கணிப்புகள் என்பது எப்போதும் மக்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஒருபுறம் ஜாதகமும், கிளி ஜோசியமும், இராசி பலனும் இன்றைக்கும் மக்களை ஈர்க்கின்றன.
பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல் 2032இல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்பு மூன்று சதவிகிதம் இருக்கிறது என்ற விஞ்ஞானிகள் கணிப்பு மறுபுறம்.
மருத்துவ உலகை எடுத்துக்கொண்டால் முன் கணிப்பு என்பது பல்வேறு நோய்கள் பற்றியதாகவுள்ளது.
எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள்? எந்தெந்த நாள்கள் நல்ல நாள்கள்? எந்த நாளில் எந்தக் காரியம் செய்ய வேண்டும்? திருமணத்திற்கு எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும்? என்பனவற்றை முன்பே கணித்துக் கொடுக்கும் ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டுச்
செயல்படுகின்றனர். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இந்தியப் பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது.
ஜாதகம் பார்த்து பொருத்தத்தைக் கணிப்பது இன்றும் திருமணங்களில் மிகப் பெரிய அளவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
“ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல் அந்நியர் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும் அல்லது தெரிந்து கொள்வதைப் பற்றிக் கவலையே இல்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும், தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திர திருமணமாகும்,” என்று 1950 இல் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் ‘விடுதலை’ இதழில் எழுதினார். ஆனால் 75 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கோள்கள் மனித வாழ்வில் கோலோச்சும் அவலம் அதிகமாகிவருகிறது.
அறிவியல் அறிஞர் முனைவர் கோமதி அவர்கள் ‘லெட்சைன்ஸ்’ என்ற வலைக்காட்சியில் அறிவியல் கருத்துகளை விளக்கி தெளிவு
தருபவர். தன் கணவர் இருந்தால் மட்டுமே தனக்கு மதிப்பு என்று பயந்து கணவன் உயிரைக் காப்பாற்ற கடினமான நோன்பிருந்து பெண்கள் வேண்டிக் கொண்ட 1925 காலகட்டங்களில் ஆணின் சராசரி வயது 28.
இப்போது இருக்கும் காலத்தை விட கடவுள் பக்தியும் ஜோசியமும் ஜாதகமும் பரிகாரமும் அதிகமாக நம்பப்பட்ட அக்காலத்தில் மிகக் குறைவாக இருந்த சராசரி வயது, இன்று 67 ஆக அதிகரித்திருக்கிறது எனில் அதற்குக் காரணம் ஜோசியமோ ஜாதகமோ அல்ல, ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்து விடுகிறார்கள் என்று மருத்துவர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோமே அதுவும் தடுப்பூசிகளும் தானென்று ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார்.
ஜோசியக்காரர்கள் மாநாடு அய்தராபாத்தில் நடந்தது. அதில் டாக்டர் புஷ்பா பார்க்கவா என்ற மிகப்பெரிய அறிவியல் அறிஞர், (உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மய்யத்தின் நிறுவனர், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர்) தனது 73ஆம் வயதில் அந்த மாநாட்டிற்குச் சென்றார். நாட்டில் இருக்கிற அத்தனை ஜோதிடப் புலிகளும் அங்கே இருந்தார்கள். போன நூற்றாண்டில் பிறந்த நான்கு தலைவர்களின் ஜாதகத்தைக் காட்டி யாராவது இதை வைத்து இவர்கள் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்று சொன்னால் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன்; அப்படித் தவறாக இருந்தால் நீங்கள் 2500 கொடுத்தால் போதும் என்று சொன்னார்.
