Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண்ணுரிமை வேண்டியவர் பெரியார்!- முனைவர் கடவூர் மணிமாறன்

பெண்ணுரிமை மறுக்கின்ற குமுகம் என்றும்
பின்னடைவைச் சந்திக்கும்; உயர்வை எய்தா!
பெண்டிரெலாம் ஆடவர்க்கே நிகராய் வாழும்
பெருந்தகைமை வாழ்வியலில் ஒளிர வேண்டும்!
எண்ணத்தில் செயற்பாட்டில் அறிவில் எல்லாம்
இணையாகத் திகழ்வோரே ஆணும் பெண்ணும்
என்கின்ற கருத்தியலும் ஓங்கு மாயின்
இல்லறமும் நல்லறமாய்த் திகழும் அன்றோ?

ஆண்களுக்குப் பெண்களெலாம் அடிமை என்னும்
அவலத்தைத் துடைத்தெறிய வேண்டும்! வீட்டைத்
தூண்போலத் தாங்குபவள் பெண்ணே ஆவாள்
தொடக்கநிலைப் பள்ளிகளில் கற்பிக் கின்ற
மாண்பார்ந்த ஆசிரியப் பணியை, வாழும்
மகளிரெலாம் பெற்றிடவே வேண்டும் என்றார்!
வேண்டுகிற காதல்மணம், மணவி லக்கு
விருப்பங்கள் உரிமைக்குக் குரலும் தந்தார்!

மக்களெலாம் திரண்டிருந்த செங்கற் பட்டு
மாநாட்டில் சொத்துரிமை மகளி ருக்கே
தக்காங்கு வழங்கத்தீர் மானம் போட்டார்!
தந்தைநம் பெரியாரும்! இல்ல றத்தில்
மிக்கபணி யாற்றிவரும் பெண்கள் காவல்,
மிடுக்கான படைத்துறையில் பணிகள் ஆற்றி
எக்குறையும் இல்லாமல் உயர்ந்து வாழ
இனமானப் போர்முரசும் ஆர்த்தார் அய்யா!

களங்கத்தைச் சுமக்காமல் வீணாய் நாளும்
காலத்தைப் போக்காமல் வாழக் கற்போம்!
உளங்கவரும் உரையாற்றும் ஆற்றல் வேண்டும்!
ஒழுக்கநெறி பிறழ்வோரோ உயர்வைக் காணார்!
விளங்காத கருத்தியலைத் திணிப்போர் தம்மின்
வெற்றியெலாம் நிலைக்காது! நாமும் என்றும்
அளவோடு செலவிட்டுக் குடும்ப வாழ்வில்
அமைதியினை, மனநிறைவை அடைதல் நன்றே!