சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று அவரது படத்தையும் அவரது வாழ்விணையர் இரத்தினம் அம்மையார் படத்தையும் திறந்து வைத்து ஒரு நெகிழ்வான உரையை வழங்கினார். அவரது நூற்றாண்டையொட்டி ஒரு மலர் வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள அவரது நேர்காணலிலிருந்து சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அம்மலரில் அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நடத்திய நேர்காணல் அவரை அறிய இன்றைய தலைமுறைக்குப் பயன்படும் என்பதால் அச்செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
“தந்தை பெரியார் இயக்கத்தில் சேர்ந்திருக்காவிட்டால் என் குடும்பச் சூழலில் நான் சாமியாராகத்தான் போயிருப்பேன்; தந்தை பெரியார் கொள்கையும், இயக்கமும் தான் என்னை முதுகெலும்புள்ள மனிதனாக்கியது; ஊழை நம்பாமல் உழைப்பை நம்பச் செய்தது; அதன் காரணமாகப் பிள்ளைகளுக்குக் கல்விக் கண்களைக் கொடுத்தேன்; இதோ முழு மனிதனாக நிறைவுள்ள மனத்தினனாக வாழுகின்றேன்’’ என்று நெஞ்சு நிமிர்ந்து சொல்லும் இவர்தான் திருவத்திபுரம் வேல். சோமசுந்தரம்.
ஆத்திகக் குடும்பத்தில் திருவாளர்கள் வேலாயுதம் – தனக்கோட்டி இணையர்க்குப் பிறந்த நான்கு பிள்ளைகளுள் இவரும் ஒருவர்; பிறந்த நாள் – 1.3.1925.
பள்ளிப்படிப்பு என்பது இவருக்கு 6ஆம் வகுப்புதான்; சொந்த முயற்சியால் ஈ.எஸ்.எல்.சி. தேறினார். புலவர் புகுமுக வகுப்பும் தேறினார். குடும்பச் சூழல் இவரை ஒரு மரத்தொட்டி குமாஸ்தா வேலைக்குத் தள்ளியது. அக்கடைக்கு எதிரே இருந்த மாவண்ணா தேவராசன்தான் (பெரியார் பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர்) வேல். சோமசுந்தரத்துக்குச் சுயமரியாதைக் கொள்கையை அறிமுகப் படுத்திய ஆசான் ஆனார்.
தோழியர் இரத்தினம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட நாள் 2.9.1943. தந்தை பெரியாரை முதன் முதலில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது 1945இல் தணிகை உலகநாதன் அவர்களின் திருமணத்தின் போதுதான். அத்திருமணத்தில் பேசிய தந்தை பெரியாரின் உரை, வேல் அவர்களின் நெஞ்சில் வேலாகத் தைத்து நிலைத்து நின்றுவிட்டது!
9.12.1945இல் திருவத்திபுரத்தில் வடஆர்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு; அம்மாநாட்டிற்கு வருகை தந்த தந்தை பெரியார் அவர்களை ஊர்வல மாக அழைத்துவர ஏற்பாடு!
காங்கிரஸ் காரர்கள் அவர்களுக்கே உரித்தான ‘பண்பாட்டோடு’ மூன்று புடவைகளை காங்கிரஸ் கொடியாக இணைத்துத்தைத்து தாழ்வாகத் தொங்கவிட்டு, ஊர்வலமாகப்
பெரியார் அழைத்துவரப்படும் போது அவர் தலையில் தட்ட வேண்டும் என்று ஏற்பாடு.
20 வயது உள்ள தேக்கு மர உடல் அல்லவா வேல்.சோமசுந்தரத்துக்கு! என்ன செய்தார் தெரியுமா? கைப்பிடிக்கு எந்தவித ஆதாரமும் இல்லாத 40 அடி உயரம் உள்ள மாடியில் ஏறி, மாடியிலிருந்த ஒரு பொம்மையில் ஒரு கையை யூன்றி, இடக்காலால் கொடிக் கயிற்றைத் தன் பக்கம் இழுத்து, வலது கையால் கொடிக் கயிற்றை அறுத்து கீழே விழச் செய்தார். கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில் அந்த வாலிபன் இயக்க வெறியோடு அப்படி நடந்து கொண்டதை அனைவரும் பாராட்டினார்கள். வாலிபன் மீது வழக்கு எல்லாம் போடப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த மாநாட்டில் ஒரு தொண்டர் குழாம் கருப்புச் சட்டை அணிந்து செயல்பட்டதைக் கண்டு தந்தை பெரியார் பாராட்டினார். மாவண்ணா தேவராசன், க.நடராசன், மா.நா.இராசமாணிக்கம், வேல்.சோமசுந்தரம் ஆகியோர் தான் அந்தக் கருப்புச் சட்டைத் தொண்டர்கள்.
