Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் கழகத்தை எதிர்ப்பது யோக்கியமா?- தந்தை பெரியார்

தோழர்களே!

இன்று 66ஆம் ஆண்டு கொண்டாட்டம் என்பதன் பெயரால் இவ்வளவு பெருமையும் பாராட்டுதலும் எனக்களித்ததற்காக நான் மிகுதியும் நன்றி செலுத்துகிறேன். நீங்கள் குறித்த புகழுக்கு நான் உரிமையுடையவன் என்று வைத்துக் கொண்டாலும், அது நீங்களாகவே எனக்கு ஏற்படுத்தி வைத்தது தான்.

என் பெருமை உங்களால்

எவ்வளவு பெரிய சிறப்பும் பெருமையும் உள்ள கோயிலாக இருந்தாலும் அதன் சிறப்பிற்குக் காரணம் அங்கே செல்லும் மக்களைப் பொறுத்து இருக்கிறதேதவிர, உள்ளேயுள்ள உருப்படி அல்ல. அதற்கு மற்ற உருப்படிகளை விட அதிக யோக்கியதையும் கிடையாது. அது போலவேதான் உங்களைப் பொறுத்திருக்கிறது என்னுடைய புகழும், தொண்டும்.

இவ்வளவு அன்பும், ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட மக்களை எப்படிப் பயன்படுத்துவது என்ற கவலை எனக்குச் சில சமயங்களில் வருவதுண்டு. வெளியிலுள்ள போராட்டங்களையும் நமக்கு தொல்லை கொடுத்து வயிறு வளர்ப்பவர்களையும் மறந்து நம்மீதுள்ள பொறுப்பைச் சிந்திப்போம். இன்று கட்சிப் பிரதி கட்சித் தகராறை மறந்து, நம்மீது சில இழி மக்கள் செய்துவரும் வீண் பிரச்சாரத்தையும் மறந்து, இவ்வளவு பெரிய தீர்மானங்களை நிறைவேற்றி விட்டோமே என்ற நம்பிக்கையில், “நமது நாட்டை நாம் பெற்றே தீருவோம்” என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

ஒரு பிரபலஸ்தர் – மிகப் பெரியவர், சமீபத்தில், ‘பாகிஸ்தானாவது, திராவிட நாடாவது, எல்லாம் கனவுதான்’ என்றார். “அது கனவோ, நனவோ அது இன்று பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களை “திராவிடநாடு திராவிடருக்கே” என்னும் பிரச்சினைக்காக சிறைக்கு அனுப்பவும் என்னால் முடியும். சாகும்போதும் ‘திராவிட நாடு’ என்று சொல்லிக் கொண்டே சாக இருக்கிறேன். பிறகு எப்படியோ ஆகட்டும்” என்று பதில் கூறினேன். முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், அவர்கள் நிலைமை ஒன்றுதான்.

ஆரியஸ்தானிலும், அவர்கள் கட்டுப்பாடுடன் இருப்பதால் நன்று வாழ்வார்கள். ஆனால் நமக்குத் ‘திராவிட நாடு’ கிடைக்காவிட்டால் நம் நிலைமை படுமோசமாகி விடும். நாம் உண்மையிலேயே சூத்திரர் ஆகி விடுவோம். ஆகவே தான் திராவிட நாடு நமக்கு மிகவும் அவசியம் என்று கூறுகிறேன்.

எதிரி பணிவார்கள்

சர்க்கார் நாம் இவ்வளவு தூரம் தியாக உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறோமென்பதை உணர்ந்தால் நம் கோரிக்கைக்குப் பணிந்தே தீருவர்; உதாரணமாக ரயில்வே சிற்றுண்டி விடுதிகளில் திராவிடருக்கு இழைக்கப்பட்டு வந்த இழிவு நீக்கத்திற்காக நான் முயற்சித்த போது, என்னை மிரட்டினார்கள். ஆனால் வாலிபர்களின் உதவி, ஒத்துழைப்பு எனக்கிருக்கிறது என்பதை அறிந்ததும், கிளர்ச்சி துவக்குமுன்னரே நமக்கு வெற்றி கிடைத்து விட்டது.

அது மாத்திரமல்லாமல் சேலம் மாநாடு எதிரிகள் கோட்டைக்குள் கூர்க்கர்கள் காவலுக்குள் இருந்தது. சேலம் மாநாட்டில் கூடியிருந்த 12000 மக்களில் 11000 மக்கள், 26, 27 வயதுக்குக் குறைந்த வயதினராகவே காணப்பட்டதால் எதிரிகள் கோட்டையை விட்டு பின் வழியில் சென்று விட்டார்கள். இந்த உணர்ச்சி நாட்டு இளைஞர்களிடத்தில் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டால், நம் தீர்மானங்கள் நடைமுறையில் வந்துவிடும்! வந்துவிடும்! அய்யமில்லை.

நாஸ்திகமா?

சேலத்தில் நிறைவேறிய ஒரு தீர்மானத்தை சாக்காக வைத்துக் கொண்டு நாஸ்திக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்கள் என்று நம்மைக் குறைகூறுகிறார்கள். “நம் இனம் ஒன்று; நாமெல்லோரும் ஒரே ஜாதி” என்பது நாஸ்திகமா? “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தமிழனுக்கு “தனி நாடு ஏன்? குறுகிய நோக்கமேன்”, என்று கூறுகின்றனர் சில புலவர் சிகாமணிகள், அப்படி நாடற்ற கூட்டம், யாதும் ஊரே என்னும் கூட்டம் லம்பாடிக் கூட்டம் “ஜிப்சி” ஒன்றுதான். நாங்கள் அவர்களைப் போல் லம்பாடிகளாக இருக்க விரும்பவில்லை. எங்களுக்கு நாடு இருக்கிறது; அது எங்களுடையதாக ஆகி விட வேண்டும். இதுதான் திராவிட நாடு. அதை அடைவதுதான் இன்று எங்களுடைய இலட்சியம்.

