Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அம்பேத்கரை அறிவோம்! பின்பற்றுவோம்!-த.மு.யாழ்திலீபன்

சகோதரத்துவம் என்கின்ற சொல் வெறும் சொல் அல்ல. அது மூவாயிரம் ஆண்டு கால அடக்குமுறைக்கு எதிரான பண்பாட்டுப் புரட்சியின் விளைவு. அந்த ஜனநாயக ஒற்றுமை எளிதாகப் பெறக்கூடியது அல்ல. எது ஜனநாயகம் என்றால் “சகோதரத்துவத்துடன் அனைத்து மக்களும் சமத்துவமாக இணைந்து வாழ்வதே ஜனநாயகம்” என்று இந்திய சமூகத்தில் அம்பேத்கரை தவிர வேறு எவரால் பதிலளித்து விட முடியும்? மனித மாண்பின் அவசியத்தையும், அவற்றின் பண்பையும் பெரிதும் மதித்தும் பிறருக்கு அறிவுறுத்தியும், தன் வாழ்நாள் முழுவதும் சமத்துவம் பேசிய சமத்துவர் அம்பேத்கர்.

புரட்சியாளர் அம்பேத்கரின் பல பரிமாணங்களை இன்னும் நாம் அறிந்திடாமல் இருப்பதும், அறிய முற்படாமல் இருப்பதும் அறிவு முடம் ஆகி உள்ளதைக் காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இவ்வகை அறிவு முடமும் ஒரு வகை ஊனம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சமத்துவத்திற்கான அறிவூற்று நமக்கு எதைக் நினைவூட்டிச் சென்றிருக்கிறாரென எண்ணிப் பார்ப்பது அவரின் நினைவைப் போற்றும் நமக்குப் பாடமாக அமையும்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஜனநாயக மாண்பை மட்டும் பேசிவிட்டுச் சென்றவர் அல்ல. ஜனநாயகத்தின் உறுதிப்பாடு, ஜனநாயகத்தின் மீதான ஆர்வம், ஜனநாயகத்தின் மீதான மதிப்பீடென அனைத்தும் உணர்ந்து, தெளிந்து செயல்பட்டவர். ஒரு இடத்தில் கூட எதேச்சாதிகாரப் போக்குடனோ அல்லது ஆதிக்க தன்மையுடனோ கருத்தியலுக்கு எதிராக நடந்து கொண்டதில்லை. ஏனெனில், அம்பேத்கரின் வாழ்நாள் போராட்டமே ஆதிக்க அதிகாரஞ் செலுத்திகளை எதிர்த்துத் தான். அண்ணல் அம்பேத்கர் பார்வையில் அடித்தட்டு மக்களுக்கு எதிரான ஜனநாயகப் போக்கை எந்த வகையில் அணுகுகிறார் என்பதை அறிதலே ஜனநாயகத்தின் மீதான அவரின் பார்வையைப் புலப்படுத்தும்.
1944ஆம் ஆண்டு இந்திய அரசின் தொழில்துறை உறுப்பினரான அம்பேத்கர் அவர்களுக்குச் செப்டம்பர் 22 ஆம் தேதி மதராஸ் நகர சபை சார்பில் ரிப்பன் மாளிகையில் பாராட்டும், வரவேற்பும் கொடுத்தனர். அந்த நிகழ்வில் அம்பேத்கர் அவர்கள் இப்படி உரை நிகழ்த்துகிறார்,

“இந்தப் பாராட்டுப் பத்திரம் நகர சபையில் ஏகமனதாக நிறைவேறவில்லை என்றும், சில எதிர்ப்புகள் இருந்ததாகவும் நான் பத்திரிகையில் படித்தேன். இதைச் சர்ச்சையாகவோ ஒரு விமர்சனமாக இல்லாமல் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். இது ஏக மனதாக நிறைவேறவில்லை என்பதற்காக அதிக மகிழ்ச்சியடைகிறேன். ஏக மனதாகச் செய்யப்படுகிற காரியங்கள் பலவும் ஒரு சடங்கிற்காகச் செய்யப்படுவதே, நாகரிகத்தின் வெளிவந்த பொய்மையாகவோ விளங்குகின்றன. இதனை நாம் ஒவ்வொரு நாளும் ஒரு அர்த்தமும் இல்லாமல் செய்து வருகிறோம்” என்று, தன் பாராட்டுக்கு, வரவேற்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிகழ்வை எதிர் நிலையில் இருப்பவருக்கும் அந்த ஜனநாயகத் தன்மை உண்டு என, எவர்மீதும் பகை உணர்வு கொள்ளாமல் அதை நாம் அனுமதிக்க வேண்டும் இதுவே ஆரோக்கியத்தை உருவாக்கும் எனச் செயலில் செய்து உணர்த்துகிறார் அண்ணல் அம்பேத்கர்.
ஜனநாயகத்தில் தனக்கான உரிமை கோருபவர்களையும் வகுப்புவாரி உரிமை கேட்பவர்களையும் பார்ப்பனர்கள் எப்படி அணுகினர்? அணுகியவர்களின் நிலை என்ன? உரிமை பெற்ற பார்ப்பனரல்லாதவர்களுக்கான அம்பேத்கரின் இந்த ஒருவரிக் கேள்வியானது, ஒரு நூற்றாண்டின் உழைப்பை நினைவுபடுத்திப் புது விடுதலைப் போருக்கு இட்டுச் செல்வதாக அமைகிறது.