அதன்பின் படிப்படியாக இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று பணிகளை ஆற்றி வந்திருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்களோடு தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தந்தை பெரியார் அவர்களுக்கு உதவியாகப் பணியாற்றி இருக்கிறார். ஒரு முறை காரில் சென்று
கொண்டு இருந்தபோது, தூக்கம் தாளாமல் தலையாட்டம் போட்டார் வேல்.சோமு.
தந்தை பெரியார் பரிதாபப்பட்டு தலையணையைத் தலைக்குக் கொடுத்து சாய்த்து படுக்க வைத்துவிட்டாராம்! இன்று அதைச் சொல்லும்போதுகூட உணர்ச்சி வயப்படு
கிறார் சோமு அவர்கள். இப்படி ஒரு தலைவரைப் பார்க்கமுடியுமா என்று நா தழுதழுக்கக் கூறினார்.
திருவத்திபுரத்தில் அப்பொழு தெல்லாம் காமராசருக்கு எதிர்ப்பாக ஆச்சாரியாரின் தலைமையை ஏற்கக்கூடிய காங்கிரஸ்காரர்கள் பொதுக் கூட்டங்களைப் போட்டுக் கொண்டே இருப்பார்களாம்.
திருவாளர் மா.பொ.சி.யின் தமிழரசுக் கழகக் கூட்டங்களும் அடிக்கடி நடக்குமாம்.
அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் தன்மையில் ‘சுடச் சுட’ப் பொதுக்கூட்டங்களைப் போடுவதில் வேல். சோமசுந்தரம் சளைக்க
மாட்டாராம்.
இவர் காபி, டீயை நிறுத்தியதேகூட ஒரு சுவையான செய்தி தான். ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களின் பொதுக் கூட்டம். 30.12.1945இல் கூட்டம் நடக்கும் இடத்தின் பக்கத்தில் பார்ப்பனர் ஒருவர் காபி கடை வைத்திருந்தார். கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, அந்தக் காபி கடை பார்ப்பனர் சொன்னார், “கூட்டத்தில் இப்படித்தான் பேசுவார்கள், பொழுது விடிந்தால் பார்ப்பான் கடைக்குத்தான் காபி குடிக்க வருவார்கள்!” என்று சொல்லி இருக்கிறார். இதைக் காதில் வாங்கிய வேல்.சோமசுந்தரம் அன்றே ஒரு முடிவு எடுத்தார்! “இனி காபி, டீ குடிப்பதில்லை!” என்று. 48 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுவரை காபி, டீயை அவர் தொடுவதுகூட கிடையாது. எதிலும் ஒரு வைராக்கியத்துடன் இருப்பது என்பது அவரது இயல்பு.
1957 முதல் பார்ப்பான் கடைக்கே செல்வது கிடையாது.
பொங்கல் விழா என்றால் திருவத்திபுரம் என்று எல்லோருக்கும் நினைவிற்கு வரும். மிகச் சிறப்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் விழாவாகக் கொண்டாடுவார்கள். 1946 முதல் 1955 வரை தொடர்ந்து நடைபெற்றது. “3 நாள் விழா என்று ஆரம்பித்து எட்டு நாள் வரை விழாவைக் கொண்டு சென்றோம்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார். தந்தை பெரியார், திரு.வி.க., பாரதிதாசன், அறிஞர் அண்ணா என்று முக்கியமான தலைவர்கள் எல்லாம் வந்தார்கள். 1948இல் நடைபெற்ற விழாவின்போது “இன்னும் ஒரு மாதத்தில் காந்தியாரை பார்ப்பனர்கள் சுட்டுக்கொன்று விடுவார்கள்” என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினாராம், அதன்படியே நடக்கவும் செய்தது என்கிறார் தோழர் வேல்!
1949இல் கழகத்தில் ஒரு பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தந்தை பெரியார் திருவத்திபுரம் அழைக்கப்பட்டார்.
