Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அன்னை மணியம்மையாரின் போர்குணம் கொண்ட பொதுவாழ்வு – வெற்றிச்செல்வன்

தந்தை பெரியாருடன் உடனிருந்து திராவிடர் கழகப் பணிகளை ஆற்றியவர் என்றும், பெரியாருக்குப் பின்னர் கழகத்தை வழிநடத்தியவர் என்ற அளவிலும்தான் அன்னை மணியம்மையாரின் பொதுவாழ்க்கை என்று அனைவராலும் பார்க்கப்படுகிறது; போற்றப்படுகிறது. ஆனால், அவருடைய சிந்தனைகளையும், போர்க்குணம் நிறைந்த அவரது பொதுவாழ்வையும் அறியும் ஒவ்வொருவருக்கும் பெருவியப்பு ஏற்படாமல் இருக்க முடியாது. அவருடைய செயல்பாடுகளில் உள்ள ஊக்கமும், துணிவும் இன்றைய தலைமுறையினருக்கான வழித்தடமாகும்.

மணியம்மையாரின் பணிகளையும், படைப்புகளையும் ‘பெரியாரின் காலத்தில்’, ‘பெரியார் மறைவுக்குப் பின்’ என்று இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். பெரியார் வாழும் காலத்தில் ஆய்வு நோக்கிலான கட்டுரைகளை ‘குடிஅரசு’ மற்றும் ‘விடுதலை’ இதழ்களில் எழுதி வந்தார் மணியம்மையார். பெரியாரின் காலத்திற்குப் பின்னர், அவரது செயல்பாடுகள் அனைத்தும் போராட்டக் களங்களிலேயே இருந்தன.

புராண மறுப்பு

இந்து மதத்தின் புராணங்கள் எனப்படுபவை எவ்வாறு மூட நம்பிக்கையைப் பரப்புகின்றன என்பதை ஆய்வுப் பூர்வமாகத் தனது எழுத்தின் வாயிலாக நிறுவியவர் மணியம்மையார்.

‘‘பஞ்ச பூதங்களையும், கிரகங்களையும் அறியாமையினால் தேவர்கள் என்று எத்தனையோ காலத்துக்கு முன் ஒரு பைத்தியக்காரன் எழுதி வைத்து விடுவானானால், அந்தப் புளுகுகளையெல்லாம் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டு இவ்வாபாசக் கட்டுக்கதைகளைப் படித்துக் கொண்டிருந்தால் அவனைப் போல சர்வ முட்டாள் எவனாவது இருப்பானா என்று கேட்கிறோம்” (குடிஅரசு, 30.12.1944) என்கிற கடுமையான விமர்சனத்தை இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தவர் மணியம்மையார்.
இராமனின் கதையைக் கம்பனின் மொழியில் படித்தவர் ஏமாறலாம். ஆனால், வால்மீகி இராமாயணமே கம்பராமாயணத்திற்கு மூலநூல். அதில் சீதையின் பாத்திரம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் சீதையை இராமன் சந்தேகப்பட்டது, சீதையின் தவறான இயல்புகளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளவை எவை என்பதை மணியம்மையாரின் கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ளலாம் (‘குடிஅரசு’, 10.11.1945).

பெண்களைக் களத்திற்கு அழைத்தவர்

1938இல் மொழிப்போரில் பெண்களைப் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தவர் பெரியார். பெண்கள் போராட்டக் களத்திற்கு வந்தவுடன் இந்தி எதிர்ப்புப் போர் புதிய எழுச்சியைக் கண்டது. போராட்டம் வெற்றி பெறுவதற்குப் பெண்களின் பங்களிப்பு முக்கியக் காரணியாக அமைந்தது. எந்த ஒரு போராட்டத்திலும் பெண்களின் பங்களிப்பை வலியுறுத்தியவர் பெரியார்.

