Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்தியாவுக்கு இன்றைய தேவை அம்பேத்கரும் பெரியாரும்! – மஞ்சை வசந்தன்

“அண்ணல் அம்பேத்கர் எனது தலைவர்”, என்று தந்தை பெரியாராலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்னும்போது, அம்பேத்கரின் பெருமைக்கும், உயர்வுக்கும், தகுதிக்கு வேறு சான்று எதுவும் தேவையில்லை.

அப்படிப்பட்ட அண்ணல் அம்பேத்கர், என்னுடைய ‘மகர்’ போராட்டத்திற்கான ஊக்கத்தை, உந்துதலை பெரியாரின் வைக்கம் போராட்டத்திலிருந்தே பெற்றேன் என்று கூறுவதிலிருந்து தந்தை பெரியாரை அவர் எந்த அளவிற்கு ஏற்றார் என்பது விளங்குகிறது.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றவர்கள். இந்தியாவின் இருமுனை
களிலிருந்து இருவரும் சிந்தித்தாலும் இருவர் சிந்தனைகளும், வெளிப்படுத்தும் கருத்துகளும் ஒன்றுபோலவே இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கையில் அறிய முடிகிறது.

மனு, கீதை, சாஸ்திர எதிர்ப்புகளாயினும், இவை நிலை நிறுத்திய வர்ணாஸ்ரமம், ஜாதி, தீண்டாமை, உரிமை மறுப்புகளாயினும், ஆதிக்க நிலை நிறுத்தல்களாயினும் எல்லாம் இந்த இருபெரும் தலைவர்களாலும் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆனால், அவற்றை மீண்டும் உருவாக்க பாசிச பா.ஜ.க. அரசும், ஆர்.எஸ்.எஸ்ஸும் பல வழியிலும் முயன்றும், சிறுகச் சிறுக அதில்
அவர்கள் வெற்றி பெற்றும் வருவது இந்தியாவின் எதிர்காலத்தை நாசமாக்கும். பழைய மனு கோட்பாடுகளை நடைமுறைபடுத்துவதால் இந்தியா சீரழியும்.

இந்தியாவில் பாசிச பா.ஜ.க. ஆட்சி விரைவில் அகற்றப்படா விட்டால், இந்த அழிவு நிலையை யாராலும் தடுக்க முடியாது. இந்துராஷ்டிரம், ஒரே மொழி(சமஸ்கிருதம்) ஒரே மதம் (இந்து மதம்- சனாதன மதம்) ஒரே ஆட்சி, மனு தர்மமே சட்டம், மற்ற மதத்தார் உரிமைகள் பறிப்பு அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சியென்று செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது நாட்டில் இரத்தக்களறியும், ஆயுதப் போராட்டங்களும், பிரிவினை முயற்சிகளும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

அந்த அழிவு நிலை வராமல் தடுக்கப்பட, தவிர்க்கப்பட, சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார் போன்றவர்கள், சுயநலத்தை விலக்கி இந்த ஆபத்தைத் தடுக்க தங்கள் முடிவில் விரைவில் மாற்றம் காணவேண்டும். இரண்டாவதாக இந்த ஆபத்தை உணராது. மதம், பக்தி, கடவுள் என்ற தனிப்பட்ட நம்பிக்கைகளை அரசியலோடு சேர்த்துப் பார்த்து வாக்களிக்கும் அறியாமை மக்களிடம் அகல அவர்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் விரைவில் தீவிரமாக நடக்கவேண்டும். மூன்றாவதாக, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கருத்துக்கள், கொள்கைகள், நோக்கங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்கு இந்தியா அளவில் ஒருங்கிணைப்பும், ஒற்றுமையும் கட்டாயம் தேவை. இதை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் கருத்தில் கொண்டு, களம் அமைத்துச் செயல்பட வேண்டும்.

இந்தியாவைக் காப்பாற்ற இன்றைக்கு அம்பேத்கர் பெரியார் கருத்துகளே கட்டாயத் தேவை என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்; உள்வாங்க வேண்டும்.