ஆம். 1944 செப்டம்பர் 23 ஆம் நாளில் மதராஸ் கன்னிமாரா ஹோட்டலில் பேசிய அம்பேத்கர், பார்ப்பனரல்லாதார் கட்சியின் தோற்றம், நோக்கம், சாதனை மற்றும் தோல்விகளைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். பிறப்பினால் பிறவி பேதம் கற்பித்து, இவர்கள் படிக்க வேண்டும், இவர்கள் படிக்கக் கூடாது என்றும் இவர்களுக்கு இவர்கள் அடிமை என்றும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் சுரண்டலை ஏற்படுத்தி, அதன் மூலம் அதிகாரத் தன்மையை நுகர்ந்து, ஒருபோதும் பார்ப்பனர் தவிர யாரும் கல்வி கற்றுவிடக் கூடாது, என்றும், உத்தியோகம் என்கின்ற ஆசை நினைத்து விடக் கூடாது என்ன்றும் இருந்த நிலைகளிலிருந்து முட்டி மோதி, சுயமரியாதை உணர்வு பெற்று பார்ப்பனரல்லாத மக்களுக்கும் அடிப்படை உரிமை வேண்டும், கல்வி உத்தியோகம் வேண்டும். என்ற உரிமைக் குரல் எழுப்பி நீதிக்கட்சி எனும் இயக்கம் கட்டி, அரசியல் அதிகாரம் பெற்று பார்ப்பனரல்லாத மக்களுக்குக் கல்வி உரிமை வழங்கிய அக்கட்சியை, பார்ப்பனர் அல்லாத மக்களுக்காகக் கல்வி மற்றும் அரசு உத்தியோகம் கேட்டார்கள் என்பதற்காகவே பார்ப்பனர்களும் பார்ப்பனப் பத்திரிகைகளும் எப்படி அழைத்தார்கள் என்பதை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

“பிராமணர் அல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதற்காக இக்கட்சி (நீதிக்கட்சி) 20 வருட காலம் போராடி இருக்கிறது. இருந்த போதிலும் தமக்கு வேலையும் ஊதியமும் கிடைத்த பின்னர் அவர்கள் நீதிக் கட்சியை நினைத்துப் பார்த்தார்களா?” என்கிற கேள்வியை எழுப்புகிறார் அம்பேத்கர். நமக்கு உரிமையும், உணர்வும், கல்வியும், வேலையும் வழங்கிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை யார் நினைத்துப் பார்த்தது? பார்ப்பனரல்லாத மக்களே நினைத்துப் பார்க்கவில்லை என்கின்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இன்றைக்கு பார்ப்பனரல்லாத இயக்கமான நீதிக்கட்சியின் தொடர்ச்சி சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் இன்றும் அதே நிலையிலிருந்து பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைக்காகச் செயலாற்றி வருகிறது. அவ்வியக்கத்துக்கு நாம் எவ்வளவு நன்றி உணர்வோடு இருக்கிறோம் என்பதை நாமே மதிப்பிட்டுக் கொள்வதுதான் உகந்ததாக இருக்கும். மேலும் பார்ப்பனரல்லாத இயக்கம் பார்ப்பனரல்லாத மக்களுக்குச் செய்ததையும் நினைத்துப் பார்ப்பதும், அவர்களின் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பதும், பின்னால் இருக்கக்கூடிய சமூகத்திற்கு ஏணிப்படியாய் இருந்து உதவ வேண்டும் என்பதையே அம்பேத்கர் இப்படி கூறுகிறார். இச்செயலைச் செய்ய நீதி கட்சிக்குப் பின் பலன் பெற்றவர்கள் யாரும் முன் வரவில்லையேயெனக் கேள்வி எழுப்புகிறார்.

“பார்ப்பனரல்லாதார் கட்சியின் வேலைப்பாடுகளை இக்கட்சியின் எதிரிகள் ‘வேலை தேடிகள்’ என அழைத்தனர். இந்தச் சொல்லைத் தான் ‘ஹிந்து’ பத்திரிகை அடிக்கடி பயன்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியவர், அடுத்த கட்சியினரும் (பார்ப்பனர்களும்) இதே வகைப் பட்டவர்கள் தானே?” எனக் கேள்வி எழுப்புகிறார். அம்பேத்கர் அவர்கள் எழுப்பிய இக்கேள்வி மிகுந்த ஆழமுடையது. பார்ப்பனர்கள் அப்போது தொடங்கி இப்போது வரை இட ஒதுக்கீட்டைத் தகுதி, திறமை என்னும் பெயரில் எதிர்த்தே வருகின்றனர். ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மூலம் பார்ப்பனர்களுக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது என்பது தான் வரலாறு. ஒருபுறம் இட ஒதுக்கீட்டை எதிர்த்தாலும் மறுபுறம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற பார்ப்பனர்களின் நிலையைத்தான் அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார். பார்ப்பனரல்லாத இயக்கத்தவரை வேலை தேடிகள் என்றபோது வேலைக்காக இட ஒதுக்கீடு கேட்கும் ‘நீங்களும் வேலை தேடிகள் தான்’ என்று அன்றே பதில் உரைத்திருக்கிறார் அம்பேத்கர். 