Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சாமியார் எத்தனை சாமியார்- சரவணா ராஜேந்திரன்

பட்டியலில் உள்ள சாமியார்கள் கற்பனை யோடு எழுதப்பட்ட பதிவுகள் அல்ல, அத்தனைக்கும் படங்களோடு சான்றுகளும் உண்டு.
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தேடப் பட்டு வந்த ”மம்தா குல்கர்னி” என்ற திரைப்பட நடிகை 35 ஆண்டு காலமாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஏதோ ஒரு நாட்டில் தலைமறைவாக வாழ்ந்தார். இந்த நிலையில் திடீரென்று அவர் மீதான குற்றச்சாட்டை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது.

உடனடியாக அவர் இந்தியா திரும்பி கும்ப மேளாவில் முழுக்கு போட்டு சாமியாராகிவிட்டார். இவர் எந்த வகை சாமியார் என்று தெரியவில்லை.
ஆனால், கும்பமேளாவில் பலவகை சாமியார்கள் உள்ளனர். இது நகைச்சுவைக்காக அல்ல உண்மையாக பட்டியல் இதோ பாருங்கள்.

ரகம் பிரிக்கப்பட்ட சாமியார்கள்

கிழட்டு சாமியார்,குழந்தை சாமியார், இளவட்டச் சாமியார், மனைவியோடு இருக்கும் சாமியார்(கிரகஸ்த பாபாவாம்),
மனைவி தொல்லை தாங்காமல் ஓடிவந்த சாமியார், குடும்பத்தைக் காப்பாற்றும் கடமையிலிருந்து தப்பி சாமியாராக வேடம் பூண்ட சாமியார்.
வைப்பாட்டியை உடன் வைத்துக்கொண்டு இருக்கும் சாமியார், வாடகைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்த சாமியார்(மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்)கல் ஒன்றை மடியில் கட்டிக்கொண்டு மனைவியாக நினைத்து தூக்கிச்செல்லும் சாமியார்.

விவாகரத்து வாங்கிக் கொண்டு சாமியார் ஆன சாமியார். கும்பமேளாவில் மட்டுமே குளிக்கும் சாமியார், உருண்டுகொண்டே திரியும் சாமியார்,
கோடிக்கணக்கில் நகையை அணிந்துக் கொண்டு வரும் சாமியார், அருணாகயிறு கூட இல்லாமல் வெறும் சாம் பலைப் பூசிக்கொண்டு திரியும் சாமியார்.
கோவிலில் மட்டுமே இருக்கு சாமியார், தனக்கென கோடிக் கணக்கான ரூபாயில் பெரும் அரண்மனை கட்டிக்கொண்டு வசிக்கும் சாமியார்,
காலம் முழுவதும் மனிதர்களைப் பார்க்காமல் காட்டில் மட்டும் இருக்கும் சாமியார், விலை உயர்ந்த காரில் வலம் வந்து சாராயக் கடைகளில் மது அருந்தி உல்லாச நடனமிடும் சாமியார்.

கிராமத்தில் ஊரை ஏய்ந்து வாழும் சாமியார். கடற்கரைகளில் மட்டுமே இருக்கும் சாமியார், கோடிக்கணக்கில் பிஸ்னஸ் பார்க்கும் சாமியார் (ராம்தேவ் பாபா).

கொலைக் குற்றம் செய்துவிட்டு தலைமறைவாக வாழும் சாமியார். சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த சாமியார்,
சிறைத் தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற சாமியார், சிறுமிகளை மட்டுமே உதவியாளராக வைத்துள்ள சாமியார்,
இளம்பெண்களை விபசாரத்திற்கு விட்டு சம்பாதிக்கும் சாமியார்(தேவதாசி தலைவராம்)

பாலியல் குற்றவாளி சாமியார், சம்மட்டியைத் தூக்கிக்கொண்டே அலையும் சாமியார், ஆணுறுப்பில் பெரிய மணியைக் கட்டிக்கொண்டு பொதுமக்களை அடிக்கச் சொல்லும் சாமியார், ஆணி செருப்பை அணிந்துக்கொண்டு திரியும் சாமியார், முள்மீது படுத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் சாமியார்,
நடிகர்களைப்போல் வேடம் மிட்ட சாமியார், திரை இசைக்குச் சுழன்று சுழன்று ஆடும் சாமியார்.

தாடி வைத்த சாமியார், நடிகர்களைப் போல் ஸ்டைலாக தோற்றம் அளிக்கும் சாமியார், தண்ணிரை மட்டுமே குடித்து வாழ்கிறேன் என்று ஊரை ஏமாற்றும் சாமியார், தவளைபோல் குதித்து குதித்துச் செல்லும் சாமியார், துப்பும் சாமியார், பிரம்பு மற்றும் சாட்டையால் அடிக்கும் சாமியார்,
கமண்டல சாமியார், கமண்டலம் இல்லாமல் திரிசூலம் வைத்துக்கொண்டு திரியும் சாமியார், ஒரு கையைத் தூக்கிக்கொண்டு அலையும் சாமியார்.

தலைகீழாகத் தொங்கும் சாமியார், கஞ்சா விற்கும் சாமியார், மரத்தின் மீது வசிக்கும் சாமியார், பஜனை பாடும் சாமியார், அசிங்கவார்த்தை பேசி ஆசீர்வாதம் செய்யும் சாமியார், தலையில் கால் ஒடிந்த புறாவை எப்போதும் வைத்திருக்கும் சாமியார்.

நாக்கை நீட்டி நீட்டி நாய்போல தண்ணீர் குடிக்கும் சாமியார்.

இதில் ஆண் நிர்வாணச் சாமியாரும் உண்டு பெண் நிர்வாணச் சாமியாரும் உண்டு, பட்டியல் இன்னும் நீளும் இப்போதைக்கு இந்தச் சாமியார்கள் எல்லோரும் கும்பமேளாவிற்கு வந்துள்ளனர்.

பெண் நிர்வாணச்சாமியார் ஆந்திராவில் கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பரில் பெரும் அக்கப்போர் செய்துக்கொண்டு இருந்தார். காவல்துறையினரைக்கூட கன்னத்தில் அறைந்து மிகவும் ஆபாசமான முறையில் நடந்துகொண்டார். தமிழ்நாட்டிற்கு வருவேன் என்று சூளுரைத்தார்.

தமிழ்நாட்டில் பெரியாரின் பேரன்கள் இருக்கிறார்கள் இப்படி ஆடை இல்லாமல் தமிழ்நாட்டின் எல்லைக்கோட்டில் கூட கால் வைக்க முடியாது என்று எச்சரித்த பிறகு கும்பமேளாவிற்கு செல்கிறேன் என்று அப்படியே வடக்கே ஓடிவிட்டார்.