1945ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற 17ஆவது திராவிடர் கழக மாகாண மாநாட்டில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர் பெரியார். ‘‘ஒரு குடும்பத்தில் இரண்டு பேர்களும் வர சவுகரியமில்லையானால் பெண்கள் மாத்திரம் வரட்டும்” (‘குடிஅரசு’, 08.09.1945) என்று அறிவித்த புரட்சிக்குரல் பெரியாருக்கே உரியது.
பெரியாரின் தொண்டரல்லவா மணியம்மையார்! வடநாட்டுச் சுரண்டல் ஒழிப்புப் போராட்டத்தின்போது தாய்மார்கள் போராட்டக் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, தியாகிகள் பட்டியலிலே தங்களது பெயரையும் சேரச் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் (‘விடுதலை’, 25.03.1971).

இன்றைய நாளில் பல்வேறு இயக்கங்கள் பொதுக்கூட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்துகிறார்கள். ஆனால் அவற்றில் பெரும்பாலும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வதுதான் தற்போதைய நிலைமையாக இருக்கிறது. வீட்டிலுள்ள பெண்களைப் பெரும்பாலும் அழைத்து வருவதில்லை. இதனைச் சுட்டிக்காட்டி 50 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியவர் மணியம்மையார். ‘‘இயக்க நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் பெண்களை அழைத்து வர வேண்டும். பெண்கள் ஒரு சமுதாயத்தில் திருந்தாவிட்டால் எந்த மாற்றமும் அந்தச் சமுதாயத்தில் கொண்டு வர முடியாது” (‘விடுதலை’, 29.03.1975).

பெரியார் பணி தொடர்தல்

ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் சட்டப் பிரிவுகளைத் திருத்த வேண்டும் என்பதற்காகப் பெரியார் முன்னெடுத்த அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் என்பது தமிழ்நாடு கண்ட போராட்டங்களில் முதன்மையானது. பெரியார் மறைந்த பின்னர், அப்போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறார் மணியம்மையார். தமிழ்நாடு முவதும் அஞ்சல் நிலையங்களின் முன்பு மறியல் நடத்தும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். அப்போராட்டத்தின்போது மணியம்மையார் பயன்படுத்திய வரிகள் மிகவும் முக்கியமானவை.
‘‘ஒரு சுப்பிரமணிய கவுண்டர் அரசமைப்புச் சட்டப்படி மதிப்புக்குரிய மாண்புமிகு மந்திரியாக முடியும். ஒரு காமராஜ் நாடார் அரசமைப்புச் சட்டப்படி பெருமைக்குரிய முதல் மந்திரியாகவும், பார்லிமெண்ட் மெம்பராகவும் ஆகமுடியும்! ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மரகதம் சந்திரசேகர் அம்மையார் அதே அரசமைப்புச் சட்டப்படி அந்தஸ்துள்ள மந்திரியாக ஆக முடியும். ஆனால், அதே சுப்பிரமணியமும், காமராஜரும், மரகதம் அம்மையாரும் அந்த அரசமைப்புச் சட்டப்படி கோயில்களிலே மணியடிக்கிற வேலைக்குப் போக முடியாது என்றால் என்ன நியாயம்?

மந்திரி வேலையைவிட மணியடிக்கிற வேலைக்குப் புத்தி அதிகம் வேண்டும் என்று சொல்லப்படுமானாலும்கூடப் பரவாயில்லை. ஆனால் அர்ச்சகர் ஆவதற்கு அறிவு தேவையில்லை, பிறவிதான் தகுதி, பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவன் எவனாயிருந்தாலும் போதும்………..இதைத்தான் பெரியார் அவர்கள் ஒழிக்க வேண்டும் என்றார்” (‘விடுதலை’, தலையங்கம், 09.03.1974). எந்த அரசமைப்பு ஒருவருக்கு ஒரு உரிமையை வழங்குகிறதோ அதே அரசமைப்பு அதைவிட எளிதாகப் பெறும் ஓர் உரிமைக்கு எதிராகவும் இருப்பதை எவரால் இவ்வளவு தெளிவாகப் புரிய வைக்க முடியும்?