சமூக நீதி :

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். இவற்றின் பாசிச செயல் திட்டங்களைத் தகர்க்க சமூகநீதிக் கோட்பாடுகளே கட்டாயம். பிறப்பால் உயர்வு- தாழ்வு; உரிமை பறிப்பு, உரிமை மறுப்பு; ஆதிக்கம், அடக்குமுறை போன்றவை பாசிசத்தின் அடிப்படை. அந்த அடிப்படை தகர்க்கப்பட, சமத்துவம், சமஉரிமை, சமவாய்ப்பு, இடஒதுக்கீடு, அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் உரியபங்கு ஆகியவை நடைமுறைக்கு வரவேண்டும். கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை அனுமதித்து, மக்கள் வரிப்பணத்தை அவர்களுக்கு வாரி வழங்கி, தனியார் துறைகளை அதிகரித்து, பொதுத்துறைகளை ஒழித்து, ஏழைகளைச் சுரண்டி, அவர்களைச் சூத்திரர்களாக, உழைப்பாளிகளாக மாற்றும் முயற்சி முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

இடஒதுக்கீடும் சமூகநீதியும் நிலைபெற பொதுத் துறை கட்டாயம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கட்டாயம். நீதித்துறை முதற்கொண்டு அனைத்துத் துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம் என்பது இந்த நூற்றாண்டிலும், அறிவியல் உலகத்திலும் நடக்கிறது என்றால், இதைவிட கேவலம், இழிவு, மானமற்ற நிலை வேறு இருக்க முடியுமா?
அதற்கு சுயமரியாதை உணர்வு வேண்டும்.

மான உணர்ச்சி மக்களுக்கு
ஊட்டப்பட வேண்டும்

ஆதிக்கம் நிலவுவதற்கும், அடிமைத்தனம் நீடிப்பதற்கும் மக்களிடையே மானஉணர்ச்சி இன்மையே காரணம். நாமும் மனிதர்கள்; நமக்கும் எல்லா உணர்வுகளும், உரிமைகளும் உண்டு, விருப்பங்களும் உண்டு; நமக்கும் அறிவு ஆற்றல், தகுதி உண்டு. இவை பிறப்பால் ஒரு ஜாதிக்கு மட்டுமே உரியது என்று சொல்லுவதும், நம்புவதும் ஏற்பதும் அறியாமை. அந்த அறியாமையை அகற்றி விழிப்பூட்டவே அம்பேத்கரும், பெரியாரும் சுயமரியாதை உணர்வை ஊட்டினர். அதை இயக்கமாகவே நடத்தினர். அதற்காகப் பிரச்சாரங்களும், போராட்டங்களும் நடத்தினர். அதன் விளைவுதான் இன்றைக்கு அனைத்து மக்களும் சமஉரிமைகளும், வாய்ப்புகளும் ஓரளவுக்காவது பெற்று மேலெழுகின்றனர். ஆனால், அந்தச் சுயமரியாதை உணர்வுகளை, மானஉணர்ச்சிகளை, உரிமை வேட்கைகளை ஒழிக்கவே, ஆதிக்கவாதிகள் மதவெறியை, ஜாதிவெறியை ஊட்டி மக்களைத் திசை திருப்புகின்றனர். அந்தத் திசை திருப்பலைத் தடுத்து, தகர்த்து விழிப்பு உருவாக்க அம்பேத்கரும் பெரியாரும் இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். அவர்கள் சிந்தனைகள், கொள்கைகள் சிறுசிறு வெளியீடுகளாக இந்திய மக்களின் கைகளில் மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். தெருத் தெருவாய் பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இளைய சமுதாயம் இதை ஒரு தொண்டாகச் செய்தால் மிக எளிதாய், விரைவாய் மக்கள் மத்தியில் ஒரு பெரும் எழுச்சியை, புரட்சியை உருவாக்க முடியும். சமூக ஊடகங்கள் வழி பெரியார், அம்பேத்கரைக் கொண்டு செல்வதோடு, பி.ஜே.பி.; ஆர்.எஸ்.எஸ். சித்ததாந்தங்களின் ஆபத்தை, அழிவை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். தொலைக்காட்சிகள் முதலாளிகள் பிடியில் உள்ளதால் அதற்கு எதிராய் சமூக ஊடகங்களை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். இளைய சமுதாயம் சுயநல வட்டத்தில், சுகபோக வாழ்வில் சுருங்கிவிடாமல், பகத்சிங்கைப் போல சேகுவேராவைப் போல வீறுகொண்டு எழவேண்டும். பாசிச சக்திகளை வீழ்த்துவதில் முனைப்புடன் செயல்படவேண்டும். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளைப் பின்பற்றிப் போராட வேண்டும்.