“நாம் திராவிடர், ஒரே ஜாதி, ஒரே கூட்டம், ஜாதி பேதத்தைக் காட்டி வயிறு வளர்க்க வேண்டிய அவசியத்திலில்லை, வாலிபர்களாகிய நீங்கள் நம்மை நாத்திகர் என்று கூறி விடுவதாலேயே, வைதீக மக்கள் நம்மை ஒழுக்கங் கெட்டவர்களென்று சொல்லி விட்டதாக மனப்பால் குடிக்கிறார்கள். ஒழுக்கம் மிக மிக அவசியம் என்று கூறுபவர் நாம் தான். “சாமி இல்லை; அக்காவைத் தங்கையைக் கட்டிக் கொள்”, “மானமற்று மக்களைக் கொள்ளை அடியுங்கள்” என்றா நாம் சொல்கிறோம்? நம் எதிரிகள் நம்மை நாத்திக சங்கத்தார் என்று கூறுவது வெறும் பித்தலாட்டம். உண்மையான ஆத்திகன் நம்மைக் குறை கூறவே மாட்டான்.

திராவிடர் கழகம் என்பதை எதிர்ப்பது யோக்கியமாகாது

“திராவிடர் கழகம்” என்ற பெயரை எதிர்க்கின்றவன் ஒருவனாவது உண்மையிலேயே யோக்கியனாக இருக்க மாட்டான். கடந்த
5 ஆண்டுகளாலே இதை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்து வருகிறோம். எவனாவது அந்தக் காலத்தில் எதிர்த்தானா? இப்போது தான் என்ன? தெ.இ.ந.உ. சங்கமென்பதைத் “திராவிடர் கழக”த்திற்கு விரோதமாக வைத்து அவர்கள் நடத்துவதாக இருந்தாலும் அவர்கள் எங்கே போய் என்ன செய்ய முடியும்? அவர்கள் குறி என்ன? அவர்கள் எங்கே போலீஸ் பந்தோபஸ்து இல்லாமல் கூட்டம் போட முடியும்?

“நாம் ஆரம்ப முதல் இன்று வரை ஒரே தன்மையான கொள்கைகளை வற்புறுத்தி வருகிறவர்கள். மற்றவர்களைப் போல் அடிக்கடி கொள்கைகளைக் கீழுக்கு மாற்றும் வழக்கம் நம்மிடத்தில் இல்லை. ஆகவே குடும்பக் கவலையில்லாத திராவிட வாலிபர்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் வெளியில் வந்து மக்கட் பணி புரிய வேண்டும். மக்கட்குத் தொண்டாற்றக் கூடியவன் மானவமானத்தைக் கவனித்தல் கூடாது. வீட்டை கவனிக்கக் கூடாது. என்னைப்பற்றிக் குறை கூறுவோர் பலர் அதிலும் பணம், சார்பு, சம்பந்தமாகக் கட்டுப்பாடாய்ச் செய்யும் பிரச்சாரம், பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் விஷமப் பிரச்சாரம் ஆகியவை மலைபோல், நான் அவைகளையெல்லாம் கவனிக்காமல் இருப்பதால்தான் என்னுடைய மானம் அப்படியே நிலைத்திருக்கிறது. எது சொன்னாலும் “ஆம், அப்படித் தான். முடிந்ததைப் பார்” என்பேன். சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் எதிரி ஜெயித்துவிடுவான். நான் சமாதானம் சொல்வது என் மனதுக்குத் தான்.

அதுபோலவே, நீங்கள் முதலில் உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாய் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக் கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

மனதில் குறை இருக்கக் கூடாது

“ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்தமட்டில்தான் மானத்தையும் காலத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத் தொண்டு என்று வந்துவிட்டால் இவை இரண்டையும் இலட்சியம் செய்யக்கூடாது. இதை மானத்திலும், காலத்திலும் கவலை கொண்ட திருவள்ளுவரே கூறியுள்ளார். மனத்துள்ளே குற்றம் குறை இருந்தால் வெளியில் செய்யும் காரியமும் குறையுடையதாகவே இருக்கும் என்பதை நான் விஞ்ஞான (சயன்ஸ்) முறைப்படி கூறுகிறேன்.

ஆகையினால், வாலிபத் தோழர்களே! உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும் நீங்கள் கொண்டு காரியத்தைத் துணிவுடன் நடத்தினீர்களானால், வெற்றி உங்களை வந்து பணியும். உங்கள் எதிரிகள் நாசமாவார்கள். இறுதியாக, இன்று உங்களுடைய ஆர்வத்தாலும், அன்பாலும், என்மீது கொண்டுள்ள நம்பிக்கையாலும், என்னைப் பத்து வயது குறைந்தவனாகவும் 10 டிக்ரி ஊக்கம் அதிகம் கொண்டவனாகவும் ஆக்கி வைத்ததற்கு உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகிறேன்.
(17.09.1944 அன்று திருச்சி ‘காரனேஷன் பார்க்’கில் சுமார் 400 தோழர்கள் கலந்துக் கொண்டு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்திய அறுசுவை உண்டி நிகழ்வில் கலந்துக் கொண்டு பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)

குடிஅரசு – சொற்பொழிவு – 30.09.1944