தமிழருக்கு முன்னுரிமை

தமிழ்நாட்டில் உள்ள பணிகளுக்குத் தமிழர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் மணியம்மையார். தமிழ்நாடு எங்கும் உள்ள திராவிடர் கழகக் கிளைகளிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டது. இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விவரங்கள் தொடர்ந்து விடுதலை நாளேட்டில் வெளியிடப்பட்டு வந்தன. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவை இது தொடர்பான முடிவுகளை எடுத்த போது அதனை வரவேற்று எழுதியவர் மணியம்மையார். “தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கே 80 சதவிகித உத்தியோகம் தரப்பட வேண்டும் என்பதாகிய நமது (“திராவிடர் கழகம்) கிளர்ச்சிக்கு ஒரு வெற்றி” என்றே அதனைக் குறிப்பிடுகிறார் மணியம்மையார் (‘விடுதலை’, தலையங்கம் 22.07.1974).

தமிழர் ஒற்றுமை

பார்ப்பனர்கள் தங்களுடைய இனநலனில் அக்கறை கொண்டு எபோஒதும் இயங்கி வருபவர்கள். இன்றைக்கும் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தமிழ்நாட்டில் இல்லாமல் தில்லி போன்ற இடங்களில் இருந்தாலும் தொடர்ந்து ஊடகங்களில் இயங்கி வரும் பார்ப்பனர்கள் பலர் உண்டு. ஆனால், இத்தகைய ஒற்றுமை தமிழர்களிடையே பெருமளவு காணப்படுவதில்லை. இது குறித்து எழுதும்போது, “பெரும்பாலான தமிழகப் பார்ப்பனர்கள் (இங்கு அவர்களின் ஆதிக்கம் உத்தியோகத் துறையில் ஒழிக்கப்பட்ட
பின்) வடக்கில் சென்று பெரிய பெரிய உயர்பதவிகளில் அமர்ந்து அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தங்களுக்கே உரித்தான சூழ்ச்சித் திறனாலும், தந்திரத் தன்மையாலும் வடவர்களைத் தம் கைவசப்படுத்தி, தங்கள் நல்வாழ்விற்கும், தம் இனத்தின் முன்னேற்ற உயர்வுக்கும் என்னென்ன அவசியமானதும், தேவையானதுமான காரியங்களோ, அவைகளை எல்லாம் எவ்விதத் தங்குதடையின்றி ஒற்றுமையாக இருந்து நிறைவேற்றிக் கொள்வதுடன், சமய சந்தர்ப்பங்கள் நேரிடும்போதெல்லாம் நம்மினத்தவர்களை அழித்து ஒழிக்க முயற்சி எடுத்துக் கொண்டு முழுமனதுடன் ஒன்றுபோல், எல்லோரும் அதே வேலையாய், கவனமாய் இருந்து வருகிறார்கள்.

தமிழ் மக்களாகிய நமக்கோ அத்தகைய மனப்பான்மை சிறிதேனும் இல்லாமல் இருப்பது எவ்வளவு இழிவு என்பதை நாம் சற்றும் நினைத்துப் பார்த்ததில்லை. அந்த ஒற்றுமை, ஒத்த கருத்து அந்த இனத்திற்கு இருக்கின்ற அளவில் நமக்குக் கடுகு அளவுகூட கிடையாது” (‘விடுதலை’, 28.12.1974) என்று தமிழர்கள் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியவர் மணியம்மையார்.

இராவண லீலா

அவரது போராட்டப் பயணங்கள் அனைத் திற்கும் சிகரம் வைத்தாற்போல நடைபெற்றது தான் இந்தியாவையே அதிரச் செய்த இராவண லீலா. இராம லீலா என்ற கொண்டாட்டத்தில் ஏன் பிரதமரோ, குடியரசுத் தலைவரோ கலந்து கொள்ளக் கூடாது என்பதை விளக்கியும், அவ்வாறு கலந்து கொண்டதற்கு எதிர்ப்புக் காட்டும் வகையில் இராமனின் உருவத்தைக் கொளுத்திய துணிவு இந்தியாவில், ஏன், உலகிலேயே ஒரு தலைவருக்கும் இருக்காது. அத்தகைய துணிவையும், தலைமைப் பண்பையும் ஒருசேரக் கொண்டு விளங்கியவர் அன்னை மணியம்மையார்! அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய பாடமாகும்.