மொழி உரிமை:

இந்தியா என்பது பல மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைக் கொண்ட நாடு. மொழி வாரி மாநிலங்களின் ஒன்றிணைப்பால் உருவாக்கப்பட்ட நாடு. இந்த அடிப்படை உண்மையைப் புறந்தள்ளி, ஒரே மொழியைத் திணிக்க முற்படும் பாசிசப் போக்கு தற்போது முனைந்து முன்னெடுக்கப்படுவது மிகவும் கேடானது, ஆபத்தானது, இந்தியாவையே சிதறச் செய்யக்கூடியது. மொழி அழிக்கப்பட்டால் இந்த மண்ணின் மக்கள் அனைத்தையும் இழக்க நேரிடும். மொழிச் சிக்கலுக்குத் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் சரியான தீர்வுகளைக் கூறியுள்ளனர்.

“மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபின், எந்தவொரு மொழியையும் தேசியமொழியாக முன்னிறுத்தித் திணிக்கப்படுவது ஆபத்தானது. அலுவலக மொழியாக, இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருக்கவேண்டும்” என்று கடைசிவரை வலியுறுத்தினார் அம்பேத்கர்.
(From a Memorandum submitted to the Linguistic Provinces Commission Mumbai on Oct 14, 1948)
தந்தை பெரியார் அவர்கள், “தாய் மொழியாம் தமிழும், உலக மொழியாம் ஆங்கிலமும் கட்டாயம் பயல வேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் உலகத் தொடர்பிற்கும் ஆங்கிலம் கட்டாயம். இந்தி எதற்கு?” என்றார்.
எனவே, அன்றைக்கு அம்பேத்கரும் பெரியாரும் கூறிய மொழிக்கொள்கையே இன்றைக்கும் இந்தியாவிற்கு ஏற்புடையது; இந்திய ஒற்றுமையை நிலைநிறுத்தக்கூடியது.

மதமும் அரசியலும்

மதமும் அரசியலும் கலக்கக்கூடாது. மதம் என்பது ஒரு மனிதரின் தனிப்பட்ட விவகாரம் என்பதே இருவரின் கருத்தாக இருந்தது.
மதம், அரசு பற்றி அம்பேத்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

1. ‘மதச்சார்பற்ற அரசு’ என்ற ஒரு அரசியற் கொள்கை, மேற்கு நாடுகள் வளர்த்த அரசியற் கொள்கை, அரசு இயந்திரங்கள் மத சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவதும், அரசுப் பணம் அதற்காகச் செலவு செய்வதும் முறைகேடானது.
(C.A.Debates, Vol.VII. P.860)

2. மதச்சார்பற்ற அரசு அமைப்பது மக்களின் மத உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டுச் செய்வது என்று பொருளாகாது. அரசு எந்த மதத்தையும் மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதே இதன் பொருள். அரசியலமைப்புச் சட்டமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