பெரிய தெருவில் பொதுக்கூட்டம், மாவண்ணா தேவராசன் தலைமை. இரவு 2:00 மணி வரை தந்தை பெரியார் பேசி, எழுப்பப்பட்ட அத்தனை வினாக்களுக்கும் பதில் கூறினார்கள்.
1950இல் வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தார்கள். திருவத்திபுரத்திலிருந்து மட்டும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றவர்கள் 63 பேர். இதைப்பற்றி ‘விடுதலை’யில் “பலசரக்கு மூட்டை” பகுதியில் குத்தூசி குருசாமி அவர்கள் “திருவத்திபுரம் அறுபத்து மூவர்” என்று பாராட்டி எழுதினார். இத்தனைப் பேர் போராட்டத்துக்குத் தேவை என்று தந்தை பெரியாரிடமிருந்து தந்தி வரும். அவ்வளவுதான்! சுற்று வட்டாரப் பகுதிகளுக்குக் காற்றாய்ப் பறந்து சென்று தோழர்களைத் திரட்டி போராட்டத்துக்கு அனுப்பி வைத்து விடுவார் தோழர் சோமு! அந்த வகையில் தந்தை பெரியாரின் பாராட்டுதலைப் பெற்ற பெருந்தொண்டர் அவர்.
வேல்.சோமசுந்தரம் அவர்களைப் பற்றி தந்தை பெரியார் கூறுகிறார்:
“நண்பர் சோமு அவர்கள் சிறுவயது முதல் நம் இயக்க வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரக்கூடியவர், அவர் இம்மாவட்டத்தின் தலைவராக இருக்க வேண்டியவர். சில காரணங்
களால் அதாவது அதிகமாக பிள்ளைகளைப் பெற்றவரானதால் அவரால் முடியவில்லை. நம் இயக்கத்தின் மாநில முக்கியஸ்தர்களில் ஒருவராக இருக்கத்தக்க தகுதி உடையவர்” (2.9.1971 அன்று திருவத்திபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ‘விடுதலை’ 2.10.1971).
தந்தை பெரியார் காலத்தில் மட்டுமல்ல; அவர்கள் மறைவிற்குப் பிறகும் தொடர்ந்து இயக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. அதனையொட்டி பிரச்சார நடை பயணம் 15.8.1979 அன்று திருத்தணியை அடுத்த பொதட்டூர் பேட்டையிலிருந்து புறப்பட்டது. 23 பேர்கள் கொண்ட அந்தப் பிரச்சாரக் குழுவுக்கு வேல்.சோமசுந்தரம் தளபதியாக அமர்த்தப்பட்டார். 31 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டார். அந்தத் தோழர்
களுக்கெல்லாம் தஞ்சை விழாவில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 1973இல் ஆர்க்காட்டில் வடஆர்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு, மாநாட்டுக்கு
முதல் நாள் மாநாட்டுப் பந்தல் எரிந்துவிட்டது. மாநாட்டுப் பந்தலைப் புதுப்பிக்க காஞ்சிபுரத்துக்கு ஆள் அனுப்பி காஞ்சி மானமிகு சி.பி.இராசமாணிக்கம் அவர்கள்மூலம் ஆள்களைக்கொண்டு வந்து அதற்கான செலவுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் வேல்.சோமசுந்தரம்.
தமது சொந்தச் செலவில் இயக்கப் பிரச்சாரம், புத்தக விற்பனை நிலையம் ஏற்படுத்தி நடத்த, அவர் கொடுத்த திட்டத்தைப் பாராட்டி கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் ‘விடுதலை’யில் எழுதினார்கள்.
இயக்கத்தால் நேரிடையாக நீங்கள் பெற்ற பலன்கள் உண்டா? என்ற கேள்விக்கு வேல்.சோமசுந்தரம் சொல்லுகிறார்:
நான் படிக்காவிட்டாலும் என் பிள்ளைகளை, தம்பியைப் படிக்க வைக்கவேண்டும் என்கிற உணர்ச்சி இந்த இயக்கத்தில் நான் பெற்ற உணர்ச்சியாகும். அந்த வகையில் எனக்கு ஆண் மக்கள் நான்கு பேர்.
வி.எஸ்.தளபதி எம்.ஏ.,பி.எல்.,
நெடுமாறன் எம்.ஈ.,
ராஜராஜன் சி.ஏ.,
அசோகன் பி.ஏ.,பி.எல்.,
மகள்கள் மூவர்:
செல்வமணி பி.எஸ்ஸி.,
கண்ணகி பி.ஏ.,
டாக்டர் மணிமேகலை பி.எஸ்ஸி., எம்.பி.பி.எஸ்.
