Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உலகத் தொடர்புக்கு இரு மொழியே – பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான்

தமிழகப் பள்ளிகளில் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிகளே போதுமென்ற விழுமிய முடிவை அறிஞர் அண்ணாவின் அமைச்சு 1968இல் எடுத்தது. ஆனால் மய்ய அரசுப் பாடத் திட்டப்படி பள்ளிகளைத் தொடங்கியும் 1976இல் நடந்த நெருக்கடி நிலை ஆட்சியில் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கல்வித் துறையை மாற்றியும், 1986இல் புதிய கல்வித் திட்டத்தை நுழைத்தும், மும்மொழித் திட்டத்தின் பெயரால் பள்ளிகளில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும்
நஞ்சனைய வஞ்சக நடப்பை டெல்லி அரசு மேற்கொள்வது மக்கள் நலனை மதியாத அதன் ஏகாதிபத்தியப் போக்கையே காட்டுகிறது.
ஊராட்சி மன்றத்திலிருந்து பாராளுமன்றம் வரை ஒரு மொழியே போதும் என்பது இந்திக்காரருக்குச் சட்டம்; ஆனால் மற்றவருக்கு மும்மொழித் திட்டம். இதனால் நியாயம், குடியரசு என்பவை டெல்லி ஆதிக்கத்தில் மிதிபட்டு நசுங்குகின்றன!
மாநில மொழி, ஆங்கிலம் என இரண்டைக் கொண்டு ஊரோடும் உலகோடும் உறவாட முடியும். மேற்கொண்டு இன்னொரு மொழியைக் கல்விக் கூடங்களில் நுழைப்பது பாமர மக்களையும் படிக்கும் சிறார்களையும் வாட்டியெடுக்கும் கொடுமையே!
தகுந்த சூழலும் தேவையும் விருப்பமும் உள்ள சிலர் இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளைப்
பயில்வதை வேண்டாம் என்று சொல்வதற்
கில்லை. அப்படிப் பயிலும் மொழி இந்தியாகத் தான் இருக்க வேண்டும் என்பதுவும் இல்லை. இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது வேற்று நாட்டு மொழிகளான
ஜெர்மன், ஃபிரான்சு, உருசியம், சீனம், இசுபானியம் முதலியவற்றில் ஒன்றையோ பயிலலாம். ஒலி-ஒளிப் பதிவான்கள், அஞ்சல்வழிப் பயிற்சி, அறிவியல் வழியிலான எளிய கற்பிக்கும் முறை முதலியன பெருகிவரும் இக்காலத்தில், இருமொழிகளில் முறைசார் பயிற்சி பெற்றபின், தேவைப்படும் சிலர் மற்ற மொழிகளை முறைசாரா வகையில் கற்பது எளிதே!
பணி அல்லது வாணிகத்தின் பொருட்டு ஒரிசா செல்ல நேர்ந்தால், சில மாதங்களில் ஒரியா கற்கலாம். தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல நேரிட்டால், அங்குள்ளோரின் இசுபானிய மொழியைப் பயிலலாம். ஆகையால் படிக்காத பாமரர்கள் நிறைந்த- வளர்ந்துவரும் ஏழை நாட்டில், மூன்றாவது மொழியைக் கல்விக் கூடங்களில் நுழைத்து மாணவர்களைக் கசக்கிப் பிழிவது பெருங்கேடு பயக்கும் பொறுப்பற்ற செயலாகும்.
வட இந்தியப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தென்னிந்திய மொழிகள் கற்கப்படும் நிலையைப் பற்றி, இந்திய திராவிட மொழியியல் கழகத்தார் திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம். ஆங்கில நாளேடான ‘இந்து’வில் 10-11-1977ஆம் நாள் வெளியானது. வட இந்தியாவில் மும்மொழிக் கொள்கை தோற்றுவிட்டதென்றும், அங்குத் தென்னிந்திய மொழிகளைக் கற்க ஆர்வமேயில்லையென்றும் அவ்வறிக்கை கூறுகிறது. அதோடு, வங்காளியரும், மராத்தியரும், பஞ்சாபியரும் தங்கள் மொழிகள் தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களால் புறக்கணிக்கப்படுகிறதென்ற பெருங்குறையை எழுப்புகிறார்கள் என்றும் அவ்வறிக்கை சுட்டுகிறது. திராவிட மொழியியல் கழகத்தாரின் இந்தக் கண்டுபிடிப்பு நமக்கு வியப்பைத் தரவில்லை. அரசியல் சட்டம் இந்தி மொழிக்குத் தனியேற்றம் தருவதன் இயல்பான பின்விளைவுகள் தான் இவை. அரசியல், நிருவாகத் துறைகளில் மொழிச் சமத்துவத்தை இழந்தபின், கல்வித் துறையில் மட்டும் அதைப் பெற விழைவது, ‘தும்பை விட்டபின் வாலைப் பிடிக்க முயலும்’ செயலன்றி வேறென்ன? குறைவும் தாழ்வும் நுழைவதற்கான முதற் காரணத்தைக் காண்பதற்கான தெளிவும், கண்டபின் அதைக் கல்லி எறிவதற்கான முயற்சியிலீடுபடும் நெஞ்சுரமும் நமக்கு வேண்டும். 