3. ‘மதச்சார்பின்மை’ என்பது மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்று பொருளாகாது. அதாவது, அரசு எந்த ஒரு மதத்தையும் யார் மீதும் திணிக்காது என்பதுதான் அதன் பொருள். அரசியலமைப்பு அந்த விதியைத்தான் கொண்டுள்ளது.
(Parliamentary Debates 1951, Vol.III. part II.P.2466.)” என்கிறார் அண்ணன் அம்பேத்கர்.
இதே கருத்தை தந்தை பெரியார் அவர்கள்,

“மதம் என்பது மனிதனை மடையனாக்கவே பயன்படுகிறது. மதத்தை ஏற்படுத்தியதன் நோக்கமும் அதுவே.
மனிதனை மனிதன் அடக்கியாளவும், பேதப்படுத்தவும், ஏமாற்றவும், முட்டாளாக்கவுமே மதம் பயன்பட்டு வருகிறது. கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் எதுவானாலும் அது தனிமனிதனின் தனிச் சொத்து, ஒழுக்கமும் நாணயமும் பொதுச் சொத்து, பக்தியில்லையென்றால் உங்களுக்கு என்ன நஷ்டம்? ஆனால் ஒழுக்கம், நாணயம் இல்லையென்றால் என்னாகும்?

“ஏதோ சில பேருடைய நன்மைக்கு, பெருமைக்கு மற்றவனை ஏய்த்துப் பிழைக்க, வாழ்க்கை வசதிக்கு மதத்தைப் புகுத்தி விட்டார்களே தவிர மனித நன்மைக்கு இவற்றால் எப்பயனும் இல்லை”

மதம் அறிவைக் கெடுக்கிறது; அது இயற்கைக்கு விரோதம்; வளர்ச்சியைத் தடை பண்ணுகிறது. மதத்தையும், கடவுளையும் மதசம்பிரதாயமான கொள்கையையும் எவனொருவன் வெறுக்கிறானோ, எவனொருவன் மக்களிடையேயிருந்து இம் மூடநம்பிக்கைகளை யெல்லாம் மாற்றவேண்டும் என்று நினைக்கிறானோ அவனாலேதான் நாட்டுக்கு நன்மை விளைகிறது. இனிவரும் முன்னேற்றமும் அப்படித்தான் வரமுடியும்.

ஜாதி

வர்ணாஸ்ரமம், ஜாதி இரண்டையும் ஒழிக்க இருவருமே தீவிரங்காட்டினர். பொது உணர்வை ஜாதி கொன்றுவிட்டது. மனித தர்மத்தை ஜாதி அழித்துவிட்டது. பொதுநல எண்ணமே எழாதவாறு செய்துவிட்டது ஜாதி. ஒரு இந்துவுக்குத் தன் ஜாதிதான் பிரதானம். தன் ஜாதிக்கே அவன் கட்டுப்பட்டவன் ஆகிறான். தன் ஜாதிக்கே ஒருவன் விசுவாசியாகிறான். நேர்மை ஜாதி சார்பாகிவிட்டது. மனித தர்மம் ஜாதிக்குக் கட்டுப்பட்டுவிட்டது. திறமையுள்ளவர்களுக்கு இங்கு பாராட்டு இல்லை.

இந்தச் ஜாதிகள் தேசியத்திற்கு எதிரியாகும். சமூக வாழ்வில் இவைகள் பிரிவினையை ஏற்படுத்துகின்றன. ஜாதிக்குச் ஜாதி பொறாமை- வெறுப்பு ஆகியவை வளர்வதால் ஜாதிகள் தேசியத்திற்கு எதிரியேதான். (From speech in the C.A. on 25.11.1949)
சமூக அமைப்பையே மாற்றினாலொழிய இந்த நாட்டில் முன்னேற்றம் காண்பதென்பது கானல் நீரே! சக்தியும் வலுவுமிக்க சமுதாயத்தை நாம் உருவாக்க முடியாது. ஜாதியின் அஸ்திவாரத்தில் பண்பை வளர்க்க முடியாது. ஜாதியை வைத்துக்கொண்டு நாம் எதை உருவாக்க எண்ணினாலும், அது ஒழிந்து போகுமேயொழிய நிலைத்து நிற்காது. (Annihilation of caste)

