Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

முதல் அமைச்சர் நிச்சயம் சரியான தீர்வு காண்பார்!

1. கே: ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் நிதிப்
பகிர்வு விருப்பத்தின் அடிப்படையில் தரப்படுவதா? அல்லது சில சட்ட விதிகளின்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதா?
– ப.தேவாரம், காஞ்சிபுரம்.
ப: விருப்பத்தின் அடிப்படையில் – விதிகளின் அடிப்படையை ஒட்டி அல்ல; வெறுப்பின் அடிப்படையில் நிதிஉதவி அல்லது  அரசியலில் எவ்வகை பயன்  (ஆதாயம்) என்ற அடிப்படையில்  தான் நிதி உதவி என்பது அண்மை  நிகழ்வுகள் – பட்ஜெட்டுகள் மூலம் தெளிவாகிறது!
2. கே: தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வுக்கு வழி என்ன?
– ச. கார்த்திக், வேலூர்.
ப: ஒன்றிய ஆட்சி மாற்றம் மூலமே!
3. கே: இந்தியா கூட்டணி ஒற்றுமையுடன் களம் கண்டிருக்க வேண்டும், இனிவரும் தேர்தல்களில் ஒற்றுமை கட்டாயம் என்பதை டில்லி தேர்தல் முடிவு உணர்த்துவதாகக் கொள்ளலாமா?
– கே. சேகர், கும்மிடிப்பூண்டி.
ப: தனித்த ஈகோ –  கட்சிகளின் தன்  முனைப்பு, சுயகவுரவம்  என வறட்டு ஜம்பம் – இவைகளால் உண்டு அனைவர்க்கும் தாழ்வு என்ற பாடத்தைப் புரிந்துகொண்டால் சரி.
4. கே: காவல்துறையின் செயல்பாடுகளும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறாமையும் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிரான பெரும் சவால்கள் என்பதால், அவற்றை அரசு எப்படித் தீர்வு காணவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
– து.துளசி, காஞ்சிபுரம்.
ப: நமது முதல் அமைச்சர் நிச்சயம் சரியான தீர்வு காண்பார். அவர் பிரச்சினைகளின் கனபரிமாணங்கள் நன்கு புரிந்தவர் என்பதால்!
5. கே: நாக்பூரில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இன்று இந்தியா முழுவதும் அனைத்திலும் ஊடுருவி வளர்ந்துள்ள நிலையில், அதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் இந்தியா முழுவதும் வளர்க்கப்படாமைதான் பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்த காரணமா? ஆம் என்றால் இந்தியா முழுவதும் நம் இயக்கத்தைக் கொண்டுச் செல்வது கட்டாயமல்லவா?
– ச. செந்தில், கும்பகோணம்.
ப: நோய்க் கிருமிகள் பரவுதல் – பரப்புதல் ஒன்று; தடுப்பு மற்றொன்று. தொற்று வேகமாகப்  பரவுவதால் சிகிச்சை மருந்தின் 
பலாபலன்கள் அதே வேகத்தில்  பரவ முடியாதே! உண்மை – நிதானமான வேகத்திலும், பொய் – வெகு வேகத்தில்  பரவும். ஆனால், இறுதியில் பொய் நிற்காது. ஆழமாகச் சிந்தியுங்கள் புரியும்.
6. கே: நீதிபதிகள் நியமனத்திற்கு சட்டத் திருத்தம் கட்டாயம் என்று, தி.மு.க. எம்.பியும்,  வழக்கறிஞருமான வில்சன் கூறியுள்ளது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– கே. ஜானகி, அடையாறு.
ப: நமது கருத்துதான் – கொள்கை தான் – மூத்த வழக்குரைஞர்  வில்சன் அவர்களது  இன்றைய தேவையான தனி நபர் மசோதா – நீதிபதிகள் நியமனப் பிரச்சனை. சமூகநீதி அடிப்படையிலானது.
7. கே: ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனையாகச் செயல்படுவதை  மாற்ற உச்சநீதிமன்றத்தை நாட முடியாதா?
– எஸ்.குமார், சூளைமேடு.
ப: உச்சநீதி மன்றம் எல்லா வற்றிலும் சர்வரோக நிவாரணி  ஆகி, ‘மந்திரக் கோல் மூலம்’ அனைத்தையும் அடைந்துவிட முடியாது!
8. கே: டில்லியில் ஆம் – ஆத்மி தோல்விக்கு  அவர்களின் தவறான ஆட்சி காரணம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளது? கூட்டணி நலத்திற்கு ஏற்றதா?
– வ. சுமதி, வந்தவாசி.
ப: முந்தை பதிலை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
9. கே: தங்கள் முயற்சிகள் தோல்வி யடைந்தாலும் மதவெறிக்கும்பல் தமிழ்நாட்டில் தொடர்ந்து கலவர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதைத் தடுக்க என்னதான் வழி?
– அமரன், கொரட்டூர்.
ப: தொடர் பிரச்சாரமும் இரும்புக் கரம் மூலம் தடுப்பு நடவடிக்கை களும் மிக முக்கியத் தேவைகளாகும்!