ஆனால், நடந்தது என்ன என்றால் ஒருவர் கூட எழுந்து வந்து அந்த ஜாதகத்தை நான் கணிக்கிறேன் என்று சொல்லவில்லை. உடனே அந்த அறிவியல் அறிஞர் யுஜிசி சோதிடத்தைப் பாடமாக்கி ஒரு முடிவெடுத்தது தவறு என்று சொல்லி நீதிமன்றத்துக்குச் சென்றார். ஜோசியம் உண்மை அல்ல, இட்டுக்கட்டிச் சொல்லப்படுவது என்றார். ஆனால் நீதிமன்றம் தலையிடாமல் ஒதுங்கி கொண்டது. ஜோசியத்தைத் தூக்கி நிறுத்த பா.ஜ.க. ஒன்றிய அரசு செய்த வேலை இதுதான். அரசினுடைய ஆதரவும் பொதுமக்களின் ஆதரவும் இருக்கும் வரை தான் ஜோசியக்காரர்கள் ஏமாற்ற முடியும்; ஆயுளையும் உடல் நலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பது அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இந்நிகழ்வையொட்டி, “கல்லூரிகளில் வேதகால ஜோதிடப் படிப்பா?” என்ற தலைப்பில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 23.4.2001 அன்று பெரியார் திடலில் ஆற்றிய உரை நூலாகவே வெளிவந்திருக்கிறது. “ஜோதிட ஆராய்ச்சி” என்ற தந்தை பெரியாரின் நூலை எடுத்துக்காட்டி, “ஜோதிடத்தின் அஸ்திவாரமான பிறந்த தேதி எப்படி கணிக்கப்படுகிறது? ஒரு ஜீவன் பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் உயிர் ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து ஏழு எட்டு ஒன்பது பத்து மாதங்களில் எப்போதாவது பிறக்கும் காலமா? தலை வெளியில் தெரியும் காலமா? மருத்துவச்சி கைவிட்டு எடுத்த நேரமா? அல்லது வயிற்றை அறுத்தெடுத்த நேரமா? ஆணா பெண்ணா என்று பார்த்துவிட்டு அந்தச் செய்தியை வெளியில் வந்து சொல்கிற நேரமா? இரு வேறு கடிகாரங்கள் ஒரே நேரத்தைக் காட்டுமா? அந்த நேரத்தில் பிறக்கும் அத்தனை ஜீவன்களுக்கும் ஒரே மாதிரி பலன்களா?” என்று பெரியார் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டதை எடுத்துக்காட்டி அஸ்ட்ராலஜி என்பது வேறு; அஸ்ட்ரானமி என்பது வேறு. அஸ்ட்ரானமி என்பது வானவியல்.வருண பகவானுக்கும் ரமணனுக்கும் ஏதாவது தொலைப்பேசித் தொடர்பு இருக்கிறதா? அவர் செயற்கைக்கோள் உதவியுடன் எப்போது மழை வரும் எனக் கூறுகிறார்; அஸ்ட்ராலஜி என்பது போலி விஞ்ஞானம் என்று ஆசிரியர் அவர்கள் விளக்கினார்.
டேவிட் ஹில் பேர்ட் என்ற உலகப் புகழ் பெற்ற கணித மேதை அற்புதமான ஒரு வாக்கியத்தைச் சொல்லி இருக்கின்றார். ‘‘உலகில் உள்ள புத்திசாலிகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், எந்த முட்டாள் தனத்தையும் விட அப்பன் முட்டாள்தனம் எது என்று கேட்டால் ஜோதிடம் தான் என்று அவர்கள் சொல்லியாக வேண்டும்’’ என்று சொன்னதைத் தம் உரையில் தெரிவித்த ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்” என்ற நூலையும் தொகுத்தளித்துள்ளார்.
ஆக, அறிவியல் கண்டுபிடிப்புகளான தொலைக்காட்சிகளை வைத்துக்கொண்டு ஆயுள் வளர்க்கிறோம் என்ற பேரில் அஞ்ஞானத்தைப் பரப்புவது தவிர்க்கப்பட்டு ஏராளமான மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் சோதனை முறைகளையும் பயன்படுத்தி வருமுன் காத்து
ஆயுளைக் கூட்டி வாழ்வோம்