மனிதன் பிறக்கும் பொழுதே அவன் தொழில் இன்னதுதான் என்பதை மூதாதையரின் ஜாதியை வைத்து முடிவு செய்வது நியாயமா! ஆணோ பெண்ணோ, பெரியவர்களாய் வளரும்பொழுது அவர்கள் என்ன தொழிலுக்குப் பக்குவப்படுகிறார்கள் என்பதை விடுத்து, தகப்பன் தொழிலே மகனுக்கும் எனத் தீர்மானிப்பது தர்மமா!
(Annihilation of caste. P.20.)

தீண்டாமையென்பது ஜாதித் துவேஷத்தி
லிருந்து வளருகிற ஒன்று. எனவே, ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதென்பது நடக்கக்கூடியதல்ல.
(Gandhi and Gandhism P.73)

ஜாதி – தீண்டாமைக் கொடுமையின் மூலம் லாபமடைந்து வரும் உயர் ஜாதிக்காரன்களின் கையே அனைத்திலும் மேலோங்கி நிற்பதால், இக்கொடுமைக்கெதிரான எண்ணத்தை வளர்க்கவும் முடியாமல் இருக்கிறது. நீதி- காவல் துறைகளும் கூட இக்கொடுமைக்கு நீதி காண நெருங்கி வராமல் இருப்பது, இத்துறை சார்ந்த அனைவரும் உயர் ஜாதிக்காரர்களாயிருப்பதால்தான்.
தீண்டாமை ஜாதியை ஆதாரமாய்க் கொண்டது. ஜாதி வருண தர்மத்தை அடிப்படைக் கோட்பாடாய்க் கொண்டுள்ள மதத்தை ஆதாரமாய்க் கொண்டது. வருணாஸ்ரமத்தின் ஆதாரம் பிராமணீயம். பிராமணீயமோ, இந்திய அரசியல்- சமூகத் துறைகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஓர் இயக்கு சக்தியாக உள்ளது.
(Ambedkar – A critical study P.58)

இந்து மதத்தின் அடிப்படையே மக்களை ஜாதியால் பிரிப்பதுதான். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஜாதியும் தீண்டாமையும் பின் எதற்குத் தான் உள்ளதென்று கூற முடியுமா? அதனடிப்படையில் மக்களை ஏற்றத்தாழ்வில் தள்ளத்தான். ‘பிரிவினை’ என்பதற்கு மறுபெயர் ஜாதி. தீண்டாமை அதன் அளவுகோல்.” என்றார்.

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணி
முதன்மையானது

ஜாதி ஒழிப்புக்காகப் பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடினார். வைக்கம் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற முதல் மனித உரிமைப் போராட்டம் (1924) வைக்கம் ஊரிலே கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக் கூடாது என்று நிலவி வந்த அக்கிரமத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் அது.


சேரன்மாதேவி குருகுலம் தேசியத்தை வளர்ப்பதாக எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த வேளையில், குருகுலத்தில் வர்ணாசிரமதர்மம் கொடிகட்டிப் பறப்பது அங்கு படிக்கும் மாணவர்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியவந்தது.

‘நாங்கள் சூத்திரப் பசங்களாம்.’ ‘பிராமணப் பசங்களுக்குத் தனிச் சாப்பாடு’ ‘பிராமணப் பசங்க பானையில் தண்ணீர் குடிச்சேன்.
பிரம்மச்சாரி வாத்தியார் கன்னத்தில் அறைந்துவிட்டார்.’ ‘பிராமணப் பசங்க தோட்ட வேலைக்கு வரமாட்டாங்க’
‘சூத்திரப் பசங்க சமைச்சா பிராமணப் பசங்க சாப்பிட மாட்டாங்க.

