Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

அப்படியே நானும் இறப்பேன்! – திருப்பத்தூர் ம.கவிதா

அம்மிக்கு வேலையில்லை
அருந்ததியைக் காணவில்லை
ஆரத்தி கரைக்கவில்லை
அட்சதையில் நனையவில்லை!
முகப்பட்டி பூசவில்லை
பட்டைப்பூ சடையில்லை
பந்தல்கால் நடவில்லை
பந்தியிலே விரையமில்லை!
கணவர் என்றெண்ணும்
எஜமானன் ஏற்பு இல்லை
கனவில் நின்ற கணவரைக்
காதலோடு கை பிடித்தேன்!
புகை போடவில்லை
நடுக்கூடத்தில்,
புகுந்து விட்டோம் புது வீடு!
இராகு காலம் பார்த்ததில்லை
இரவு பகல் பார்த்ததுண்டு!
சனி பிடித்ததில்லை
சளி பிடித்ததுண்டு!
வெள்ளிக்கிழமை விளக்கில்லை
வாசல் சாணத் தெளிப்பில்லை
நெற்றி நிறைய நீறு இல்லை!
புரட்டாசியில் சைவமில்லை
புரியாத பெயர் வைத்ததில்லை!
திருவிழா பார்த்ததில்லை
தீட்டு கழித்ததில்லை!
வேண்டுதலோ பரிகாரமோ
ஏற்றுக் கொண்டது ஏதுமில்லை!
பக்கத்து வீட்டில் செத்தவனைப்
பார்க்க விடாமல் செய்து,
கும்பாபிஷேகம் கூடிப் பார்க்கும்
குருட்டுப் பக்தியில்லை!

இறந்தனர் மூவர் எங்கள் வீட்டில்,
ஒரு நல்ல காரியம் செய்தோம்,
படம் திறந்து அவர்கள்
பெருமையைப் பேசினோம்!

இதுதான் என் வாழ்க்கை!
எனக்கும் நோய் வரும்!
என் வீட்டிலும் விபத்து நேரும்!
நானும் ஒருநாள் இறப்பேன்!

அச்சு அசலாய் யாரோ சொன்ன
அத்தனை சடங்குகளும் அடிபிறழாமல் செய்யும்,
நீங்கள் எப்படி இறக்கிறீர்களோ
அப்படியே நானும் இறப்பேன்! 