படுகிறது. இது பெரும் சாதனையல்லவா? கூலி வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னு நாம் கவலைப்படலாமா? நடவு செய்யவும், அறுவடை செய்யவும் மெஷின்கள் வந்துடுச்சி. கவலைப்படாமல் விவசாய வேலைகளை நாம் பார்க்க வேண்டியதுதான். இந்த வருஷம் நான் வேளாண்மை அலுவலர்களை அழைச்சி வந்து மகசூலை அதிகமாக்க என்னென்ன செய்யலாம்னு கேட்டு அதைச் செயல்படுத்த வைக்கிறேன்” என்றான்.
சில நாட்களில் விவசாயப் பணிகள் தொடங்கின. இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. நல்ல விதை நெல்லைத் தேர்ந்தெடுத்து வேளாண்மை அலுவலர்களின் உதவியுடன் பெரும்பாலான விவசாயிகள் பணிகளைத் தொடங்கினர்.
நாற்றடித்து நடவு செய்தபின் குறித்த நாட்களில் உரமிட்டனர். இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. நெல்மணிகள் திரண்டன. அறுவடைக்குத் தயாரான நாளும் வந்தது.
இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை தொடங்கியது. மகசூல் அதிகரித்திருந்த நிலையில் எல்லா விவசாயிகளும் மகிழ்வுடன் காணப்பட்டனர்.
விவசாயிகள் மகிழ்ச்சியுடன் லாரிகளில் மூட்டைகளை ஏற்றி விற்பனைக்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது ஒரு நாள் திடீரென எதிர்பாராத விதமாய் மழை பிடித்துக்கொண்டது. பரந்த வெளியில் இயங்கிக் கொண்டிருந்த நெல்கொள் முதல் நிலையங்களில் கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் தார்ப்பாய்களால் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்தன. ஆனால், எடை போடத் தயாராக இருந்த மூட்டைகள் மழையில் நனைந்தன. அதில் பரமசிவம், முத்துசாமி ஆகியோரின் மூட்டைகளும் அடக்கம்.
பரமசிவம் கோபத்தில் வெடித்தார்.
“நெல்மூட்டைகள் மழையில் நனையுதே. நெல்லு புடிக்க பெரிய குடோன் கட்டக்கூடாதா? எவ்வளவோ கட்டடங்களை அரசாங்கம் கட்டுது. இதைக் கட்டக்கூடாதா? என்ன நாடு இது? பெரிய போராட்டம் நடத்தணும். சாலை மறியல் பண்ணனும்.” உரத்த குரலில் உறுமிய அவரது பேச்சைக் கேட்டு அங்கு பல விவசாயிகள் கூடினர். அவரது பேச்சுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர்.
“மழையில் நெல்லு நனையாம குடோன் கட்டவேணும்” என்று பலர் கோஷமிட்டனர். இருப்பினும் மழை திடீரென நின்றது. வெயில் அடிக்கவும் ஆரம்பித்தது.
“நெல்லு நனைஞ்சு போச்சு. அதிகாரிங்க வாங்குவாங்களா? யாரையும் சும்மா விடக்கூடாது. போராட்டத்தைத் தீவிரப்படுத்தணும். திரும்பவும் மழை வந்தா என்ன செய்வது? ஆண்டவன்தான் இதையெல்லாம் கேட்கணும்”, என்று மீண்டும் கத்தினார் பரமசிவம்.
முத்துசாமி ஏதும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மகிழ் அதிரனை அழைத்துக்கொண்டு அலுவலர்களிடம் சென்று பேசிவிட்டு வந்தார்.
அப்போது ஓயாமல் பலரையும் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார் பரமசிவம். அப்போது அங்குக் கூடியிருந்த மக்களிடம் பேசினான் மகிழ்அதிரன்.
“நம்முடைய நெல்மூட்டைகள் மழையில் நனைந்து போனது உண்மைதான். இது தற்காலிகக் கொள்முதல் நிலையம்தான். குடோன் கட்ட
வில்லைதான். ஆனால் குடோன் கட்டவேண்டிய அவசியமில்லை. நம்ம ஊரிலேயே பெரிய இடம் இருக்கு. ஆயிரக்கணக்கான மூட்டைகளை அங்கே அடுக்கலாம்.”
இதைக் கேட்ட பரமசிவம்,
“எங்கே இருக்கு நம்ம ஊரில் குடோன்?” என்று கத்தினார்.
“நம்ம ஊர் கோயிலில் ஆயிரம் கால் மண்டபம், அய்ந்நூறு கால் மண்டபம்னு இருக்கே. அங்கே நெல்மூட்டைகளை அடுக்கலாமே! சும்மாதானே கிடக்கு,” என்று பதிலளித்தான் மகிழ்அதிரன்.
“ஏய், ஏய்! அது கோயிலு. சாமி இருக்கிற இடம். அங்க போய் மூட்டையை அடுக்கச் சொல்றியே. உனக்கென்ன பைத்தியமா?” என்று கத்தினார் பரமசிவம். அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தனர்.
மீண்டும் குழுமியிருந்த விவசாயிகளிடம் பேசினான் மகிழ்அதிரன்.
“கோயில் என்பது சாமி கும்பிடுறதுக்கு மட்டும் அரசன் கட்டவில்லை. புயல், வெள்ளம், போர்க்காலங்களில் மக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்குக் கட்டப்பட்டதுதான் கோயில். ஒரு சிறு கூட்டம் அரசர்களை மயக்கி அங்கே சிலைகளையும் வைத்து, மக்களுக்கும் பயம்காட்டி, இப்போது முழுசா கோயிலை ஆக்கிரமிப்பு செய்ஞ்சிகிட்டு இருக்காங்க. ஆயிரம்கால், அய்ந்நூறு கால் மண்டபம் என்றெல்லாம் சொல்றாங்களே, நீங்க யாராவது உள்ளே போய்ப் பார்த்திருக்கீங்களா? ஆனா திருட்டுத்தனமா காசு வாங்கிட்டு கல்யாணத்துக் கெல்லாம் வாடகைக்கு விடுறாங்களே! அப்படியெல்லாம் செய்யும்போது அங்கு நெல்மூட்டைகளை அடுக்கக்கூடாதா? எதற்கும் உதவாத அந்த மண்டபம் தேவையா? இதற்காகத்தான் நாம் போராட வேண்டும். இப்போ மழை விட்டுப் போச்சு. ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் நெல்லை வாங்கிக்கொள்ள அரசும் சம்மதித்துவிட்டது. அலுவலர்கள் இந்த விவரத்தைச் சொல்லிட்டாங்க. நிறைய தார்ப்பாய்களும் வரவிருக்கின்றன. அடுத்த ஆண்டு கோயில்களில் சும்மா கிடக்கும் மண்டபங்களில் நெல்மூட்டைகளை அடுக்கவேண்டும். அதற்கு நாம் போராட வேண்டும். சாமி கும்பிடுறவங்க ஒரு பக்கம் போய் தாராளமா சாமி கும்பிடட்டும். அது பற்றிக் கவலையில்லை. ஆனால், மண்டபம் மக்கள் நலப் பயன்பாட்டுக்கு வரவேண்டும். நம் போராட்டம் அந்த இலக்கை நோக்கி இருக்க வேண்டும்”, என்று பேசி முடித்தான்.
அவன் பேசியதில் உள்ள நியாயத்தை விவசாயிகளும் உணர்ந்தனர்.