‘சோமவாரம்’, சுக்கில வாரம், கார்த்திகை நாட்களில் பிராமணப் பசங்களுக்கு மட்டும் வடை பாயாசத்துடன் சாப்பாடு.’
உண்மையைப் போட்டு உடைத்தான்.

சமத்துவப் பயிர் வளர வேண்டிய ‘தேசிய குருகுலப் பள்ளி’யில் வர்ணாசிரமக் களையா? கேட்ட பெரியார் கொதித்தெழுந்தார்.
சேரன்மாதேவி குருகுலப்பள்ளியை மூடச்செய்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணரல்லாதார் இழிவு படுத்தப்படுவதை எதிர்த்துப் பெரியார் உயர்த்திய போர்க்கொடி தமிழகத்தின் அரசியல் போக்கையே திசை திருப்பிவிட்டது. பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி வெடித்துக் கிளம்ப குருகுலப் பிரச்சனை ஒரு முக்கிய தொடக்கப் புள்ளியாய் அமைந்துவிட்டது.
மக்கள் பிறவியில் ஜாதி பேதம் கிடையாது.

ஜாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாஸ்திரம், புராணம் முதலியவற்றைப் பின்பற்றக்கூடாது. வர்ணாசிரமப் பிரிவுப்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொதுக் குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெரு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சமஉரிமை இருக்க வேண்டும்.

இவை பிரச்சாரத்தால் நிறைவேற்றி வைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

ஜாதி, மத, வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும், பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து ஜாதி, மத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக்காமலிருக்க மக்கள் முன்வரவேண்டும்.
சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்று ஜாதி ஒழிய வழி வகுத்தார் பெரியார்.

ஒருவன் பிறக்கும் போதே இழிஜாதிக்காரன் ஆகின்றான்; மற்றொருவன் உயர் ஜாதிக்காரன் ஆகின்றான். பிறவியிலேயே ஜாதி இணைக்கப்பட்டுவிடுகிறது. தொழில் அடிப்படையில் ஜாதி வகுக்கப்படவில்லை. ஜாதியைப் பொறுத்தே தொழில் இருக்கிறது. இன்னின்ன ஜாதி மக்கள் இன்னின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்று வகுக்கப்பட்டிருக்கின்றது. ஜாதிக்கென்று தொழில் செய்வதால் ஈனஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவேண்டும் என்றார் பெரியார்.
ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தால் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த இளம் மாணவர்களில் 50 சதவிகிதமும், மாணவியர்
களில் 70 சதவிகிதமும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்ட புள்ளி விவரம். பெரியாருக்குப் பதற்றத்தையும் ராஜகோபாலாச்சாரியருக்குப் பரவசத்தையும் அளித்தது.

ஓட்டல் பெயர்ப் பலகையில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்பு போராட்டமும்! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரிப் போராட்டமும் அவரால் மேற்கொள்ளப்பட்டன.

எந்த விஷயம் குறித்து பெரியார் அதிகமாகப் பேசி இருக்கிறார் என்று கணக்கிட்டால் ‘ஜாதி ஒழிப்பு’ பற்றித்தான் மிக மிக மிக அதிகமாகப் பேசி இருக்கிறார் என்பதனை கீழ்க்காணும் பட்டியல் உறுதிப்படுத்துகிறது.

கடவுள் எனும் தலைப்பில் 5 தொகுதிகள்; பக்கங்கள் 1292
மதம் எனும் தலைப்பில் 7 தொகுதிகள்; பக்கங்கள் 2030
பெண்ணுரிமை எனும் தலைப்பில் 5 தொகுதிகள்; பக்கங்கள் 1338
பகுத்தறிவு எனும் தலைப்பில் 3 தொகுதிகள்; பக்கங்கள் 1000
திருக்குறள் எனும் தலைப்பில் 1 தொகுதி; பக்கங்கள் 368
ஜாதி தீண்டாமை எனும் தலைப்பில் 17 தொகுதிகள்; பக்கங்கள் 5384
தந்தை பெரியார் நடத்திய மாநாடுகளின் எண்ணிக்கை 600க்கும் அதிகமாக. அதில்
ஆதிதிராவிடர் மாநாடுகளே பெரும்பான்மை யாகக் காணக்கிடக்கின்றன.

