அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டு, அமலில் இருக்கும் முப்பெரும் சாதனைச் சட்டங்களில் ஒன்று- தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையாகும் (1968).
தமிழ், ஆங்கிலம் இந்த இரு மொழிகளே தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டத்தில் அமலில் இருக்கும் என்பதை அரசின் முக்கிய கொள்கை முடிவாக்கி, அந்தத் தனிச் சட்டத்தையே அமல்படுத்தி வருகிறார்கள். 57 ஆண்டுகளாக இந்த நிலை தொடர்கிறது.
அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் சரி, தமிழ்நாட்டில் இடையில் ஏற்பட்ட குடியரசுத் தலைவர் (டில்லி) ஆட்சிகளிலும் (மூன்று முறை) சரி, இக்கொள்கையில் எந்த மாறுதலும் இன்றி தொடரவே செய்தது.
காரணம், தமிழ்நாட்டில் 1938 – 1965 வரை ஆச்சாரியார் முதலமைச்சராக இருந்தபோதும், அதன் பின்னரும் கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடித்ததன் விளைவே இது.
1938இல் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற வலுவான போராட்டம்,
கட்சிகளைக் கடந்தது; மொழி உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு காவல் அரணாகும். தமிழ் உணர்வாளர் களும் களம் கண்டனர்.
இப்போதுள்ள ஒன்றிய அரசு, ‘‘தேசியக் கல்விக் கொள்கை’’ என்ற ஒரு புதிய கல்வித் திட்டத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது திணிக்க முயல்வதற்கு முழு முனைப்பின் முதல் கட்டமே இந்த மும்மொழியைக் கட்டாயமாக ஏற்கவேண்டும் என்ற ஆணவப் பேச்சு! ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர், வற்றா நதியான ‘கல்வியில் சிறந்தோங்கிய தமிழ்நாடு’ என்ற பெயரையும், புகழையும் கண்டு எரிச்சல் பட்டு, அதைத் தடுக்க தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய முக்கிய தவணையான ரூ.2152 கோடியை தர மறுப்பதுடன், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு சில மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியாகப் பிரித்து வழங்க ஏற்பாடுகள் நடந்துள்ளன என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
தேசிய மொழி என்று எந்த மொழியும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை!
இதுகுறித்து தமிழ்நாடே குமுறிக் கொந்தளித்து எழுந்துள்ளது!
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் ஒன்றிய அரசு ‘தாரை’ வார்த்துள்ளது. சில கொத்தடிமை மனப்போக்குள்ளவர்கள் தவிர, அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து குரல் கொடுக்கத் தயங்கவில்லை.
ஆழந்தெரியாமல் காலை விட்டவர் கதி அதோகதிதான். மின் வயரில் கை வைத்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையைப் போல், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பவர், அகம்பாவத் தொனியில், ‘‘ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்றே தீரவேண்டும் என்றும், அதனை மறுப்பது அரசமைப்புச் சட்ட விதி களுக்கு எதிரானது’’ என்றும் கூறி, தமிழ்நாடு அரசினை மிரட்டிப் பார்க்கிறார்!
இதை நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர், ‘‘தமிழ்நாட்டை இப்படி ‘பிளாக் மெயில்’ செய்வது – ஒருபோதும் செல்லாது – திமிர் முறிக்கத் தமிழ்நாடு தானே எழும் என்பதை ஒன்றிய அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று எச்சரித்தும் உள்ளார்!
‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்த விதிப்படி ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மும்மொழித் திட்டத்தைக் கட்டாயமாக ஏற்க வேண்டும்; அதை ஏற்றால் மட்டுமே கல்வி நிதியை அளிக்க முடியும் என்பதற்கான ஆதார விதி என்ன?’’ என்று பொருத்தமான கேள்வியை எழுப்பி, ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளார்!
கல்வி முன்பு ‘‘மாநிலப் பட்டியலில்’’தான் – அரசமைப்புச் சட்ட அட்டவணை ஏழாவது அட்டவணை அதிகாரங்கள் பற்றிய வரையறுப்பில்.
நெருக்கடி (MISA) காலத்தில் – யாருக்கும் தெரி யாமல் அதனை ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றி, சட்டத் திருத்தம் செய்தனர்.
அது செல்லாது என்ற வழக்கும்கூட சென்னை
உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டு, அவ்வழக்கு பாதி விசாரிக்கப்பட்டு, நிலுவை யில் உள்ளது!
தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. என்ற செகண்டரி பள்ளிகள், ஒன்றிய அரசு அதிகாரப்படி நடக்கின்றன.
மற்ற மெட்ரிகுலேசன், மற்ற அரசு உயர்நிலைப்பள்ளிகள், மாநில அரசின் கல்வித் திட்டத்தின்படிதான் நடைபெறும் – இருமொழித் திட்டம்தான் அங்கு.
பல ஆண்டுகளாக உள்ள இந்த நிலையை அறவே மாற்றி, புதிய ‘‘தேசியக் கல்விக் கொள்கை’’ என்ற திட்டத்தினால் தமிழ்நாடு அரசின், அதன் கொள்கை முடிவை மாற்ற முடியுமா? முடியாது!
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒத்திசைவுப் (Concurrent) பட்டியலில் 25 ஆம் அயிட்டம் என்ன கூறுகிறது?
“Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour”.
இதன்படி கல்வி ‘‘ஒத்திசைவு’’ப் பட்டியலில் உள்ளபோது, வலுக்கட்டாயமாக இதை ஒன்றியப் பட்டியலுக்கே மடைமாற்றம் செய்யும் நடைமுறைதானே இது?
இதை உரிமை மறக்காத எந்த மாநில மாவது ஏற்க முடியுமா?
அதே அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில், தேசிய மொழி என்ற தனித்தகுதி ஹிந்திக்கு, சமஸ்கிருதத்திற்கு அளிக்கவே இல்லை.
மாறாக, (Article 344(1), 351) படி தலைப்பில் வெறும் மொழிகள் ‘Language’ என்பதில் உள்ள 22 மொழிகளில் எதுவும் ‘தேசிய’ என்ற தனித்தகுதியோ, அடைமொழி சிறப்பையோ பெற்ற மொழிகள் அல்ல.
மேலும், ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி’’ (Cooperative Federalism) என்று ஒரு பக்கத்தில் பேசிக்கொண்டே, பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அரசு இப்படி ஓர் உரிமைப் பறிப்பை நடத்த விரும்பினால், அது நியாயமா? முடியுமா?
ஏற்கெனவே நீறுபூத்த நெருப்பாக உள்ள ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் பிரச்சினையை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் வேகமாக விசிறி
விடுவதன் விளைவு எதில் போய் முடியும்?
இதனை மாணவர்கள், பெற்றோர் ஏற்கவில்லை என்பதற்கான மக்கள் மன்றம் ஆர்ப்பரித்துக் கிளர்ந்தெழுவது கண்கூடாகத் தெரியும்.
தமிழ் இன உணர்வாளர்களே, மாநில உரிமையைக் காக்க அனைவரும் ஆயத்தமாவீர்!