மருமகள்கள்: தாமரை, விசயலட்சுமி, சந்திரிகா ஆகிய மூன்று பேரும் டாக்டர்கள்.
என் தம்பி அண்ணாமலை பி.ஏ. (ஆனர்ஸ்). தந்தை பெரியார்தான் பச்சையப்பன் கல்லூரியில்
அவருக்கு இடம் வாங்கிக் கொடுத்தார். எனது மகள் மணிமேகலைக்கு மருத்துவக் கல்லூரியிலும், எனது மகன் நெடுமாறனுக்கு பொறியியல் கல்லூரியிலும் இடம் பெற்றுத் தந்தது தந்தை பெரியார் அவர்கள்தான். இதேபோல
எத்தனை எத்தனையோ குடும்பங்களுக்கு நேரிடையாக உதவி செய்த ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டும்தான்.
என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். இரும்புக் கடை குமாஸ்தா, மரக்கடை குமாஸ்தா. தறி நெய்யும் நெசவாளி, சாயத் தொழில் தொழிலாளி, மூட்டை தூக்கி சேலை விற்ற உழைப்பாளி. 1952-53இல் டூரிஸ்டு தியேட்டர். அதன்பின் பஞ்சாயத்து ஒப்பந்தக்காரர், மாவட்டக் கழக ஒப்பந்தக்காரர் நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர், என்று படிப்படியான உழைப்பால், உண்மையால், தந்தை பெரியாரின் கொள்கை நெறியால் வளர்ந்து வந்திருக்கிறேன். என்னுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் திருவத்திபுரம் திராவிடர் கழகத் தலைவராக இருந்த மானமிகு கு.மு.காங்கன் அவர்கள் என்பதை நன்றி உணர்வோடு குறிப்பிட விரும்புகிறேன்.
மூடநம்பிக்கை மிகுந்த ஆத்திகக் குடும்பத்தில் பிறந்தவன். ஆடிக்கிருத்திகை முதல்நாள் பரணி நட்சத்திரக் காலையில் பசும்பாலைக் கறந்து பித்தளைப் பாத்திரத்தில் ஊற்றி, பாத்திரத்தின் வாயையும், எடுத்துச் செல்லுபவரின் வாயையும் துணியால் கட்டி 44 மைல் நடந்து திருத்தணி சென்று முருகனுக்கு அபிசேகம் செய்து வந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் ஒரு முழு நாத்திகனாக முழு வாழ்வு வாழ்கிறேன்.
என்னுடைய பிள்ளைகள், அடிப்படையில் இந்தக் கொள்கை உடையவர்கள்தான். எனது பேரப்பிள்ளைகள் மூன்று பேர், எனது டாக்டர் மகள், எனக்கு ஆக 5 பேர்களுக்கு ‘விடுதலை’ ஆயுள் சந்தா கட்டி வருகிறேன்.
எனது மரணத்தைப் பற்றியும் நான் எழுதி வைத்து விட்டேன். அதில் குறிப்பிட்டு இருப்பதாவது:
“என் உயிர் பிரிந்தபின் உயிரற்ற உடல் உறுப்புகள் மருத்துவ மனைக்குத் தானம் கொடுத்துவிட்டு என் விருப்பப்படி செய்யாறு வட்டம் மட்டைக்கிராமத்தில் உள்ள வி.எஸ். தளபதி நிலத்தில் அடக்கம் செய்யவும். உடல் மருத்துவமனையிலிருந்து கொடுக்கும் போது சின்னாபின்னமாக இருந்தால் மருத்துவ
மனைக்கே கொடுத்து விட்டு நினைவிடத்தை உண்டாக்கி விடவும். இறுதி ஊர்வலம் தேவை
யில்லை. படத்திறப்பு நடத்தினால் போதும். உன் தாய்க்கு விதவைக் கோலம் தேவையில்லை” (16.1.1988 நாளிட்டு எழுதி வைத்துள்ள சாசனம் இது).
தந்தை பெரியார் காலத்தில் இளைஞராக இயக்கத்தில் சேர்ந்து தன்வாழ்வை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய அவரின் புகழ் இயக்க வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
வாழ்க வேல்.சோமசுந்தரம் அவர்களின் புகழ்!