பெண்ணுரிமை

அம்பேத்கர் பெண்ணுரிமைக்காகப் பெரிதும் போராடினார். குறிப்பாகப் பெண்களுக்குச் சொத்துரிமை, மணவிலக்கு, மறுமணம் போன்ற கிடைக்கப் போராடினார். அது மறுக்கப்பட்டதை எதிர்த்து தன் பதவியை உதறி எறிந்தார். தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் மிகவும் ஆழமானவை.

பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க ‘கடவுளாலேயே’ சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாக வருந்திய பெரியார்.

தான் ஒரு ஆண் என்பதை ஒதுக்கி வைத்து விட்டு, சமூக விஞ்ஞானியாய் மாறி உண்மையை உரத்துச் சொன்ன புரட்சியாளர் பெரியார். ‘ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் எல்லாம் உள்ளதோ அவை எல்லாம் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எல்லா மதங்களும் பெண்ணடிமையை வலியுறுத்துகின்றன. அனைத்து மதங்களின் கடவுள்கள் ஆண்கள்தான்.

“பெற்றோர்கள் பெண்களை ஆண்களைப் போலவே வளர்க்க வேண்டும். உடைகளும் ஆண்களைப்போல் கட்டுவித்தல் வேண்டும்”
“பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்” அவர்களுக்கு தற்காப்புப் பயிற்சி, உடற்பயிற்சி அளியுங்கள் என்றார்.

விதவை மணம்
மணவிலக்கு உரிமை
பெண்கல்வி

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அரசியல் அதிகாரம் வேண்டும் என்றார். பெண்கள் வீட்டில் முடங்கிக்கிடக்கக் கூடாது. வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும்; சொந்தக் காலில் நிற்கும் தகுதி பெற வேண்டும் என்று வலியுறுத்தினார் தந்தை பெரியார். பெண்கள் விடுதலை பெற கல்வியும் உத்தியோகமும் அவசியம் எனத் தெளிவாகத் தீர்ப்பளிக்கிறார் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமை

பெண்ணடிமை ஒழிய பெண்களுக்குச் சொத்துரிமை அவசியம் என்றார் தந்தை பெரியார். சம்பாதிக்கும் பெண்களே சுதந்திரமாக வாழ முடிகிறது. பெண்கள் கல்வி கற்க வேண்டும்; அதுவும் தொழில் கல்வி கற்று வருவாய் ஈட்டக்கூடிய தொழில் நடத்த வேண்டும்; அதன்மூலம் பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும்; ஆணைச் சார்ந்து வாழக்கூடாது என்பது தந்தை பெரியார் சிந்தனை.

படிப்புக் கொடுத்து அவர்கள் வாழ்வுக்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக்கொடுத்து விட்டால், அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்பமாட்டாள் என்று தெளிவுபடுத்துகிறார்.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதலாவது மாகாண மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

சுயமரியாதை

அம்பேத்கர் அவர்கள், “சுயமரியாதை இழந்து வாழ்வது மிகப் பெரிய அவமானமாகும். வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒரு தேவை சுயமரியாதை. அது இல்லையேல், மனிதன் ஒரு பூஜ்யமே! சுயமரியாதையோடு, செம்மாந்து ஒருவன் வாழ வேண்டுமானால், துன்பங்களை வெற்றிகொள்ள வேண்டும். கடினமான- சலியாத- போராட்டத்தின் மூலமே ஒருவன் தைரியம்-நம்பிக்கை-உறுதி முதலியவற்றைப் பெற முடியும்.” என்றார்.
(From speech at a Sch. Castes conference, chiplun, Ratnagiri Dt.)
தந்தை பெரியார் அவர்கள் தன் இயக்கத்திற்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயரிட்டு, சுயமரியாதைக்கு முன்னுரிமை அளித்தார். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார்.

மூடநம்பிக்கை

அம்பேத்கர் அவர்கள் மூடத்தனங்களைக் கண்டித்து அவற்றை அகற்றப்பாடுபட்டார். அடிமைத் தனத்திற்குக் காரணம் முற்பிறப்பு வினைதான் என்று எண்ணும் அறிவீனத்தை எவ்வளவு விரைவில் விடுகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது. உங்களின் வறுமை உடன் பிறந்தது- தவிர்க்க முடியாதது- தீர்க்க முடியாதது என்று எண்ணுவது மடமையாகும். அடிமை வாழ்வு தான் ‘கிடைத்த கதி’ என்ற எண்ணத்தைக் குழி தோண்டிப் புதையுங்கள்.
(In a speech at Jahangir Hall, Mumbay. Oct 28, 1932)

அறிவைப் புறக்கணித்து நம்பிக்கையிலேயே இந்திய மக்கள் பழங்காலத்திலிருந்து வாழ்கிறார்கள். மற்ற நாடுகளில் இழிசெயல்களில் ஈடுபட்டுப்பைத்தியக்காரன் எனப் பெயரெடுப்பவர் இங்கே யோகி, முனிவர் என்று பெயரெடுக்கிறான். ஆட்டு மந்தைபோல் மக்கள் அவன்பின் ஓடுகிறார்கள்.
(From Speech at Mazgoan, Feb, 1933)

நாட்டில் ஏதாவதொரு கொடுமை நடந்தால்! அல்லது வெளிநாட்டு படையெடுப்பு நடந்தால், மக்கள் ஒருங்கிணைந்து நின்று அதைச் சந்திக்க வேண்டும். ஆனால், ‘கடவுள் அவதாரமெடுத்து வந்து காப்பாற்றுவாள்’ என்று நம்பும் மக்கள் என்ன செய்வார்கள்?
(Ibid.)

சிலர் பணக்காராயிருப்பதற்கும், சிலர் ஏழைகளாயிருப்பதற்கும் ஊழ்வினையோ, முற்பிறப்புச் செயலோ, பாவம்- புண்ணியமோ தான் காரணம் என எண்ணுவது கீழ்த்தரமான அடிமைப் புத்தியாகும்.
(Ibid.)

ஊழ்வினையால் செல்வம் வளர்கிறது என்று பணக்காரன் எவனும் வாளா இருப்பதில்லை. அப்படியிருக்க, ஏழைகள் மட்டும் ஏன் ஊழ்வினையை நம்ப வேண்டும்?” என்றார்.
பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பை தன் இயக்கத்தின் முதன்மை இலக்குகளுள் ஒன்றாகக் கொண்டார்.

கடவுள், விதி, பிறவி, பாவ, புண்ணியம், சொர்க்கம், நரகம் போன்றவற்றை மறுத்து, அவை இல்லை என்பதை சரியான விளக்கங்
களோடு உறுதி செய்தார். பகுத்தறிவாளர் கழகத்தை உருவாக்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இடஒதுக்கீடு:

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியும் வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்ட 95% மக்களுக்கு அவை இரண்டும் வழங்கப்படவேண்டும், அதற்கு அவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடினர். தந்தை பெரியார் போராட்டத்தின் விளைவாய் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க, அரசியல் சட்டம் முதல்முறையாகத் திருத்தப்பட்டது.

இதுபோன்று பல உரிமைப் போராட்டங்களை இருவரும் நடத்தினர். அவர்கள் பெற்றுத்தந்த உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டு, பழைய வர்ணாஸ்ரமமும், மனுச்சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட முயற்சிகள் பாசிச சக்திகளால் மேற்கொள்ளப்படுவதால், 95% மக்களின் உரிமை காக்கப்பட அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் இந்தியா முழுக்கக் கொண்டு செல்லப்பட வேண்டியது கட்டாயமாகும்.